தோழர் றொபேட் வரலாற்று இயக்கவியலில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் .1990களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சி அவரிடம் பல கேள்விகளை எழுப்பியிருந்தது . தேடலாக இருந்தது. முக்கியமாக வரலாற்று இயக்கவியல் பற்றியது.
வரலாற்று சக்கரங்கள் முன்னோக்கி என்றால் ஏன் வீழ்ச்சி என்ற எளிமையான கேள்வி!
இன்று அவர் படுகொலை செய்யப்பட்டு 21 ஆண்டுகளின பின் சோவியத் யூனியனை மாத்திரமல்லாமல் உலகளாவிய அளவில் பார்த்தால்
தென்னமெரிக்காவிலிருந்து இலங்கை வரை உருவாகியிருக்கும் பெருவாரியான சமூக சாதக அரசுகள்
பிரேசில் ரஸ்சியா இந்தியா சீனா தென்னாபிரிக்கா என உருவாகி விரிவடைந்து வரும் புதிய உலக கூட்டணிகள்
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தென்னாபிரிக்காவில் இருந்து உலகளாவிய அளவில் பெருகி வரும் கொந்தளிப்பு தீவிரமடையும் வடக்கு தெற்கு முரண்பாடு
நெத்தனயாகு மீதான சர்வதேச நீதிமன்றத்தின் பிடி விறாந்து
ஐநா சபையில் ஏறத்தாள சகல நாடுகளும் அமெரிக்காவையும் அதன் 5,6 பொருட்படுத்த முடியாத கூட்டாளிகளை தவிர பாலஸ்தீன சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு
உக்ரைன் யுத்தம் தொடர்பாக ஐரோப்பாவில் ஏற்பட்டு வரும் முரண்பாடுகள்
இலங்கையிலும் உலகத்தில் ஏராளமான நாடுகளிலும் மாற்றத்திற்கான கதவுகளை திறக்கப்பட்டுள்ளன
வடக்கு கிழக்கு மலையகம் தெற்கு முற்போக்கு முகாமின் அனுசரணையுடனான தேசிய சமூகவிடுதலை பால் சமத்துவம் கருதிய ஈழமக்கள் மரபும் பொதுவுடைமை இயக்க மரபும் தொழிற்சங்க வெகுஜன செயற்பாடுகளும் அரச பயங்கரவாதத்தால் மாத்திரமல்ல குறிப்பாக புலிப் பாசிசத்தாலும் நிர்மூலம் செய்யப்பட்ட படியால் வரலாற்று சக்கரங்களை பின்னோக்கி இழுத்ததால் தோழர் றொபேட் உட்பட தோழர்கள் போராளிகள் தலைவர்கள் உடல்மீதமின்ற அழிக்கப்பட்டதால் “பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது போல ” யுத்தம் முடிவடைந்த பின் பாரிய தலைமைத்துவ பாலைவனம் ஒன்று மிஞ்சியது.
இந்த நிலை எமது போராட்டத்தின் இழந்த சந்தர்ப்பங்களாகவும் வெற்றிடமாகவும் ஆயின.
ஆனால்தெற்கின் உந்து விசையில் நாடு தழுவிய அளவில் ஏற்ற இறக்கங்களூடாக வரலாற்று சக்கரங்கள் முன்னோக்கி இயங்கின..
2022 அறகலயா எழுச்சி 30 ஆண்டுகள் போர் சாதிக்காததை சாதித்தது.
லட்சக்கணக்கான மக்களின் வெகு ஜன எழுச்சியும் அந்த அளவு ரீதியான மாற்றம் 2024 இல் பாரியஆட்சி மாற்றம் என்ற குணாம்ச ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தியது
அது நாடளாவியதாகவும் இருந்தது .
தோழர் ரொபேர்ட் யுத்த நிறுத்தம் சமாதானம் என்று சொல்லப்பட்ட காலத்தில் (2002) தென்னிலங்கையிலிருந்து வடக்கிற்கு வந்த தோழர்களுடனான உறவை பலப்படுத்தினார். மாத்தறை உட்பட தெற்கிலிருந்து வந்தவர்கள் யாழ் காரியாலயத்தில் தங்கி சென்றார்கள். ஆஸ்பத்திரிவீதி முதலாம் குறுக்கு சந்தி கடை முற்போக்காளர்கள் கூடுமிடமாக இருந்தது. இவ்வாறான உறவு அவருக்கு மகிழ்ச்சி பிரவாகத்தை ஏற்படுத்தியது.
சிறையில் தோழர் றொபேர்ட்டுடன் எம்முடன் சகாக்களாக இருந்த பல் வேறியக்க தோழர்கள் பலரும் இன்றைய இலங்கையின் தீவிர சமூக அரசியல் மாற்றத்திற்கான செயற்பாட்டில் தீவிர கரிசனையுடன் செயற்பாட்டாளர்கள் நாம் ஒரே விதமாக சிந்தித்திருக்கிறோம். வரலாறு எங்களை அவ்வாறு வழி நடத்தியிருக்கிறது.
நிலப்பிரபுத்துவ உறவு முறையையும் தனிமனித வழிபாட்டையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
“குடி உயரக் கோன் உயர்வான் “என்ற நிலப்பிரபுத்துவ வாக்கியத்தை யாழ் மாநரசபைக்கு மகுட வாசகமாக்க சிலர் பரிந்துரைத்த போது கைலாசபதி போன்ற ஆளுமைகள் வாழ்ந்த மண்ணில் இது வேண்டாமே என்று கண்ணியமாக வாதிட்டவர்.
இன்று அவரது கனவுகள் மெய்ப்பட்டு வரும் காலம்
நான் பிறந்தது பாலன் பிறந்த நேரத்திலாக்கும் என்று நகைச்சுவை உணர்வுடன் பெருமிதம் கொள்வார்
இன்று அவரது 67வது அகவை நாள்