பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற வேறுபாடு இன்றி; சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் என்ற வேறுபாடு இன்றி, எல்லா மக்களும் இதன் வெற்றியில் பங்களிப்புச் செய்துள்ளனர். அண்மைக்கால இலங்கை அரசியல் வரலாற்றில் இது ஒரு பாரிய மாற்றம் என்பதில் ஐயமில்லை. இந்த மாற்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த மக்கள் எழுச்சியின் (அரகலய) தொடர்ச்சி என்றே சொல்ல வேண்டும். பாரம்பரிய அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் மீதான மக்களின் வெறுப்பும்; தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி அளித்ததுபோல் அரசியலிலும், நாட்டிலும் புதிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்ற மக்களின் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் இந்த வெற்றியின் அடிப்படை என்பதில் ஐயமில்லை.ஜனாதிபதி தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் பல. ஊழலை ஒழிப்பதிலிருந்து அடிப்படையான அரசியல் மாற்றங்கள் வரை இதில் அடங்கும். “வளமான நாடு அழகான வாழ்க்கை“ என்ற தலைப்பில் அவர்கள் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவை விரிவாகப் பேசப்படுகின்றன. அவற்றை நான் இங்கு பட்டியல்படுத்த வேண்டியதில்லை. அவை எல்லாவற்றையும் அடுத்துவரும் அவர்களின் ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் அவர்களால் நிறைவேற்றமுடியும் என்றும் நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், அவற்றுள் சுமார் 25% வீதத்தையாவது அவர்கள் நிறைவேற்றினாலே மக்கள் இவர்களை ஆட்சிக்குக் கொண்டுவந்ததன் பயனை அடைந்தவர்களாவார்கள் என்பதில் ஐயமில்லை.1994ல் சந்திரிகா பண்டாரநாயக்க பல வாக்குறுதிகளை அளித்து 62% வீதமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப் பட்டபோது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், அவருடைய பத்தாண்டுகால ஆட்சியில் அவற்றுள் எதையும் அவரால் நிறைவுசெய்ய முடியவில்லை. அதற்குரிய தற்துணிபு அவருக்கு இருக்கவில்லை என்பது மட்டுமன்றி, பாராளுமன்றத்தில் அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கவில்லை என்பதையும் ஒரு சமாதானமாகக் கூறலாம்.ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு அந்தச் சிக்கல் இல்லை. மக்கள் பூரணமான ஆணை கொடுத்திருக்கிறார்கள். ஆகவே, தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதற்கு இவர்களுக்கு எந்தவித காரணமும் இல்லை.இதுவரை எல்லாம் நன்றாகவே முடிந்திருக்கின்றது. சில சர்ச்சைகள் மேற்கிளம்பினாலும் உயர் கல்வித் தகைமை பெற்ற பலர் அமைச்சரவையிலும் இருக்கிறார்கள். இனிச் செய்ய வேண்டியது என்ன? என்பதையே அரசாங்கம் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். அதுபற்றியே நான் இங்கு சில கருத்துகளைச் சொல்ல விரும்புகிறேன்.1. பொருளாதார வங்குறோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுத்தல் அரசு நிறைவேற்ற வேண்டிய முக்கியமான சவாலாகும். மக்கள் பழைய அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, இந்த அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தியமைக்கு அடிப்படைக் காரணமே தங்கள் பொருளாதாரச் சுமையிலிருந்து விடுபட வேண்டும் என்பதுதான். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, மக்களின் வருமானத்தை அதிகரித்து, வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அரசு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டியதில்லை.ஆனால், இது இலகுவான காரியம் அல்ல என்பது எல்லாருக்கும் தெரியும். முன்னைய அரசாங்கங்கள் சேமித்துவைத்த பல்லாயிரம் கோடி உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன் சுமை இந்த அரசாங்கத்தின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச வட்டிக் கடைக்காரரிடம் நாடு ஏற்கனவே அடகுவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் ஹமில்ரன் றிசேவ் வங்கி 240 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை இலங்கை அரசு திருப்பிச் செலுத்த்வேண்டும் என்று தொடுத்த வழக்கில் நீதிமன்றம் அரசாங்கத்துக்கு ஒருமாத அவகாசம் வழங்கியுள்ளதாக தற்போது ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. அரசாங்கம் இத்தகைய அழுத்தங்களி லிருந்து மீள்வது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல.நாம் பூகோள மயப்படுத்தப்பட்ட பெருமுதலாளித்துவ யுகத்தில் வாழ்கிறோம். ஒவ்வொரு வளர்முக நாடும் நிதிமூலதன வல்லரசுகளால் நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப் படுத்தப்படுகின்றது. நமது சுயாதீனமான வளர்ச்சிக்கு அதுவே பிரதானமான சவாலாகும். அதை இந்த அரசு எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பது காலப்போக்கில்தான் தெரியவரும்.1977ல் இருந்து நடைமுறையிலிருக்கும், இன்றைய சமூக அரசியல் நெருக்கடிகளுக்கெல்லாம் மூல காரணமான திறந்த பொருளாதாரக் கொள்ளையிலிருந்து நாம் விடுபடுவது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. ஆயினும், இறக்குமதிப் பொருளாதாரத்தை மட்டுப்படுத்தி சுயசார்புப் பொருளாதாரக் கொள்கை ஒன்றை வகுத்துச் செயற்படுவது நாட்டு மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு அவசியமாகும். அதில் இந்த அரசு அக்கறை செலுத்தும் என்று நம்புகின்றேன்.2. இன ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்தி தேசிய ஐக்கியத்தைக் கட்டி எழுப்புவது இந்த அரசின் முன்னுள்ள பிறிதொரு முக்கிய சவாலாகும். சுதந்திரத்துக்குப் பின்னர் இந்த நாட்டில் மேலோங்கிவந்த இனவாதமும், இனமுரண்பாடும், மோதல்களும், பிரிவினைவாத யுத்தமும் இன்றைய இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகளுக்கு பிரதானமான காரணிகளாகும் என்பதைப் பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். நீண்ட கால இனப்பாகுபாடும், முரண்பாடுகளும், முப்பது ஆண்டுகால யுத்தமும் சிறுபான்மை மக்கள்மீது ஏற்படுத்தியுள்ள மாறாத வடுக்களை மாற்ற இந்த அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.தேசிய மக்கள் சக்தி, குறிப்பாக அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் இனவாதத்துக்கு எதிராகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும் அதிகம் பேசினார். வட கிழக்குத் தமிழ் மக்கள் உட்பட இலங்கை முழுவதிலும் வாழும் அனைத்துச் சிறுபான்மை மக்களும் அவர்மீது நம்பிக்கை வைத்து பெருமளவில் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு இந்த அரசாங்கத்துக்கு உண்டு. இலங்கையின் பல்லினத் தன்மையை ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு சமூகத்தின் தனித்துவத்தையும், பிரச்சினைகளையும் புரிந்துகொண்டு, தாங்கள் அன்னியப்படுத்தப்பட்டவர்கள் என்ற உணர்வுக்கு அவர்கள் ஆளாகாதவகையில் அவர்களையும் அரசியலில் பங்காளிகளாக ஏற்றுக்கொண்டு ஆட்சி நடத்தாத வரையில் இந்த நாட்டில் இன நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்ப முடியாது என்பதை இந்த அரசு செயலில் காட்டவேண்டும். இது தொடர்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய சில நடவடிக்கைகளை நான் இங்கு சுட்டிக்காட்டலாம்.1. வட கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாம்களை அகற்றுதல் அல்லது மட்டுப்படுத்துதல்.2. ராணுவம் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகளை விடுவித்தல்.3. காணாமற்போனோர் பிரச்சினையைத் தீர்த்துவைத்தல்.4. அகதிகளின் மீள் குடியேற்றத்தை விரைவுபடுத்தல்.5. சட்டபூர்வமற்ற குடியேற்றங்களைத் தடுத்தல்6. ஆட்சிமொழிச் சட்டத்தை நாடுமுழுவதிலும் சரியாக அமுல்படுத்துதல்7. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு /மாகாண சபை முறைமையை முழுமையாக அமுல்படுத்துதல்8. பாராபட்சமற்ற தொழில்வாய்ப்பு. அரச தனியார் தொழில் வாய்ப்புகளில் இனவிகிதாசாரத்தைப் பேணுதல்9. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல்.3. 1994 ஜனாதிபதி தேர்தல் காலத்திலிருந்து, கோட்டாபாய ராஜபக்ச தவிர்ந்த, எல்லா வேட்பாளர்களும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகவே வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், பதவிக்கு வந்தபின் ஜனாதிபதியின் அதிகாரத்தை அதிகரிக்கவும், ஆட்சிக்காலத்தை நீடிக்கவும் முயன்றார்களே தவிர, அதை நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை. புதிய ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது “இதுதான் கடைசி ஜனாதிபதி தேர்தல்“ என்று கூறியிருக்கின்றார். தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அதுபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் அடுத்த தேர்தல் பாராளுமன்றத் தேர்தலாக இருக்கவேண்டுமே தவிர ஜனாதிபதி தேர்தலாக இருக்கக் கூடாது என்பது மக்களின் எதிர்பார்ப்பு. இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் முடிவுக்குவரமுன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையற்ற, ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்ற, இன ஐக்கியத்தை உறுதிப்படுத்துகின்ற, மக்கள் நல அரசை உருவாக்குகின்ற ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோம். ஏற்கனவே 2000, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் புதிய யாப்புத் திருத்தத்துக்கான யோசனைகள் பல முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் இந்த அரசாங்கம் கருத்தில் கொள்வது அவசியமாகும்.4. ஊழல் ஒழிப்பு தேசிய மக்கள் சக்தியின் கவர்ச்சிகரமான ஒரு தேர்தல் பிரச்சாரமாக இருந்தது. பழம்பெரும் அரசியல் வாதிகளின் பாரிய ஊழல் மோசடிகள் பற்றியே அவர்கள் அதிகம் பேசினார்கள். அவற்றைக் கண்டுபிடித்து அவர்கள்மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்தான். ஆனால், லஞ்சமும், ஊழலும் அரச நிருவாகத்தின் எல்லா மட்டங்களிலும் ஆழ வேரோடி உள்ளது. அதை அகற்றுவதற்கான, அல்லது மட்டுப்படுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்குவது முக்கியமானது. இந்த ஆட்சிக்காலத்தில் அது செயற்பட வேண்டும். இலங்கை உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் வரிசையைவிட்டு, ஊழல் குறைந்த நாடுகளின் வரிசையில் சேரும் காலம் விரைவில் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.5. பாராளுமன்றத்தைச் சுத்திகரித்தல் பற்றி ஜனாதிபதி தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் சுவையாகப் பேசினார். பாராளுமன்றத்தைச் சுத்திகரித்தல் என்பது ஊழல் மிகுந்த பழைய அரசியல் வாதிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, புதிய அரசியல்வாதிகளால் பாராளுமன்றத்தை நிரப்புவது அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். புதியவர்களும் பழையவர்கள்போல் ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளாக ஆகமுடியாத, சட்டபூர்வமான ஒரு புதிய சூழலை உருவாக்குவதாகவே அது இருக்கவேண்டும். தொழில்ரீதியான அரசியல்வாதிகள் (Professional Politicians) உருவாக முடியாத ஒரு சூழலை உருவாக்குவது அதன் பொருளாக இருக்கவேண்டும். வேறு தொழில் எதுவும் இல்லாது, அல்லது தனது தொழிலைக் கைவிட்டு, பாராளுமன்றப் பதவியையே தன் வாழ்நாள் தொழிலாகக் கொள்பவர்தான் தொழிலரீதியான அரசியல்வாதி எனப்படுகிறார். பின்னர், அது அவருடைய குடும்ப உரிமையாகிறது. அது அவர்கள் சொத்துக் குவிப்பதற்கான வாயிலாகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட தொழில் ரீதியான அரசியல்வாதி பிரச்சினைக்கு உரியவர்தான். தொழில் ரீதியான அரசியல்வாதிகள் உருவாவதைத் தவிர்க்க வேண்டுமானால் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம், வயது, கல்வித்தகைமை என்பன பற்றி சட்டரீதியான வரையறைகள் வேண்டும். தங்களைப் பாதிக்கும் சட்டரீதியான இத்தகைய வரையறைகளைச் செய்ய பதவியிலுள்ள எந்த அரசாங்கமும் முன்வருமா என்பது ஐயத்துக்குரியது. இவற்றை மேற்கொள்ளாமல் பாராளுமன்றத்தைச் சுத்திகரிக்க முடியுமா என்பது கேள்விக்குரியதுதான்.அடுத்துவரும் ஐந்தாண்டு காலத்துள் நல்லது நடக்கவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு