இந்த 35 பேரில், பெரும்பாலானவர்கள் எதற்காகப் போட்டியிடுகிறார்கள் என்பதை, அவர்களால் மற்றவர்களுக்கு நியாயப்படுத்திக் கூற முடியுமா என்பது சந்தேகமே! அவர்கள், “வெற்றி பெற்று, நாட்டை ஆட்சி செய்வதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றோம்” எனக் கூறலாம். ஆனால், அவர்கள் வெற்றி பெறப்போவதில்லை என்பதை, அவர்கள் உட்பட, நாட்டில் சகலரும் அறிந்திருக்கிறார்கள்.
இந்த 35 பேரில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியின் சார்பில், தேசிய ஜனநாயக முன்னணியின் ‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் மட்டுமே, உண்மையில் வெற்றி பெறும் நோக்கத்தில் போட்டியிடுகிறார்கள்.
தமது இளைய சகோதரரான கோட்டாபயவின் பிரஜாவுரிமை விடயத்தில், இரண்டு சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் தாக்கல் செய்திருந்த வழக்கின் தீர்ப்பு, அவருக்குப் பாதகமாக அமைந்தால், மாற்று வேட்பாளராகப் போட்டியிடுவதற்காகவே, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கட்டுப் பணம் செலுத்தியிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை, அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டதால் சமல், திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.
வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களில் ‘தேசிய மக்கள் சக்தி’ என்ற கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவும் முன்னணி சோஷலிசக் கட்சியின் வேட்பாளரான துமிந்த நாகமுவவும் தேர்தல் காலத்தில் மக்கள் மத்தியில் காணப்படும் அரசியல் ஆர்வத்தைப் பாவித்துத் தமது கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பும் நோக்கில் போட்டியிடுகிறார்கள். இது இடதுசாரிக் கட்சிகளின் ஓர் உத்தியாகும்.
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான கூட்டணி, “இம்முறை பத்து இலட்சத்துக்கும் மேல் வாக்குகளை எதிர்ப்பார்க்கின்றோம்” என்று கூறியிருக்கிறது. இதன் மூலம் தமது கட்சி, அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வரும் கட்சி என்ற செய்தியை, மக்களுக்கு வழங்குவதும் அம் முன்னணியின் மற்றொரு நோக்கமாகும்.
ஏனைய வேட்பாளர்களில் சிலர், பிரதான இரு வேட்பாளர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் போட்டியிடுகிறார்கள் என ஊகிக்கலாம். அதாவது, தாம் ஆதரவு வழங்கும் வேட்பாளருக்குச் சாதகமாகும் வகையில், மற்றைய பிரதான வேட்பாளருக்குக் கிடைக்கக்கூடிய வாக்குகளில் ஒரு சிலவற்றையாவது பெற்றுக் கொள்வதே, அவர்களின் நோக்கமாகும்.
ஏற்கெனவே, முன்னாள் இராணுவத் தளபதி மஹேஷ் சேனநாயக்கவை, கோட்டாவின் ஆதரவாளர்கள் அவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளனர். அதாவது, “கோட்டாவுக்குக் கிடைக்கக்கூடிய இராணுவத்தினரின் வாக்குகளில் ஒரு பகுதியைப் பெற்று, கோட்டா பெறும் வாக்குகளைக் குறைப்பதே, சேனநாயக்கவின் நோக்கம்” என, கோட்டாவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு வேட்பாளருக்குச் சாதகமாக, வேறு சில வேட்பாளர்கள் களமிறங்குவது இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளது. சில வேட்பாளர்கள், பகிரங்கமாகவே தமக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் இன்னாருக்கு வாக்களியுங்கள் என்று, பகிரங்க மேடையில் கூறிய சந்தர்ப்பங்களும் உண்டு. வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் தொலைக்காட்சி நேரம் போன்ற சலுகைகளை, பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்காக, மேலதிகமாகப் பெற்றுக் கொடுப்பதே, இவ்வாறான ‘போலி’ வேட்பாளர்கள் களத்தில் இறங்குவதன் நோக்கமாகும்.
வெற்றி பெறப் போட்டியிடுவோரும் அரசியல் பிரசாரத்துக்காகப் போட்டியிடுவோரும் இந்தப் ‘போலி’ வேட்பாளர்களும் தவிர்ந்த ஏனைய வேட்பாளர்கள், எதற்காகப் போட்டியிடுகிறார்கள் என்பது தெளிவில்லை. சகல தேர்தல்களிலும் போட்டியிடும் சிலரும் இருக்கிறார்கள்.
சாதாரண சூழ்நிலையில், 4,000 அல்லது 4,500 மில்லியன் ரூபாய் ஜனாதிபதித் தேர்தலுக்காக செலவிடப்பட வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்ததாகவும் வேட்பாளர்கள் அதிகரித்ததன் காரணமாக, அத்தொகை மேலும் 1,000 மில்லியன் ரூபாயால் அதிகரிக்கலாம் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, கடந்த வாரம் கூறியிருந்தார். இந்தச் செலவைப் பொது மக்களின் வரிப் பணத்திலிருந்துதான் இறுதியில் செலுத்த வேண்டியிருக்கிறது. ‘போலி’ வேட்பாளர்கள் களத்தில் இறக்கப்பட்டால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் அண்மையில் கூறியிருந்தார்.
ஆனால், ஒன்றில் இந்தப் ‘போலி’ வேட்பாளர்கள், தாம் ஆதரவு வழங்கும் பிரதான வேட்பாளரைப் பாராட்டிப் புகழ்ந்து பேசுவதற்காகத் தமது மேடைகளையும் தொலைக்காட்சி, வானொலி நேரத்தையும் பாவிப்பார்கள்; அல்லது, தாம் எதிர்க்கும் பிரதான வேட்பாளரை விமர்சித்துப் பிரசாரம் செய்வார்கள். இதனைத் தேர்தல் ஆணைக்குழுவால் தடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.
இந்தப் ‘போலி’ வேட்பாளர்களால், அவர்கள் ஆதரவு வழங்கும் வேட்பாளர் தவிர்ந்த ஏனைய வேட்பாளர்களுக்கு, அநீதி இழைக்கப்படுகிறது.
தேர்தல்கள் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் என்றே, ஜனநாயகத்தை விரும்பும் சகலரும் விரும்புகிறார்கள். ஆனால், இந்தப் ‘போலி’ வேட்பாளர்களால், தேர்தலின் ஆரம்பத்திலேயே நீதி பாதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கோட்டாவின் பிரஜா உரிமைப் பிரச்சினை தொடர்பான வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர், அந்த வழக்கைத் தாக்கல் செய்த சிவில் சமூக ஆர்வலர்களான காமினி வியன்கொட, பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர ஆகியயோருக்கு எதிராகச் சமூக ஊடகங்கள் மூலம், மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது, தேர்தலின் சுதந்திரத் தன்மையையும் பாதிக்கும் நிலைமையாகும்.
இதனைக் கோட்டா பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த எவரும், இன்னமும் கண்டிக்கவில்லை. இது, தேர்தல் சுதந்திரமாக நடைபெறுமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. அதுமட்டுமல்லாமல், இது எதிர்கால ‘காட்டு தர்பார்’ ஆட்சியொன்றுக்கான அறிகுறியா என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
ஏற்கெனவே பதவியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவரோ, பிரதமர் ஒருவரோ, எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரோ போட்டியிடாத தேர்தலாக, இம்முறை ஜனாதிபதித் தேர்தல் அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.
அதேவேளை, பிரதான இரு கட்சிகளின் வேட்பாளர்களும் தத்தமது கட்சிகள் தம்மை வேட்பாளராக நியமிக்கும் முன், தாமாக மேடையேறி, தத்தமது கட்சி, தம்மை வேட்பாளராக நியமிக்கும் நிலையை உருவாக்கிக் கொண்டவர்கள் என்பதும் முக்கிய அம்சமாகும்.
சஜித், கட்சிக்குள் போராடி வேட்பாளரானார். கோட்டா 2017 ஆம் ஆண்டு முதல், ‘எலிய’, ‘வியத் மக’ போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகளை நடத்தி, பொதுஜன பெரமுனவுக்குள் தாமே வேட்பாளர் என்றதோர் அபிப்பிராயத்தைக் கட்டி எழுப்பியிருந்தார்.
நாட்டின் பிரதான கட்சிகளில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைமை மிகவும் பரிதாபகரமானதாக உள்ளது. அக்கட்சி, இந்தத் தேர்தலின் போது, என்ன செய்வது என்பதை, உத்தியோகபூர்வமாக இன்னமும் தீர்மானிக்கவில்லை.
பொதுஜன பெரமுனவோடு இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக் கொள்ள முயற்சித்த அக்கட்சி, அவ்வாறு முடியாது போனால், கட்சியின் வேட்பாளர் ஒருவரைப் போட்டியில் நிறுத்துவதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியிருந்தார்.
ஆனால், அக்கட்சியைச் சேர்ந்த எவரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. பதவியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவர், தமது கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தாத முதலாவது சந்தர்ப்பம் இதுவேயாகும்.
தமிழ், முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு எவ்வாறு அமைகிறது?
நாட்டிலுள்ள ஏறத்தாழ சகல பிரதான அரசியல் கட்சிகளும், ஜனாதிபதித் தேர்தல் களத்தில், தமது அணியைத் தற்போது தேர்ந்தெடுத்துள்ளன. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்னமும் தாம் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பதைப் பற்றி, எதையும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
தமது கட்சி, தேசிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் என, அக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சரவணபவன் தெரிவித்திருந்த போதிலும், அது, அக்கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடா என்பது இன்னமும் தெளிவில்லை.
வழமையாக அக்கட்சியின் முக்கிய அறிவித்தல்களைக் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அல்லது கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தான் அறிவிப்பார்கள். எவரும் எதிர்பார்க்காத முடிவொன்றைத் தமது கட்சி எடுக்கும் என்றே, சுமந்திரன் சில நாள்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
த.தே.கூ உத்தியோகபூர்வ அறிவித்தலொன்றை விடுக்காவிட்டாலும், அக்கட்சி சஜித்தை ஆதரிக்கும் வாய்ப்புகளே அதிகம் காணப்படுகின்றன. ஐ.தே.க தலைவர் ரணில் போட்டியிட்டு இருந்தால், தமிழ்க் கூட்டமைப்பு, எவ்வித தயக்கமுமின்றி அவரை ஆதரிக்கும். இப்போது, சஜித்தை ஆதரித்து, ரணில் பிரசாரம் செய்து வரும் நிலையில், கூட்டமைப்பும் சஜித்தை ஆதரிக்கலாம்.
ஏற்கெனவே, தென்பகுதியில் சகல தமிழ்க் கட்சிகளும் சஜித்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளன. அண்மைக் காலம் வரை, நிலைப்பாடொன்று இல்லாமல் ஊசலாடிக் கொண்டு இருந்த ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் சஜித்தை ஆதரிக்கும் வாய்ப்புகள் காணப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதான முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, ஐ.தே.க வேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருந்தன.
சாதாரண தமிழ், முஸ்லிம் மக்களின் நிலைப்பாடே இக்கட்சிகள் இவ்வாறு சஜித்தை ஆதரிக்கக் காரணமாகியுள்ளன. 2015ஆம் ஆண்டுக்கு முன்னர், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இடம்பெற்ற இனவாதச் செயற்பாடுகளும் அவற்றுக்கான அவ்வரசாங்கத்தின் தலைவர்களின் வெளிப்படையான ஆதரவும் காரணமாகத் தமிழ், முஸ்லிம் மக்கள், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி, நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, ஒட்டுமொத்தமாக மஹிந்த தலைமையிலான கட்சியை எதிர்த்து வாக்களித்தனர். அந்த நிலைமை இன்னமும் மாறியதாகத் தெரியவில்லை.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, பொதுஜன பெரமுன பெற்ற அமோக வெற்றியின் பின்னர், முஸ்லிம்கள் சிலர் அக்கட்சியின் பக்கம் சாயும் நிலைமை உருவாகியிருந்தது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, அதாவது உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள், இஸ்லாத்துக்கு எதிரான பிரசாரங்களில் பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளின் கைவரிசை காணப்பட்டதன் காரணமாக, அவ்வாறு சாய்ந்தவர்களில் பலர், மீண்டும் மஹிந்த விரோதிகளாக மாறிவிட்டனர்.
தமிழர்கள், முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வரும் இணையத்தளங்கள் உள்ளிட்ட ஊடகங்களை அவதானிக்கும் போது, மஹிந்த தரப்பினருக்கு ஆதரவாக எதுவும் அவற்றில் காணப்படுவதில்லை. ஊடகங்கள், தமது வாடிக்கையாளர்களின் நிலைப்பாட்டையே அனேகமாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் அம் மக்கள் எந்த நிலைப்பாட்டில் உள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
எனவே, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதாக இருந்தால், அதே நிலைப்பாட்டைத் தான் எடுக்க வேண்டும். ஆனால், ஐ.தே.கவோடு இணைவதில் சிக்கல் உள்ள சில தமிழ், முஸ்லிம் கட்சிகளும் பெரிதாகத் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. சில கட்சிகளும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபயவை ஆதரிக்க முன்வந்திருக்கின்றன. அவற்றைக் காட்டியே, தமக்குத் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு இருப்பதாகப் பொதுஜன பெரமுன கூறுகிறது.
இம்முறை, இரண்டு தமிழ் வேட்பாளர்களும் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களும் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களால் தேர்தல் முடிவுகளில் பெரிதாக ஏதும் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பது சந்தேகமே.
அவர்கள் பெறும் வாக்குகளால் சிறிதளவேனும் பாதிக்கப்படுவது சஜித் பிரேமதாஸவே. எனவே, அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ, திட்டமிட்டோ திட்டமிடாமலோ கோட்டாபய ராஜபக்ஷவே பயனடையப் போகிறார்.