தோழர் பத்மநாபா பற்றிய எனது மனப்பதிவுகளை இப்போதாவது இப்பத்தியில் பாரமிறக்கலாமென எண்ணுகிறேன்.
1987 ஜூலை 29 இல் கொழும்பில் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களுக்கும் இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களுக்குமிடையில் கைச்சாத்தான இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தைத் தோழர் பத்மநாபா தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ பி ஆர் எல் எஃப்) அனுசரித்து அதன் அமுலாக்கத்திற்குப் பங்களிப்புச் செய்ய முன்வந்தது.
இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தை இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வாக எந்தக்கட்டத்திலும் ஈபிஆர்எல்எஃப் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலில் இந்தியாவை நேச சக்தியாக அனுசரித்துப் போக வேண்டிய அரசியல் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு இனப்பிரச்சனைக்கான இறுதித் தீர்வை நோக்கிய ஓர் இடைக்கால அல்லது ஆரம்ப ஏற்பாடாகவே இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தை ஈபிஆர்எல்எஃப் ஏற்றுக் கொண்டிருந்தது.
இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் வாயிலாக இலங்கையின் அரசியலமைப்பில் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தமும் மாகாணசபைகள் சட்டமும் (1987ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டம்) நிறைவேற்றப்பட்டு, வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைந்த வடகிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் 19.11.1988இல் நடைபெற்று, அ.வரதராஜப்பெருமாளை முதலமைச்சராகக் கொண்டு, ஈபிஆர்எல்எஃப் மாகாண ஆட்சியை அமைத்தது. இத் தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மக்களைக் கோரியிருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் போட்டியிட முன் வராத போதும் அதன் செயலாளர் நாயகமான அ.அமிர்தலிங்கம் அவர்கள் இத்தேர்தலில் தமிழ் மக்களைப் பங்குபற்றி வாக்களிக்கும்படி ஊடக அறிக்கை மூலம் கேட்டிருந்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடகிழக்கு மாகாண அரச உருவாக்கத்தைத் தொடர்ந்து 1989 பிப்ரவரியில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ‘உதயசூரியன்’ சின்னத்தின் கீழ் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிஆர்எல்எஃப், டெலோ, ஈஎன்டிஎல்எஃப் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.
இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கீழ் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தின் வாயிலாக உருவான வடகிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைந்த வடகிழக்கு மாகாண அரசுக்கு அனுசரணையாக மத்தியில் ஒரு பாராளுமன்ற அணி அமைய வேண்டுமென்ற தேவையும் அன்று இருந்தது. இத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனத்தின் மூலம் அதன் செயலாளர் நாயகமான அ.அமிர்தலிங்கம் பாராளுமன்றம் சென்றார்.
இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் உதட்டளவில் அனுசரித்துப் போவதாகப் போக்குக் காட்டிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அதனை எதிர்த்தது மட்டுமல்லாமல் ஒப்பந்தத்தை அமுல் செய்யவென இலங்கை வந்து வட கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டிருந்த இந்திய-அமைதிகாக்கும் படையினர் மீது யாழ்ப்பாணத்தில் வைத்து ஏற்கெனவே 10.10.1987 அன்று தாக்குதலை ஆரம்பித்திருந்தது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்குப் பின்னர் இலங்கையின் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசாவுடன் கூட்டுச் சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே வடகிழக்கு மாகாண அரச நிர்வாகம் இயங்கவேண்டியிருந்தது. பிரேமதாச அரசாங்கம் தனது அரசியல் இலக்கை அடைவதற்காகப் புலிகளைப் போஷித்து வளர்த்தது.
ஆங்காங்கே ஈபிஆர்எல்எஃவ் இயக்கத்தினருக்கும் புலிகளுக்குமிடையில் மோதல்கள் இடம்பெற்றன. இந்திய அமைதி காக்கும் படையினருக்கும் புலிகளுக்குமிடையேயும் இவ்வாறான மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. அரசியல் ரீதியாக இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்து வடகிழக்கு மாகாண அரசை ஆதரித்து நின்றவர்கள் உட்பட, வடகிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்- 1989 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பட்டியலில் போட்டியிட்டு வென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள்- வடகிழக்கு மாகாண அரச நிர்வாகத்தின் தூண்களாக விளங்கிய உயரதிகாரிகள் என்று அனைவருமே புலிகளின் உயிர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுதான் இயங்க வேண்டிய சூழ்நிலையைப் பிரபாகரன்- பிரேமதாச கூட்டு ஏற்படுத்தியிருந்தது.
புலிகளுக்குப் பயந்து மாகாணசபை நிர்வாகத்தில் இணைந்து பணியாற்றுவதற்குக் கூடப் பலர் பின்வாங்கிய- தயக்கம் காட்டிய சந்தர்ப்பங்கள் பலவுண்டு.
இந்தப் பின்னணியிலேயேதான் 13.07.1989 அன்று அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கமும் அவருடன் சேர்த்து தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் யாழ்ப்பாணத் தொகுதி பா.உ. வெ.யோகேஸ்வரனும் கொழும்பில் வைத்துப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மு.சிவசிதம்பரம் தெய்வாதீனமாக உயிர் பிழைத்தார்.
அடுத்து சில மாதங்களின் பின் வட கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவிருந்த திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் தம்பிராசாவும் அவருடன் சேர்த்து சில தோழர்களும் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் பலியானார்கள்.
இந்த நிகழ்வுகள் புலிகள் இயக்கத்தின் மீது ஆத்திரத்தையும் வன்மத்தையும் முன்னாள் ஈபிஆர்எல்எஃப் போராளிகளுக்கு ஏற்படுத்தியிருந்தன. அதனால் அவர்கள் ‘புலி வேட்டை’க்காக (தமிழீழ விடுதலைப் புலிகளைத் தேடி) காடுகளுக்குள் செல்லவும் தொடங்கினர்.
முன்னாள் தமிழ்ப் போராளி இயக்கங்களுக்கிடையேயும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையேயும் ஐக்கியத்தையும்-வன்முறையற்ற அமைதியான புறச்சூழலையும்-வடகிழக்குமாகாண அரசினால் தமிழ் மக்கள் அதி உச்சபட்ச சமூக பொருளாதார அரசியல் அனுகூலங்களை அடைய வேண்டுமென்றும் அவாவி நின்ற இப்பத்தி எழுத்தாளர், தோழர் பத்மநாபா அவர்களைச் சந்தித்து “புலிகள் நாட்டுக்குள் (ஊருக்குள்) வந்து தாக்குதல் தொடுத்தால் ‘தற்காப்பு’ எடுப்பதில் தவறில்லை. ஆனால் புலிகளைத் தேடிக் காட்டுக்குள் செல்வதை ஈபிஆர்எல்எஃப் போராளிகள் தவிர்த்துக் கொண்டால் வீணான மோதல்களைத் தவிர்த்துக் கொள்ளலாமே” என்று கூறியபோது அதனை பத்மநாபா ஏற்றுக் கொண்டார்.
பதிலுக்கு அவரும் இப்பத்தி எழுத்தாளரிடம் “முன்பெல்லாம் வகுப்புகள் எடுத்து அரசியல் மயப்படுத்திய பின்னர்தான் ஈபிஆர்எல்எஃப் இன் போராளிகளாக இணைத்துக்கொள்ளும் ஏற்பாடு இருந்தது. ஆனால் பின்னர் புலிகள் ஈபிஆர்எல்எஃப் தோழர்களின் மீதும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மீதும் வகைதொகையின்றிக் கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டபடியினாலும்- தமிழ் மக்கள் பல போராட்டங்களின் பின், தியாகங்களின் பின், இழப்புக்களின் பின் பெற்றுக் கொண்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த வடகிழக்கு மாகாண அரசைப் புலிகள் பிரேமதாச அரசாங்கத்துடன் கூட்டு வைத்துச் சீர்குலைக்கும் செயலில் ஈடுபடுட்டிருப்பதாலும் புதிதாக இணைந்து கொண்டுள்ள ஈபிஆர்எல்எஃப் உறுப்பினர்கள் புலிகளைப் பழிவாங்கும் உணர்ச்சியால் உந்தப்பட்டுள்ளனர். இது தவறான போக்குத்தான். நிலைமையைச் சீர் செய்ய வேண்டும். ஈபிஆர்எல்எஃப் தோழர்களுக்கு அரசியல் வகுப்புகளை மீண்டும் ஏற்பாடு செய்ய நான் யோசிக்கிறேன்” என்று கூறினார்.
இந்த விடயத்தை இங்கு பதிவு செய்வதன் நோக்கம் தோழர் பத்மநாபாவைத் துதிபாடுவதற்காகவல்ல. ஆனால், ஒரு தலைவனுக்கு இருக்கவேண்டிய எப்போதுமே முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்த சிந்தனைகளும் செயற்பாடுகளுமே அவரை ஆட்கொண்டிருந்தன என்பதை எடுத்துக் கூறுவதற்காகவே. புலிகள் மீது ஒருபோதும் பழிவாங்கும் உணர்ச்சி அவரிடம் இருக்கவில்லை. புலிகள் ஒரு கட்டத்தில் தமது தவறை உணர்ந்து தமிழ் மக்களின் நலன் சார்ந்து ஜனநாயக வழிக்குத் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பும் கூட அவரிடம் இருந்தது. வீரமும்- விவேகமும்- தன்னல மறுப்பும்- தத்துவார்த்தத் தெளிவும்- தியாகமும்- மானுட நேயமும் நிறைந்த உண்மையான மக்கள் தலைவனாகவே தோழர் பத்மநாபாவை வரலாறு அடையாளப்படுத்தியுள்ளது. அதனால்தான், ஒரு கட்டத்தில் வடகிழக்கு மாகாணசபையில் இடம்பெற்றிருந்த ஈபிஆர்எல்எஃப் உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமாச் செய்து விட்டு வெற்றிடமாகும் ஆசனங்களுக்குப் பதிலாக புலிகளின் பிரதிநிதிகளை நியமிப்பதன் மூலம் வடகிழக்கு மாகாண அரசின் ஆட்சியதிகாரத்தைப் புலிகளிடம் கையளித்த பின்னர் அனைவரும் இணைந்து மேலும் அதிகாரத்துக்காகப் போராடத் தோழர் பத்மநாபா அவர்கள் ஆயத்தமாக இருந்தார். தோழர் பத்மநாபா கையெழுத்திட்டு 1989 டிசம்பரில் முன்னாள் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியிடம் கையளிக்கப்பட்ட ’19 அம்ச பட்டயம்’ ( 19-Point Charter) இதற்குச் சான்று பகரும் ஆவணமாகும்.
ஆனால், பிரபாகரனின் பிடிவாதமும், தானே தமிழ் மக்களின் ஏக தலைவன் என்ற தான்தோன்றித்தனமான நிலைப்பாடும்- ஆயுதங்கள் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டிருந்த உளவியலும் (மனப்பிறழ்வும்), புலிகள் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியின் தன்னலச் செயற்பாடுகளும், அமிர்தலிங்கத்தின் கொலை மரணத்திற்குப் பின் உயிருக்குப் பயந்து புலிகளின் வால்களைப் பிடித்துத் தொங்கிய அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களின் சமூகப் பொறுப்பற்ற போக்கும் இறுதியில் இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல் செய்யவென இலங்கை வந்த இந்திய அமைதி காக்கும் படை அப்பணி பூரணமாக நிறைவேறு முன்னரே இந்தியா திரும்பவும் அதனைத் தொடர்ந்து முன்னாள் இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா அரசாங்கம் 1990ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க மாகாணசபைகள் திருத்தச்சட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி வடகிழக்கு மாகாண அரசைக் கலைக்கவுமே வழிசமைத்தது.
இந்த அனுபவத்திலிருந்து இலங்கைத் தமிழர் தரப்பு இன்னும் பாடம் படித்துக் கொண்டதாகத் தெரியவில்லை. அதேவேளை, தமிழ்த் தேசிய அரசியலில் பத்மநாபாவின் மரணம் ஏற்படுத்திய வெற்றிடம் இன்னும் நிரப்பப்படாமையே தமிழ்த் தேசிய அரசியலில் அதிகாரப் பகிர்வுக்கான முன்னெடுப்புகள் தேக்க நிலையடையக் காரணமாகும்.
சிங்கள முற்போக்கு சக்திகளாலும் மலையகத் தமிழர்களாலும் விரும்பப்படும் அளவுக்கு அவர்களுடனான உறவைப் பேணி வளர்த்தவர் தோழர் பத்மநாபா அவர்கள்.
இந்தப் பின்னணியில் இப்போதாவது, (BETTER LATE THAN NEVER) இலங்கைத் தமிழர் தரப்பு ஐக்கியப்பட்டு நின்று அதிகாரப்பகிர்வுக்காக அதன் ஆரம்பப் படியாக இலங்கை அரசியலமைப்பில் இப்போதும் கைவசம் உள்ள பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அர்த்தமுள்ள விதத்திலும் அரசியல் விருப்புடனும் அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தின் மீதும் இந்தியாவின் மீதும் சமகாலத்தில் அழுத்தங்களைப் பிரயோகிக்கக்கூடிய அரசியல்- இராஜ தந்திர களவேலைகளை ஆரம்பிப்பது ஒன்றே தமிழ்த் தேசிய அரசியலில் தேக்கம் அடைந்துள்ள அதிகாரப் பகிர்வுக்கான செயற்பாடுகள் முன் நகர்வதற்கான அறிவுபூர்வமான நடவடிக்கையாகும்.