(சட்டத்தரணி இ.தம்பையா)
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் கூட்டு ஒப்பந்தம் ஒன்றினால் தீர்மானிக்கப்படுகின்றமையினால் 2016ஆம் ஆண்டு 4ஆம் இலக்க வரவுசெலவு நிவாரண கொடுப்பனவுச் சட்டம் ஏற்பாடு செய்துள்ள கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள உரித்துடையவர்கள் அல்ல. அதனை நிவாரண கொடுப்பனவுச் சட்டமே வெளிப்படையாக கூறியுள்ளது. அப்படியே அச்சட்டத்தை அடிப்படையாக கொண்டு சம்பளத்தை உயர்த்த கம்பனிகள் சுய விருப்பின் பேரில் இணங்கினாலும் தோட்டத் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 60/= கொடுப்பனவை மாத்திரமே பெறமுடியும். நாட் சம்பளத்தைப் பெறுபவர்கள் ஒருநாளைக்கு ரூபா 100 வீதம் அதாவது மாதம் ரூபா 2500 வழங்குவதற்கு நிர்ப்பந்திக்கும் ஏற்பாடுகள் அச்சட்டத்தில் கிடையாது. நாட் சம்பளம் பெறுபவர்களுக்கு மாதமொன்றுக்கு அதிகபட்சமாக ரூபா. 1600 மேல் வழங்க முடியாது என அச்சட்டம் விதித்துள்ளது. எனினும் அச்சட்டத்தை ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் அமைச்சர்கள் அச்சட்டத்தை அடிப்படையாக கொண்டு 100/=சம்பள உயர்வை பெற மக்களைப் போராட அழைப்பது வேடிக்கையானது. கூட்டு ஒப்பந்தத்தினூடாக சம்பள உயர்வை பெற்றுக் கொள்வதில் உள்ள தாமதம், ரூபா 2500 சம்பள உயர்வை வேண்டி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் மக்களுக்கு அழைத்து விடுத்திருப்பது என்பன தொடர்பில் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமாகிய இ. தம்பையா எமக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்தநேர்காணலின் சுருக்கம்:
கே: ஒரு வருடத்திற்கு மேலாக சம்பள அதிகரிப்பு வழங்கப்படாமல் கூட்டு ஒப்பதம் இழுத்தடிக்கப்பட்டுள்ள நிலையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூபா 2500 சம்பள அதிகரிப்புக்கு அல்லது ஒருநாளைக்கு ரூபா 100 சம்பள அதிகரிப்புக்காக தமிழ் முற்போக்கு கூட்டணி அழைப்புவிடுத்துள்ளது. அதனை ஏன் உங்கள் சங்கம் விமர்சிக்கிறது?
ப: தோட்டத் தொழிலாளர்களின் அத்தோடு மலையக மக்களின் உரிமைகளுக்காக போராடுவதற்கும் குரல் கொடுப்பதற்கும் அவர்களின் அக்கறைக் கொண்ட எந்த அமைப்புக்கும் தனிநபருக்கும் உரிமை இருக்கின்றது என்பதே எமது நிலைப்பாடு. நாங்கள் அந்தபோராட்டங்கள், கருத்துக்களின் உள்ள பிரச்சினைகளை பார்க்கின்றோமேயன்றி மற்றவர்களைப் போன்று போராடவோ கருத்துக்கூறவோ உரிமை இல்லை என்று நாம் கூறவில்லை. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சங்கங்களின் இயலாமை ஒரு புறமிருக்க தமிழ் முற்போக்கு கூட்டணி வரவு செலவு நிவாரணப் கொடுப்பனவுச் சட்டத்தில் உள்ள ச ம்பள அதிகரிப்பை கோரி தொழிலாளர்களை போராட அழைக்கிறது. இது சட்டத்தை ஆக்கியவர்களே அச்சட்டத்தை அறியாமல் அல்லது விளங்காமல் அவற்றுக்கு கை உயர்த்துகின்றார்கள் என்பதற்கு உதாரணமாக கொள்ளலாம். ஏனென்றால் குறித்த 2016ஆம் ஆண்டும் 04ஆம் இலக்க வரவு செலவு நிவாரண கொடுப்பனவுச் சட்டத்திற்கு அமைய தோட்டத் தொழிலாளர்கள் கொடுப்பனவை பெறுவதற்கு சட்டரீதியாக உரித்துடையவர்கள் அல்ல. அச்சட்டத்தின் ஒரு பிரிவு 3(7) கூட்டு ஒப்பந்தத்தினூடாக சம்பள உயர்வை பெறுபவர்கள் அச்சட்டத்தின் அடிப்படையில் சம்பள உயர்வுக்கு உரித்துடையவர்கள் அல்ல என ஏற்பாடு செய்துள்ளது. எனவே ஒரு நாளைக்கு ரூபா 100 அல்ல எந்த வித சம்பள உயர்வையும் அந்தச் சட்டத்தின் அடிப்படையில் பெற முடியாது. அதனாலேயே அச்சட்டத்தின் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்குகள் என்று அண்மையில் தொழில் அமைச்சர் செய்த வேண்டுகோளை பெருந்தோட்டக் கம்பனிகள் நிராகரித்துள்ளனர். கம்பனிகள் சுய விருப்பின் அடிப்படையில் நிவாரணக் கொடுப்பனவுச் சட்டத்தை கருத்திற்கொண்டு சம்பள உயர்வை வழங்க முன்வந்தாலும் நாட்சம்பளத்தைப் பெறும் தொழிலாளர்கள் அதிகபட்சமாக நாளொன்றுக்கு ரூபா. 60 மாத்திரமே உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதனை வழங்கவே அவர்கள் உடன்படலாம். நிவாரணக் கொடுப்பனவுச் சட்டத்தின் மாதச் சம்பளம் பெறுபவர்களுக்கு அதிகபட்சமாக 2500 மேற்படாத கொடுப்பனவைப் பெறலாம் என்றே ஏற்பாடு செய்துள்ளது. எனவே அச் சட்டத்தை ஆக்கிய அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 100 சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க என தொழிலாளர்களை போராட அழைப்பது வேடிக்கையானதும் தொழிலாளர்களை தவறாக வழிநடத்தும் செயற்பாடு என்பதனாலேயே அதனை விமர்சிக்கின்றோம். அந் நிலைப்பாட்டை எதிர்க்கின்றோம்.
கே: அப்படி எனில் வரவு செலவு நிவாரணக் கொடுப்பனவுச் சட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெறவே முடியாதா?
ப: நிவாரணக் கொடுப்பனவுச் சட்டத்தின் மூலம் நிச்சயமாக முடியாது. முடியும் என்றால் சட்டத்தில் உள்ள ஒன்றை பெற அமைச்சர்கள் போராட வேண்டிய தேவை ஏற்படாதே. அச்சட்டத்தின் உள்ள ஏற்பாடுகளின் கீழ் சம்பள கொடுப்பனவை வழங்க கம்பனிகளை வற்புறுத்த முடியாது. கம்பனிகள் விரும்பினால் அவை வழங்க முன்வரலாம். அவ்வாறு அவர்கள் முன்வந்தாலும் அதில் நாளொன்றுக்கு ரூபா. 60 மேல் சம்பள உயர்வு வழங்கும் சாத்தியம் இல்லை. இங்கு நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் 2003ஆம் ஆண்டு இலங்கை முதலாளிமார் சம்மேளனம் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட 13ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகிறது என்பது. அதில் உள்ள சம்பளம் பற்றிய ஏற்பாட்டின் அடிப்படையிலேலே இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சம்பள உயர்வு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று, சம்பள அதிகரிப்பு இடம்பெற்று வருகிறது. எனவே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் கூட்டு ஒப்பந்தத்தின் மூலமே ஆளப்படுகிறது. இன்று அது கைச்சத்திடாமல் இருக்கின்றமையினால் அது செத்துவிட்டதாக குறிப்பிடுவது அர்த்தமற்ற மக்களை தவறாக வழிநடத்தும் வெற்று வார்த்தைகள். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தினால் குறித்த கூட்டு ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்க முடியாது. அப்படிச் செய்யவும் இல்லை. கம்பனிகள் தன்னிச்சையாக சட்டத்தினால் எற்படுத்தப்பட்டிருக்கும் நாளொன்றுக்கு ரூபா 60 அதிகரிப்பை ஏற்றுக் கொள்வார்களாயின் தற்போதுள்ள 620 என்ற மொத்த நாட் சம்பளத்துடன் சேர்க்கும் போது 680 சம்பள உயர்வை பெற்றுக் கொள்ளக்கூடிய அபாயநிலை காணப்படுகிறது. இது பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு மிகவும் வாய்ப்பானது. எனவே ஒரு வருடகாலம் இழுத்தடிக்கப்பட்டுள் சம்பள உயர்வு விவகாரம் வெறும் 60 சம்பள அதிகரிப்புடன் முடிவடைவதற்கான அபாயம் உண்டு என்பதை தொழிலாளர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் அழ்ந்த கவனத்திற்கு உட்படுத்த வேண்டும்.
கே: கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் ரூபா 60சம்பள உயர்வுக்கு உடன்படுவார்கள் என்று நினைக்கின்றீர்களா?
ப: கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் போது ஒரு கட்டத்தில் நாட் சம்பளமாக ரூபா 800க்கு அதிகமாக வழங்க கம்பனிகள் உடன்பட்டிருந்ததாக செய்திகள் வந்திருந்தன. இந்த நிலையில் அவர்கள் 60 சம்பள உயர்வுக்கு உடன்படமாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம். அப்படிசெய்யப்படுமாயின் மக்களும் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எனினும் இங்கு ஒருபிரச்சினை இருக்கிறது. சர்வதேச சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சியினால் சம்பளம் அதிகரிக்க முடியாது என கூறிவரும் கம்பனிகளுக்கு நிவாரணப் கொடுப்பவுச் சட்டம் நாட்சம்பளம் பெறுபவர்களுக்கு ரூபா 60 சம்பள உயர்வை வழங்க ஏற்பாடு செய்துள்ளமை அவர்களுக்கு மிகவும் வாய்ப்பான சூழ்நிலையாகும். எனவே தொழிலாளர்கள் அதனைக் கோரும் போது அந்தச் சம்பள உயர்வுடன் கம்பனிகள் நின்றுகொள்ளலாம். இந்த நிலையில் கூட்டு ஒப்பந்தம் செய்யும் தொழிற்சங்கங்களும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களும் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். எனவே பலவீனமான கோரிக்கைகளை முன்வைத்து கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறுவது கம்பனிகளை மேலும் பலமான நிலைக்கே இட்டுச் சென்றுள்ளும்.
கே: இ.தொ.கா. நாட் சம்பளமாக ரூபா 1000 கோரிக்கையை வைத்தமையே ஒரு வருடத்திற்கும் மேலாக சம்பள ஒப்பதம் செய்யமுடியாத நிலை ஏற்படக் காரணம் எனக் கூறப்படுகிறதே.
ப: இ.தொ.கா. எந்த நோக்கத்திற்காக ரூ.1000 முன்வைத்தது என்பது எமக்கு முக்கியமில்லை. தோட்டத் தொழிலாளர்கள் ரூ.1000 பெற உரித்துடையவர்கள் என்பதே எமது நிலைப்பாடு. அது தற்போது மக்களின் கோரிக்கையாகவும் உள்ளமை கவனிக்கப்பட வேண்டும். கம்பனிகளுக்கு அதனை வழங்க முடியும். கூட்டு ஒப்பந்தத்தில் சம்பள உயர்வு என்பது தேயிலை அதிகரித்த காலத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும் என்ற ஏற்பாட்டைக் கொண்டிருக்காத நிலையில் தேயிலை விலை வீழ்ச்சியின் போது சம்பள அதிகரிக்கப்படாமல் இருக்கலாம் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயமல்ல. சில கம்பனிகள் நட்டமடைந்துள்ளமைக்கு விலை வீழ்ச்சிக்கு அப்பால் உள்ள காரணங்கள் பற்றி பெருந்தோட்டக் கம்பனிகள் சார்ந்த நிபுணர்கள் இன்று பேசி வருகின்ற நிலையில் மலையகத்தின் அதி பண்டிதர்கள் தேயிலை விலை வீழ்ச்சியினால் சம்பள அதிகரிப்பு சாத்தியமில்லை என்று குறிப்பிட்டு வருகின்றனர். இ.தொ.கா. செயலாளர் தொண்டமான் தேயிலை விலை அதிகரித்தவுடன் 1000 சம்பளத்தை பெற்றுத் தருவதாக கூறியமை அர்த்தமற்றதும் பொறுப்பற்றதுமான நிலைப்பாடு. அதாவது தேயிலை விலை அதிகரிக்க இன்னும் ஒரு வருடம் சென்றால் அதுவரை இப்போதுள்ள சம்பளத்துடன் தொழிலாளர்கள் வாழ வேண்டும் என்று தொழிலாளர்களை நிர்ப்பந்திக்கும் இது இயலாமையின் நிலைப்பாடு. எனவே நிவாரணப் கொடுப்பனவுச் சட்டம் ஏற்படுத்தியுள்ள நிலைமைகளை கருத்திற்கொண்டு இ.தொ.கா. பொறுப்புடன் செயற்படவேண்டும். கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் மற்றைய இரு சங்கங்களுக்கும் இதில் அதே அளவு பொறுப்பு உள்ளது.
கே: இந்த பின்னணியில் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க எது சிறப்பான நடவடிக்கையாக இருக்கமுடியும்?
ப: பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம் ஏனையத் துறைகளில் செய்யப்படும் கூட்டு ஒப்பந்தங்களுடன் ஒப்பிடுகையில் பலகுறைபாடுகளைக் கொண்டது என்பது உண்மை. குறிப்பாக சம்பளம் தொடர்பில் கூறுவதாக இருந்தால் வாழ்கைச் செலவு உயர்வுக்கு ஏற்ப சம்பள அதிகரிப்புக்கான ஏற்பாடுகள் இதில் இல்லை. அத்தோடு இரண்டு வருடம் வரை சம்பள உயர்வு எதுவும் வழங்கப்படாத நிலைமை உட்பட பல விடயங்கள் உள்ளன. எனினும் சில பொறுப்பற்ற அரசியல் தலைவர்களுக்கு அடிப்படையற்ற கருத்துக்களை முன்வைத்து வருகின்ற போதும், கூட்டு ஒப்பந்தம் சம்பள நிர்ணயசபையை விட தொழிலாளர்களுக்கு சார்பானதும் தொழிலாளர்களின் பேரப் பேச்சுக்கு வாய்ப்பானதாகும். சம்பள நிர்ணய சபை அதன் உள்ளடக்கத்தில் தொழிலாளர்களின் பேரப் பேச்சுக்கு வாய்ப்புமிகவும் குறைவு. எனவே, கூட்டு ஒப்பந்தம் இப்போது யார் செய்கின்றார்கள் என்பதை வைத்துக் கூட்டு ஒப்பந்தத்தை அளப்பதை விடுத்து அதனை மக்கள் சார்பாக நின்று நோக்குவது நல்லது. எனவே கூட்டு ஒப்பந்தம் மூலம் சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கத்திற்கும் கம்பனிகளுக்கும் அதில் கைச்சத்திடும் சங்கங்களுக்கும் தொழிலாளர்களும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களும் அழுத்தும் கொடுக்க வேண்டும். அதுவே பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகின்றோம்.
கே: உங்களின் தொழிற்சங்கம் கூட்டு ஒப்பந்தம் மற்றும் சம்பள உடன்பாடு எட்டுவதில் உள்ள தாமதம் தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி தொழில் ஆணையாளர் நாயகத்தை சந்தித்து கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக சுட்டிக் காட்டி மகஜர் ஒன்றை சமர்ப்பித்திருந்தோம். குறிப்பாக மொத்த சம்பளத்திற்கு ஊ.சே.நி., ஊ.ந.நி. தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமை, பொதுவாக வாரத்தில் 1½ நாள் லீவு தொழிலாளர்களுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ள போது 1 நாள் மட்டும் வழங்கப்படுகின்றமை போன்றவை உட்பட பல விடயங்களை சுட்டிக்காட்டி இருந்தோம். இவைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டிருந்தார். கூட்டு ஒப்பந்தம் என்பதில் தொழில் ஆணையாளர் நாயகத்தில் தலையீடு வரையறுக்கப்பட்டுள்ள போதும் சம்பள உடன்படிக்கையை எட்டுவதில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான கால தாமதத்திற்கு சட்ட அடிப்படையில் தொழில் ஆணையாளர் நாயகம் பொறுப்புக் கூற வேண்டியவராக இருக்கின்றார். எனவே, அவருக்கு அழுத்தம் கொடுக்கும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் எதிர்பார்த்துள்ளோம்.