“ஓயாத அலைகள்” நடவடிக்கையில் புலிகளிடம் படபடவென இலங்கை இராணுவத்தின் படைத்தளங்கள் வீழ்ந்ததைப்போல அல்லது 2008, 2009 களில் இலங்கைப் படையினரிடம் புலிகளின் பிரதேசங்களில் கடகடவென வீழ்ச்சியடைந்ததைப்போல யாழ்ப்பாண மாநகர சபை, சாவகச்சேரி, பருத்தித்துறை நகரசபைகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கைகளில் வீழ்ந்து விட்டன.
பெரும் பரப்பரப்பாக எதிர்பார்க்கப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபை, சாவகச்சேரி, பருத்தித்துறை நகரசபைகளின் முதல்வர் தெரிவுகளும் பதவி ஏற்புகளும் மிகச் சிம்பிளாக நடந்து முடிந்து விட்டன.
இந்தப் பத்தியை நீங்கள் வாசிக்கும்போது வல்வெட்டித்துறை, வவுனியா போன்றவற்றையும் கூட்டமைப்புக் கைப்பற்றி விடலாம். இதைப்போல வடக்குக் கிழக்கில் இழுபறி, தளம்பல் நிலைமைகளில் இருக்கும் ஏனைய சபைகளும் சத்தம் சலாரில்லாமல் கூட்டமைப்பின் பிடிக்குள்ளாகி விடும்.
ஒரு பத்தியாளர் குறிப்பிட்டதைப்போல தேர்தலின்போது நெஞ்சிலே அடிவாங்கித் தடுமாறிக் கொண்டிருந்த கூட்டமைப்பு, ஒருவாறு தன்னை நிதானப்படுத்தி நிமிர்ந்து விட்டது. இந்தப் பெரும்பணியைச் செய்தவர் சுமந்திரனே. சுமந்திரனுக்குப் பக்கத்துணையாக இருந்தவர் மாவை சேனாதிராஜா. வாயே திறக்காமல் தன்னுடைய “இளைய தளபதி”யைக் கொண்டு காரியத்தைக் கச்சிதமாகச் சாதித்து விட்டார் சம்மந்தன். இதனால் (தமிழரசுக்) கட்சிக்குள்ளும் கூட்டமைப்பிற்குள்ளும் வெளிப்பரப்பிலும் சுமந்திரனின் இடம் வலுவானதாகி விட்டது. சம்மந்தனும் காலாட்டிக் கொண்டு கோப்பியைக் குடிக்கலாம் என்றானது.
அப்படியென்றால், இது கூட்டமைப்புக்கு (தமிழரசுக் கட்சிக்கு) கிடைத்த வெற்றியா? என்று நீங்கள் கேட்கலாம். அல்லது ஈ.பி.டி.பியோடும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க போன்றவற்றோடும் அங்கங்கே கூட்டு வைத்தும் ஆதரவு கோரியும் அமைத்திருக்கும் ஆட்சியெல்லாம் ஒரு வெற்றியா? எனவும் நீங்கள் கேட்கக்கூடும்.
சந்தேகமேயில்லை, கூட்டமைப்புக்கு இது வெற்றியே. தன்னைச் சூழ்ந்திருந்த நெருக்கடியிலிருந்து சற்று விடுபடுவதற்கான ஒரு அவகாசத்தையும் வாய்ப்பையும் இது கூட்டமைப்புக்குக் கொடுத்துள்ளது. ஆனால், இது நிரந்தர வெற்றியாக அமையுமா என்பதை எதிர்த்தரப்புகள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், எதிர்த்தரப்புகள் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்டவை) எழுந்திருக்கவே முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன.
இதைத் தவிர்த்து, கூட்டமைப்பு எப்படி தன்னுடைய முன்னாள் பகையாளிகளோடு கூட்டு வைத்துக்கொள்ளலாம் என்று கேட்போரும் இப்போதுள்ள “புதிய கூட்டுறவை” கேலிப்படுத்தி விமர்சிப்போரும் கூட்டமைப்பைத் தொடர்ந்து கேள்விக்குட்படுத்தலாம். மதிப்பிறக்கம் செய்ய முற்படலாம்.
ஆனால், அரசியல் என்றால் அப்படித்தான். நிலைமைகளைப் பொருத்தமாகக் கையாள்வது, தக்க முறையில் சாதகமான சூழலை உருவாக்குவது, இராஜதந்திரத்துடன் செயற்படுவது, சாணக்கியமாக நடப்பது, காய்களை நகர்த்துவது, விவேகமாகச் சிந்திப்பது அல்லது தீர்மானம் எடுப்பது, எதிர்பாராமல் எதிர்த்தரப்பைத் தோற்கடிப்பது, வெற்றியைப் பெறுவது என்று ஒரு அரசியல் பாடமுறை உண்டு.
இதனால்தான் அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை. நிரந்தர எதிரியுமில்லை என்பார்கள். அதுவும் தேர்தல் அரசியலில். அதை விட இந்தக் கட்சிகள் ஒன்றும் புரட்சிகரச் சிந்தனையையோ ஒழுங்குமுறையையோ தமது பாரம்பரியமாகக் கொண்டவையுமல்ல. எனவே இவற்றில் அதிகமாக எதையும் எதிர்பார்க்க முடியாது. ஆகவே இந்தப் புதிய கூட்டுறவு பற்றி நாம் அதிகம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. கழுதை கட்டெறும்பாகலாம். கட்டெறும்பு கழுதையாகலாம். எல்லாம் ஒன்றுதான்.
இருந்தாலும் கூட்டமைப்பு இதுவரையில் ஆடிய சதிராட்டத்துக்கு, (கவனிக்கவும் – சதுரங்க ஆட்டம் அல்ல) வெளியே விட்ட பில்டப்புகளுக்கு, மற்றவர்களின் மீது ஈன இரக்கமில்லாமல் துரோகிப்பட்டம் சூட்டியதற்கு, கிடைத்த பரிசே அது ஏனைய தரப்புகளிடம் சரணாகதி அடைந்திருக்கும் இந்த நிலையாகும். இதுவரையிலும் பரம எதிரியாகவே கணித்தும் எதிர்த்தும் தூற்றியும் வந்த ஈ.பி.டி.பியை அனுசரித்து, அதனுடன் இணைந்து ஆட்சியை அமைத்ததும் அதிகாரத்தைப் பகிர்வதும் சாதாரணமான ஒன்றல்ல. இது தமிழ் அரசியல் மெல்ல மெல்ல மாறி வருவதையே உணர்த்துகிறது. என்னதான் இதற்கு விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்று மறு விளக்கங்களைச் சுமந்திரன் சொன்னாலும் ஈ.பி.டி.பியின் தயவுடன்தான் அதிகாரம் கைப்பற்றப்பட்டது என்பது பகிரங்கமான உண்மை.
ஏற்கனவே (2015 தொடக்கம்) நல்லாட்சி அரசாங்கத்துடனான உறவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசு சார்பு இணக்க அரசியலுக்கும் ஐக்கிய இலங்கைக்கும் தன்னைக் கீழிறக்கி விட்டது. அல்லது தணிவுக்குட்பட்டு விட்டது. இதனால் ஈ.பி.டி.பிக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் அதிக வித்தியாசங்கள் இருக்கவில்லை.
ஈ.பி.டி.பி நேரடியாக அரச ஆதரவையும் இணக்க அரசியலையும் பிரகடனப்படுத்திச் செய்தது. கூட்டமைப்பு அதை மறைமுகமாகச் செய்தது. ஆகவே இரண்டும் சமகால அரசியலில் அண்ணன் தம்பி அக்கா தங்கை உறவு நிலையிலேயே உள்ளன.
அப்படியென்றால் தேர்தல் மேடைகளில் அப்படியெல்லாம் நடக்கவில்லையே. அதிலே பயங்கரமாக ஈ.பி.டி.பியைக் கூட்டமைப்பும் கூட்டமைப்பை ஈ.பி.டி.பியும் கடுமையாகத் தாக்கிப் பேசினவே என்று அப்பாவித்தனமாக நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்கக் கூடும்.
தேர்தல் காலத்தில் “கூட்டமைப்பை விட்டு இந்தா வெளியேறுகிறோம், வெளியேறி விட்டோம்” என்று எத்தனை கரண விளையாட்டுகளை எல்லாம் ரெலோவும் புளொட்டும் விளையாடின. அதெல்லாம் உண்மையா? அல்லது அவை சொன்னதைப்போல நடந்து கொண்டனவா?
ஆகவே அதைப்போலத்தான் இப்போது ஆட்சி அதிகாரத்தில் ஆளுக்கு ஆள் ஒத்திசைந்து கொள்வதும் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்வதும் ஒன்றும் புதியதல்ல. தலையைப் பிய்த்துக் கொள்ளும் அளவுக்குச் சீரியஸானதுமல்ல.
எப்படியோ பல இடங்களிலும் பல (ஏறுக்குமாறான) தரப்புகளையும் சேர்த்துக் கட்டி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அதிகாரத்தை நடத்தப்போகிறது. இதன் மூலம் அது தன்னை மீள் நிலைப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது. முக்கியமாக ரெலோ, புளோட் போன்றவற்றின் நெருக்கடிகள் அண்மைய சமகாலத்தில் ஏற்படாதவாறான ஒரு சூழல் உருவாகியுள்ளது. சமநேரத்தில் தமிழரசுக் கட்சியின் கை மேலும் மேலோங்கியுள்ளது. ஆகவே தமிழரசுக் கட்சி இனித் தலையால்தான் நடக்கப்போகிறது.
அத்துடன் பொதுவாகவே உள்ளுராட்சி மன்றுகளின் அதிகாரம் இரண்டாவது தடவையாகவும் கூட்டமைப்பின் கைகளில் வந்துள்ளது. முதல் காலத்தில் அது எதையும் செய்யாது விட்டதைப்போல இந்தத் தடவையும் பெரிய அளவில் சாதனைகளைச் செய்யும் என்று சொல்வதற்கில்லை. அதாவது மக்களுக்கான பணிகள் எந்தளவுக்கு நடக்கும் என்பது கேள்விக்குறியே. தனிப்பெரும் பலத்தோடிருந்தபோது சாதிக்க முடியாததை பங்கு நிலையில் எப்படிச் சாத்தியமாக்க முடியும் என்பது நியாயமான கேள்வியே. “பங்குப் பெண்டாட்டி புழுத்துச் செத்தாள்” என்றொரு வாய்மொழி உண்டல்லவா. தற்போதைய ரணில் – மைத்திரி கூட்டாட்சி எதையும் உருப்படியாகச் செய்யமுடியாமல் காலம் கழிப்பதைப்போலத்தான் கூட்டமைப்பின் ஆட்சியின் கீழுள்ள சபைகளும் செயலின்மையில் கிடந்துழலக் கூடும். சபைகள் இயங்குவற்கு முன்பே இப்படியொரு சாபம் எதற்கு என்று சிலர் கேட்கக்கூடும். இது சாபமல்ல. எச்சரிக்கையும் கேள்வியுமாகும்.
மக்களுக்கான பணிகளைச் செய்வதற்கான கால நீடிப்பு தேவையற்றது மட்டுமல்ல மக்கள் விரோதமானதுமாகும். என்னதான் காரணங்களைச் சொன்னாலும் என்ன சமாதானங்களைச் செய்தாலும் இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஏனெனில் சமகாலக் கடமைகள் என்பது சமகாலத் தேவைகளுக்கு மட்டுமானவையல்ல. எதிர்காலத்தை உருவாக்குவதற்குமானவை. தேர்தலில் வாக்களிப்பது கூட அப்படித்தான். சமகாலத்தில் எமது தேவைகள், நலன்களைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டும் நாம் வாக்களிப்பதில்லை. நாங்கள் அளிக்கின்ற வாக்குகளின் விளைவு, வெற்றியடைவோர் சமகாலத்தேவைகளை நிறைவேற்றுவதுடன் அறுபது விழுக்காடு எதிர்காலத்துக்கான வேலைகளைச் செய்வதுமாக இருக்க வேணும்.
இத்தகைய புரிதலோடு – விளக்கத்தோடு சபைகளை யார்தான் வழிப்படுத்தப்போகிறார்கள்? அதிகாரச் சுவையை ருசிப்பதற்கும் கட்சி நலனைப் பேணுவதற்குமே பல இடங்களிலும் முனைப்புக் காட்டப்படும். இதற்கு தற்போது அமைக்கப்பட்டுள்ள சபைகளில் முன்னிலைப்படுத்தப்பட்ட முதன்மை உறுப்பினர்கள் சான்றாகும். கட்சிக்காக உழைத்தவர்களுக்கும் கட்சிக்கு நம்பிக்கையானவர்களுக்குமே முன்னுரிமை என்ற அடிப்படையில்தான் பெரும்பாலான இடங்களிலும் தலைமைப்பொறுப்புக் கொடுக்கப்படுகிறது. கட்சிப் பொறுப்பும் கட்சிப் பணியும் வேறு. பொது அரங்கில் மக்கள் பணிகள் வேறு என்பதைப் பற்றி இந்தக் கட்சிகள் சிந்திப்பதில்லை. அவற்றுக்கு அவற்றின் நலனும் வெற்றியுமும் இருப்புமே முக்கியம்.
தமிழரசுக் கட்சியின் பெரும்பாலான தெரிவுகளும் முன்னிலைப்படுத்தல்களும் இந்த அடிப்படையைக் கொண்டவை என்பதைத் துணிந்து கூற முடியும். எனவேதான் கூட்டமைப்பின் தற்போதைய வெற்றிகளும் அது பறக்க விடும் வெற்றிக் கொடியும் மக்களுக்கு நன்மைகளை அதிகம் தரும் என்று சொல்வதற்கில்லை என்று துணிந்து கூறுகிறோம். அகத்தில் எது உள்ளதோ அதுவே புறத்திலும் பிரதி பலிக்கும். ஆகவே கூட்டமைப்பின் வெற்றி மக்களின் வெற்றியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. கடந்த காலங்களைப் போல தமிழ்த் தலைமைகள் என்று கூறிய சக்திகள் வெற்றியடைந்தபோதும் தமிழ் மக்களுக்கு வெற்றி கிடைக்காதைப் போலவே தற்போதைய வெற்றியும் அமையும்.
இதை மாற்றியமைப்பதற்கு மாற்று அரசியற் சக்திகளே தேவை. அந்த மாற்றுகள் தற்போதைய தலைமைகளில் இல்லவே இல்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும் தமிழ மக்கள் பேரவையையும் விக்கினேஸ்வரனையும் சிலர் மாற்றுச் சக்திகளாக அடையாளம் காண முற்படுவதுண்டு. இது மாற்றுச் சக்தி என்றால் என்ன என்று புரியாததன் விளைவே.
ஆகவே இன்னொரு அலைக்கழிப்புக் காலத்தில் தமிழ்ச் சனங்கள் இடறுப்படத்தான் போகின்றன.
(கருணாகரன் சிவராசா)