(கே.எல்.ரி.யுதாஜித்)
இன்னமும் நாம் ஒற்றுமைப்படவில்லை; வாய்ப்பேச்சிலும் சரி, செயற்பாடுகளிலும் சரி நமக்குள் அடிக்கடி அடிபுடிகள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. எம்மை நம்பி வாக்களித்த மக்கள் எப்போக்கில் போனாலும் சரி, எக்கேடு கெட்டாலும் சரி, நாங்கள் அடுத்துவரும் தேர்தலைப் பற்றியே சிந்திப்போம் என்பதுதான், பெருமளவான அரசியல்வாதிகளின் மனஓட்டமாக இருக்கிறது.
விலைவாசி ஏறிக்கொண்டிருக்கிறது. பஸ், ஓட்டோ, இனி ரயில்க் கட்டணமும் அதிகரிக்கப்படுகிறது. உணவகங்கள் எல்லாமே, தமது உற்பத்திகளுக்கு விலைகளை உயர்த்திவிட்டன. இந்த நிலையில் மாகாண சபைத் தேர்தல் முதலில் நடக்குமா, நாடாளுமன்றத் தேர்தல் முதலில் நடக்குமா, ஜனாதிபத்தித் தேர்தல் எப்பொழுது நடக்கும் என்றவாறான முழுச்சிந்தனையிலேயே நமது அரசியல்வாதிகள் உலாவருகின்றார்கள்.
தேர்தல் வரும்போது, பொருட்களின் விலைகளைக் குறைப்பதும், தேர்தல் முடிந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக விலைகளை உயர்த்தி, மக்களை வாழ்க்கைத் திண்டாட்டத்துக்குள் தள்ளுவதும் நமது நாட்டுக்கே உரித்தான, பாரம்பரியமான வழக்கம் ஆகும். அடுத்த தேர்தல் வரும்போது, பொருட்கள், சேவைகளின் விலைகளைக் குறைத்து, மக்களிடம் வாக்குக் கேட்பதும் சுதந்திரத்துக்குப் பின்னிருந்து தொடர்ந்து, நடந்து கொண்டிருக்கிறது.
தேசிய அரசியல் ஒருபக்கம் இருக்கையில், நாம், தமிழர் வாழும் மாகாணங்களின் போக்கு, வடக்கு, கிழக்கில் தமிழர்களின் நிலைப்பாடு, அங்குள்ள அரசியல் நிலை பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
ஒரே தலைமையின் கீழ், ஒரே குரலில் இருக்கின்ற சமுதாயம் தான், அதன் இலக்கை நோக்கிச் செல்லும்; இல்லையானால் நோக்கம் குலைந்து, துன்பங்களை அனுபவித்துப் பிரச்சினைகளுக்குள் சிக்கித் தவிக்கும் என்பதுதான் யதார்த்தம். இது, காலாகாலமாகத் தமிழர்கள் எடுத்த தேர்தல் முடிவுகளுக்கு நல்ல உதாரணம்.
எவ்வாறான குழப்பங்கள், கொள்கை முரண்பாடுகள் தம்மிடையே இருந்தாலும் இறுதி நேரத்தில் தமிழர்கள் ஒற்றுமை சார்ந்து, ஒரு முடிவை எடுப்பதுதான் வழமை. அந்த வகையில், தமிழ்த் தேசிய உணர்வின் நிமித்தமே, அவர்கள் எல்லோரும் ஒன்றுபடுகின்றார்கள் என்பதே உண்மை.
தேர்தல்கள் எல்லாமே வெல்வதற்கானவையே. தேர்தல் முறைமைகளை மாற்றுவதும் திருத்துவதும் கட்சிகளின் வெற்றி வாய்ப்புக்கான சந்தர்ப்பங்களை அதிகரிப்பதற்கானதாகவே நடந்தேறுகின்றன.
அடுத்த தேர்தல் எந்தமுறையில் நடைபெறும் என்று அறிவிக்காமலே, அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில், தேர்தல் நடைபெறப்போகிறது என்று மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் தான், வடக்கு, கிழக்கிலுள்ள அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவதற்கான சாத்தியக்கூறுகள், சந்தர்ப்பங்களை உய்ந்தறிந்து, சந்தர்ப்பவாதிகளாக ‘பங்கு பிரித்தல்’ கலந்துரையாடல்களில் முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஒரு பதியப்படாத கூட்டு. இந்தக் கூட்டுக்குள் தமிழரசுக்கட்சி தனது சின்னத்தைக் கொடுத்து, தேர்தலில் போட்டியிட்டு வருகிறது. இதற்குத் தான் ஒரு பலம் பொருந்திய கட்சி என்றோர் இறுமாப்பும் இருக்கிறது.
கூட்டமைப்புக்குள் ஆரம்பத்தில் டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி ஆகிய கட்சிகள் இருந்தன. முரண்பாட்டின் வெளிப்பாடால், முதலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வெளியேறியது.
கடந்த தேர்தலையடுத்து ஈ.பி.ஆர். எல்.எப் வெளியேறியது. அதற்கு முன்னர், புளொட் அமைப்பு கூட்டமைப்பில் இணைந்து கொண்டது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர், டெலோ, புளொட் அமைப்புகள் வெளியேறிவிடும் என்று நம்பப்பட்டது. அதற்கு அப்போது ஏற்பட்ட, கடைசிக் குழப்பம் காரணமாக இருந்தது. இருந்தாலும் வெளியேறிவிட்டால் நமது நிலை குறித்த அச்சத்துக்குள் அகப்பட்ட வேளை, கலந்துரையாடல்களை அடுத்து, பிரதேச சபைகள் பங்கிடப்பட்டமையால் அந்தப்பிரிவு என்ற கணடத்தை சுமூகமாகத் தாண்டப்பட்டது.
சுய மதிப்பீடுகள் முழுமையாகச் செய்யப்பட்டாத நிலையில், யாரை யார் வீழ்த்துவது என்பது சிக்கலான விடயம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற ஈ.பி.ஆர்.எல்.எப், ஏற்கெனவே தமிழ்த் தேசிய அரசியலில் குழப்பங்களுக்குரியதாகச் சொல்லப்பட்ட உதய சூரியன் சின்னத்தை உடைய, தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் கைகோர்த்து, இன்னும் சில உதிரிக்கட்சிகளும் இணைந்து, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டது. குறிப்பிட்டளவு ஆசனங்களையும் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
அவ்வாறு குறிப்பிட்டளவு ஆசனங்கள் கிடைக்கப் பெற்றமைக்கு, புதிய தேர்தல் முறையும் ஒரு காரணம். ஆனால், அந்த உறுப்பினர்களின் சுயாதீனத்தன்மை இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இணைந்து போட்டியிட்ட கட்சிகளுக்கு, அதிகாரமின்றி இடைஞ்சல்களுடன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த இடைஞ்சல்கள், இப்போது மீண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தனிமைப்படுத்துவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் முரண்பாடால் பிரிந்து, தனிக்கட்சியாகச் செயற்பட முனைந்து, வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனைத் தலைவராகக் கொண்டு செயற்பட்ட, தமிழ் மக்கள் பேரவையுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இணைந்து இயங்கினார்.
அதன் பின்னர், உள்ளூராட்சித் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி போட்டியிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆனந்த சங்கரியின் செயற்பாடுகளால் கூட்டுக்குள் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விரிசல், ஈ.பி.ஆர்.எல்.எப் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைவதற்கான சாத்தியக் கூறுகளை உருவாக்கியிருக்கிறது. நடைபெறுமா என்பது சந்தேகமும் தான்.
அதேவேளை வடக்கு, கிழக்கில் தென்னிலங்கைக் கட்சிகள் சிலவும் கால் பதிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்றன. இந்த முன்னெடுப்புகள் வடக்கு, கிழக்கில் எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடும் சில கட்சிகளது அழுத்தங்களுடன் சேர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தாலும், அதில் பெரும் சரிவில்லை என்றே சொல்ல வேண்டும்.
யாரை நிறுத்தினாலும் தமிழர்களின் உணர்வென்ற ஒன்றுக்கு மத்தியில், தென்னிலங்கை பெரும்பான்மையினக் கட்சிகளால் சாதிப்பது என்பது சிரமமே என்ற யதார்த்தம் உணரப்படுகின்றமையால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேர்தல் பட்டியலில் இடம் தராவிட்டால், இப்போது என்ன செய்வது என்கிற கேள்வி, தற்போதைய அரசியல்வாதிகள் மத்தியில் உள்ளது.
போராட்ட இயக்கங்களில் அங்கத்தவர்களாக இருப்பவர்களுக்கு எதிரான கருத்துகள் பரப்பப்படுவதும் அவர்கள் தொடர்பான எதிர்ப்புகள் உருவாகி வருவதும் வடக்குக் கிழக்கில் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்த எதிர்ப்புணர்வுகளுக்கு மத்தியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கூட்டைக் குலைக்காமல், இருந்தபடியே தேர்தல்களை எதிர்கொள்வது என்பது, இணைந்த கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் முதல்தடவை போட்டியிட்டு, தந்திரச் செயற்பாடுகளால் வென்றுவிட்டோம் என்று தெரிந்திருந்தும், தான் போட்டியிட்டு வெற்றிபெற்ற கட்சியையே விமர்சித்து, தலைவரை விமர்சித்து, மக்களைக் குழப்புவதே வேலையென்று இருக்கின்ற அரசியல்வாதிகளுக்கு, வயிற்றில் புளியைக்கரைக்கின்ற நிலைமை, மீண்டும் ஒரு தேர்தலைப்பற்றிய சிந்தனையால் உருவாகியுள்ளது.
இதுதான் இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்முறை தேர்தல் பட்டியலில் இடம் தராவிட்டால் என்ன செய்வது என்பதாகும்.
தொடர்ச்சியாக கடந்த கால அனுபவங்களின் ஊடாகப் பாடங்களைப் படித்துக் கொண்டு, அந்தப் பாடங்களில் இருந்து, அடுத்த பதிவுகளுக்குச் செல்லுவதுதான், ஓர் இனத்தின் இருப்பைத் தக்க வைப்பற்குச் சிறந்த வழியாக இருக்கும். அவ்வாறு வருகின்ற போது, தற்போது இருக்கின்ற பக்கங்களில் இருந்து கொண்டு, அதற்கு முன்னைய பக்கங்களை உள்வாங்கிக் கொண்டு, அடுத்த பக்கத்துக்கு நாங்கள் எவ்வாறு போகப் போகின்றோம் என்பதைத் தீர்மானிக்கும் வகையிலே அரசியல்வாதிகள் இருந்தாக வேண்டும்.
எழுபது ஆண்டு காலமாக, இந்த நாட்டில் நடைபெற்ற தமிழர்களின் போராட்டமானது, எடுத்துச் சென்றவைகளும் விட்டுச் சென்றவைகளும் ஏராளம். இலக்கு வைக்கப்பட்ட தமிழர்களின் அரசியலில் உழைக்கின்றவர்களும், உழைத்தவர்களும் இருக்கிறார்கள். இழந்தவர்களும் ஆண்டியானவர்களும் இருக்கின்றார்கள்.
வருடக்கணக்கில், காணாமல் போனோரது உறவுகளின் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இருந்தாலும் வேட்பாளர் பட்டியல், குறியாக இருப்பவர்கள் எடுக்கின்ற குழப்பங்களையே எல்லோரும் கை தட்டி வரவேற்கின்றனர். இந்த அரசியலுக்கான விடிவை, மக்கள்தான் ஏற்படுத்தியாக வேண்டும் என்றால், அதற்குள் தேசியம் புகுந்து நின்றுகொண்டு நடனமாடும்.
ஒரு விடயத்தில் காட்சி, ஐயம், தெளிதல், தேறுதல் என்கின்ற நான்கு படிமுறைகள் இருக்கின்றமை போன்று, அரசியலில் நடந்து முடிந்த பிறகு, ஒன்றுமே இருக்காது. இதுதான் இலங்கையில் தமிழர்களின் அரசியலின் நிலை.
1949.12.18ஆம் திகதி தமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணம் செய்கின்ற போது, தந்தை செல்வா பின்வருமாறு மொழிந்திருந்தார். “இந்த நாட்டில் தமிழர்கள், தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டு, தங்கள் வரலாற்றை வாழ்வித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றால், கூட்டாட்சிக் கட்டமைப்புக்குள்ளேயான ஓர் அரசியல் வரண்முறை, இந்த நாட்டில் ஆக்கப்பட வேண்டும். அந்த வரண்முறையை அடைவதற்கு, வன்முறையற்ற செயற்பாடுகளுக்கு நாங்கள் எங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
இந்த அடைவுகள் எல்லாம், அஹிம்சை, சாத்வீக முறைகளின் ஊடாக அடையப்பட வேண்டும் என்கின்ற விடயத்தை, ஆழ்ந்து சிந்தித்திருக்கின்றோமா? என்பது தொடர்பிலான கேள்விகளை அரசியல்வாதிகள் உட்பட ஒவொருவரும் கேட்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
எமக்குப் பலம் இருக்கின்றதா? எம்மால் அடைய முடியுமா? உலக நிலைமை எவ்வாறு இருக்கிறது? என்பவற்றையெல்லாம் சிந்தித்து, காய்களை நகர்த்தும் செயற்பாடுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அடிப்படைக் கட்டுமானங்கள் அழிந்து கொண்டே இருக்கின்றன. அதனைச் சரிவரச் செய்யாது, அழிவுகளினூடாக நாம் உருவாகிக் கொண்டிருக்கின்றோம் என்று நம்புவது, தமிழர்களை மண்கௌவ்வ வைத்துவிடும். தேர்தல்களின் மூலம் அதிகாரங்களுக்கு வந்த அரசியல்வாதிகள், தம்மை நிலை நிறுத்திக் கொள்ள எடுத்த முயற்சிகள் இன்னமும் ஓய்ந்து விடவில்லை. யதார்த்தங்களை மறந்து, மக்களை நட்டாற்றில் விடுவது, தேர்தல் அரசியல் காரணமாகவேயாகும்.
மீன் கொத்துமிடத்தில் தூண்டில் போடும் அரசியலில் இருந்து விடுபடுவதற்கான முயற்சிகளுக்கிடையில், வெளிநாடுகளின் காய்நகர்த்தல்களையும் உணர்ந்து, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்படும் என்பது, அதற்கான அரசியல் தலைமையின் உருவாக்கத்திலேயே சாத்தியப்படும்.
தேர்தலுக்கான பட்டியல் பற்றியே சிந்திக்கும் தனித் தனிக்கட்சிகள், ஒற்றுமையாக இயங்குவதற்கான முன்னெடுப்புகள் குறித்து, தேர்தல் வரும் வேளையில் மாத்திரம் சிந்திக்கின்ற போக்கிலிலுந்து, தமிழ்த் தேசிய அரசியல் மாற்றம் காணுமா?
விடுதலைப்புலிகளின் அழிவுக்கு முன்னர், தமிழ்த் தேசியக் கூடுட்டமைப்புக்கு வெளியே இருந்த கட்சிகள் தனித்தனியாக மேற்கொண்ட முயற்சிகள், கருத்துப்பகர்வுகள், கூட்டமைப்புக்குள் ஒன்றான பின்னர், இல்லாமல் போனது. வெவ்வேறு கருத்துகளின் வெளிப்படுத்தல்களால், உருவாகும் மனஅழுத்தங்கள் முரண்பாடுகளுக்கு வழிவகுத்து, ஒற்றுமையைக் குலைத்தமையை, கடந்த கால வரலாறுகள் கற்றுத் தந்த பாடங்களாகும். முரண்பாடுகளும் விமர்சனங்களும் எதையும் செய்துவிடாது என்பதும் யதார்த்தமாகும்.
ஆனால், விமர்சனத்துக்காகச் செயற்படுவது ஒரு படியாகும். அதனைத் திரித்துச் சொல்லவும் முடியும். அதன் மூலம் சமுதாயத்துக்கு எந்த ஒரு பயனும் கிடைக்காது. ஆனாலும் நாம் ஒவ்வொருவரும், நினைத்தபடி செயற்படுதும் எல்லாவற்றையும் குழைத்துக் கூழாக்கி, அபாயத்துக்குள் ஆளாகவைத்துவிடும்.