கிழக்கு ஸ்லோவாக்கியாவின் கார்பதியன் மலைப்பகுதி ஒன்றில் பிறந்த தோழர் லூக்காஸ் 1938 ஆம் ஆண்டு தமது 12 ஆவது வயதில் கனடாவுக்கு குடிபெயர்ந்தார். இளம் வயதிலேயே சோசலிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அவர், கனடிய கம்யூனிஸ்ட் கட்சியுடனும், சோவியத் நட்புறவு அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அவருக்கு உறுதுணையாக அவரது துணைவியார் தோழியர் ஹெலன் அவர்களும் கரம் கோர்த்தார்.
தோழர் லூக்காஸ் ஒரு மிகச் சிறந்த ஓவியரும், கலைத்துவமிக்க பக்க வடிவமைப்பாளருமாவார். அவர் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் கலை சம்பந்தமான முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
சோவியத் நட்புறவுக்கான பல சர்வதேச மாநாடுகளை கனடாவில் நடத்திய அவர் வருடந்தோறும் தவறாமல் சோவியத் புரட்சி தினத்தையும், பாசிசத்தின் மீதான வெற்றித் தினத்தையும் ஒழுங்கு செய்து வந்துள்ளார். பல தடவைகள் சோவியத் யூனியன், செக்கோஸ்சிலோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். உலகம் முழுவதும் முற்போக்காளர்களுடன் எப்பொழுதும் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
கனடாவில் வாழும் இலங்கையர்கள் சிலரும் அவர் தலைமையிலான சோவியத் நட்புறவுச் சங்கத்தின் நிகழ்வுகளில் பங்குபற்றி வந்துள்ளனர். அவரது 90 ஆவது பிறந்த தினத்தின் போது ‘இலங்கை இடதுசாரிகள் கூட்டமைப்பு (கனடா)’ சார்பாக தோழர் லூக்காசை வாழ்த்தி பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து, வாழ்த்துப் பத்திரம் வழங்கி அவரைக் கௌரவித்தது
தோழர் லூக்காஸ் தமது அன்பு மனைவியையும், இரு பிள்ளைகளையும், சோவியத் நட்புறவுச் சங்கத்துக்கான மிகப் பெரிய சொந்தக் கட்டிடத்தையும் சொத்துக்களாக விட்டுச் சென்றுள்ளார்.
தமது வாழ் முழுவதையும் சோசலிச இலட்சியத்துக்காகவும், சோவியத் நட்புறவுக்காகவும் அர்ப்பணித்த ஒரு மாபெரும் தோழருக்கு எமது வணக்கத்தையும், புரட்சிகர அஞ்சலியையும் செலுத்தி நிற்கின்றோம்.