முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களே-
வணக்கம்
உங்களைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் தற்போது எழுந்துள்ளன. இதனால் உங்களுக்கு கடிதம் ஒன்றை எழுத வேண்டும் என தோன்றியது. இவர் முதலமைச்சராக இருந்து என்ன செய்தார் என்று சிலரும், நீங்கள்தான் இலங்கை அரசாங்கத்துக்கு சரியான அடி கொடுக்கக்கூடியவர் என்று வேறு சிலரும், அதேவேளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உடைத்தவர் நீங்கள்தான் என்று கூறுவோரும் உண்டு.
ஒருவர் அரசியலில் ஈடுபட்டால், அவர் எத்தகைய உயர் தகுதி நிலையில் இருந்தாலும் அவர் குறித்து எழக்கூடிய சாதக பாதகமான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் ஏற்கத்தான் வேண்டும்.
சரி விடயத்துக்கு வருவோம்-
நீங்கள் அரசியல்வாதியல்ல, தமிழர்களின் அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டவரும் அல்ல. ஆனால் நீதிபதியாகவும் உயர் நீதிமன்ற நீதியரசராகவும் பதவி வகித்த காலத்தில், அரசியல் உரிமைகள் பற்றி பகிரங்கமாகவே பேசி வந்தீர்கள்.
1999 ஆம் ஆண்டு நீங்கள் உயர் நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்த்தப்பட்டீர்கள். அந்த பதவியேற்பு விழாவில், மாகாண சபை, இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்றும், சிறுவர்களின் மாபிள் விளையாட்டுடன் ஒப்பிட்டும் மாகாண சபையின் அதிகாரங்கள் பற்றியும் உரையாற்றியிருந்தீர்கள்.
உயர் நீதிமன்ற நீதியரசராக பதவியேற்கும் எவரும் அரசாங்கத்தையோ அல்லது அதன் அரசியல் யாப்பு பற்றியோ விமர்சித்து உரையாற்றியது கிடையாது.
ஆனால் நீங்கள் அந்தநேர போர்ச்சூழல் மத்தியிலும் அரச உயர் பதவி ஒன்றை ஏற்கும் வைபவம் ஒன்றின்போதும், துணிவுடன் மாகாண சபையின் அதிகாரங்கள் பற்றி குறைகூறி உரையாற்றியிருந்தீர்கள். அதுவும் கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில்.
ஓய்வு பெற்ற பின்னரும் கூட, தமிழர் அரசியல் உரிமைகள் பற்றி நீங்கள் கொழும்பில் பல மேடைகளில் உரையாற்றியிருந்தீர்கள். அதன் காரணமாகவோ என்னவோ, 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், முதன் முதலாக நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நீங்கள் முதலமைச்சராக போட்டியிட உங்களுக்கு அழைப்பு வந்தது.
உங்களை முதலமைச்சராக்கும் நோக்கில், வெள்ளவத்தையில் உள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் நீங்களும் கலந்துகொண்டீர்கள். அங்கு உரையாற்றிய கம்பவாருதி ஜெயராஜ் உட்பட பலரும் நீங்கள் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அந்தவேளை மண்டபத்திற்கு வெளியே நின்ற சிலர் எதிர்ப்பு வெளியிட்டு சத்தமிட்டனர். 2016 ஆம் ஆண்டு நீங்கள் யாழ்ப்பாணத்தில் அமைத்த தமிழ் மக்கள் பேரவையில் முக்கிய உறுப்பினராக பதவி வகிக்கும் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் கூட, அன்று நீங்கள் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதை விரும்பவில்லை.
அதாவது தமிழ்த்தேசியத்தை நேசித்த எவரும் உங்களை விரும்பவில்லை. ஆனால் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை விரும்பாத பலர், உங்களை முதலமைச்சர் வேட்பாளராக நியமிப்பதற்கு அன்று பெரும்பாடுபட்டனர். உங்களை நன்கு அறிந்த தமிழ்த்தேசியத்தை நேசிக்கும் சிலர், நீங்கள் முதலமைச்சர் வேட்பாளராக வருவதை விரும்பியிருந்தனர்.
அதனால் உங்களை எதிர்த்த பலருக்கும் எதிர்க்க வேண்டாம் என ஆலோசனையும் வழங்கியிருந்தனர். அவ்வாறே நீங்களும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளை பெற்று வெற்றியடைந்து முதலமைச்சராக பதவியேற்றீர்கள். ஒரு வருடத்தின் பின்னர் உங்கள் பேச்சும் செயற்பாடும் தமிழர்களின் அரசியல் போராட்டத்தை நியாயப்படுத்தியது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெம்பூட்டியது. இறுதிப்போரில் நடந்தது தமிழ் இன படுகொலைதான் என்றும் மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றியிருந்தீர்கள்.
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன், கட்சியின் பிரதான செயற்பாட்டாளர் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோர் நினைத்த அளவுக்கு நீங்கள் செயற்படாது அவர்களை மீறி உங்கள் நடவடிக்கைகள் அமைந்தன. அதனால் மக்களும் உங்களை ஆதரித்தனர்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளும் உங்கள் செயற்பாட்டுக்கு மனதளவில் அங்கீகாரம் வழங்கியிருந்தன. அத்துடன் முதலமைச்சர் வேட்பாளராக நீங்கள் போட்டியிட்டபோது, கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் உட்பட அன்று உங்களை எதிர்த்த பலரும் இன்று ஆதரிக்கின்றனர்.
தமிழரசுக் கட்சி உங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பித்தபோது கூட மக்கள் குறிப்பாக இளைஞர்கள் வீதியில் இறங்கி உங்களுக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் தமிழரசுக் கட்சியும் நம்பிக்கையில்லா பிரேரணையை கைவிட நேரிட்டது.
அதன் பின்னரான அரசியல் சூழலில் உங்களின் செயற்பாடுகள் இன்னும் கூடுதலாக வேகமாகவும், விவேகமாகவும் இருக்கும் என பலரும் எதிர்ப்பார்த்தனர், நம்பினர். ஆனால் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவடைந்து, இன்றுவரை உங்களிடம் இருந்து அவ்வாறான செயற்பாடுகள் எதனையும் காணமுடியவில்லை என தற்போது பலரும் பேச ஆரம்பித்து விட்டனர்.
உங்களை தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும் குறைகூறிக் கொண்டிருந்தபோது உங்களுக்காகவும், உங்கள் தலைமைக்காகவும் எதிர்ப்பாத்துக் காத்திருந்தவர்களையும் உங்களுக்கு வாக்களித்த மக்களையும் நீங்கள் கைவிட்டீர்களா என்றுதான் பலரும் கேட்கின்றனர்.
வடக்கையும் கிழக்கையும் இணைத்து செயற்படக்கூடிய தலைவர் இன்று தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. ஆனால் நீங்கள், அந்தப் பொறுப்பை ஏற்றால் மக்களின் பெரும் எண்ணிக்கையானவர்கள் அதை எதிர்க்கப்போவதில்லை.
மாற்று அரசியல் அணி ஒன்று உருவாக வேண்டும் என உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னரே பலரும் விரும்பியிருந்தனர். தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டபோது அந்த நம்பிக்கை மக்களிடம் வேரூன்றியது.
ஆனால் நீங்கள் தமிழ் மக்கள் பேரவையைக் கூட சரியாக நெறிப்படுத்தவில்லை என்பதை உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முந்திய செயற்பாடுகள் கோடிட்டுக் காண்பித்தன.
குறிப்பாக கஜேந்திரக்குமார், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரை உள்ளடக்கிய புதிய அரசியல் அணி குறித்து சாதக, பாதக விமர்சனங்களுக்கு மத்தியிலும் பலருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் நீங்கள் புதிய அரசியல் அணி என்ற விடயத்தில் கருத்துக் கூறாமல் அமைதிகாத்தீர்கள்.
இருந்தாலும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரங்கள் இடம்பெற்றபோது, தமிழரசுக் கட்சிக்கு எதிரான கருத்துக்களையே நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறியிருந்தீர்கள்.
ஆகவே உங்களிடம் சில கேள்விகள்-
புதிய அரசியல் அணி உருவாக்கம் பற்றிய பேச்சுக்கள் அடிபட்டபோது நீங்கள் ஏன் அமைதிகாத்தீர்கள்? கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் பற்றி அப்போது எழுந்த எதிர் விமர்சனங்களைக் கண்டு பயந்து விட்டீர்களோ?
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் கூட, உங்கள் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து நீங்கள் இதுவரை மக்களுக்கு துணிவுடன் கருத்துக் கூறவில்லையே?
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைகின்றது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிச்சயமாக தேர்தல் நடைபெறும். அவ்வாறு தேர்தல் நடைபெற்றால் நீங்கள் எந்தக் கட்சியில் போட்டியிடுவீர்கள்?
புதிய அரசியல் அணியில் போட்டியிடுவது என்றால் அதை எப்படி உருவாக்கப் போகின்றீர்கள்? அல்லது பதவிக் காலம் முடிவடைய நீங்கள் மீண்டும் கொழும்புக்கு திரும்பிவிடுவீர்களா?
மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக புதியவர் ஒருவரின் பெயரை தமிழரசுக் கட்சி முன்கூட்டியே அறிக்கவுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. நிச்சயமாக உங்கள் பெயர் இல்லை என்று வெளிப்படையாகத் தெரிகின்றது.
அவ்வாறு புதியவர் ஒருவரின் பெயர் அறிவிக்கப்பட்டால் அந்தக் கட்சிக்கு எதிராக போட்டியிடவுள்ள பலமான கட்சி எது என்பது இங்கு மற்றுமொரு கேள்வியாகும். கஜேந்திரக் குமார் அணியும், சுரேஸ் அணியும் வெவ்வேறாகப் போட்டியிட்டு முதலமைச்சர் வேட்பாளர்களை அறிவிப்பார்களா? அல்லது ஒன்று சேர்ந்து போட்டியிட்டு பொது வேட்பாளர் ஒருவரை அறிவிப்பார்களா என்பது குறித்து இதுவரை யாருக்கும் தெரியாது. அதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் தெரியவில்லை.
ஆனாலும் அந்த இருவருடனும் நீங்கள் தமிழ் மக்கள் பேரவையில் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக செயற்பட்ட அனுபவம் உண்டு. ஆகவே தமிழரசுக் கட்சி தவிர்ந்த வேறு கட்சிகளை ஒன்றிணைத்து செயற்படக் கூடிய தற்துணிவு உங்களுக்கு ஏன் இல்லாமல் போனது?
அல்லது தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சிதறவிடாமல் பாதுகாக்க ஏன் உங்களால் முடியாமல்போனது? அல்லது தமிழரசுக் கட்சியை விமர்சிக்காமல் வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருந்திருந்தால், உங்கள் நோக்கிய இந்தக் கேள்விகள் எழுந்திருக்காது.
நீங்கள் தமிழரசுக் கட்சி உறுப்பினர் அல்ல. நான்கு கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகவே, நீங்கள் அன்று மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டிருந்தீர்கள். ஆகவே எதற்காக உங்களுக்கு அந்த தயக்கம்?
வடமாகாணத்தின் நிர்வாகத்தைக் கூட நீங்கள் சரியாக நடத்தவில்லை என்று வேறு சிலர் உங்கள் மீது இன்று வரை குற்றம் சுமத்துகின்றனர். ஆனாலும் மாகாண சபையின் அதிகாரங்கள், சட்ட திட்டங்களை நன்கு அறிந்தவர்கள் எவரும் உங்கள் மீது அவ்வாறு குறைகூற விரும்பவில்லை.
எனினும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போதும் அதன் பின்னரான அரசியல் சூழலிலும் நீங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கும் முறையிலும், கருத்துக்களை வெளியிடும் முறையில் பலருக்கும் சந்தேகம் ஏற்படுகின்றது.
உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கும் உங்களை விரும்பி வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்திய இளைஞர்களுக்கும் நீங்கள் சரியான அரசியல் பாதையை காட்டவில்லை என்று அரசியல் பத்தி எழுத்தாளர்கள் சிலர்கூட சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை, தலைமைப் பதவியை ஏற்பதற்கு நீங்கள் தயங்குவதாகவும் தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து பயணித்தால் என்ன என்று தற்போது சிந்திப்பதாகவும் வேறு சில குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன. ஆகவே பொறுப்புள்ள முதலமைச்சர் என்ற முறையில், மாகாண சபையின் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னர், எதிர்க்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து உங்களால் பகிரங்கமாக அறிவிக்க முடியுமா?
2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில், தமிழ் மக்களை பலர் தவறான வழியில் நடத்த முற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் மக்கள் அவ்வாறு தவறான வழியில் செல்வதற்கு தயாராக இல்லை என்பதை ஒவ்வொரு தேர்தல் வாக்களிப்பின்போதும் வெளிக்காட்டியுள்ளனர்.
எனினும், 2015ஆம் ஆண்டு மைத்திரி ரணில் நல்லாட்சிக்கு தமிழரசுக் கட்சியை மைப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கண்ணை மூடிக் கொண்டு ஆதரவு கொடுத்ததால் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.
எனினும் உங்கள் மீது பலருக்கு ஒரு வகையான நம்பிக்கையும் எதிர்ப்பார்ப்பும் இருந்தது. ஆனாலும் அதற்கு ஏற்ப உங்கள் செயற்பாடுகள் அனைத்தும் தற்போது தொய்வு நிலைக்கு வந்துவிட்டதாக பலரும் குறை கூறுகின்றனர். ஆகவே அந்த தொய்வு நிலைக்கு காரணம்தான் என்ன?
வேலைப் பளுவினால் ஜெனீவாவுக்கும் செல்ல முடியவில்லை என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். இங்கே கேள்வி என்னவென்றால், நீங்கள் தமிழரசுக் கட்சியோடும் இல்லை. வேறு அரசியல் கட்சிகளுடனும் இல்லை. எனவே எந்த அரசியல் கட்சியுடன் சேர்ந்து என்ன வேலை செய்கின்றீர்கள்?
ஜெனீவாவுக்குச் சென்று மக்கள் பிரச்சினையை எடுத்துக் கூற முடியாத அளவுக்கு உங்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்த வேலைப் பளுதான் என்ன? அல்லது வடமாகாண சபையின் நிர்வாக வேலைகளில் ஈடுபடுகின்றீர்களா? கடந்த ஐந்து ஆண்டுகளில் மாகாண சபையால் செய்யப்பட்ட நிர்வாக வேலைகளை உங்களால் பட்டியலிட முடியுமா?
அதிகாரங்களை செயற்படுத்த முடியாத நிலையில் கொழும்பு இழுத்துப் பிடிக்கின்றது என்பது வேறு. ஆனால் குறைந்த பட்சம் மக்களை ஒன்று திரட்டி உள்ளூர் நிதிகளை பயன்படுத்தி மாகாண சபையில் செய்யப்பட்ட வேலைகள்தான் என்ன?
சரி, வடமாகாண சபையால் செய்யப்பட்ட வேலைத் திட்டங்கள் பற்றி பேசுவதை தவிர்ப்போம். ஆனால் இப்போது கூட காலம் கடந்துவிடவில்லை. நீங்கள் நினைத்தால் புதிய அரசியல் பாதையை திறக்க முடியும். ஆனால் உங்களிடம் உள்ள தயக்கத்திற்கும் அந்த தொய்வு நிலைக்கும் காரணம்தான் என்ன?
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் முதலமைச்சரே!
கட்சி அரசியல் தமிழர்களுக்குத் தேவையில்லை. ஆனால் தமிழரசுக் கட்சி அந்த கட்சி அரசியலைத் தான் விரும்புகின்றது. அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் வரை தேசிய இயக்கம் போன்ற ஓர் அமைப்புத் தான் அவசியமாகின்றது.
உள்ளூராட்சி சபை, மாகாண சபை, மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிடுவது என்பது ஜனநாயக வழியில் மக்களை ஒன்று திரட்டவும் ஒருமித்த கொள்கையை வெளி உலகத்துக்கு எடுத்தக் காட்டவுமே.
2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலிலும் மக்களிடம் கொள்கை தாராளமாவே இருக்கின்றது. ஆனால் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னரான அரசியல் சூழலில், மக்களில் பலர் குழப்பமடைந்துள்ளனர்.
வேறு சில மக்கள் கொழும்பை மையப்படுத்திய பெரும்பான்மை கட்சிகளுக்கும் அந்தக் கட்சிகளுடன் சோ்ந்து இயங்கி வரும் சிறிய கட்சிகளுக்கும் வாக்களித்தால், சலுகைகள் நிவாரணங்களைப் பெறலாம் என்று நினைக்கின்றனர்.
ஆகவே சலுகை, நிவாரண அரசியலுக்கு மக்களை வாக்களிக்க பழக்கிவிடாமல், தமிழர்களின் சுயமரியாதையை காப்பாற்றக் கூடிய குறைந்தபட்ச வேலைத் திட்டங்களை ஒன்று இணைந்து முன்னெடுக்க, கட்சி அரசியலில் ஈடுபடாத உங்களையே மக்கள் விரும்புகின்றனர்.
வேலைப் பளு இல்லையென்றால், தயவு செய்து பதில் கூறுங்கள்.
நன்றி
இப்படிக்கு
ஐ.பி.சி.தமிழ்
ஆசிரிய பீடம்