சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர்தான் அவருடன் தொலைபேசியில் உரையாடியிருந்தேன். அவரின் அழைப்பின் பேரிலேயே அது நிகழ்ந்தது. அப்பொழுது சிறிதுநேரம் உரையாடிய அவர், “கதைக்கேலாமல் களைப்பாகக் கிடக்குது. விபரமாகக் கடிதம் எழுதும், பதில் எழுதுகிறேன்” என்று சொல்லிவிட்டு தொலைபேசியை அவரது வீட்டுக்கு வந்திருந்த தோழர்கள் இரத்தினம், கருணா, சிவபுத்திரன் ஆகியோரிடம் கொடுத்துவிட்டார்.
அவருக்கு கடிதம் எழுத வேண்டும் என நான் நினைத்திருந்தும் அது முடியாமலே போய்விட்டது. இனி எப்படி யாருக்கு எழுதுவது?
•
தோழர் நீர்வை பொன்னனையனை நான் முதன்முதலில் 1965இல் சந்தித்தேன். அப்பொழுது நான் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அங்கு நான் 1963ஆம் ஆண்டு எனது 15ஆவது வயதில் கற்பதற்குச் சென்றேன். அன்றிலிருந்து இடதுசாரிக் கருத்துகளுடன் பரிச்சயம் ஏற்பட்டது. நானும் என்னுடன் இருந்த சில மாணவத் தோழர்களும் நாமாகவே தீர்மானம் எடுத்து புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணையத் தீர்மானித்து அதன் யாழ்ப்பாண அலுவலகத்துக்குச் சென்றோம்.
அப்பொழுது அந்த அலுவலகம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்திருந்த ‘மொம்சாக் பில்டிங்’கில் 11F என்ற முகவரியில் இயங்கிவந்தது. அங்குதான் நீர்வை பொன்னையன் உட்பட தோழர்கள் மு.கார்த்திகேசன், வி.ஏ.கந்தசாமி, கேஏ..சுப்பிரமணியம் உட்பட பலர் எமக்கு அறிமுகமானார்கள்.
நாம் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த காரணத்தால் எமக்கு நீர்வை ஒரு எழுத்தாளர் என்றதும் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அதன் காரணமாக அவரது ‘மேடும் பள்ளமும்’ என்ற முதலாவது சிறுகதைத் தொகுதியை ஆவலுடன் பெற்று வாசித்தோம். அதுமட்டுமின்றி எமக்கு நீர்வையுடன் ஏற்பட்ட தொடர்பால் அப்போது எழுத்துலகில் பிரவேசித்து பிரகாசிக்கத் தொடங்கியிருந்த முற்போக்கு எழுத்தளர்களான டொமினிக் ஜீவாவின் ‘சாலையின் திருப்பம்’, கே.டானியலின் ‘டானியல் கதைகள்’, செ.யோகநாதனின் ‘யோகநாதன் கதைகள்’, யோ.பெனடிக்ற்பாலனின் ‘குட்டி’ போன்ற அவர்களது முதல் வெளியீடுகளையும் படிக்க முடிந்தது.
காலஞ்சென்ற பல தோழர்களை நினைக்கும் போது உயிருடன் இருந்த நீர்வையின் நினைவும் எப்போதும் வந்துபோகும். அவர் இறப்பதற்கு முதல்நாள் கூட, கனடாவில் வசிக்கும் தோழர் தவபாலனுடன் கதைக்கும் போது நீர்வையின் புத்தகச் சேகரிப்பு பற்றியும், அவர் இல்லாத காலத்தில் அந்தப் புத்தகங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றியும் உரையாடி இருந்தேன். அதற்குக் காரணம் அவர் சுமார் 60 வருட காலமாக பல பெறுமதிமிக்க புத்தகங்களைச் சேகரித்து வந்ததை நான் அறிவேன்.
இன்னொரு காரணம், அவரைப்போலவே நானும் ஒரு புத்தகப் ‘பயித்தியம்’. யுhழ்ப்பாணத்தில் 1963இல் எமது புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பித்த ‘யாழ்.புத்தகநிலைய’த்தின் உருவாக்கத்தில் அவரது பங்களிப்பு முக்கியமானது. அதே புத்தக நிலையத்தில் 1972 முதல் புலிகள் அதை வலுக்கட்டாயமாக 1991இல் மூடும்வரை நானும் பணியாற்றியிருக்கிறேன்.
•
நாம் நீர்வையை முதன்முதலாகச் சந்தித்த வேளையில் அவர் கட்சியின் தலைமையில் செயல்பட்ட இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் வட பிரதேச முழுநேர பிரதிநிதியாகவும், கட்சியின் தலைமையிலான இலங்கை வாலிபர் சங்க சம்மேளனத்தின் வட பிரதேச தலைவராகவும் செயல்பட்டுக் கொண்டிருந்தார். இவற்றின் நாளாந்த வேலைகளுக்காக அவர் தினசரி நீர்வேலியில் உள்ள தனது வீட்டிலிருந்து பஸ்சில் புறப்பட்டு யாழ் நகர் வந்து தனது கடமைகளை முடித்துவிட்டு இரவு 10.30இற்குச் செல்லும் கடைசி பஸ்சில் வீடு திரும்புவார். சில வேளைகளில் நானும் அவர்கூடச் சென்று அவர் வீட்டில் தங்கியிருக்கிறேன்.
எனது அரசியல் பிரவேசம் அவர் தலைமையிலான வாலிபர் சம்மேளனத்தில் இணைந்ததிலிருந்தே ஆரம்பமாகியது. அந்தக் காலத்தில் கட்சியில் இணைவதற்கு முன் வாலிபர் சங்கத்தில் இணைந்து இரண்டு வருடங்கள் உறுப்பினராக இருந்து செயல்பட்டிருக்க வேண்டும். அதன்பின்னர் கட்சியில் இணைவதற்கு ஏற்கெனவே கட்சி உறுப்பினர்களாக இருக்கும் இருவர் சிபார்சு செய்ய வேண்டும். என்னைச் சிபார்சு செய்தவர்களில் ஒருவர் நீர்வை என்பது எனது நினைவில் இன்றும் பசுமையாக உள்ளது. அதன்பின்னர் இரு வருடங்கள் கட்சியில் பரீட்சார்த்த நிலையில் இருந்து பின்னரே முழுமையான உறுப்பினராக முடியும்.
•
மிகுந்த போராட்ட குணமும், சுறுசுறுப்பும் கொண்ட நீர்வையின் காலத்தில்தான் வடக்கில் பல புரட்சிகரமான தொழிற்சங்கப் போராட்டங்கள் நடந்தன. இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் வேலை நிறுத்தம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், ஆனையிறவு உப்புக் கூட்டுத்தாபனத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபன ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம், வல்லை நெசவாலை தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம், மில்க்வைற் சவர்க்காரத் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம், பீடித் தொழிலாளர்களின் போராட்டம், சினிமா தியேட்டர் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் என்பன கட்சியினதும், தனிப்பட்ட முறையில் நீர்வையினதும் சிறப்பான வழிகாட்டுதலில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களாகும்.
அதுமட்டுமின்றி, 1966 முதல் 1969 வரை வட பகுதியில் எமது கட்சியாலும், கட்சியின் தலைமையிலான தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தாலும் முன்னெடுக்கப்பட்ட தீண்டாமைக்கும் சாதியமைப்புக்கும் எதிரான எழுச்சி மிக்கதும், வெற்றிகரமானதுமான போராட்டத்தில் நீர்வை அர்ப்பணிப்புள்ள ஒரு போராளியாக முன்னணியில் நின்று செயல்பட்டார்.
நான் எனது கல்வியைத் தொடர விருப்பமின்றி கட்சியின் முழுநேர ஊழியராக விவசாயிகள் மத்தியில் வேலை செய்வதற்குத் தீர்மானித்து 1966 ஜனவரியில் கிளிநொச்சிக்கு சென்று வாழத்தொடங்கினேன். அந்த நேரத்தில் ஆனையிறவு உப்புக் கூட்டுத்தாபனத்தில் வேலைசெய்த சில தொழிலாளர்களின் அழைப்பை ஏற்று அங்கு எமது தொழிற்சங்கம் ஒன்றை அமைக்கத் தீர்மானித்தோம். அந்தத் தொழிற்சங்கத்தை அமைப்பதில் தோழர் நீர்வை நேரடியாக வந்து எமக்கு வழங்கிய வழிகாட்டல் என்றும் மறக்க முடியாதது. அந்தத் தொழிற்சங்கத்தை ஆரம்பிப்பதற்காக நீர்வையும் நானும் இன்னொரு தோழரும் பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனத்தில் ஒரு தொழிலாளர் கூட்டத்தை முடித்துக்கொண்டு ஆனையிறவுவரை கால்நடையாகவே நடந்து சென்றது என்றும் மறக்க முடியாத சம்பவம். இதிலிருந்தே நீர்வையின் திடசங்கற்பத்தை தெரிந்து கொள்ளலாம்.
இவை தவிர, அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான வியட்நாம் மக்களின் வீரம்செறிந்த போராட்ட காலத்தில் வட பகுதியில் வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக நடைபெற்ற அனைத்து நடவடிக்கைகளிலும், வேறு பல வெகுஜனப் போராட்டங்களிலும் நீர்வை எப்பொழுதும் முன்னணிப் போராளியாக நின்றார்.
தொழிற்சங்கப் போராட்டங்களில் மட்டுமின்றி, விவசாயிகளை அணிதிரட்டுவதிலும் அவர் முன்னோடியாக இருந்துள்ளார். எமது கட்சியின் தலைமையின் கீழ் இருந்த அகில இலங்கை விவசாயிகள் சங்க சம்மேளனத்தின் கிளையொன்றை வட பகுதியில் முதன்முதலாக வவுனிக்குளம் – செல்வபுரம் குடியேற்றத்திட்டத்தில் ஆரம்பித்தபோது நீர்வை அதற்கு அக்கறையுடன் ஆதரவு வழங்கினார் என பிற்காலத்தில் நான் அறிந்தேன். வவுனிக்குளத்தில் ஏற்பட்ட அனுபவத்தை முன்வைத்தே தான் ‘உதயம்’ என்ற தனது சிறுகதைத் தொகுதியின் பிரதான கதையை எழுதியதாக பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் கூறினார்.
நீர்வை முற்போக்கு எழுத்தாளராக இருந்த அNjநேரத்தில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை வடக்கிலும் நாடு முழுவதிலும் கட்டியெழுப்பியதில் பெரும் பங்காற்றியுள்ளார். 1965இல் கட்சியினால் யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ‘வசந்தம்’ கலை இலக்கிய மாத இதழை உருவாக்கியதிலும் நீர்வையின் பங்களிப்பு தலையாயது.
அதுமட்டுமின்றி, யாழ்ப்பாணத்தில் ‘நவயுகப் பிரசுரம்’ என்ற பெயரில் ஒரு வெளியீட்டு நிறுவனத்தை உருவாக்கி அதன் சார்பாக மாஓசேதுங்கின் சில கட்டுரைகளை தமிழில் சிறு பிரசுர வடிவில் வெளிட்டதிலும் தோழர் வி.ஏ.கந்தசாமியுடன் நீர்வையின் பங்கும் முக்கியமானது.
•
1960களின் பிற்பகுதியில் தோழர் பொன்னையனுக்கு திருமணம் நடந்தது. அதன்பின்னர் அவர் கொழும்பில் நீண்டகாலமாக வாழ்ந்துவந்த மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்காக அங்கு சென்றுவிட்டார். அங்கு வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்காக ஒரு தொழில் தேட வேண்டியிருந்தது. சிறிது காலம் கொழும்பிலிருந்த சீனத் தூதரகத்திலும், சீனாவின் செய்தி நிறுவனமான ‘சின்குவா’வின் கொழும்பு அலுவலகத்திலும் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். அதன்பின்னர் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் இணைந்து சில வருடங்கள் பணிபுரிந்தார்.
கொழும்பில் அவர் தெகிவளையில் குவாரி வீதியில் 18ஆம் இலக்க வீட்டில் குடியிருந்தார். அந்த வாடகை வீட்டில் மனைவியின் குடும்பம் நீண்டகாலமாகக் குடியிருந்து வந்தது. பின்னர் அந்த வீட்டை அவர்கள் வாங்கி அதில் புதிய வீடொன்றைக் கட்டினர். அங்குதான் அவரது இரு மகள்களும் பிறந்தனர். நாங்கள் – குறிப்பாக தோழர் வி.ஏ.கந்தசாமி, நீர்வையின் ஒன்றுவிட்ட சகோதரரான எமது கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் தோழர் இ.வே.துரைரத்தினம், நான் ஆகியோர் – கொழும்பில் நடைபெறும் கட்சிக் கூட்டங்களில் பங்குபற்றுவதற்காக செல்லும் வேளைகளில் அவரது வீட்டில் தங்குவது வழமை. அதற்காக அவரது வீட்டு முன்அறை எப்பொழுதும் எமக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். அங்கு தங்கும் வேளைகளில் நீர்வை மட்டுமின்றி அவரது மனைவி, மாமியார், பிள்ளைகள், அவரது மைத்துனர் சண்முகரத்தினம் (ஆனந்தன்) ஆகியோர் எம்மை மிகுந்த அன்புடன் உபசரிப்பார்கள்.
கொழும்பில் நீர்வை வாழ்ந்த காலத்தில் கட்சி வேலையை விட கூடுதலாக முற்போக்கு எழுத்தாளர் சங்க நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டிருந்தார். அதற்காக சங்கத்தின் முக்கிய நிர்வாகிககளான பேராசிரியர் க.கைலாசபதி, சங்கத்தின் செயலாளர் ‘பிரேம்ஜி’ ஞானசுந்தரம், நீர்வை பொன்னையன், பேராசிரியர் கா.சிவத்தம்பி, சுபைர் இளங்கீரன், காவலூர் இராசதுரை, சோமகாந்தன், கே.கணேஸ், சமீம் ஆகியோர் அடிக்கடி சந்திப்பதுண்டு. இந்தச் சந்திப்புகளில் சில சந்தர்ப்பங்களில் எனக்கும் பங்குபற்றும் வாய்ப்புக் கிடைத்ததுண்டு.
இந்தக் காலகட்டத்தில் 70களின் நடுப்பகுதியில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தேசிய ஒருமைப்பாட்டு மாநாடொன்றை வெற்றிகரமாக நடத்தியது. இந்த மாநாட்டில் அப்போதைய பிரதமர் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க கலந்துகொண்டு சங்கம் இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாகத் தயாரித்தளித்த 12 அம்சங்கள் அடங்கிய மகஜர் ஒன்றைப் பெற்றுக்கொண்டார். இந்த மாநாட்டில் முற்போக்கு அரசியல் கட்சிகளின் வாலிப முன்னணிகள் சார்பாக பேசிய அனுர பண்டாரநாயக்க (சிறீலங்கா சுதந்திரக் கட்சி), சரத் முத்தெட்டுவேகம (இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி), வாசுதேவ நாணயக்கார (லங்கா சமசமாஜக் கட்சி) ஆகியோரின் வரிசையில் எமது இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக வாலிபர் சம்மேளனத்தின் சார்பாகப் பேசுவதற்கு எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. எனக்கு இந்த வாய்ப்பை ஏற்பாடு செய்து தந்தவர்கள் கைலாசபதியும் நீர்வையும்தான். இந்த மாநாட்டை வெற்றிகரமாக்குவதில் நீர்வை உட்பட சங்கத்தின் அனைத்து தலைமை நிர்வாகிகளும் இராப்பகல் என்று பாராது பணியாற்றியதை நான் கண்கூடாகக் கண்டேன்.
அந்தக் காலகட்டத்தில் நீர்வை இலக்கிய வேலைகளில் அதிக நேரம் செலவழித்தாலும் எமது கட்சியின் நடவடிக்கைகளிலும் தவறாது பங்குபற்றி வந்தார். குறிப்பாக, 1972 யூலையில் எமது கட்சியில் மீண்டும் ஒரு பிளவு தோன்றியது. அதன்போது நீர்வை சரியான அணியைத் தேர்ந்தெடுத்து எமது பக்கமே நின்றார்.
இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் 1935இல் முதன்முதலாகத் தோன்றிய லங்கா சமசமஜக் கட்சியில் முதல் பிளவு நிகழ்ந்தது. அக்கட்சியின் தலைமையில் இருந்த பெரும்பான்மையோர் கட்சியின் வழிகாட்டும் தத்துவமாக ரொட்ஸ்கிசத்தை ஏற்பது என முடிவு செய்ததால் அதிலிருந்த மார்க்சிச – லெனினிசவாதிகள் வெளியேறி 1940இல் ஐக்கிய சோசலிசக் கட்சி என்ற அமைப்பை உருவாக்கினர். பின்னர் 1943 யூலை 03ஆம் திகதி அந்த அமைப்பை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியாக மாற்றிக்கொண்டனர்.
பின்னர் 1964இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஒரு பிளவு உருவானது. அந்தப் பிளவு சோவியத் யூனியனில் குருசேவ் முன்னெடுத்த நவீன திரிபுவாதத்துக்கு எதிரான போராட்டம் காரணமாக உருவாகியது. அதன் காரணமாக உலகம் முழுவதும் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் பிளவுண்டபோது இலங்கை கட்சியிலும் அந்தப் பிளவு தோன்றியது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் நவீன திரிபுவாதத்தை ஆதரித்த வலது சந்தர்ப்பவாதிகளுக்கு எதிரான போராட்டத்தின் காரணமாக மார்க்சிச லெனினிசவாதிகள் உருவாக்கிய புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் சரியான பக்கத்திலேயே நீர்வை பொன்னையன் நின்றார்.
ஆனால் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த நா.சண்முகதாசன் பின்பற்றி வந்த இடது தீவிர – ஒருமுனைவாத நிலைப்பாட்டால் அவருக்கு எதிரான போராட்டம் கட்சிக்குள் நிகழ்ந்து வந்தது. கட்சி ஒருமைப்பட முடியாத நிலைமையில் கட்சியில் மீண்டும் ஒரு பிளவு 1972யூலையில் ஏற்பட்டது. சண்முகதாசனை நிராகரித்த கட்சியின் ஏகப்பெரும்பான்மையான உண்மையான மார்க்சிச – லெனினிச மத்திய குழு உறுப்பினர்களும், கட்சி உறுப்பினர்களும் ‘இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)’ என்ற பெயரில் புதிய கட்சியை உருவாக்கினர்.
இந்தக் கட்சியை பழைய கட்சியின் முன்னணித் தோழர்களான வொட்சன் பெர்னாண்டோ, மு.கார்த்திகேசன், டி.என்.நதுங்கே, ஏ.ஆரியவன்ச, ஹிக்கொட தர்மசேன, ஓ.ஏ.இராமையா, சாகுல் ஹமீட், வி.ஏ.கந்தசாமி, ஈ.ரி.மூர்த்தி, எச்.எல்.கே. கரவிட்ட போன்றவர்கள் வழிநடத்தினர். இந்தச் சந்தர்ப்பத்திலும் தோழர் நீர்வை பொன்னையன் சரியான நிலைப்பாடு எடுத்து தன்னை மார்க்சிச லெனினிச கட்சியுடன் இணைத்துக் கொண்டார்.
•
1977இல் ஜே.ஆர்.ஜெவர்த்தன தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிபீடமேறியதைத் தொடர்ந்து தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீது 1977 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் அரசாங்க ஆதரவுடன் இனவன்செயல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. 1983 வன்செயலைத் தெடர்ந்து தோழர் நீர்வை பொன்னையன் கொழும்பை விட்டு நீங்கி சில மாதங்கள் தனது சொந்த ஊரான நீர்வேலியில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். இந்தக் காலகட்டத்தில் பொது வேலைகளில் ஈடுபட்டதுடன், ‘ரெட்பானா’ என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் வலிகாமம் கிழக்குப் பிரதேச இணைப்பாளராகவும் பணியாற்றினார்.
திரும்பவும் கொழும்பு திரும்பிய நீர்வை, இன வன்செயலால் தாக்கப்பட்டிருந்த தனது தெகிவளை வீட்டை விற்றுவிட்டு வெள்ளவத்தையில் தொடர்மாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாங்கிக் குடியேறினார். அன்றிலிருந்து அவர் இறக்கும்வரை அந்த வீட்டிலேயே வாழ்ந்தார். மீண்டும் கொழும்பு திரும்பிய பின்னர், ‘விபவி’ என்ற மாற்றுக் கலாச்சார அமைப்பின் தமிழ் இணைப்பாளராகவும், அந்த அமைப்பு வெளியிட்ட ‘விபவி’ என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். இந்தக் காலகட்டத்தில் அந்த அமைப்பின் சார்பாக நாடு தழுவிய ரீதியில் பல கருத்தரங்குகளையும், சிறுகதைப் போட்டிகளையும் நடத்துவதில் முன்னின்று உழைத்தார்.
இதேவேளையில் கைலாசபதியின் மறைவின் பின்னர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் செயலிழந்துவிட்டது. அதனால்; ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால் நாங்கள் சிலபேர் ஒருநாள் நீர்வையின் வீட்டில் அவர் தலைமையில் கூடி ஆலோசித்து, ‘இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை’ என்ற அமைப்பை உருவாக்கினோம். பின்னர் அது ‘இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்’ என்ற பெயராக மாற்றம் பெற்றது.
இந்த மன்றத்தால் கொழும்பில் சராசரியாக மாதம் ஒரு கருத்தரங்கு நடத்தப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக, வருடந்தோறும் மு.கார்த்திகேசன் மற்றும் க.கைலாசபதி நினைவுச் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன. அதற்குக் காரணம் தமிழ் மார்க்சியவாதிகளைப் பொறுத்தவரையில் அரசியலில் கார்த்திகேசனும், இலக்கியத்தில் கைலாசபதியும் முன்னோடி ஆதர்ச தோழர்களாக இருந்தார்கள் என்பதனாலாகும் அத்துடன், இந்த மன்றம் 50இற்கும் அதிகமான நூல்களையும் வெளிட்டுள்ளது. இந்த நூல்களில் மிக முக்கியமானவை இலங்கையின் இடதுசாரி இயக்க முன்னோடிகள் பற்றிய நூலும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர்கள் 40 பேர் பற்றி வெளியிட்ட நூலுமாகும் இவைகள் இரண்டும் எதிர்காலச் சந்ததியினர்க்கான முக்கியமான வரலாற்று ஆவணங்களாகும். இவற்றை வெளியிடுவதில் தோழர் நீர்வையின் பங்பளிப்பு மகத்தானது. அவர் இல்லாமல் இந்த சாதனைகள் ஒருபோதும் நிறைவேறியிருக்காது.
இந்தக் காலகட்டத்தில் தோழர் நீர்வை பொன்னையன் ஏளாரமான சிறுகதைத் தொகுதிகளையும், கட்டுரைத் தொகுதிகளையும், மொழிபெயர்ப்பு நூல்களையும், நாட்டார் வழக்கியல் பற்றிய நூல்களையும் எழுதி வெளியிட்டார். மரணத்தை எதிர்நோக்கி இருந்த வேளையிலும் கூட தனது புதிய சிறுகதைத் தொகுதி ஒன்றை வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.
இவை தவிர, தனது வாழ்க்கையில் ஏற்பட்ட அரசியல் – இலக்கிய – தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை முன்வைத்து “நினைவலைகள்” என்ற நூல் ஒன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். அந்த நூல் அவரது வாழ்க்கையை பன்முக ரீதியல் அறிந்து கொள்வதற்கான ஒரு வெட்டுமுகம் எனலாம்.
தான் எழுதுவதுடன் நிற்காது, மற்றவர்களையும் எழுதத் தூண்டுவது நீர்வையின் இன்னொரு சிறப்பாகும். உதாரணமாக, நான் 1965 முதல் (16 வயதில் முதல் சிறுகதை ‘ஈழநாடு’ வாரமலரில் வெளியானது)) சில சிறுகதைகளை எழுதி, அவை சில இதழ்களில் வெளிவந்த போதிலும், ஒரு தொகுப்பாக இதுவரை வெளிவரவில்லை. எனவே எனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட வேண்டும் என என்னுடன் உரையாடும் நேரங்களில் வலியுறுத்தி வந்தார். அத்துடன், 1995இல் புலிகளால் நிகழ்த்தப்பட்ட வலிகாம மக்களின் இடப்பெயர்வின் போது எனக்கு ஏற்பட்ட சொந்த அனுபவங்களை வைத்து நான் எழுதி; அச்சேறாமல் இருக்கும் எனது நாவல் ஒன்றையும் வெளியிடும் அககறையில் இருந்தார். அவரது வலியுறுத்தல் காரணமாகவே நான் தொகுத்த தோழர் மு.கார்த்திகேசன் பற்றிய, “கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்: நகைச்சுவை – ஆளுமை –தீர்க்கதரிசனம்” என்ற நூல் அச்சுருப் பெற்றது எனலாம். அதை அவர் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தால் வெளியிட்டதுடன், தானே அதற்கு பதிப்புரையும் எழுதினார்.
இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் நடத்திய அநேகமான கருத்தரங்குகளும், நூல் வெளியீடுகளும், மதிப்புக்குரிய அமரர் ஹான்டி பேரின்பநாயகம் அவர்களின் புதல்வியான திருமதி செல்வி திருச்சந்திரனை பணிப்பாளராகக் கொண்டியங்கும் கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள ‘பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன’ மண்டபத்திலேயே நடந்து வநதுள்ளன. அதைச் செயல்படுத்துவதற்கு நீர்வையினதும் செல்வியினதும் பங்களிப்புகள் மறக்க முடியாதவை.
தோழர் நீர்வை பொன்னையன் இன்று எம்முடன் இல்லை. அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை இப்போதைக்கு யாருமே நிரப்ப முடியாது. பௌதீக ரீதியாக அவரது உடல் எம்மையும் இந்த உலகையும் விட்டு மறைந்துவிட்டது. ஆனால் அவரது வாழ்வும் பணியும் பற்றிய நினைவுகள் இந்த உலகைவிட்டு ஒருபோதும் மறையாது. அதேபோல அவருடன் எனக்கிருந்த 55 வருட உறவின் நினைவுகளும் எனது மனதைவிட்டு ஒருபோதும் நீங்காது. இந்த உறவின் ஒரு சிறு பகுதியையே இங்கு பதிவு செய்துள்ளேன்.
தோழர் நீர்வை பொன்னையனின் பெயரும் நினைவும் என்றும் நீடித்திருக்கட்டும்!
அவருக்கு எனது புரட்சிகர அஞ்சலிகள்!!
சண்முகம் சுப்பிரமணியம்
மார்ச் 26, 2020