இது மதங்களுக்கான விழா அல்ல மனங்களுக்கான விழா. இது தொழில்களை பாகுபடுத்தி மக்களைப் பாகுபடுத்திப் பார்க்கும் விழாவும் அல்ல. உழைப்பாளிகளை கௌரவப்படுத்தும் விழா. பிரிந்து நிற்றல், பிரித்துப் பார்த்தல் என்பதை மறந்து இணைந்து நிற்றல், இணைத்துப் பார்த்தல் என்று எல்லாருக்கும் பொதுவான சூரியனை பொதுவுடமையாக்கிப் பார்க்கும் தைத் திருநான்.
உழவர் திருநாள் உழைப்பாளர் தினம். அறுவடையை கொண்டாடும் தினம் அறுவடைக்கு எல்லா வகையிலும் ஆதாரமான சூரியனுக்கு நன்றி சொல்லும் விழா. ‘சேத்துக்குள் காலை வைத்தாலே நாம் சோத்துக்கள் கையை வைக்கலாம்” என்பது விவசாயத்தின் மகிமையை தேவையை எடுத்தியம்பும் மொழியாகி இருக்கின்றது.
மனிதன் வாழ்வியலுக்கு அடிப்படையாக உள்ள உணவை உற்பத்தி செய்யும் விவசாயப் மக்களின் தொழிலுக்கும் அதனைச் சார்ந்த உணவு உற்பத்தியை கொண்டாடும் தினமாக இந்த தினத்தை…. திரு நாளை உழவர் திருநாள் என்று கொண்டாப்பட்டாலும் இதனை நான் உழவர் திருநாள் என்பதற்குள் மட்டும் ஒடுக்கிவிட விரும்பவில்லை. இது ஒரு பண்பாட்டு ரீதியிலான தினமாகவே பார்க்க விரும்புகின்றேன்.
அனைத்து உணவு உற்பத்தியிலும் ஈடுபடும் உழைப்பாளிகளுக்கான ஒரு கொண்டாடும் தினமாகவே பார்க்க விளைகின்றேன்.நான் கூற முற்படும் விடயத்தின் ஆழத்தை புரிந்து கொள்ள வேண்டின் தமிழ் மக்கள் கொண்டாடும் இந்தத் தினத்தை உழவர்கள் அல்லது விவசாயத்தில் மட்டும் ஈடுபடும் கமக்காரர்கள் என்பதற்கு அப்பால் வெவ்வேறு தொழில் முறையில் ஈடுபடுபவர்களும் இதனைக் கொண்டாடுவதில் இருந்து அறிய கொள்ள முடியும்.
நமது மூதாதையர் ஆரம்ப காலத்தில் தமது உணவிற்காக விவசாயத்தை அதிகம் தொழிலாக கொண்டிருந்ததும் அதன் வழியாக வந்து தலை முறையாகிய நாம் ஒரு பண்பாட்டு ரீதியில் அதனை எமக்குள் உள்வாங்கி அதனைத் தொடர்ந்தும் கொண்டாடுகின்றோம் என்ற வாதத்திலும் நியாயங்கள் இருந்தாலும் மனிதன் தனது உணவு உற்பத்தியை எவ்வளவு முக்கியமான விடயமாக பார்க்கின்றான் என்பதே இந்த விழாவிற்கான முக்கிய காரணமாக அமைகின்றது.
உலகம் முழுவதும் இந்த அறுவடையிற்கான விழா நாடுகளுக்கு நாடு கால நிலை மாறுபடுவதினால அந்த நாடுகளின் அறுவடை நாட்களின் அடிப்படையில்; வெவ்வேறு காலங்களில் கொண்hடப்படுகின்றது. இதற்கான விழாக்களின் பெயர்களும் கொண்டாடும் முறைகளும் மாறுபட்டிருக்கின்றது.
எமது தாயத்தில்…. இந்தியாவின் தமிழ் நாட்டில் மார்கழி முடிந்து தை மாதமே அறுவடைக் காலமாக இருப்பதினால் தமிழ் தை மாதம் முதலாம் திகதியிலும் வேறு நாடுகளில் அவர்களின் அறுவடையைத் தொடர்ந்த நாள் ஒன்றின் மாதத்திலும் வேறு வேறு விதமாக கொண்டாடப்படுகின்றது.இந்த உலகத்தின் இயக்கத்திற்கு, கால நிலைக்கு, மழை வெயிலுக்கு, சக்தியை வழங்கும் சூரியன் யாவருக்கும் பொதுவாக இருப்பதால் அது ஒரு பொதுவுடமைத் தத்துவத்தின் அடையாளமாக பார்ப்பதில் தவறேதும் இல்லைதானே.
இதனால் அந்த சூரியனை அந்த சூரியன் வழங்கும் சக்தியை எற்புடமையாக்கி வணங்கி நிற்பதும் மரியாதை செலுத்துவதும், நினைவு கூர்வதும், கொண்டாடுவதும் இயல்பானதே. இது மனித குலத்தில் இருந்து உருவாகும் இயல்பான உணர்சிப் பிரவாக்கத்தின் விளைவுதான்.
அதனால் தான் சூரியனை வணங்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக தைபொங்கல் முதன்மைப்படுத்தப்பட்டு அது கமக்காரர்களுக்கு என்று குறுகிவிடாமல் சகலருக்குமான விழாவாக எழுந்து நிற்கின்றது. கூடவே உலகம் யந்திரயமாக்கப்படுவதற்கு முன்பு ஏன் தற்போதும் கூட எனது அன்றாட வேலைகளுக்கு உதவிகரமாக இருக்கும் மாட்டிற்கு மரியாதை செலுத்தும் விழாவைத் தவிர்த்தும் இந்த தைத் திருநாளை நாம் பார்க்கமுடியாது.
உழவிற்கும், சுமைகளை ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு கொண்ட செல்லுதல், முழுமையான உணவாக பார்க்கப்படும் பால் போன்றவற்றை தருவதும், சாணியாக எருவாக பசளையாக எல்லாவற்றையும் தந்து சாதுவாக எம் குடும்பத்தில் ஒருவராகிப் போன செல்லப் பிராணியாக… உழைப்பாளியாக… சகபாடியாக.. என்று பன்முகத் தன்மையுடையவராக இந்த உயிரினம் எம்முடன் வாழ்கின்றது.
எங்கள் கூப்பன் மட்டையில் பதியப்படாத ஆனால் உறவாகிப் போன உயிராக எம்முடன் கலந்து விட்ட அவரை நாம் இழக்கும் சந்தர்பம் வரும் போது அதனை வளர்த்தவர்கள் கலங்கி நிற்பதை கமத் தொழில் அதிகம் ஈடுடுவர்கள் இருப்பதை தற்போதும் நாம் கிராமங்கள் தோறும் காண முடியும்.
எனவே எமக்கான உணவை நேரிடையாகவும் அந்த உற்பத்தியிற்கு உறுதுணையாக என்று இருக்கும் கால் நடைகளையும், இவை எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கும் சக்தியின் பிறப்பிடமான சூரியனையும் வணங்கி வாழ்த்தி நினைவு கூர்வோம்.இத்திருநாளில் உறவுகள், நட்புகள், அயலவர்கள் என்று சகோதரத்துவத்தை வளர்க்கும் நாம் யாவரும் ஒரு பொதுவான கொண்டாடும் மனநிலையில் இருந்து கொண்டாடு வோம்.
வாழ்விற்குள் வசதிகள் குறைந்த மக்களையும் அழைத்து, அணைத்த அவர்களையும் நம்மில் ஒருவராக்கி பரிசில்கள் வழங்கி கொண்டாடுவோம் புத்தாடை உடுத்தலும், நம்பிக்கைகளின் அடிப்படையில் தேவாலயங்ளுக்கு செல்லுதல், உறவுகள் வீட்டிற்கு செல்லுதல் என்று கொண்டாடிய இத் திருநாள் கொரனா என் பேரிடரால் மட்டுப்படுத்தப் பட்டிருந்தாலும் கிடைத்திருக்கும் தொழில் நுட்பத்தை பாவித்து தொலை பேசியல் அழைத்து இணையத்தில் எழுதி, காணொளியில் முகம் பார்த்து என்று அளவளாவி மகிழுங்கள்.
எல்லோரிடமும் மனத்தளவில் இணைந்து உடலளவில் தள்ளி நிற்க வேண்டிய சூழல் இருப்பினும் மனத்தால் வாழும் நல்ல பண்புகளை நாம் உள் வாங்கிக் கொள்வோம்.வீடியோ கேம் விளையாட்டிற்கும் கிளித்தட்டு, பந்தடித்து விளையாடுவதற்கு இடையே இருக்கும் வித்தியாசம் நம் எல்லோராலும் உணரப்படக் கூடியது.
கூடி விளையாடுதலில்…. தனி அறைக்குள் பூட்டியபடி நாமே நமக்குள் சிரித்து சிரித்து மட்டும் விளையாடலும், உடலை அசைக்கா(த) விளையாட்டாக மாறி இருக்கும் வீடியோ கேம் உம், இதற்கு முற்றிலும் எதிர் மாறாக உடலை அசைத்து கூட்டமாக சமூகமாக பலருடன் இணைந்து மகிழ்சியையும் சந்தோஷங்களையும் பரிமாற்றமாக்கி ஆடும் ஆட்டம் பாட்டம்தான்.
இதனை நாம் கிராமங்கள் தோறும் பொங்கல் விழாக்களில் காண முடியும். இந்த பொங்கல் விழா ஊர் கூடித் தேர் இழுப்பதில் இருந்து இன்று இயந்திரத்தில் கயிற்றைக் கட்டித் தேர் இழுப்பதற்குமாக மாறியிருக்கும் நவீனம் தொலைத்து விட்ட அவலாங்களாக இன்று வந்து நிற்கின்றது.
குடும்பமாக… உறவுகளாக… நட்புகளாக.. ஊராக…இணைந்து புது உடை அணிந்து எம்மால் கட்டப்பட்ட பட்டங்களை காற்றில் பறக்கவிட்டு அதன் விண் சத்தத்தில் அது என்னுடைய பட்டம் என்று ஊர் மக்களிடம் ஒரு பெருமையயடித்து கொண்டாடிய அந்த வாடைக் காற்றுத் திருநாளாக மிளிர்ந்ததே தைப் பொங்கல். அதன் நினைவுகள் இன்றும் பசுமையாக.
அறுவடை செய்த புது நெல்லை எடுத்து பொங்கல் அரிசியாக்கி முற்றத்தில் மூன்று கல்லு வைத்து சூரியனை நோக்கி பொங்கல் பானை வைத்து பொங்கிப் பூரிக்கும் செயற்பாடு அடுப்பில் குக்கரில் காஸ் அடுப்பில் வீட்டிற்குள் பொங்கும் பொங்கலாய் அமுக்கமாக…. கமுக்மாக செய்யாது சர வெடியாக மகிழ்ச்சிப் பிரவாக்கத்தில் குதூகலிக்கும் அரியப் பொங்கலாக கொண்டாடுங்கள்.
கூடவே உழைப்பின் மகிமையை போற்றும் பொங்கலாக உணவு உற்பத்தியிற்கு மதிபளிக்கும் பொங்கலாக கூடிப் பாடி கண் சிமிட்டி இந்த கண் சிமிட்டலில் ஆயிரம் கதைகளை மற்றவர்களுக்கு தெரியாமல் காதலித்துச் சொல்லும் விழாவாக பரிணமித்த அந்த நாட்களை இன்றும் இன்னமும் கொண்டுவருவோம்.நவீன இலத்திரனியல் உலகத்தில் நாம் இழந்தவையை மீட்டெடுத்து சேற்றி கால் வைத்தல் உணவிற்காக மட்டும் அல்ல உடலுக்காவும் தேக ஆரோக்கியத்திற்கும் என்றும் உலகத்தின் பொது விதியான ஏழ்மையை தீர்க்க இது உதவுதாக அமைதலாகவும் இருக்கும் என்பதை நாம் உணர்ந்து செயற்படுவோம்.