மலையக மக்களின் வாழ்வியலை, புகைப்படங்களின் வாயிலாக சர்வதேசத்துக்கு உணர்த்திய மிகச் சிறந்த ஓர் ஆவணப்படமாக இந்தக் கண்காட்சி அமைந்திருந்தது என்றால் அது மிகையாகாது.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினூடாக, ஊவா சக்தி நிறுவனவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்புகைப்படக் கண்காட்சி, நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களிலும் நடைபெற்றிருந்தது.
ஓகஸ்ட் 23ஆம் திகதி, தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் மண்டபத்திலும் ஓகஸ்ட் 29ஆம் திகதி ஊவா ஹைலன்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்திலும் இக்கண்காட்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, பதுளை சைமன் பீரிஷ் ஞாபகாரத்த மண்டபத்தில் செப்டெம்பர் 4ஆம், 5ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது.
நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த இரு தோட்டங்களில், பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த இரு தோட்டங்கள் என்பவற்றிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு, கமெரா தொடர்பான முழுமையானப் பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டு, புகைப்படத்துறையில் அவர்களது திறமையைப் பறைசாற்றும் வகையில், இப்புகைப்படக் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதன்படி மொத்தமாக 40 இளைஞர், யுவதிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களால் எடுக்கப்பட்டப் புகைப்படங்களே மேற்குறித்த கண்காட்சிகளில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. மூன்று மாவட்டங்களிலும் நடைபெற்றக் கண்காட்சிகள், பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
கொழும்பில் நடைபெற்றக் கண்காட்சியில், மலையக இளைஞர், யுவதிகள் 40 பேரினால் எடுக்கப்பட்ட 45 ஆயிரம் படங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 100 புகைப்படங்களே, இங்கு காட்சிப்படுத்தப்பட்டன என்று, இக்கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
இந்தப் புகைப்படக் கண்காட்சியை காலி, களுத்துறை, யாழ்ப்பாணம், வவுனியா என நாடு முழுவதிலும் ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும், ஏனைய இன மக்களுக்கும் மலையக மக்கள் படும் துயரங்களைக் கொண்டுச் சேர்க்க வேண்டுமெனவும் இப்புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக வந்திருந்தவர்கள், கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவிக்கிறார்கள்.
பதுளை, நுவரெலியா மாவட்டங்களுக்குச் செல்லும் வீதியோரங்களில் இருக்கும் கட்டடங்களைப் பார்த்துவிட்டு, மலையகம் அபிவிருத்தியடைந்து விட்டதாக சிலர் தங்களையும் ஏமாற்றிக்கொண்டு ஏனையவர்களையும் ஏமாற்ற முயற்சிக்கிறார்கள்.
மேலும் இதில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தப் படங்கள் எடுக்கப்பட்டக் காலம் தொடர்பிலும் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர் என்றும் ஆனால் இந்தப் படங்கள் அனைத்தும் 2019, 2020ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்டவைகள் என்பது உண்மை.
மலையகத்திலிருந்து படித்து முன்னேறி தற்போது கொழும்பில் வாழும் மலையகத்தின் புத்திஜீவிகள் சிலரும், இந்தப் புகைப்படங்கள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
மலையகம் அபிவிருத்தி அடைந்துவிட்டது என்றால் எந்தப் படங்கள் எங்கிருந்து வந்துள்ளன? அந்தந்தப் பிரதேசங்களில் வாழும் இளைஞர்களே இந்தப் படங்களை எடுத்திருந்தார்கள் என, ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பெரும்பான்மை சமூகங்களும் கவனஞ்செலுத்தி அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கும் நிலைமை ஒன்று மலையகத்தில் உருவாகி வருகிறது.
குறிப்பாக ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரத்தில், நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களின் மாணவர்களும், நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட மக்களும் போராட்டங்களில் ஈடுபட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
மலையகத்தில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை மலையகம் அபிவிருத்தியடைந்துவிட்டதாகக் கூறுவது மலையக மக்களுக்குச் செய்யும் துரோகமாகவே பார்க்கப்பட வேண்டும்.
“தேயிலைச் சாயம்” என்ற தலைப்பில் நடைபெற்ற மலையகம் சார்ந்தப் புகைப்படக் கண்காட்சியில், மலையக அரசியல்வாதிகளின் சாயமும் வெளுத்திருக்கிறது என்பதுதான் உண்மை. இக்கண்காட்சி தொடர்பில் பார்வையாளர்களின் கருத்துகள் சில.
மஹிந்த தேசப்பிரிய (சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்)
ஒவ்வொரு தேயிலை தோட்டத்தின் வளர்ச்சிக்குப் பின்பும் ஒவ்வொருவர் உள்ளனர் எனக் கூறுவதுண்டு, அதனை உறுதிப்படுத்துவதாகவே, இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள படங்கள் அமைந்துள்ளன.
அனைவரினதும் நோக்கம் ஒற்றுமையான ஒரே தேசத்தைக் கட்டியெழுப்புவதாயின், மேற்படி புகைப்படங்களை நாடு முழுவதிலும் காட்சிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
மலையக தமிழ் மக்கள் அனுபவிக்கும் நெருக்கடிகள் தொடர்பாக சகலரையும் தெளிவுப்படுத்த வேண்டும். இந்நிலைமையிலிருந்து மக்களை எவ்வாறு மீட்டெடுப்பது, தேயிலைத் தொழிற்றுறையை எவ்வாறு வழி நடத்திச் செல்வது என்பது ஆராயப்பட வேண்டும் என்றார்.
மலையகத்திலிருந்து மக்களுக்கு தரமான கல்வி, சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை என்பதை நாட்டின் சகல பிரஜைகளுக்கும் காண்பிக்க வேண்டுமாயின் இந்தக் கண்காட்சி நாடு முழுவதிலும் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றார்.
அத்தோடு, மலையகத்திலுள்ள பாடசாலைகள், வைத்தியசாலைகளையும் இந்தப் புகைப்படங்களில் காண்பித்திருக்கலாம். இவ்வாறான ஆலோசணைகளை கூறுவதை மாத்திரமே தன்னால் செய்ய முடியும் என்றார்.
இந்தக் கண்காட்சி நாட்டிலுள்ள சகல நகரங்களுக்கும் கொண்டுச் செல்லப்பட வேண்டும் என்றும் உதவிகள் கோரப்படும் பட்சத்தில் ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இந்தக் கண்காட்சியை நடத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறேன் என்றார்.
சின்னையா சிறிதேவி
(ஊவா ஹைலன்ஸ் கல்லூரியின் ஆசிரியர் – பண்டாரவளை)
“நான் ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். படங்களை எடுப்பதற்காக மாணவர்களை தெரிவுசெய்து தரும்படி என்னிடம் கோரியிருந்தார்கள். புகைப்படத்துறையில் எனக்கிருந்த ஆர்வத்தால் நானும் புகைப்படப்பிடிப்புத் தொடர்பில் இவர்களோடு இணைந்துப் பயிற்சி நெறிகளை நிறைவு செய்துகொண்டேன்.
“எனது ஐந்து படங்கள் கொழும்பில் நடைபெற்றக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மலையகத் தொழிலாளர்கள் குறிப்பாகப் பெண் தொழிலாளர்களது மனித உரிமைகள் மீறல் தொடர்பில் நான் எடுத்த படமொன்று அதிக வரவேற்பை பெற்றிருந்தது.
மலையகத்தில் இருக்கும் பிரச்சினைகளை வெளியில் சொல்வதற்கு வெட்கப்பட்டுக்கொண்டு இருந்தால் இன்னும் 200 அல்ல 2 ஆயிரம் வருடங்களுக்கும் மலையகம் இப்படியே இருக்க வேண்டிய நிலையே ஏற்படும்.
எனவே, பிரச்சினைகளை பொதுவெளிக்குக் கொண்டுவர வேண்டும். குறிப்பாக இந்தப் புகைப்படக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தப் படங்கள் மிகைப்படுத்தப்பட்டப் படங்கள் அல்ல. இவை அனைத்தும் இந்த சமூகத்தின் பேசப்படாத மறுப் பக்கத்தையே பேசியிருக்கின்றன என்றார்.