1914ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி ஜோதி கிரண் பாசுவாக கல்கத்தாவின் நடுத்தர வர்க்க பெங்காலி குடும்பத்தில் பிறந்தார் ஜோதிபாசு. அவருடைய தந்தை நிஷிகாந்த் பாசு. இவர் ஒருடாக்டர். இவரது சொந்த ஊர் கிழக்கு வங்காளத்தில் (இப்போதையவங்கதேசம்) உள்ள பர்தி கிராமமாகும். பாசுவின் தாயார் ஹேமலதா பாசு. 1920ம் ஆண்டு கொல்கத்தாவின் தர்மதாலா என்ற பகுதியில் இருந்தலோரிட்டோ பள்ளியில் பள்ளிப் படிப்பை தொடங்கினார் பாசு. பள்ளியில் பாசு சேர்க்கப்பட்டபோது அவரது பெயரை ஜோதிபாசு என்று சுருக்கி சேர்த்தார் பாசுவின் தந்தை.
கொல்கத்தா இந்துக் கல்லூரியில் (பிரசிடென்சி கல்லூரி) ஆங்கிலத்தில் பட்டப்படிப்பை முடித்தார் பாசு. 1935ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த பின்னர் சட்டம் லண்டன் சென்றார். அப்போது இங்கிலாந்தில் கம்யூனிசம் குறித்தும், கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள், இயக்கங்கள் குறித்தும் அறிய வந்தது பாசுவுக்கு. கம்யூனிசக் கொள்கை அவரை வெகுவாக ஈர்த்தது.
பிரபல கம்யூனிஸ சித்தாந்தியும்,எழுத்தாளருமான ரஜினி பால்மே தத்தின் எழுத்துக்களால் வசீகரிக்கப்பட்டார் பாசு.
1940ம் ஆண்டு தனது படிப்பை முடித்து பாரிஸ்டர் ஆனார் ஜோதிபாசு. படிப்பு முடிந்ததும் இந்தியா திரும்பினார். 1944ம் ஆண்டு தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக ஈடுபட்ட அவரை ரயில்வே தொழிலாளர்களுக்கான போராட்டங்களில் கட்சி ஈடுபடுத்தியது.
பிஎன் ரயில்வே தொழிலாளர் யூனியனும், பிடி ரயில் பாதை தொழிலாளர் யூனியனும் ஒன்றாக இணைக்கப்பட்டபோது அதன் பொதுச் செயலாளரானார் ஜோதிபாசு.
லண்டனில் சட்டம் பயின்று கொண்டிருந்தபோதே அரசியல் ஆர்வமும் அவருக்குள் அதிகரித்து விட்டது. காரணம், இந்தியாவில் அப்போது நடந்து வந்த சுதந்திரப் போராட்டம். லண்டனில் இருந்தபடி செயல்பட்டு வந்த இந்தியா லீக் மற்றும் லண்டன் மஜ்லிஸ் ஆகியவற்றில் இணைந்து அவர் செயல்பட்டார். வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களின் அமைப்புகள் இவை.
ஜவஹர்லால் நேரு 1938ம் ஆண்டு லண்டன் வந்தபோது அவரை வரவேற்கத்தேவையான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பு பாசுவிடம் வழங்கப்பட்டது. அதேபோல சுபாஷ் சந்திரபோஸ் இங்கிலாந்து வந்தபோதும் பாசுவிடம் வரவேற்பு ஏற்பாட்டுக்கான பொறுப்பு வந்து சேர்ந்தது.
லண்டன் மஜ்ஸில் உறுப்பினராக, லண்டனுக்கு வந்த இந்திய அரசியல்தலைவர்களை, தொழிலாளர் கட்சித் தலைவர்களுடன் அறிமுகப்படுத்தி வைத்த பெருமைக்குரியவராக திகழ்ந்தார்.
இங்கிலாந்தில் பாசுவுக்குக் கிடைத்த நண்பரும், கம்யூனிஸ்ட் தலைவருமான பூபேஷ் குப்தா மூலம் இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியுடன் பரிச்சயமும், அறிமுகமும் ஏற்பட்டது பாசுவுக்கு.
அக்கட்சியில் சேர ஆர்வம் காட்டினார் பாசு. ஆனால் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதித்திருப்பதால் இப்போது சேர வேண்டாம் என இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான ஹாரி போலிட் பாசுவை அறிவுறுத்தினார். அப்படி சேர்ந்தால் அவர் இந்தியா திரும்புவதில் சிக்கல் ஏற்படலாம் என்பது ஹாரியின் கவலை.
இதனால் கட்சியில் சேராமலேயே படிப்பை முடித்து விட்டு நாடு திரும்பினார் பாசு. நாடு திரும்பியதும் தனது எதிர்காலத் திட்டத்தை பெற்றோரிடம் விவரித்தார். அரசியலில் தீவிரமாக இறங்கப் போவதாக அவர் கூறினார்.
அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்தியாவில் வெள்ளைக்கார அரசு தடை விதித்திருந்தது. இருப்பினும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார் பாசு. பின்னர் அவர் கட்சியிலும் இணைந்தார்.
1946ம் ஆண்டு வங்காள சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் பாசு. ரயில்வே தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். மேற்கு வங்க மாநில முதல்வராக பிதன் சந்திர ராய் (பி.சி.ராய்) இருந்தபோது, நீண்ட காலத்திற்கு எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார் பாசு.
எம்.எல்.ஏவாகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பாசு செயல்பட்ட விதம், அவரது பேச்சுத் திறமை ஆகியவற்றால் கவரப்பட்டார் டாக்டர் பி.சி.ராய். தனது கட்சியின் கொள்கைக்கும், பாசுவின் கட்சிக்கும் இடையே பெரும் வித்தியாசங்கள் இருந்தபோதும் இளம் தலைவரான பாசு மீது அதிக பாசமும், மதிப்பும் வந்தது ராய்க்கு.
மாநில அரசுக்கு எதிராக அப்போது அடுக்கடுக்காக நடந்து வந்த போராட்டங்களை தலைமையேற்று நடத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்தி வந்தார் ஜோதிபாசு.
ரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் மட்டுமே பெரும் ஆதரவுடன் திகழ்ந்து வந்த பாசுவுக்கு இந்தப் போராட்டங்களால், இளைஞர்கள், மாணவர்கள் மத்தியிலும் பேராதரவு பெருகியது.
அந்த சமயத்தில், ஊதிய உயர்வு கோரி ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார் ஜோதிபாசு. இந்தப் போராட்டம் மேற்கு வங்க வரலாற்றில் மிகப் பெரிய அளவிலானபோராட்டமாக கருதப்படுகிறது.
தனது தொடர் போராட்டங்களால் மேற்கு வங்க அரசின் தூக்கத்தை கெடுத்தார் ஜோதிபாசு. இன்று என்ன போராட்டமோ என்று அரசு பயந்து நடுங்கும் அளவுக்கு வீறுகொண்ட தலைவராக விளங்கினார் பாசு.
1964ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடைந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிறந்தது. அதன் முதல் பொலிட்பீரோவில் ஒன்பது பேர் இடம் பெற்றனர். அவர்களில் பாசுவும் ஒருவர்.
1967 மற்றும் 69 ஆகிய ஆண்டுகளில் துணை முதல்வராக பொறுப்பு வகித்தார் பாசு.