(தோழர் ஜேம்ஸ்)
வெலிக்கடைப் படுகொலையில் எதிரி உன் உயிரை பறிக்க முடியவில்லை. பிணக் குவியலுக்குள் பிணம் போல் படுத்துறங்கி விழித்தெழுந்தவனே. 1983 வெலிக்கடைப் படுகொலையை சர்வதேசம் எங்கும் உன் பதிவு மூலம் பதிய வைத்தவன் நீ. ஈழவிடுதலைக்கான புரட்சிகர இலக்கியம் அருளரின் இலங்காராணிக்கு அடுத்ததாக உன்னுடைய வெலிக்கடைப் படுகொலை விபரிப்பாகத்தான் இருக்க வேண்டும்.
ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப புள்ளிகள் உன்னிடமும் இருந்தும் ஆரம்பித்ததுதான்.அது TLO(தமிழீழ விடுதலை இயக்கம்) ஆரம்பித்து சிறை சென்று மட்டுநகர் சிறையுடைப்பில் சிறை மீண்டு ஈபிஆர்எல்எவ் ஆக பரிமாணம் அடைந்தது, இடையறாத 40 வருடப் பொது வாழ்க்கை, அது விடுதலை வாழ்க்கை, அது போராட்டவாழ்கை. எப்போது நகைச்சுவை ஓடும் பேச்சு இதற்குள் ஒரு கண்டிப்பும் கலந்தே இருக்கும். எமது விடுதலை அமைப்பைத் தாண்டி சகல விடுதலை அமைப்பினரும் உன்னைத் தாண்டிப் போனதாக வரலாறு இல்லை. உன் கரையைத் தாண்டிப் போனதாக வரலாறு இல்லை. இது மல்லிப்பட்டணம் நாகபட்டினம் தங்கச்சிடம் கோடியாக கரை வரை நீண்டிருந்தது. இவற்றை அந்த வேதாரணியம் தனது வரலாற்றில் பதிந்தே வைத்திருக்கின்றது.குடந்தை அண்ணன் தோழர் ஸ்ராலினின் வாயில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயராக உங்கள் பெயரும் இருந்தது இவற்றிற்கு எல்லாம் கும்கோணமே சாட்சியங்கள்.
சற்றே ஆக்ரோஷமான படகோட்டிகள் பல்வேறு சமூகத் தளங்களில் இருந்து வந்து போராளிகள். கூடவே சில வேளைகளில் பல்வேறு விடுதலை அமைப்புக்களின் போராளிகள். கடல் பயண ஒழுங்கு… போராளிகளுக்கான பாதுகாப்பு… தங்குமிடம்…. உணவு… வழங்கள் ஏதுமற்ற நிலமை. வேதாரணிய கிராமத்த மக்களின் உணர்வுகள் மீனாட்சி சுந்தரம் போன்ற ஆளுமை மிக்க அரசியல் தலைவர்களுடன் உறவு. கணக்கெடுப்பு என்ற போர்வையில் வரும் புலனாய்வு பிரிவுகள் எல்லாவற்றையும் பிசிறில்லாமல் தெளிவாக நேர்த்தியாக உத்வேகத்துடன் நகர்த்தி சென்று நிர்வகிர்த்த திறமை.
இடையிடையே குந்தி இருந்தபடி குட்டிக் தூக்கம். பார்த்தால் குந்தில்உள்ள தூணில் சாந்தபடி சும்மா குந்திய இருப்பது போன்ற தோற்றும். ஆனால் அலுவல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன. ஆளணிகள் மாத்திரம் அல்ல கருவிகளின் இடமாற்றம். மத்திய மாநிலக் கழுகு கண்களிடம் மண்ணைத் தூவி செயற்படும் அலட்டிக் கொள்ளாத வேலை செய்யும் திறமை. பல தடைவ எனக்குள் வியந்தே இருக்கின்றேன். எனக்கும் உங்களுக்கும் இடையே தோழமையுடன் ஒரு நட்புக் கலந்து நகைச்சுவை எப்போதும் இளையோடியதை மகிழ்ந்தே இன்று நினைவிற்குள் கொண்டேவருகின்றேன்.
மட்டக்களப்பில் இருந்து புறப்பட்ட முதல் பெண்கள் அணியில் மேரி, சுமதி இருவரும் முன்னிலை வகித்தது விடுதலைப் போராட்டத்தின் வரலாறு. சுமதியுடன் எனக்கு நிறையே பழக்கமும் உண்டு. பக்குவப்பட்ட பேச்சு அணுகு முறை. எனக்குள் வியந்த சக தோழி. மட்டக்களப்பு தோழர் குமாரின் கண்டு பிடிப்பு. உறுதியான தோழர். பெண்கள் விடுதலை என்பது சமூக விடுதலையின் ஒரு அங்கம் என்றுணர்ந்த போராளி. பின்னாளில் அவரை நீங்கள் கரம் பிடித்து ஒன்றாக குடம்ப வாழ்கையிலும் பயணிக்கு போவதாக அறிந்து மிக்க மகிழ்ந்தவனில் நானும் ஒருவன்.
வடக்கும் கிழக்கும் இணைந்த இணை பிரியாத நீதி மன்றங்களினால் பிரிக்க முடியாத நிரந்தர வடக்கு கிழக்கு இணைப்பு உங்கள் திருமணம் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையின் பிரவாக்கத்தின் தொடர்சிதான.; எப்படித் தோழா தப்ப முடியாத வெலிகடைப் படுகொலைக் கழத்திலிருந்து தப்பிய நீ இன்று எம்மை விட்டு தனித்து போனாய் தோழர் சுமதி கிழக்கை தனியே விட்டு வடக்கு போவது சரியா என்று கேட்டால் எனக்கு கண்ணீரைத் தவிர பதில் ஏதும் உடன் என்னிடம் இல்லை. ஆனாலும் தோழரே இணைந்தே நாம் எமது உரிமைக்காக பயணிப்போம் என்ற உறுதி மொழியை மட்டும் உன்னவளுக்கு எம்மால் கொடுக்க முடியும்.
பசியைப் பொறுக்க முடியாத குழந்தை உள்ளம் உன்னுடையது. ஆனால் இன்றுவரை பிளேன் ரீயிற்கு கஸ்டப்படும் போராட்ட இயக்க இணைப்பு. உன் தலமைத் தோழன் நாபா யார் கேட்டாலும் இப்பதான் சாப்பிட்டுவிட்டு வருகின்றோம் என்று விருந்தோம்பலை மறுக்க… பசி தாங்காத நீங்கள் உந்த மனுசன் என்ன பட்டினி கிடந்து சாகப் போகுதா…? நம்மால் முடியாதப்பா என்ற சொல்லிவிட்டு சக தோழர்களின் பாக்கட்டில் இருக்கும் சில்லறைணை எடுத்து 60 சதத்திற்கு ஒரு செட்டு இட்லி வாங்கி சாப்பிட்டு பசியைப் போக்கும் குழந்தை நீங்கள்.
முதன்மையாக பார்க்க விரும்புவது சினிமா படம் மட்டும் அல்ல அதுவும் எம்ஜிஆர் படமும் கூட. இந்த முதன்மை விருப்பம் கடல் கடக்க நிற்கும் சகாக்களை அனுப்பிவைப்பதிலும் தங்களிடம் இருந்ததை வேதாரணியத்தில் பல தடைவ நான் கண்டதுண்டு, எமது வளங்கள் போதவில்லை என்றால் பன்முகத் தொடர்புகளைப் பாவித்து காரியம் ஆற்றும் திறமை உங்களுக்கே உரியது. இதிலும் நீங்கள்தான் முதன்மையானவன்.
உனது இறுதிக் காலங்களில் ஏற்பட்டது அரசியல் தளம்பல்களா…? என்றால் இல்லை என்பதே என் பதில். உன்னை வழி நடத்த பத்மநாபா போன்றதொரு தோழன் அருகில் இல்லை என்பதே என்பதிலாக இருக்கும். வறுமைக்கு சோறு போட்டும்.. போட்ட சோற்றிற்கு செஞ்சோற்றுக் கடன் கேட்காத உன் தலைவன் நாபா… தன்னால் பசியாற்றப்பட்டவனால் வஞ்சகமாக கொல்லப்பட்டு உனக்கு முதலே எம்மை விட்டுச் சென்றதன் அறுவடைகள் இவை.
சென்று வா தோழனே வரலாற்றில் ….. ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் உனது வரலாறு பல பக்கங்களை நிரப்பியே நிற்கும். இதில் வெலிக்கடைப் படுகொலையில் மீண்டது…. மட்டக்களப்பு சிறையுடைப்பு….. கரை கடக்க பணிபுரிந்த கரைப் பொறுப்பு…. நாhபாவின் மெய்பாதுகாவலனாக செயற்பட்ட அந்த நாட்கள் கூடவே வடக்கையும் கிழக்கையும் உறவு மூலம் இணைத்த குடும்ப வாழ்வு… என்ற அடுக்கிக்கொண்டே போகலாம். ஈழவிடுதலைக்கான உனது அர்பணிப்பை பெருமிதத்துடன் மனதில் நிறுத்தி கண்ணீருடன் விடை கொடுகின்றோம் தோழரே! உனது இலட்சியங்களை நாம் தாங்கி தொடர்ந்தும் பயணிக்கின்றோம்.
(May 14, 2017)