(தோழர் ஜேம்ஸ்)
1988 ஜுன் மாதம் 4 ம் திகதி மதியம் தாண்டிய தருணம் எனது வீட்டுப் படலையில் கண்ணாடி போட்டு நிறைவாக உடுத்திய உடையுடன் வழமையான புன்னகையுடன் என் தோழன் ஐயா. வாருங்கள் தோழரே என அழைத்து என் வளவிற்கள் அமைந்திருந்த கொட்கையில் அமர்ந்து கொண்டோம் என்னுடன் தோழர் அஞ்சலியும் இணைந்து கொண்டார். மதியச் சாப்பாடு நேரம் சாப்பாட்டை தட்டுகளில் இட்டு எடுத்து வந்து மூவரும் அமர்ந்து உண்டோம்.
1970 களின் பிற் கூற்றில் இருந்து உருவான உறவு. இணைந்த பயணம். பேச்சுக்கள் பல்வேறு கடந்த கால சம கால அரசியலையும் தாண்டி சென்றன. ‘….மன்னார் போகின்றேன் புலிகளிடம் இருந்து தம்மை பாதுகாத்து கொள்வதற்காக அவர்களின் நடமாட்டம் குறைந்த செட்டிகுளம் பகுதியால் பேரூந்தில் மன்னார் போகப் போவதாக கூறினார். இதனை என்னிடம் அறிவித்துவிட்டுச் செல்ல வந்திருப்பதாக கூறினார் வவுனியாவில் இருந்து இலகு பாதை வவுனியாவிலிருந்து மன்னார் வீதியால் பயணிப்பது உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் எனவே மதவாச்சி சென்று செட்டிகுளம் பகுதியால் போகப் போவதாக அறியத் தந்தார்.
தோழர்கள் சுகுவும் ஐயாவும் ரங்கனும் ஏனைய தோழர்களும் வன்னியில் தங்கியிருந்து விடுதலை அமைப்பை கட்டியமைத்த 1980 கால கட்டம். பிரதாப் விமல் ரத்தினம் விஜய் சாரங்கள் குகன் நேசன் றேகன் என் பல முன்னணி அமைப்புகளில் பலரும் இணைந்த காலம் மன்னாரில் பானு செயற்படத் தொடங்கிய காலம். மன்னாரில் இருந்து பெரிய தம்பனை கன்னாட்டி பூவரசம் குளம் வவுனியா நகர் மாங் ஓமந்தை கனகராயன் குளம் கறிப்பட்ட முறிப்பு ஓட்டிசுட்டான் முள்ளியவளை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு என்று பரந்த தேசத்தில் காடு, கரம்பை, மேடு என்று எங்கும் பரவி இருந்த அரசியல் செயற்பாடுகளை தோழர் ஐயா முன்னெடுத்து இருந்தார். வார இறுதியில் முல்லைத்தீவு… முள்ளியவளை, ஞாயிறு பிற்பகல் வவுனியா என்று உயர்தர மாணவரகளுக்கான பிரதியேக வகுப்புடன் கூடிய யாழ் முல்லைத்தீவு வவுனியா என்று விடுதலை அமைப்பு தொடர்புகளைப் பேணுதல் என்ற செயற்பாட்டின் ஓட்ட காலம். பௌதிக கணித வகுப்புகளுடன் கூடிய மாக்சிய கருத்துக்களை பரப்பிய காலம். வார இறுதியில் முல்லைத்தீவு அல்லது வவுனியாவில் இடையிடையே யாருக்கும் சந்தேகம் வராமல் என்னுடனான சந்திப்பும் தகவல் பரிமாற்றங்களும் நடைபெறும். இந்தக் காலங்களில் தோழர் ஐயாவிடம் இருந்து அதே உற்சாகம் அற்பணிப்பு தெளிந்த பார்வை தலமைத்துவப் பண்பு எல்லாவற்றையும் 1988 ஜுன் மதம் 4ம் திகதியும் நான் கண்டேன்.
சாப்பாட்டுன் கூடிய உரையாடல் நீண்டு சென்றது. எனக்கு பி.ப. 2மணியளவில் மாணவர்கள் கற்பதற்காக வரத் தொடங்குவார்கள். அவர்களின் கண்களுக்கு நான் முன்னாள் ஈபிஆர்எல்எவ் என்று தெரியப்பட்டிருக்க வேண்டும்… ஐயாவுடனான உறவு தெரியக் கூடாது என்ற ஐயாவின் கட்டளையை அவரே மீறலாமா என்று ;…’….கிளம்புங்கள்……’ என்று விரட்ட அஞ்சலி ஏன் அவரை விரட்டுகின்றீர்கள் என்று என்னை நொந்து கொள்ள எமது தோழமை உறவுகளின் ஆழம் என்றும் போல் அன்றும் வியாபித்திருக்க விடைபெற்றார் தோழர். அது நிரந்தர விடைபெறுதலாக இருக்கும் என்று நான் எண்ணி இருக்கவில்லை….?’ ஐயாவை கடத்தி விட்டார்கள் அதுவும் புளொட் அமைப்பினர் செட்டிகுளத்தில் வைத்து என்ற செய்தி தோழர் வெற்றி மூலம் எனக்கு கிடைத்தது.எப்படியாவது காத்துவிடுங்கள் என்ற பதைபதைப்பு. என் பொதுவாழ்வில் முதல் தடவையாக எனது தனிப்பட்ட செல்வாக்கை பாவித்து அவரை மீட்கும் போராட்டத்தில் வவுனியாவில் இருந்த முக்கியமான வர்த்தகர் ஒருவரை அணுகினேன் இவரின் பிள்ளைகள் புளொட் உறுப்பினர்கள் இன்றுவரை. பிள்ளைகள் தந்தை சொல் கேட்கும் புத்திரர்கள் ஆனால் பிள்ளைகள் அப்போது ஜேர்மனியில் அவரும் தன்னால் இயன்றவரை முயற்சித்தார் ஆனால்…. விசாரிப்பதற்காக அடித்ததால் இறந்துவிட்டார் என்ற செய்தியை மட்டும் என்னால் பெற முடிந்தது…… இன்றுவரை மன்னிக்க முடியாத ஏற்றுக் கொள்ள முடியாத கொலையாக என்னுள் உழன்று கொண்டிருக்கும் மரணம் இது.
1983 களில் பயிற்சிக்கு என்று வன்னிப் பிரதேசம் எங்கும் இருந்து ‘முரளி’ இனால் ‘முரளி’யை சந்தியுங்கள் என்று அனுப்பி வைக்கப்பட்டவர்களின் பெரும் பகுதியினர் என்னை சந்தித்து பயிற்சிகான இடங்களுக்கு சென்ற வரலாறும்…. யாழ் வரும் போது எல்லாம் எனது அறையிற்கு நேரடியாக வந்து வந்த களை தீர கிணற்றில் அள்ளி முழுகி சந்தியில் உள்ள சாப்பாட்டுக் கடையில் ‘நல்ல’ சாப்பாடு சாப்பிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு எழுந்து அழகாக உடுத்தி விடுதலை அமைப்பு வேலையிற்காக சம்மந்தப்பட்வர்களை சந்திக்க புறப்பட்டு சாமம் சாமமாக யாழ் கிராமங்கள் எல்லாம் சுத்தி திரியும் பழக்கவழக்கங்களை கொண்டவர். முடியுமானவரை மீண்டும் இரவு என் அறையிற்கு வந்துவிடுவார்.
எனது அறை பலரும் சுயமாக வந்து தங்கி பயன்படுத்தி வெளியேறும் ‘வசதிகளை’ கொண்ட அறை இதற்கான ஒழுங்குகள் எம்மால் செய்யப்பட்டு இருந்தன. இது தங்குதலுக்கு அப்பால் பாண்துண்டை வாங்கி கொதிக் வைத்த சுடு நீரில் அரை அவியல் முட்டை போட்டு மிளகு உப்பு போட்டு தொட்டுச் சாப்பிடுவதில் இருந்து ஏனயை அடிப்படை வசதிகளை கொண்ட அறை. என்ன வறுமையை சமாளிக்கும் செலவுச் சுருக்க முறை. என்ன ஒரு முறை தோழர்கள் தேனீர் போட முற்பட தேயிலைத் தூள் போதியளவு இல்லாமல் போக கோப்பியையும் தேயிலையும் கலந்து ஒரு சுடுபானம் அருந்த அதுவே பிற்காலங்களில் நன்றாக உள்ளது என்று என் தோழன் ஐயாவும் தயாவும் அடிக்கடி கூறி எமக்குள் இருந்த வறுமையில் நிறைவை கண்ட உள்ளங்கள்.
1983 இல் தபால் பெட்டி சந்தியில் இராணுவத்தின் மீது தாக்குதல். 13 இராணுவத்தின் மரணம். முல்லைத்தீவு வவுனியா என்று நான் பயணிக்க எனது அறையில் தோழர் ஐயா அன்றைய இரவு தங்கிய நிலமையில் அறையில் அடைபட… தாக்குதல் நடைபெற இராணுவம் சம்பவம் நடைபெற்ற திருநெல்வேலி பலாலி வீதியெங்கும் கொலை வெறியாட எனது அறை கட்டிலின் கீழ் இரவு பகலாக பதுங்கியிருந்து உயிரைக் காப்பாற்ற பசியெடுக்க கட்டிலின் கீழ் இருந்து மோட்டர் மா போத்தலில் இருந்து எதோ ஒரு மாவொன்றை கரைத்து குடித்து பசியாற பின்னொரு காலத்தில் அது நான் தலைக்கு வைத்து முழுக பாவிக்கும் பயறு மாவென்று என்று அறிந்து நினைவுகளை மீட்டெடுத்த அந்த மரணத்தின் வாயில் இருந்து தப்பிய தருணங்கள்… தோழர் ஐயாவினுடையது.
1984 களில் பூசா முகாம் அமைத்து இஸ்ரேலின் ஆலோசனைப்படி யாழ் எங்கும் தொடர்சியாக இரண்டு மூன்று தினங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இளைஞர்களை அப்பிரதேச ஊர் மைதானங்களுக்கு அழைத்து சிறை நிரப்பிய தருணங்களில் தேடப்படும் என்னை பாதுகாக்க தமிழ்நாட்டிற்கு அனுப்ப மயிலிட்டியிற்கு வண்டி(வள்ளம்) ஒழுங்கு பண்ணச் செல்கையில் தோழர் ஐயாவினால் பயிற்சிக்கு அனுப்பப்பட்ட மன்னார் இளைஞர் பயற்சி முகாமில் இருந்து தப்பி இராணுவத்துடன் இணைந்து காட்டிக் கொடுப்பில் ஈடுபட தான் பயற்சிக்கு செல்ல கரையேறிய இடத்தை காட்ட இராணுவத்தை மயிலிட்டி அழைத்து வர வண்டி ஒழுங்கு செய்ய சென்ற தோழர் ஐயாவும் சுகுவும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட வரலாறு என் தோழன் என்னைக் காப்பாற்ற எடுத்த அந்த நிகழ்வுகள். சிறைவாழ்வில் ‘…யார் அந்த முரளி…?’ என்று முரளியிடமே விசாரித்த புலனாய்வில் இருந்த ஓட்டைகளும் ஐயா என்ற விடுதலைப் போராளியிடம் இருந்து மன உறுதியும் இறுதியில் 1970 இன் பிற் கூற்றில் பஸ்தியாம் பிள்ளை கொலை சந்தேக நபர்கள் என்ற வகையில் கன்னாட்டியில் கைது செய்து விடுதலை ஆனது போல் தற்போது சில ஆண்டுகள் சிறை வாசத்தின் பின்பு விடுதலை ஆனதற்கு தோழர் ஐயாவின் மன உறுதியும் புத்திசாலித்தனமான விசாரணைப் பதில்களும் காரணமாக இருந்தன. இந்த விசாரணை பற்றி முழுத்தகவல்களும் இரண்டு பகுதியாக அன்றைய காலகட்டத்தில் தினகரன் தினசரியில் வெளிவந்திருந்தன. இதில் முரளி என்பது வன்னியில் உள்ள ஐயாவா அல்லது பல்கலைக் கழக சுற்றாடலில் இருந்து நானா என்பது புலனாய்வாளரின் குழப்ப நிலை. அவ்வளவிற்கு சுய பாதுகாப்பில் திறமையான செயற்பாடுகளை தோழர் கொண்டிருந்தார்.
பஸ்தியாம்பிள்ளை கொலையின் சந்தேக நபராக வெலிக்கடையில் இருந்த வேளை இவரையும் தோழர் குண்சியையும் சேர்தார்போல் 1970 பிற்கூற்றில் சிறையில் சந்தித்த அனுபவங்கள். அதிகம் அறிமுகம் இல்லாவிட்டாலும் அதே புன்னகை நம்பிக்கையுடன் கூடிய வார்த்தைகள் போராட்டம பற்றி கேள்விகள்… என்று விரிந்தன எமது சந்திப்பு.
யாழ் வரும் போது எல்லாம் அதிகாலையில் உடற்பயிற்சியில் நானும் அவரும் ஈடுபடுவதுண்டு. இதற்கு நாம் தெரிவு செய்த இடம் யாழ் தொழில் நுட்ப கல்லூரி. மைதானத்தை சுத்தி ஓடுதல் பின்பு ஒருவர் தவளும் நிலையில் இருக்க மற்றயவர் ஓடி வந்து சற்று முன்பு தரையில் கை ஊன்றி தவழும் நிலையில் உள்ளவரின் முதுகிற்கு மேலாக கரணம் அடித்தல். இதில் நான் சிறப்பாக செயற்பட ஐயாவின் பயிற்சி காரணமாக இருந்து. எமது ஆதரவாளர் ஒருவர் சற்று தொந்தி உள்ளவர் தனது தொப்பையை குறைக்க இவரும் எம்முடன் இணைந்து ஐயா தவழும் நிலையில் இருக்க ஓடி வந்து தரையில் கையூன்றி எனது ஒத்துழைப்புடன் கரணம் போடுவதாக ஏற்பாடு. அவரின் தொப்பை இதற்கு வாய்பழிக்கவில்லை. எனது கைதாங்கலையும் மீறீ ஐயாவின் முதுகில் ஆதரவாளர் சங்கமம் ஆகி நிலத்துடன் சக்கையாகி போன தோழர் ஐயா தனது வையிரம் பாய்ந்த மெலிந்த உடலுடன் இயல்பாக எழுந்து நின்ற இரண்டு பிள்ளைகளின் கன்னாட்டி வாழ் தந்தையா..? என்று பிரமிக்க வைத்த உடல் உறுதி கொண்டவர். யாழ் தொழில் நுட்ப கல்லூரியின் பல நினைவுகளுடன் கலந்த அந்த நினைவுகள் ஐயாவை மீண்டும் மீண்டும் மீட்டுக் கொண்டே இருக்கின்றது.
ரெலோ மீதான தடை.. சிறீசபாரத்தினத்தை காப்பாற்றும் திட்டம்… சிறீசபாரத்தினமும் அவர்களுடன் கூடியவர்களையும் காப்பாற்றி மண்டைதீவு கடலில் தரித்து நின்ற சாதாரண படகில் ஏற்றல்….. மன்னாருக்கு கடல் பயணம் பின்பு இந்திய பயணம் என்றிருந்து இந்த செயற்பாடுகளுக்கான சகல மனித, கருவி வளங்களையும் யாருக்கும் ‘கசியாத’ வண்ணம் செய்து முடித்திருந்த தருணம் 1 மணி இடைவேiளியில் தவறிப்போன காப்பாற்றும் தருணங்கள் மண்டைதீவு வரை மறைவாக அழைத்துச் செல்ல வாகன ஓட்டுனர்கள் கூட இதுவரை அறியப்படாத இரகசியங்கள். இதில் நான் மட்டும் புலிகளுக்கு அன்றைய எம்மவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டேன்(இந்த வரலாற்றுத் துரோக அரசியலை பிறிதொரு தருணம் பார்ப்போம்) இதில் தோழர் ஐயாவின் செயற்பாடுகள் அளப்பரியன. தொடர்ந்து எனக்கு புலிகளால் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலால் யாழில் 1 மாத காலம் வரை யாவருக்கும் தலைறைவாக இருந்த என்னை வற்புறத்தி மன்னார் புதுக்கமம் பகுதியில் பாதுகாத்து வைத்திருந்ததும் கூடவே ரெலோ உறுப்பனர் பலரையும் பாதுகாத்து அனுப்பியதும் அவருடன் கூடிய வரலாறுகள்.
பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் புலிகளினால் இராணுவ ரீதியில் தாக்கப்பட்டு தடை செய்யப்பட்ட போது மன்னார் பகுதியில் புலிகளின் ராதாவினால் கைது செய்யப்பட்டிருந்தார் ஐயா. அன்றைய காலகட்டத்தில் அடம்பன் பகுதி புலிகளின் செல்வாக்கு…? பாதுகாப்பு….? வலயமாக இருந்த நிலையில் இரவு இரவாக கிராமங்களில் பொது இடங்களில் தொலைக்காட்சி பெட்டியில் புலிகள் இந்திய திரைப்படம் போட்டுக் காட்ட பார்த்து தன் நிலை மறைந்து மக்களும் புலிகளும் இருக்க அப்பகுதி இராணுவ சுற்று வளைப்பிற்குள் உள்ளானது. ஒரு பக்கம் திறந்த நிலையில் இருந்த சுற்றி வளைப்பில் புலிகள் தப்பி ஓட ஆரம்ப தற்பாதுகாப்பு துப்பாக்கி சூடுகளினால் காயப்பட்ட புலிகளை குண்டுகளின் மத்தியில் கைதிகளாக இருந்த ஐயா குழுவினர் காப்பாற்றி காட்டிற்குள் சென்ற புலிகளிடம் ஒப்படைத்து புலிகளின் கைதிகளாக இருந்த தாம் தப்பி ஓடாமல் புலிப் போராளிகளை மனிதாபிமானத்துடன் காப்பாற்றியதை நேரில் கண்ட ராதா ‘…. நீங்கள் என்ன மனுஷர்களடா….’ என்று கூறி அனைவரையும் விடுதலை செய்தார். தன்னை மட்டும் காப்பாற்றி கொள்ள நினைக்காமல் அந்த பாதுகாப்பற்ற நிலமையிலும் யாழ் வந்து புலிகளுக்கு மறைந்து இருந்த என்னைப் போன்றவர்களை கடும் பிரயத்தனத்தின் பின்பு சந்தித்து நாம் தப்பி செல்வதற்குரிய ஆரம்ப ஒழுங்குகளை செய்துவிட்டே தோழர் நாபாவை சந்திக் இந்தியா சென்றார்.
1987, 1988 காலங்களில் கோடம்பாக்கம் வீதிகளில் காலில் செருப்பின்றி ஒருவேளை உணவிற்கும் கஷ்டப்பட்ட நிலையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நடந்து செல்லும் ‘வறுமை’ கலந்த ‘இலட்சிய’ வாழ்வை வாழ்ந்த என்னை தெருவில் மறித்து என்ன காச்சட்டையுடன் செருப்பின்றி திரிவதை கண்டு வருந்தி கட்டாயப்படுத்தி எனக்கு செருப்பு வாங்கி தந்து இன்றை முன்னணி அரசியல்வாதியடம் ஏச்சும் வாங்கிய மனித நேயம் கொண்டவர். இதற்கு பின்னாலும் ஒரு பெரிய மத்திதர வர்க்க குணாம்ச வரலாறு உண்டு.
தொடர்ந்து இலங்கை இந்தி ஒப்பந்தம் ஏற்பட ஈழம் திரும்பி வவுனியாவில் அலுவலகம் அமைத்து அந்த அலுவலகம் அமைந்த காணியின் ஒரு பகுதியில் விவாசாயம் செய்து இதில் கிடைத்த உணவுப் பொருட்களுடன் முகுந்தன் வெற்றி போன்றவர்களுடன் செயற்பட்ட காலம் நிறைவான காலம். இந்தக்காலத்தில் எமது தோழமை இயக்கம் செய்த மக்களிடம் கொழும்பில் இருந்து யாழ் செல்லும் வாகனங்களை மறித்து காசு பறித்த வேண்டாத செயல்களுக்கான பழிகளை இவர்கள் சுமக்கவில்லை என்பது வவுனியா வாழ் மக்கள் நன்கு அறிவர்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் வவுனியா திரும்பிய என்னை வீட்டில் அமைதியாக இருந்து தொடர்ந்தும் உயர்தர பீட மாணவர்களுக்கான வகுப்புககளை எடுக்கப் பணித்த போது தோழர் கூறினார் ‘… புலியை விட புளட்டினால்தான் பாதுகாப்பு பிரச்சனை எனக்கு அதிகம் எனவே தொடர்புகள் இருப்பதாக காட்டிக் கொள்ளாமல் செயற்படவும் தேவைப்படும் போது முழுமையாக வெளிப்படையாக செயற்படலாம்…..’ என்று கூறி பாதுகாப்பில் தெளிந்த சரியான பார்வை உடைய எச்சரிக்கையான செயற்பாடு உடையவர் இறுதியில் செட்டிகுளம் பகுதியில் ஒரு மிருகத்திடம் இருந்து தப்ப இந்த (வவுனியா, மதவாச்சி. செட்டிகுளம், மன்னார்) பாதுகாப்பு பாதையை தெரிவு செய்து இன்னொரு சதி(PLOT)யினால் மரணித்தது ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப புள்ளியான ஒருவருக்கு கிடைத்திருக்கும் அவச் சாவே.
நான் கண்ட நடைமுறை இடதுசாரி. வாழ்வை அனுபவிக்கும் கலாரசிக மனிதர் இளைஞர்கள் மட்டும் போராட்டத்தில் இணைந்திருந்த காலத்தில் திருமணமான பின்பு ஆரம்ப காலத்தில் போராட்டத்தில் இணைந்திருந்து போராளி. பத்மநாபாவின் முதல் நிலைத் தலமைப் போராளி. மன்னார் தொடக்கம் முல்லைத்தீவு வரைக்கும் மக்கள் படையைத் திரட்டிய முன்னணித் தோழன் இன்று பல்வேறு பிரிவாக பிரிந்து நின்றாலும் அவர்கள் யாவரும் தோழர் ஐயாவினால் வளர்த்தெடுகப்பட்ட போராளிகளே அரசியல்வாதிகளே. இன்னமும் வாழ்ந்திருக்க வேண்டிய மக்கள் போராளி எனது மதிப்பிற்குரிய சகா என் தோழன் ஐயா.
##################################################
Segar Chandramohan நான் பழகிய தோழர்களில் என்னை மிகவும் கவர்ந்த தோழர்கள் இருவர். ஐயா, ராபர்ட். இருவரிடமும் மிகவும் நெருக்கமாக பழகியிருக்கிறேன்.
இருவரிடமும் பல பொதுவான குணங்கள் இருந்தன.
யதார்த்தமாக பேசுபவர்கள், அன்பாக பழகுவார்கள். நகைச்சுவையாக உரையாடுவார்கள். அதிகார தொனியை, இறுமாப்பை அவர்களிடம் காணமுடியாது. நான் ஆத்திரமாக பேசினாலும், வாதம் செய்தாலும், கோபப்படாமல் அமைதியாக பதிலளிப்பவர்கள்.
86 ஆம் ஆண்டு ஐயா தோழர் சிறையிலிருந்து விடுபட்டபின் யாழில் அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நேரம் உள்கட்சி முரண்பாடுகள் கூர்மையடைந்திருந்த நேரம். நான் தலைமைக்கு எதிராக கடும் விமர்சனங்களை தொடுத்த நேரம். ஒரு நாள் கட்சி உறுப்பினர் கூட்ட முடிவில் ஐயா தோழர் என்னை, தன்னுடன் வன்னி வந்து அங்கே அரசியல் வேலைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டதற்கு நானும் இணங்கினேன். அதை தொடர்ந்து தோழர்கள் சுரேஷ், வெற்றி, ஐயா மூவருடனும் நான் வவுனியா புறப்பட்டேன்.
முதலில் கிளிநொச்சி (வட்டக்கச்சி) சென்று, அங்கிருந்து ஒரு ட்ராக்கர் வண்டியின் “மட் கார்டில்” அமர்ந்து நாம் நால்வரும் காட்டு பாதைகளினூடாக வவுனியா (பம்பைமடு) சென்றோம்.
அந்த நேரங்களில் ஐயா தோழருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அந்த மண்ணில் வைத்திருந்த உண்மையான பற்றை உணரக்கூடியதாக இருந்தது. அவர் என்னிடம் சொல்லுவார், “நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு சும்மா சவுண்ட்
விட்டுக்கொண்டிருக்கிறியள், இங்க பாருங்கோ எங்களுக்கு முன்னாலை எவ்வளவு வேலைகள் இருக்கிறது எண்டு”. கண்ணாட்டியில் அவரின் வீட்டில் (குடிலில்) ஓரிரு நாட்கள் அவருடன் தங்கிய நாட்களும் மறக்க முடியாதவை. இரண்டு மாதங்கள் அங்கே தங்கி அரசியல் வேலைகளை முன்னெடுத்தேன். யாழ் திரும்புமுன், மக்கள் விடுதலை படையினால் ஓமந்தையை அண்டிய பகுதியில், காட்டினுள் அமைத்த பயிற்சி முகாமில் தங்கி அங்கே பயிற்சி பெற்றவர்களுக்கும் அரசியல் வகுப்புகளை நடத்தும் சந்தர்ப்பம் கிடைத்தது.
தோழர் ஐயா ஒரு கடின உழைப்பாளி. வவுனியா, மன்னர் பிரதேசங்களில் எமது அமைப்பை வளர்ப்பதில் முழு மூச்சாக வேலை செய்த ஒரு உன்னதமான தோழர்.
1987 ஆம் ஆண்டின் பின் பகுதியில் இறுதி தடவையாக ஐயா தோழரை எனது பாசத்துக்குரிய ராபர்ட் உடன் ஒன்றாக சந்தித்து சுவாரசியமாக பல விடயங்கள் பேசி சிரித்தோம். அதன் பின் நான் வெளிநாடு புறப்பட்டுவிட்டேன். பிற்பட்ட காலத்தில், அய்யாவின் துக்க செய்தி கேட்டு துயரத்தில் ஆழ்ந்தேன்.
சில வருடங்களுக்கு முன் யாழ் சென்றிருந்தபோது PLOTE இயக்க மூத்த உறுப்பினருடன் அய்யாவின் கொலையை பற்றி பேசும் போது, அவரும் கவலையுடன் எனக்கு கூறியது இதுதான். ஐயாவை கடத்தி வைத்திருந்த போது, தலைமை அவரை உடன் விடுதலை செய்யுமாறு கேட்டதாகவும், அதற்கிணங்கி அவரை விடுதலை செய்து விட்டு, அதன் பின் அவரை பின் தொடர்ந்து சென்று அவரை சுட்டு கொன்று விட்டார்கள் என்றும் கூறினார். ஈழ விடுதலை போராட்டத்தில் மாற்று இயக்கங்களால் அல்லது தான் சார்ந்த இயக்கத்தால் ஆயிரக்கணக்கான போராளிகள் கொலை செய்யப்பட்டதென்பது ஒரு கசப்பான ஜீரணிக்க முடியாத உண்மை.
தோழர் ஐயாவிற்கு எனது செவ்வணக்கங்கள்.
தோழர் அன்றூ