(க. அகரன்)
அரசாங்கத்தின் நிலைபேறு தன்மை தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் அண்மைய காலங்களில் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளமை வெளிப்படை. குறிப்பாக, நல்லாட்சி அரசாங்கம் அல்லது தேசிய அரசாங்கம் என்ற சொற்பதத்துடன் மஹிந்த அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற கனவுடன் ஜனாதிபதி தேர்தலைச் சந்தித்த, ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் அதில் வெற்றி பெற்றதன் பின்னராக, அந்த ஆட்சிக்குள் பல்வேறு குழப்பகரமான நிலைமைகள் தோன்றி மறைவதை மறுக்கவோ மறைக்கவோ முடியாதுள்ளது.
சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் களத்தில், பெரும் கட்சிகளாக வலுப்பெற்று, ஒன்றோடொன்று, மேடை போட்டு மோதிக்கொண்டவர்கள், ஒன்றுபட்டு அரசமைப்பதென்பது சாத்தியமற்றது என்ற நிலைப்பாடுகள் ஆரம்பம் முதலே பேசப்பட்டு வந்தது. இருந்தாலும்கூட, இரு பெரும் கட்சிகளின் தலைமைத்துவத்தின் ஆளுமை மற்றும் புரிதல்களின் வெளிப்பாடுகள் இற்றைவரை அரசாங்கத்தை நடாத்திச் செல்ல முடிந்துள்ளது.
குறிப்பாக, கூட்டு ஆட்சி முறை அல்லது கூட்டுக் கட்சி முறைமை என்பது, இலங்கை போன்ற ஆசிய நாடுகளுக்கு, நீண்ட கால சாத்தியமற்ற தன்மையைக் கொண்டுள்ளது. இந்த வகையிலேயே, தென்னிலங்கை அரசியல் களத்தில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போது, ஆட்சியமைத்துள்ள இரு பெரும் கட்சிகளும், தமது பாதையில் பயணிக்க வேண்டிய தேவையுள்ளபோது, மத்திய ஆட்சியில் கூட்டு சாத்தியமா என்ற நிலை தோற்றுவிக்கப்படும்.
ஒவ்வோர் அரசியல் கட்சியும் தமது வாக்கு வங்கிகளை நாடி பிடித்துப் பார்க்கும் களமாகவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நோக்குகின்றன. அந்த வகையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தமது ஆளுகைக்குள் பல உள்ளூராட்சி மன்றங்களைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.
உள்ளூராட்சி மன்றங்களின் ஆளுகையினூடாகவே, காலாவதியாகியுள்ள மாகாண சபைகளின் ஆட்சியை, குறித்த கட்சிகள் கைப்பற்றிக்கொள்ள முடியும் என்பதான உண்மையே இங்கு மறைந்துள்ளது.
எனவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேடைகளில், சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது தமக்குள் புகைந்து கொண்டிருக்கும் உள்ளக அரசியல் கள நிலைமைகளை போட்டுடைக்கும் தருணம் உருவாகும்.
ஏனெனில், சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரை, மைத்திரி தலைமையிலான தற்போதைய சுதந்திரக் கட்சி மற்றும் மஹிந்த தலைமையிலான பழைய சுதந்திரக் கட்சி என்ற இரு தளத்தையும் தராசில் வைத்து நிறுத்துப் பார்க்க வேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர்.
மஹிந்த காலத்தில், சுதந்திர கட்சி ஓர் ஆளுமையுள்ளதாகவும் ஒரு தலைமைத்துவத்தை நம்பியதாகவும் காணப்பட்டிருந்தது. எனினும், தற்போதைய நிலைமையில் அதனுடைய நிலைபேறு தன்மை அல்லது ஒருமித்த செயற்பாடு என்பது, எந்தளவுக்கு உள்ளது என்பது ஆராயப்படவேண்டும்.
குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் மஹிந்தவுக்கு இருந்த செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளதாகக் கணிப்புகள் நிலவும் நிலையில், மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சியின் அங்கத்துவம் தொடருமா என்பதான கேள்விகள், சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்குளேயே உள்ளன.
அமைப்பாளர் நியமனங்களில் சுதந்திரக் கட்சி ஏற்படுத்தி வரும் மாற்றங்கள், அக்கட்சியில் உள்ள ஏனைய அல்லது விசுவாசிகள் மத்தியில் பாரிய தாக்கத்தைத் தோற்றுவித்துள்ளது. கட்சிக்குள் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு முயலாது, மேலும் விரிசல் நிலையைத் தோற்றுவிக்கும் கள நிலைமையையே தற்போதைய சுதந்திரக் கட்சி ஏற்படுத்துவதாக சுதந்திரக் கட்சி விசுவாசிகள் கருதுகின்றனர்.
அதற்கும் அப்பால் ஒரு மாவட்டத்துக்கே பலரை அமைப்பாளர்களாக நியமிப்பதான செயற்பாடுகளும் காணப்படுவதனால், அவர்களுக்குள் ஏற்படும் முரண்பாடுகளானது குறித்த கட்சியின் மீதான நம்பிக்கையை, அங்கத்தவர்கள் மத்தியில் குறைத்துள்ளது.
இவ்வாறான நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தனக்கான களத்தை புதிய வியூகம் கொண்டு அமைக்கும் என்பது மறுப்பதற்கில்லை.
சுதந்திரக் கட்சியின் பிளவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் பங்களிப்பு எவ்வாறு தாக்கம் செலுத்தியதோ, அதே போன்றதான நிலையை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், சுதந்திரக் கட்சி அதிகளவான ஆசனங்களையோ உள்ளூராட்சி மன்றங்களையோ கைப்பற்றி விடாதிருப்பதற்கான வேலைத்திட்டங்களை ஐக்கிய தேசியக் கட்சி முன்னகர்த்தத் தயங்காது.
எனவே, இவ்வாறு மத்திய அரசாங்கத்தில் காணப்படும் ஸ்திரமற்ற அரசியல் கூட்டு, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் முடிவுக்கு கொண்டு வரப்படலாம் என்பதும், அதன் பின்னரான தொடர் செயற்றிட்டங்கள் இலங்கை அரசியல் பரப்பில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
இதேவேளை, மத்திய அரசாங்கத்தின் அரசியல் மண ஒப்பந்தம், நிரந்தரமின்றிச் செல்லும்போது, தமிழர் அரசியல் களத்திலும் அதன் தாக்கத்தைக் காணக்கூடியதாக இருக்கும்.
குறிப்பாக, தீர்வு விடயத்தில் ஏதுவான நிலைப்பாடுகளை எட்ட முடியாத நிலை உருவாகும். இந்நிலையில், ஸ்திரமற்ற அரசியல் நிலைமைகள், தொடர்ச்சியான இழுபறிச் சூழ்நிலைக்குள் அல்லது சகதிக்குள் தள்ளிவிடும். இதற்குமப்பால், இன்றைய புதிய அரசமைப்பு மாற்றத்துக்கான முன்னெடுப்புகளும் கூட, ஆக்கபூர்வமான நிலையை எட்டமுடியாமல் ஆக்கிவிடும்.
அரசமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பாகத் தேரர்கள் பலர், முரணான கருத்தைத் தெரிவித்துவரும் நிலையில், புதிய அரசமைப்பின் வடிவம், இலங்கைத் தேசத்துக்கு சாத்தியமற்றுப் போவதற்கான வாய்ப்புகள் நிறையவே உண்டு.
ஏனெனில், தேரர்களின் மாறுபட்ட கருத்துகள், சிங்கள மக்களிடையே குழப்பமான நிலைப்பாட்டை தோற்றுவிக்கும் பட்சத்தில், அது ஆட்சியாளர்களுக்கு எதிரான போக்குக்கு வழிசமைத்துவிடும்.
இவ்வாறான நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக, ஒருவரையொருவர் தோலுரித்துக் காட்டும் நிலைப்பாட்டுடன் மேடையேறப்போகும் ஐ.தே.கவும் சுதந்திரக் கட்சியும் மீண்டும் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்கும் சாத்தியக்கூறுகள் அரிதாகவே காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில், ஆட்சி மாற்றங்களுக்கான வாய்ப்பாகவும் இவை அமைந்துவிடலாம்.
எனவே, தமிழர் தரப்பு நிலைப்பாடுகள் அல்லது தமிழர்களின் அரசியல் தலைமைகள் எவ்வாறான வகிபாகத்தை இந்தச் சூழ்நிலையில் செய்ய முயலப்போகின்றனர் என்பது ஆராயப்பட வேண்டும். குறிப்பாக, இரு பெரும் கட்சிகளும் தமக்கிடையில் மோதிக்கொண்டாலும் கூட, அது நிரந்தரத் தீர்வுக்கான வழியை மூடிவிடும் நிலைப்பாட்டைத் தோற்றுவிக்காத வகையில், அரசியல் காய் நகர்த்தல்களை தமிழ் அரசியல் தலைமைகள் என தம்மை மார்தட்டிக்கொள்பவர்கள் முன்னெடுக்க வேண்டும்.
வெறுமனே தீர்வை வைத்திருப்பதும் அதை நம்பி எதையும் நடைமுறைச் சாத்தியமாக்காது இருப்பதும், தமிழர்களை மீள நம்ப வைத்து, ஏமாற்றுவதற்கான சந்தர்ப்பமாக அமைந்துவிடும்.
இலங்கை தேசத்தில், தேசிய அரசாங்கம் அமைந்திருப்பதும், அதனூடாக அரசியல் தீர்வொன்றை எட்டி விடுவோம் எனவும் நம்பியிருந்த தமிழரசுக் கட்சி, தற்போது ஆண்டுக்கொருமுறை தீர்வுக்கான திகதியை தீர்மானிக்கும் கட்சியாக மாறியிருக்கிறது.
எனவே, தீர்வுக்கான முனைப்புகளில் அதிக கவனம் செலுத்தாத தென்னிலங்கை அரசியல்வாதிகளிடம் தமிழர் தரப்பு தொடர்ச்சியாக நம்பிக்கை வைத்திருப்பது எந்தளவுக்குப் பயனுள்ளது என்பதை மீள் பரிசீலனை செய்து கொள்ளவேண்டும்.
எனினும், குறித்த ஆட்சியாளர்கள் சாதகமான நடவடிக்கை எடுக்காத சந்தர்ப்பத்தில், அதற்கான அழுத்தத்தை வழங்கவேண்டிய கடப்பாட்டை மறுதலித்து, ஒட்டி உறவாடும் நிகழ்ச்சி நிரல், தமிழர்களுக்கு எதையும் சாத்தியமற்றதாக்கிவிடும்.
இதற்குமப்பால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் காணப்படும் முரண்பாடுகளும் நியாயபூர்வமான அரசியல் தீர்வுக்கான நகர்வைத் தடுப்பதற்காக வழியாக இருக்கும் என்பதையும் உணரத்தலைப்பட வேண்டும்.
குறிப்பாக, அரசமைப்பு சபையின் வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையில் உள்ள விடயங்களில் கூட்டமைப்புக்குள் இருக்கும் கட்சிகளே மாறுபட்ட கருத்தியலைக் கொண்டுள்ளன.
தமிழரசுக்கட்சி இடைக்கால அறிக்கையில் உள்ள விடயங்கள் சாதகமானதாகவும் அதை நாம் பெறுவதற்கான முறைமைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கும் நிலையில், புளோட், டெலோ ஆகிய முன்னாள் ஆயுதப்போராட்ட அமைப்புகள் மௌனம் காத்து நிற்கின்றன.
எனினும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஆசனம் கிடைக்காத நிலையில் கூட்டமைப்புக்குள்ளேயே கருத்து மோதலை உருவாக்கிக் கொண்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், இடைக்கால அறிக்கையையும் தாக்கி, தமிழரசுக் கட்சியையும் தாக்கி வருகின்றது.
இதற்கும் அப்பால் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிப் பிரதானிகள் கூடுகின்றனர் என்றாலே கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக முடிவெடுக்கின்றனரா என்பதான சந்தேகம், தமிழ் அரசியல் அவதானிகளிடம் ஊசலாடத் தொடங்கியுள்ளது.
அண்மையில், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம், வவுனியாவில் இடம்பெற்ற நிலையில், கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்வதற்கான தீர்மானத்தை அவர்கள் எடுக்கப்போகின்றார்கள் என்ற நிலைப்பாடே, அரசியல் அவதானிகள் மத்தியில் காணப்பட்டது.
எனினும், அதற்கான எந்த வித முனைப்பும் காட்டப்படாத நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விடயமாக அக்கட்சி கலந்துரையாடியிருந்தது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தனித்துப் போட்டியிடும் நிலையில், ஈ.பி.ஆர்.எல்.எப் காணப்படுவதுடன், அதற்கான முனைப்பையும் எடுத்து வருகின்றது.
வட்டார ரீதியாக, வேட்பாளர்களைத் தேடும் அக்கட்சி, எதிர்வரும் டிசெம்பர் மாதம் தமது கட்சி மாநாட்டையும் நடாத்தவுள்ளது. இந்த மாநாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, தனித்து இயங்குவதான தீர்மானத்தை அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், தமிழரசுக் கட்சியும் வட்டார ரீதியாக வேட்பாளர் தெரிவில் ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றது. அவ்வாறெனில், கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளான டெலோ மற்றும் புளோட் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றன.
இவ்விரு கட்சிகளும் ஆயுத வழியில் செயற்பட்டு, ஜனநாயக வழிக்குத் திரும்பியமையால் பெரும்பாலான இடங்கள் இவர்களுக்கான கோட்டையாக இல்லை. இவர்கள் ஆதிக்கம் செலுத்திய இடங்களையே, இவர்கள் தமது வாக்கு வங்கிக்கான களமாகப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இவ்விடங்களில் தற்போது தமிழரசுக் கட்சி தமக்கான ஆதரவாளர்களை அதிகரித்துள்ளதுடன், நம்பிக்கைக்குரிய வேட்பாளர்களையும் கொண்டுள்ளது.
எனவே, இவ்வாறான நிலையில் வட்டார ரீதியாக வேட்பாளர் தெரிவில் குழப்பகரமான நிலைப்பாடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உருவாகும். இந் நிலையில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் தனித்து போட்டியிட வேண்டிய நிலைப்பாட்டை உருவாக்கும் அல்லது மறக்க முடியாத பதிவுகளை ஏற்படுத்தும்.
இச்சூழலில் தமிழர் தரப்பிலும் ஸ்திரமற்ற அரசியல் நிலைப்பாடு உருவாகுவதற்கான வாய்ப்புள்ளது. இது தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்குச் சாதகமாக அமைந்து விடும் என்பது யதார்த்தம்.
மத்தியில் ஏற்படும் குழப்பத்தைக் காரணம் காட்டாது, தமிழர் தரப்பில் ஏற்பட்டுள்ள குழப்பமே நிரந்தரத் தீர்வுக்கான வழியை தேட முடியாது போனமைக்கான காரணம் என இலகுவாகத் தென்னிலங்கை கூறுவதற்கு தடம்போட்டுக் கொடுத்துவிடும். இச்சூழலைப் புரிந்து செயற்படவேண்டிய தமிழர் தரப்புத் தலைமைகள், அதை விடுத்து, தமக்குள் முட்டி மோதிக்கொள்வதானது அர்த்தபுஸ்டியான செயற்பாடாகாது.
தமிழர்களின் தீர்வுக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலையில், ஆசனங்களுக்காக மோதிக்கொள்வதும் இலக்குகளை மாறுபாடுகளுடன் உருவாக்கி, அதனை வைத்து அரசியல் செய்வதும் தற்போதைய நிலையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல.
மத்திய அரசாங்கத்துக்குள் எவ்வாறு ஒரே கட்சிக்குள் எதிர்க்கட்சியை உருவாக்கி கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியினால் முடிந்துள்ளதோ அதேபோன்றதான நிலையில், தமிழர் தரப்பிலும் உருவாக்கிக் குளிர்காயும் நிலைமை தோற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
தமிழர் தரப்புக்குள் அவ்வாறான நிலையைத் தோற்றுவிப்பதானது, இலகு தன்மையானது என்பதையும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் உணராமல் இல்லை.
எனவே, மத்திய அரசாங்கத்துக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏற்படப்போகும் குழப்பகரமான நிலையைப்போன்று, வடக்கு கிழக்கிலும் தமிழர் தரப்பு அரசியலில் குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உருவாகுமாக இருந்தால், அது நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டிய தமிழ் மக்களுக்கு, சாலச்சிறந்ததாக அமையாது.
இச்சூழலில் உள்ளூராட்சி தேர்தலை தமிழ் மக்களின் பின்னடைவுக்கான தளமாகப் பயன்படுத்தாது, ஆக்கபூர்வமான தளமாகவும் தமிழர்களின் அரசியல் பலத்துக்கான திறவுகோலாகவும் காட்ட வேண்டுமென்பதுடன் தீர்வைப் பெறுவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தத்தை வழங்கக்கூடிய அமைப்பு ரீதியான கட்டமைப்பாகவும் அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே, தற்போதைய தேவையாகவுள்ளது.