(Gopikrishna Kanagalingam)
தமிழில், “கீரைக் கடைக்கும் எதிர்க் கடை வேண்டும்” என்றொரு சொற்றொடர் உண்டு. இது, யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்களைப் பொறுத்தவரை, அக்கூட்டமைப்புக்குச் சரியாகப் பொருந்துகிறது. இவர்களில் ஒரு பகுதியினரால் தான், புதிய எதிர்க் கடையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.புதிதாக வரப்போகும் கடை தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னமும் வெளிவராத போதிலும், புதிய கடைக்கான இணை உரிமையாளர்கள் இருவரும், மிகவும் ஆர்வத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் தான், புதிய கடை பற்றி, எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கீரைக் கடை மீது, ஏராளமான விமர்சனங்கள் இருக்கின்றன. அக்கடைக்கு எதிர்க் கடையொன்று வர வேண்டுமென்பது, பலரது எதிர்பார்ப்பு மாத்திரமன்றி, விருப்பமும்கூட. ஆனால், இப்போது வரவுள்ளதாகக் கூறப்படும் கீரைக் கடை, கீரையில் நஞ்சைத் தடவிக் கொடுத்துவிடுமோ என்பது தான், இருக்கின்ற அச்சமாக இருக்கிறது. அதனால் தான், இது தொடர்பாக ஆராய வேண்டிய தேவையிருக்கிறது.
விடுதலைப் புலிகளின் பின்புலத்துடன் 2001ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள், அவ்வமைப்பின் நிழலில் காணப்பட்ட நிலையில், புலிகளின் அழிவுக்குப் பின்னர் முக்கியம் பெற ஆரம்பித்தன. இந்த முக்கியத்தோடு சேர்ந்து தான், உள்வீட்டுப் பிரச்சினைகளும் ஆரம்பித்தன.
இப்பிரச்சினைகள் ஒருபக்கமிருக்க, வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் (கிட்டத்தட்ட) ஏகபிரதிநிதிகள் போன்று மாறியிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது பணியைப் போதுமானளவில் செய்வதில்லை என்பது, பொதுவான குற்றச்சாட்டாக இருக்கிறது. ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ இருந்தவரைக்கும், அவரை எதிர்ப்பதை மாத்திரம், தமிழ் மக்கள் ஓரளவு ஏற்றுக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான அரசாங்கம் உருவான பின்னர் தான், கூட்டமைப்பு மீதான அழுத்தமும் அதிகரித்தது.
அந்த அழுத்தம் காரணமாக, 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது உணரப்பட்டிருந்தது. கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, குறிப்பிடத்தக்களவு ஆசனங்களைக் கைப்பற்றிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் அளவுக்கு, கூட்டமைப்புக்கு எதிர்ப்புக் காணப்பட்டது. ஆனால் அதையும் தாண்டி, 16 ஆசனங்களை வென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகவும் மாறியது.
ஆனால், எதிர்க்கட்சியாகப் போதியவு பணிகளை ஆற்றுகின்றதில்லை என்பதுவும், தற்போதைய அரசாங்கம் மீது போதிய அழுத்தங்களை வழங்குகின்றதில்லை என்பதும், அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ள குற்றச்சாட்டாக இருக்கும். இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று, அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இக்கூட்டமைப்புக் காணப்படுகிறது என்று குற்றஞ்சாட்டுகின்றனர். இக்குற்றச்சாட்டு, கூட்டமைப்புக்குள்ளிருந்தும் வருகிறது என்பது குறிப்பிட வேண்டியதாக இருக்கிறது.
இந்த நிலையில் தான், கூட்டமைப்புக்கு மாற்றான ஒரு கூட்டணி அல்லது அமைப்பு உருவாக வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்ட போது, இவ்வாறான ஓர் அமைப்பாக, அப்பேரவை இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது.
ஆனாலும் கூட மறுபக்கமாக, உண்மையிலேயே அப்பேரவையின் நோக்கங்கள் என்னவென்பதைப் பற்றிய கேள்விகளும் இருந்திருந்தன என்பது உண்மை தான். குறிப்பாக, மக்களிடத்தில் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்குக் காணப்படும் நற்பெயரைப் பயன்படுத்தி, ஏனையோர் அரசியல் இலாபங்களைப் பெற முனைகின்றனரா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் தான், தமிழ் மக்கள் பேரவையின் அனுசரணையுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான கூட்டணியொன்றை உருவாக்கப் போவதாக, சுரேஷ் பிரேமச்சந்திரனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அறிவித்திருக்கின்றனர். இதற்கு, முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இன்னுஞ்சிலரும், இன்னமும் விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கவில்லை என்பது, முதலமைச்சரின் முதுகில் ஏறிச் சவாரி செய்வதற்கு இவர்கள் முயல்கின்றனர் என்ற முன்னைய சந்தேகத்தை, இன்னும் அதிகரித்திருக்கிறது. இதன் பின்னணியில் தான், இக்கூட்டணியின் நோக்கங்கள் பற்றியும் பின்னணி பற்றியும் ஆராய வேண்டிய தேவையிருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான எதிர்ப்பென்பது, உண்மையையும் தர்க்கரீதியான வாதங்களையும் அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். வெறுமனே உணர்ச்சிவசப்படுத்தும் கூச்சல்களையும் உசுப்பேற்றல்களையும் அடிப்படையாகக் கொண்டு அமையக்கூடாது என்பது முக்கியமானது. ஏனென்றால், ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசியல் ரீதியான தீர்வுக்கான முக்கியமான தருணத்தில், இந்நாடு இருக்கிறது. இதில், உணர்ச்சிவசப்பட்டு, உசுப்பேற்றப்பட்டு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும், தமிழர் தரப்பைப் பாதிக்குமென்பது வெளிப்படையானது.
புதிய கூட்டணியைக் கொண்டுவரவிருப்போர், கூட்டமைப்பு மீது முன்வைக்கும் விமர்சனங்கள், எந்தளவுக்குத் தர்க்க ரீதியாக இருக்கின்றன என்பதை ஆராய்வது அவசியமானது. “வடக்கு – கிழக்கு இணைப்பையும், சமஷ்டியையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கைவிட்டுவிட்டது” என, சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கிறார். கூட்டமைப்பு/தமிழரசுக் கட்சி மீதான அவரது எதிர்ப்புக்கான முக்கியமான காரணமாக இது இருக்கிறது.
ஆனால், அண்மைக்கால அரசியலை உன்னிப்பாக அவதானித்து வருபவர்களுக்கு, அண்மைக்கால அத்தனை நாடாளுமன்ற உரைகளிலும், இவ்விரு விடயங்கள் தொடர்பான தமது நிலைப்பாட்டை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தெளிவாகவே வெளிப்படுத்தியிருக்கிறது என்பது தெரிந்திருக்கும்.
இதில் முக்கியமான விடயமாக, அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழு சமர்ப்பித்த இடைக்கால வரைவு அறிக்கையில், மாகாணங்களை இணைப்பதற்குரிய ஏற்பாடுகள் பற்றியும் ஆராயப்பட்டிருக்கிறது. மாகாணங்களை இணைத்தல், இணைப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்துதல், இணைக்கக்கூடாது என, அதற்கான தெரிவுகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. இவை, தொடர்ந்து ஆராயப்படவிருக்கின்றன.
அந்த அறிக்கையில், “ஒருமித்த நாடு” என்ற பதம் பயன்படுத்தப்பட்டாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னிணைப்பில், சமஷ்டி என்பது தமது தெரிவெனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எம்.ஏ. சுமந்திரனின் உரையில், சமஷ்டி பற்றி அவர், தெளிவாக உரையாற்றியிருந்தார். பின்னைய சந்தர்ப்பங்களிலும், அது வலியுறுத்தப்பட்டிருந்தது. இவற்றைத் தாண்டி, அரசாங்கத்துக்கு இன்னமும் வெளிப்புற அழுத்தங்களை வழங்குவதைத் தவிர, வேறு எதைச் செய்ய வேண்டுமென்பது, இவர்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களின் விருப்புகளை அப்படியே புறந்தள்ளிவிட்டு, வடக்கு – கிழக்கு இணையத் தான் வேண்டும், இணையாவிட்டால் ஆயுதமேந்துவோம் என்று, போர்க்கொடி எழுப்பச் சொல்கிறார்களா?
வட மாகாணத்தில், கிட்டத்தட்ட 94 சதவீதமானவர்கள் தமிழர்களாக இருக்கிறார்கள். ஆகவே, அம்மாகாணத்தின் தலைவிதியில், தமிழர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதில் தவறில்லை.
ஆனால், வடக்கும் கிழக்கும் இணையும் போது, தமிழர்களின் சதவீதம் 61.5 சதவீதமாகவும், முஸ்லிம்களின் சதவீதம் 23 சதவீதமாகவும், சிங்களவர்களின் சதவீதம் 15 சதவீதமாகவும் இருக்கிறது. ஏனைய இனக் குழுமங்கள், மிகுதி 0.5 சதவீதமாக இருக்கின்றன. ஆக, 61.5 சதவீதமானவர்களின் விருப்புக்காக, ஏனைய 38.5 சதவீத மக்களின் விருப்பைப் பற்றிக் கணக்கெடுக்காமல் செயற்படுமாறு கோருவது, எந்தளவுக்கு அயோக்கியத்தனமானது?
வடக்கும் கிழக்கும் இணைவதால், முஸ்லிம்கள் உட்பட அனைத்துத் தரப்பினரதும் உரிமைகள் பாதுகாக்கப்படும், அவர்களுக்கான விசேட அங்கிகாரம் வழங்கப்படுமென இவர்கள் கூறுவார்களாக இருந்தால், அதை அம்மக்களுக்குப் புரிய வைத்து, அவர்களின் சம்மதத்தைப் பெறுவது அவசியமானதல்லவா?
1950களிலும் பின்னர் அதைத் தொடர்ந்து வந்த பல ஆண்டுகளிலும், சுமார் 70 சதவீதமாக இருந்த சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தலைமைகள், ஏனைய இனங்களைப் புறக்கணித்துச் செயற்பட்டமையால் வந்த பாதிப்புகளை, இந்நாடு ஏற்கெனவே சந்தித்திருக்கிறது. எனவே, புரிதலுடன் செயற்பட வேண்டியது அவசியமானது என்பது, மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டிய ஒன்று கிடையாது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை, இந்த இடைக்கால அறிக்கையில், இன்னமும் முன்னேற்றகரமான விடயங்கள் வந்திருக்க முடியும். ஆனால், யதார்த்தமென்ற ஒன்றும் இருக்கிறதே? “ஒருமித்த நாடு” என்பதிலும் “ஏனைய மதங்களுக்கும் சமவுரிமை” என்பதிலுமே, இவ்வறிக்கை சிக்கியிருக்கிறதே? ஆகவே, தமிழ் மக்களின் பிரச்சினையை, இன்னமும் சிங்கள மக்களுக்கும் அவர்களின் தலைமைகளுக்கும் கொண்டு செல்வதில், தமிழ் மக்கள் பின்தங்கியிருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செய்வது பிழையென்றால், சுரேஷ் பிரேமச்சந்திரனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் – ஏன் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கூட – எவ்வாறு இவ்விடயங்களை வித்தியாசமாக அணுகுவார்கள் எனவும், அதனால் எப்படி, இவர்கள் கூறுகின்ற பெறுபேறுகளை அடைய முடியுமென்றும் விளங்கப்படுத்த வேண்டும்.
வெறுமனே, “கூட்டமைப்புப் பிழை”, “சுமந்திரன் ஒழிக” என்று சொல்வதால் மாத்திரம், தமிழ் மக்களின் ஆதரவையும் வாக்குகளையும் பெறுவதை, தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பது வெளிப்படையானது. அவ்வாறு தங்களை அவர்கள் விளங்கப்படுத்தும் வரை, அவர்களது கீரைக் கடை, வெறுமனே போட்டிக் கடையாக இருக்குமே தவிர, தரமான கீரைகளை விற்கும் கடையாக ஏற்றுக் கொள்ளப்படாது என்பதே யதார்த்தம்.