1977இற்குப் பின்னர், வடக்கில் பெரும்பாலான தருணங்களில், ஜனநாயக ரீதியாகத் தேர்தல்கள் நடக்கவில்லை.
ஒன்றில் இறுக்கமான இராணுவ சூழலுக்குள் தேர்தல் நடந்திருக்கிறது. அல்லது, அரச அதிகாரபலம் கோலோச்சிய நிலையில் நடந்திருக்கிறது.
ஆனால், இந்த முறை, இராணுவச் சூழலும் இருக்கிறது; அதிகார பலமும் கோலோச்சுகிறது. அவற்றுக்கு அப்பால் ஊடக பலமும் பண பலமும் வேறு ஆட்டிப் படைக்கின்றன.
பண பலம், அதிகார பலம், ஊடக பலம் இருந்தால், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகி விடலாம் என்ற கனவுடன், பல வேட்பாளர்கள் களமிறங்கி இருக்கிறார்கள்.
கடந்தகாலத் தேர்தல்களில் இல்லாதளவுக்கு, இம்முறை பணம் கரை புரண்டு ஓடுகிறது. காரணம், பல முக்கிய கட்சிகளும் குழுக்களும் பணத்தைச் செலவிடக் கூடிய புள்ளிகளை, வேட்பாளர்களாகக் களமிறக்கி விட்டிருக்கின்றன.
இதற்கு முன்னர், பேரினவாதக் கட்சிகளுக்கு போட்டியில் நிறுத்துவதற்கு, வடக்கில் வேட்பாளர்கள் கிடைப்பதே அரிது. போட்டியில் நிற்கும் சில முக்கியப் பிரமுகர்கள், ஒப்புக்காக யாரையாவது பிடித்துக் களமிறக்கி வந்தனர்.
அப்போது, வடக்கின் தேர்தல் செலவுக்கு, பெருமளவு பணம் பேரினவாதக் கட்சிகளால் கொடுக்கப்பட்டு வந்தது.
இப்போது நிலைமைகள் மாறி விட்டன. இந்தமுறை, பேரினவாதக் கட்சிகளில் களமிறங்கி உள்ளவர்களில் பலர், முக்கியப் புள்ளிகள். பணத்தைத் தண்ணீராகச் செலவிடக் கூடியவர்கள்.
பணத்தை அள்ளி வீசினால், வாக்குகள் கிடைக்கும்; நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து விடலாம் என்று, அவர்களுக்கு யாரோ நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
ஏனென்றால், அந்தளவுக்கு அவர்களால் பணம், நீராக வாரி இறைக்கப்படுகிறது.
இம்முறை, ‘பேஸ்புக்’கில் பிரசாரத்துக்காக அதிகளவில் செலவிட்டுள்ள வேட்பாளர்களில் முதலிடத்தில் உள்ளவர் சஜித் பிரேமதாஸ. அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் அங்கஜன் இராமநாதன்.
நாட்டின் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுகின்ற ஒரு பெரிய அரசியல் கட்சியின், கூட்டணியின் தலைவருக்கு அடுத்த நிலையில், சமூக வலைத்தளப் பிரசாரத்துக்கு இவர் செலவழிக்கிறார்.
‘பேஸ்புக்’ பிரசாரத்துக்காக, அங்கஜன் இராமநாதன் 12 ஆயிரம் டொலர்களுக்கு மேல் செலவழித்திருக்கிறார். இதிலிருந்தே வடக்கில் எந்தளவுக்குப் பணம் செலவிடப்படுகிறது என்பதை ஊகித்துக் கொள்ள முடிகிறது.
யாழ். மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு வேட்பாளர்கள் செலவிடும் நிதியைப் பார்த்து, நிலையான வாக்கு வங்கியைக் கொண்ட தமிழ்த் தேசிய கட்சிகள் உள்ளிட்ட எல்லாக் கட்சிகளுமே, மிரண்டு போயிருக்கின்றன.
ஏனென்றால், சுவரொட்டிகளிலும் அவர்கள் தான் நிற்கிறார்கள்; நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் அவர்களின் விளம்பரங்கள் தான் நிறைந்து கிடக்கின்றன
இதைப் பார்த்து மிரட்டு போயுள்ள ஏனைய கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் கூட, நாளிதழ் விளம்பரங்கள், சமூக வலைத்தள விளம்பரங்கள் என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, கொரோனா வைரஸால் இழந்த வருமானத்தை மீட்டு விடுவதென்பதில், ஊடகங்களும் குறியாக இருக்கின்றன.
வடக்கில், தேர்தல் காலத்தைக் குறிவைத்தே, குறுகிய காலத்துக்குள் புதிது புதிதாகப் பல அச்சு ஊடகங்கள் முளைத்திருக்கின்றமையும் குறிப்பிட வேண்டிய விடயம்.
வடக்கு அரசியலில், ஊடக பலம், செல்வாக்குச் செலுத்திய முதல் சந்தர்ப்பமாக அமைந்தது, 2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தான்.
அப்போது, ஈ.பி.டி.பிக்கும் யாழ்ப்பாண நாளிதழ் ஒன்றுக்கும் இடையில் வெடித்த தீவிர மோதலால், ஐ.தே.க வேட்பாளராக மகேஸ்வரனைக் களமிறக்கி, அவரை வெற்றி பெறச் செய்தது குறித்த ஊடகம். 2001இலும் அதுவே நடந்தது.
2010இல் குறித்த ஊடகத்தின் உரிமையாளரும் கூட, அந்தப் பலத்தை வைத்துக் கொண்டு, நாடாளுமன்றம் சென்று விட்டார். 2015இலும் அதை அவர் தக்கவைத்தார்.
இப்போது, அச்சு ஊடகங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் என்று பலவற்றைத் தமது பக்கம் வளைத்துப் போட்டு, வெற்றி பெற்று விடலாம் என்று பெரும் புள்ளிகள் களமிறங்கி இருக்கிறார்கள்.
வடக்கின் உள்ளூர் ஊடகங்கள் பல, வெளிப்படையாகவே அரசியல் பேசுகின்றன; சார்பு நிலையுடன் தகவல்களைப் பகர்கின்றன.
கூட்டமைப்பை ஆதரிக்கும் ஊடகங்களும் உள்ளன. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியை ஆதரிக்கும் ஊடகங்களும் இருக்கின்றன. அதுபோன்று, பேரினவாதக் கட்சிகளும் கூட, பல ஊடகங்களைக் கைக்குள் போட்டு வைத்திருக்கின்றன.
பண பலத்தை வைத்துக் கொண்டும் ஊடக பலத்தை வைத்துக் கொண்டும் நாடாளுமன்றக் கதிரையில் அமர்ந்து விடலாம் என்று, பல வேட்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அதற்காக அவர்கள், விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களை ஒத்த மெட்டுகளில், தம்மைப் பிரபலப்படுத்திக் கொள்ளும் பாடல்களை வெளியிட்டு, செய்கின்ற அலப்பறைகள் தாங்கிக் கொள்ள முடியாதவையாக உள்ளன. இவையெல்லாம் தமிழ் மக்களைப் பெரிதும் சலிப்படையச் செய்திருக்கின்றன.
நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்காக, இந்தளவுக்குப் பணத்தைக் கொட்டும் அரசியல்வாதிகளுக்கு, இவை எங்கிருந்து கிடைத்தன என்ற கேள்வி, மக்கள் மத்தியில் உள்ளது. அத்துடன், பிரசாரத்துக்காக இவ்வளவு செலவழிப்பவர்கள், இதனை எவ்வாறு ஈடுகட்டப் போகிறார்கள் என்பது, மக்கள் மத்தியில் உள்ள நியாயமான கேள்வி.
ஏனென்றால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சட்டரீதியாகக் கிடைக்கக் கூடிய ஊதியம், சலுகைகள், அவர்களின் வாழ்க்கைச் செலவுக்குத் தான் போதுமானதாக இருக்கும்
வாகன இறக்குமதி அனுமதியின் மூலம் கொஞ்சம் பணத்தைச் சம்பாதிக்கலாம். அதற்கும் இப்போது பல கட்டுப்பாடுகள் வந்து விட்டன.
அவ்வாறாயின், இவர்கள் செலவிடுகின்ற பணத்தை, எப்படி மீளப்பெறப் போகிறார்கள்? என்பது மர்மமாகவே உள்ளது.
பல வேட்பாளர்களுக்குப் பின்னால், உள்ளேயும் வெளியேயும் பலர் இருக்கிறார்கள். அவர்களே, அவர்களின் செலவுகளைக் கவனித்துக் கொள்கிறார்கள்.
பல புத்திசாலித் தலைவர்களும் வேட்பாளர்களும், சொந்தக் காசைப் போட்டு பிரசாரம் செய்வதில்லை.
சி.வி. விக்னேஸ்வரனை, வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிட கூட்டமைப்பு அழைத்த போது, ஓய்வூதியப் பணத்தை கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் தான், அரசியலில் செலவு செய்ய முடியாது என்று மறுத்தார் என்றும் புலம்பெயர் தமிழர்களே அவரது வெற்றிக்காகப் பணத்தைச் செலவிட்டனர் என்பதும் பழங்கதை.
இப்போதும் கூட, அவருக்கும் அவரது அணியினருக்கும் துணையாக இருப்பவர்கள் புலம்பெயர் தமிழர்கள் தான்.
தமிழ்த் தேசிய கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு, புலம்பெயர் தமிழர்களின் நிதி தான் பலம்.
உள்ளூர் வர்த்தகப் புள்ளிகளுக்கு ஈடு கொடுக்க முடியாவிட்டாலும், இவர்களும் பிரசாரங்களுக்குச் செலவழித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
பேரினவாதக் கட்சிகளுடன் ஒப்பிடுகையில், தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரசாரச் செலவுகள் குறைவு தான். ஆனாலும், சில சுயேட்சைக் குழுக்கள், தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இணையாகப் பிரசாரங்களுக்குச் செலவழிக்கத் தொடங்கியிருக்கின்றன.
இந்தத் தேர்தல் செலவுகளையும் பிரசாரங்களையும் வைத்துத் தான், வடக்கில் உள்ள மக்கள், தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யப் போகின்றனரா? அல்லது, கொள்கைகளின் அடிப்படையில் அவர்களைத் தெரிவு செய்யப் போகிறார்களா? இல்லை, தமது தேவைகளின் அடிப்படையில் தெரிவை மேற்கொள்ளப் போகிறார்களா?
முடிவெடுக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.