தோழர் றொபேட் (த.சுபத்திரன்) 67 ஆவது பிறந்த தினம்

சாவகச்சேரி, நுணாவில் என்னும் இடத்தில் 24.12.1957 இல் பிறந்த தோழர் றொபேட், தனது 24 வது வயதில் ஈபிஆர்எல்எவ் இன் மாணவர் அமைப்பான ஈழ மாணவர் பொது மன்றத்தில் இணைந்து 14.06.2003 இல் உயிரிழக்கும் வரை 32 ஆண்டுகள் பொதுவாழ்வில் ஈடுபட்டிருந்தார்.
தமிழ் பேசும் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்கான போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட தோழர் றொபேட், எமது போராட்டத்தில் உருவெடுத்த ஜனநாயக விரோத போக்குகள், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் தான் சார்;ந்த கட்சிக்குள் உட்கட்சி ஜனநாயகத்தை நிலைநாட்டவும் திடமாக போராடியவர்.
பிற்காலத்தில் கட்சி வேலைத்திட்டங்களில் தோழர் றொபேட் ஆற்றிய பங்கும், அவரது ஆற்றலும் அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால், ஆரம்பகாலத்தில் ஈழ மாணவர் பொது மன்றத்தின் உறுப்பினராக அவர் மேற்கொண்ட பணிகளை தோழர்களே அறிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து மக்களை அணிதிரட்டும் நோக்கில் திட்டமிடப்பட்ட தொடர் பாதயாத்திரைக்கான செலவுகளுக்காக வீடு, வீடாக சென்று நிதி சேகரிக்கப்பட்ட போது வடமராட்சியில் நிதி சேகரிப்பில் ஈடுபட்ட குழுவுக்கு தலைமை தாங்கி நிதி சேகரிப்பில் ஈடுபட்டார்.
கந்தர் மடத்தில் இராணுவத்தினாரால் குடிசைகள் எரிக்கப்பட்ட சமயத்தில் அவற்றை மீண்டும் கட்டிக் கொடுப்பதற்கு தேவையான பொருட்களை தென்மராட்சியில் சேகரித்து கொடுக்கும் பணிக்கு பொறுப்பாக இருந்து செயற்பட்டார்.
1982 இல் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பின் போது வடபகுதி மக்களிடம் உலருணவு பொருட்கள், ஆடைகள், என்பவற்றை சேகரித்து எடுத்துச் சென்ற குழுவில் தோழர் றொபேட் ஒருவராயிருந்தார். இப் பொருட்கள் கிழக்கு மாகாணத்தின் வாகரை வாளைச்சேனை போன்ற இடங்களுக்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
குருநகரில் இரு சமூகங்களிடையேயும், புத்தூரில் இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்களிடையேயும் மோதல் ஏற்பட்ட சமயத்தில் மக்கள் விடுதலைப் படையின் இதர அங்கத்தவர்களுடன் இணைந்து சம்பந்தப்பட்ட இரு இடங்களிலும் இரு தரப்பினருடனும் கலந்துரையாடி இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் முன்நின்று செயற்பட்டார்.
அவரிடம் காணப்பட்ட அரசியல் தெளிவு, பற்றுறுதி, மனோதிடம், செயற்திறன், மக்கள் நலனை முன்னிறுத்தும் அணுகுமுறை என்பன அவர் இணைந்துகொண்ட குறுகிய காலத்திலேயே ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் யாழ் மாவட்ட இராணுவ பிரிவிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். தோழர் குமார், தோழர் இந்திரன், தோழர் சுதன் தோழர் கஸ்ரோ ஆகியோர் அரசியல் இராணுவ நடவடிக்கைகளில் அவருக்கு பக்கபலமாகவும், உறுதுணையாகவும் விளங்கினர். தோழர் குமார் 18.03.1985 இராணுவத்தினரால் சுடப்பட்டார். தோழர் கஸ்ரோ 01.06.1987 இல் வாகன விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்தார். தோழர் இந்திரன் 15.04.2011 இலும் தோழர் சுதன் 25.07.2013 இலும் இலும் இயற்கை மரணத்தை தளுவிக்கொண்டனர்.
1985 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி தோழர் ரஞ்சன் என அழைக்கப்படும் தோழர் றொபேட், மக்கள் விடுதலைப் படையின் யாழ் மாவட்ட கமிட்டியின் உறுப்பினர்களில் ஒருவரான குருநகரை சேர்ந்த தோழர் குமாருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பதுங்கியிருந்த இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார். அவ்வேளை இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் தோழர் குமார் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். தோழர் றொபேட் பலத்த சித்திரவதைகளுக்குப் பின்னர் வெலிக்கடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக பொதுமன்னிப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 5000 தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவராக தோழர் றொபேட் அவர்களும் விடுதலையாகும் வாய்ப்பை பெற்றார்.
அவர். சிறைக்கு உள்ளேயும் பல்வேறு இயக்கங்களையும் சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகளின் போராட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன் அனைவரோடும் நட்பை பேணிவந்தார். கைதிகளாயிருந்த அனைவரதும் நலன்களை பாதுகாப்பதற்கு பல்வேறு இயக்கங்களையும் சேர்ந்தவர்ளோடும் ஒருமித்து செயற்பட்ட தோழர் றொபேட் சிறை கைதிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி இடம்பெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் தொடர்ச்சியாக நீண்ட நாள்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதையும் அவரோடு போராட்டத்திலும் அரசியல் வாழ்விலும் மட்டுமல்லாது சிறைவாழ்விலும் ஒத்த கருத்தோடு இணைபிரியாது பயணித்த சுகுத் தோழர் கூறக்கேட்டிருக்கிறேன்.
சிறைக்கு வெளியே இயக்கங்களின் செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டு, சிறைவாசம், சித்திரவதை என நிலமைகள் மோசமடைந்திருந்த போது சிறையின் உள்ளே இதன் பிரதிபலிப்புக்கள் மேலெழுந்த வேளைகளில் தமிழ் அரசியல் கைதிகள் மத்தியில் அசம்பாவிதங்கள் நிகழாமல், அமைதியையும், நல்லுறவையும் பேணுவதில் முன்நின்று செயற்பட்டவர்களில் தோழர் றொபேட்டின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். இவற்றின் காரணமாக சக கைதிகளாயிருந்த அனைவரும் அவர்மீது கொண்டிருந்த அன்பையும் மதிப்பையும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் காண முடிந்தது.
சிறை மீண்ட தோழர் றொபேட் தொடர்ந்து இயக்கத்தோடு இணைந்து செயற்படுவதையே ஒரே குறிக்கோளாக கொண்டிருந்தார். ஆனால், ஈபிஆர்எல்எவ் இயக்கத்தில் தோன்றியிருந்த நாபா, தேவா என்ற இரு அணிகளை ஒன்றிணைக்க வேண்டும் என முயற்சித்தார். ஆனால் அவரது முயற்சிக்கு அப்போது இரு தரப்பினரும் இணங்கவில்லை.
1989 ஜனவரியில் அவர் மீண்டும், கட்சியாக பதிவுசெய்யப்பட்ட ஈபிஆர்எல்எவ் இன் வேலைகளில் ஈடுபட முடிவு செய்து சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தார். ஆயினும் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையை கட்சி சார்பில் பிரதிநிதித்துவம் செய்தவர்களில் ஒருவராக அல்லது கட்சியை தலைமை தாங்கி வழிநடத்திய பொறுப்பு வாய்ந்தவர்களில் ஒருவராக தோழர் றொபேட் இருக்கவில்லை. ஆனால், அந்த மாகாணசபையை பாதுகாப்பதற்கும், அந்த மாகாணசபைக்கு எதிராக, கட்சிக்கு எதிராக அரசியல், இராணுவ ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை முறியடிப்பதற்கும் அவர் முன்நின்று உழைத்தார்.
இந்த காலப்பகுதியில், ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தரான அவருடைய தந்தையார் தம்பிராசா 1989 இறுதியில் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டார். அவரது தாயார் இரத்தினம்மா 1990 இல் கைது செய்யப்பட்டு ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்கள், ஆதரவாளர்களது குடும்பங்களை சேர்ந்தவர்களுடன் இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்டார். இவ்வாறு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்த போதும் தோழர் றொபேட் தனது அரசியல் பயணத்தை உறுதியாகத் தொடர்ந்தார்.
1990 இல் திருகோணமலையிலிருந்து தோழர்களுடன் கப்பல் மூலம் ஒரிசாவிற்கு சென்ற தோழர் றொபேட் அங்கிருந்து தமிழகம் வந்து தமிழகத்தின் திருச்சி, மண்டபம், வாழவந்தான் கோட்டை, புழல் போன்ற இடங்களில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த தோழர்களின் நலன்களை பேணுவதிலும், அவர்களது தேவைகளை கவனிப்பதிலும், அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் கடுமையாக உழைத்தார். தோழர்களின் மருத்துவ தேவைகள், தோழர்களின் பிள்ளைகளின் கல்வி என்பவற்றிற்கு முன்னுரிமையளித்து அயராது செயற்பட்டார்.
1994 இல் மீண்டும் இலங்கைக்கு திரும்பிய தோழர் றோபேட் 1994 இல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஈபிஆர்எல்எவ் சார்பில் போட்டியிட்ட தோழர்களுக்காக தீவுப்பகுதியில் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் பிரச்சார பணிகளை தோழர்களுக்கு பொறுப்பான நின்று மேற்கொண்டார்.
1996 இல் வடபகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து வன்னிக்கு சென்றிருந்த சமயம் கொழும்பில் உள்ள வர்த்தக நிலையங்களில் உணவு பொருட்கள், பால்மா, ஆடைகள் போன்றவற்றை சேகரித்து வன்னிக்கு அனுப்பி வைப்பதற்கும் தோழர்களுடன் சேர்ந்து. தலைமை தாங்கி செயற்பட்டார்.
1998 இல் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போட்டியிட்டு 26 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். யாழ் மாநகர சபைக்கு போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட இரண்டு உறுப்பினர்களில் ஒருவரது இடத்திற்கு தோழர் றொபேட் நியமிக்கப்பட்டார். யாழ் மாநகர சபையின் இரண்டு மேயர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும் அந்த மாநகர சபையின் பதவிக்காலம் முடியும் வரை மக்கள் பணியில் ஈடுபட்டார். ஆளுங்கட்சி 11 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த அதேவேளை 14 உறுப்பினர்களை கொண்டிருந்த எதிர்க்கட்சிகளை சேர்ந்த அனைவருடனும் கூட்டாக மாநகரசபை மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற ஒத்துழைப்பை நல்கி அனைவரதும் நன்மதிப்பை தோழர் றொபேட் பெற்றிருந்தார்.
2000 ஆம் ஆண்டு தென்மராட்சியில் இடம்பெற்ற மோதல்களை அடுத்து குடாநாட்டின் பல்வேறு இடங்களுக்கும் இடம்பெயர்ந்திருந்த தென்மராட்சி மக்கள் மீளக் குடியமர்வதற்கு அரசியல் காரணங்களுக்காக முட்டுக்கட்டை போடப்பட்டு வந்தது. சுமுகநிலை திரும்பவில்லை என காட்டுவதற்கும், யாழ் குடாநாடு திறந்தவெளிச் சிறைச்சாலையாக உள்ளதாக நிறுவுவதற்கும் பிரயத்தனம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் தோழர் றொபேட் தோழர்களை ஈடுபடுத்தி தென்மராட்சியில் புதர் மண்டியிருந்த பாடசாலைகள் கோவில்களை சிரமதானம் மூலம் துப்பரவு செய்து மக்கள் மீளக்குடியமர்வதற்கு நம்பிக்கை ஊட்டும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார். இதன் தொடர்ச்சியாக சாவகச்சேரி பொதுச்சந்தை, வைத்தியசாலை, றிபேக் கல்லூரி, மகளிர் கல்லூரி போன்ற இடங்களில் பெருமளவு மக்களும் பங்கெடுத்துக் கொண்டனர்.
எண்பதுகளில் யாழ் மாவட்டத்தின் இராணுவ பிரிவு தலைவராயிருந்தபோதும் 90 களில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படு;த்தும் மத்திய குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தபோதும் தோழர் றொபேட் பிராந்தியத்தின் தேவைகள், பிரச்சினைகளை மட்டும் முன்நிறுத்தாமல், பிராந்திய வாதத்திற்கு இடமளிக்காமல் முழு இயக்கதினதும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் அக்கறை காட்டினார். சிறந்த முன் உதாரணமாக விளங்கினார். இதனால் வடக்கு கிழக்கு முழுவதும் உள்ள அனைத்து தோழர்களதும் அன்பையும் மதிப்பையும் பெற்றுக்கொண்டார். கட்சியை மீள் கட்டமைப்பதற்கும் வழி ஏற்படுத்தினார்.
கட்சிக்குள் கருத்துப் பரிமாற்றத்தையும், கூட்டுச் செயற்பாட்டையும் அவர் எப்போதும் மதித்தார். தோழர்கள் முன்வைக்கும் கருத்துக்களில், பேசுகின்ற விடயங்களிலிருந்து மாத்திரமல்லாது அவர்களது செயல்களை கொண்டே அவர் தோழர்களை மதிப்பிட்டார். ஆனால், வாயால் வடை சுடும் வாய் வீச்சு காரர்களின் விடயத்தில் அவர் எச்சரிக்கையாயிருந்தார். ஒரு ஸ்தாபனத்தின் வேலைகள் திறம்பட முன்னெடுக்கப்படுவதற்கு பொருத்தமானவர்களிடம் வேலைகளை வழங்குவதும் வழங்கப்பட்ட வேலைகளை கண்காணிக்கப்படுவதும் பிரதான அம்சங்கள் என்பதை புத்தகங்கள் வாயிலாக அறிந்து கொள்வதற்கு முன்னதாகவே தோழர் றொபேட்டின் நடவடிக்கைகள் மூலம் கற்றுக்கொள்ள முடிந்தது.
1985 இல் தோழர் றொபேட்டின் கைதும், 2003 இல் அவரது படுகொலையும் எமது இயக்கதிற்கு, கட்சிக்கு இட்டு நிரப்பமுடியாத இழப்பும் இயக்கத்தின் கட்சியின் வளர்ச்சிப் போக்கில் பெரும் மாறுதலை ஏற்படுத்திய சம்பவங்களுமாகும். இத்தகைய ஒரு போராளியை இழக்க நேர்ந்தது ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் தமிழர் போராட்டத்திற்கும் பாரிய இழப்பாகும்.
அவரது இந்த பிறந்த நாளில் அவரது தன்னலமற்ற வாழ்வையும், பணியையும் நினைவு கூருகின்ற அதேவேளை, முன்மாதிரியாகக் கொள்ளத்தக்க அவரது எண்ணங்களும், கருத்துக்களும், செயல்களும் வலுப்பெறவும், அவரது இலட்சியங்கள் வெற்றிபெறவும் பாடுபடுவதே அவரது பிறந்த நாள் கொண்டாடப்படுவதை அர்த்தமுள்ளதாக்கும்.