1990 செப்டம்பர் 20 ல் பிறந்த சாணக்கியன் ராகுல் ராஜபுத்திரன் இராசமாணிக்கத்திற்கு தற்போது வயது 30. இலங்கையின் இளவயது நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர்களில் ஒருவரான சி. மூ. இராசமாணிக்கத்தின் பேரனான இவர் கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்வி பயின்றார். இவர் முன்னர் தனது தந்தையின் வழி இலங்கை சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளராக இருந்தவர். 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர். (சாணக்கியனின் தந்தை மருத்துவர் இராசமாணிக்கம் இராஜபுத்திரனும் இலங்கை சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளராக இருந்தவர்.)
ஆனால் மீண்டும் தனது பாட்டணார் வழியில் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு முதல் தடவையாகத் தெரிவு செய்யப்பட்டவர்.
இலங்கை அரசியலில் வழமையாக தமிழ்த்தேசியக் கட்சிகளில் இருந்தவர்கள் ஆழும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கே தாவுவார்கள். ஆனால் அண்மைய அரசியல் வரலாற்றில் ஆளும் அரச தரப்பு கூட்டணிக் கட்சியில் இருந்து, தமிழ்த் தேசிய அரசியல் கூட்டிற்கு மாறி, பொதுத் தேர்தலில் பிள்ளையானுக்கு அடுத்து மட்டக்களப்பில் அதி கூடிய வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றிற்கு தெரிவாகி இருக்கிறார்.
இளம் ரத்தம் – 3 மொழிகளிலும் சரளமாக பேச எழுத தெரிந்த ஒரு ஆளுமை. எனது அறிவுக்கு எட்டியவகையில் ரவூவ் ஹக்கீம் அவர்கள் தற்போது உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் 3 மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவர். இவருக்கு முன்பாக மர்கூம் அஸ்ரவ் அவர்கள். அடுத்து மனோ கணேசன் 3 மொழிகளையும் சிறப்பாக கையாளக் கூடியவர்.
வடக்கு கிழக்கில் இருந்து தெரிவானவர்களில் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் 3 மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவர். இவர் அண்மைய தசாப்த்தங்களில் சிங்கள மொழியில் நாடாளுமன்றில் உரையாற்றவில்லை. அதுபோல் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் மும்மொழிப் பாண்டித்தியம்பெற்றவர். அவருடைய நாடாளுமன்ற உரைகளும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருப்பது வழக்கம். சுட்டுக் கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிராஜ், மகேஸ்வரன் போன்ற சிலர் சிங்களம் பேசியிருந்தாலும் அவை இலக்கண தரம் அற்ற பேச்சு மொழியாகவே அமைந்திருந்தன.
ஆனால் கடந்த 4 தசாப்தத்த காலத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 3 மொழிகளிலும் பாண்டித்தியமானவராக விளங்கும் சாணக்கியன், யாருக்கு எப்படிப் பேசினால் விளங்குமோ அதற்கேற்ப தனது உரையை மும்மொழிகளாலும் வளப்படுத்துகிறார்.
குறிப்பாக மூவின பரம்பலைக் கொண்ட கிழக்கில் இருந்து நாடாளுமன்றிற்கு தெரிவாகி உள்ள சாணக்கியன் நாடாளுமன்றில் ஆற்றும் மும்மொழி உரை இலங்கை அரசியலில் புரவிப் புயலை விடவும் உக்கிரமாக வீசும் அரசியல் சூறாவழியாக இந்து சமுத்திரத்தை சூழவுள்ள்ள நாடுகளிலும் மையம் கொண்டிருக்கிறது.
சாணக்கியன் அண்மையில் நாடாளுமன்றில் ஆற்றிய உரை கிழக்கில் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் இன, மத முரண்பாட்டை மீள்பார்வைக்கு உட்படுத்தவும், அதுபற்றி ஆழமாக சிந்திக்கவும், நிலவுகின்ற நடைமுறைப் பிரச்சனைகளில் ஆவது, தமிழ்பேசும் மக்களாக சமூகமாக சேர்ந்து இயங்குவதற்கான, தேவையை உணர்த்தும் திறவுகோலாகவும் அமைந்துள்ளது என்பதனை அண்மைய சமூகவலைத்தள பதிவுகளின் வீச்சு தெளிவுபடுத்துகிறது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும் என அமைச்சர் சரத்வீரசேகர நாடாளுமன்றில் ஆற்றிய உரையை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டித்தவேளை ஏற்பட்ட சபைக் குழப்பங்களின் போது, தமிழ்க் கட்சிகள் நடந்துகொண்ட விதமும், தனது நேரத்தில் 5 நிமிடத்தை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வழங்கியதும், நொந்து நூலாகிப் போயிருக்கும் தமிழ் மக்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுவும் கொள்கைவழிக் கூட்டுகளைக் கொண்டிராவிடினும் நிலவுகின்ற நெருக்குதல்களில், நடைமுறைப் பிரச்சனைகளில் குறைந்தபட்ச உடன்பாடுகளைக் ஏற்படுத்துவதற்கான ஆரம்பபடியாக அமையும் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
படுகொலைசெய்யப்பட்ட நடராஜா ரவிராஜ், தேசிய இனப்பிரச்சனை, இனமுரண்பாடுகள் குறித்து, தெற்கில் மக்களுக்கு புரியும்படியான சிங்கள மொழியில் விடயங்களை தெளிவுபடுத்த முனைந்தார். சிங்கள மொழியில் பல ஊடக விவாதங்களில் கலந்துகொண்டார்.
தமிழில் எதனை வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம், அறிக்கை விடலாம். ஆனால் சர்வதேசம் புரிந்துகொள்ளும் ஆங்கிலத்திலும், தெற்கு மக்கள் புரிந்துகொள்ளும் சிங்கள மொழியிலும், நாட்டின் அரசியல் முரண்நிலைகள் குறித்த அடிப்படைகள் வெளிவருவதனை ஆளும் அரச இயந்திரங்கள் ஒருபொதும் விரும்புவதில்லை என்பது இலங்கை அரசியலை பின்னோக்கி பார்ப்பவர்களுக்கு புரியும்.
குறிப்பாக கிழக்கில் இருந்து தெரிவுசெய்யப்பட்டு இலங்கை அரசியலில் ஒரு புது அத்தியாயத்தை எழுத ஆரம்பித்துருக்கும் இளம் சாணக்கியரே, இலங்கையின் கடந்தகால இனமுரண்பாட்டிலான அரசியலையும், அது கற்றுத் தந்த பாடங்களையும், புதிய வழியில் பயணிக்க முற்படுபவர்கள் எதிர்கொண்ட, எதிர்கொள்ளும் நெருக்குதல்கள் குறித்த தெளிவினையும் மனதில் நிறுத்தி, பாட்டணார் வழி அரசியலில் நிதாணமாக, பயணிப்பீர்கள் என தமிழ் மக்கள் நம்புகிறார்கள்.
சாணக்கியனின் பாட்டனார் சின்னப்பு மூத்ததம்பி இராசமாணிக்கமும் அவர் பின்னணியும்….
சின்னப்பு மூத்ததம்பி இராசமாணிக்கம் (Sinnappu Moothathamby Rasamanickam, பிறப்பு 1913 ஜனவரி 20, இறப்பு – 1974 செப்டம்பர் 7) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மண்டூர் என்னும் ஊரில் வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை திருப்பழுகாமத்தைச் சேர்ந்த சோமநாதர் சின்னப்பு உடையார், தாயார் மண்டூரைச் சேர்ந்த சின்னப்பிள்ளை. இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். இவர் பட்டிருப்புத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் இருந்தவர்.
இராசமாணிக்கம் மண்டூர் சைவப்பள்ளி, கல்முனை உவெசுலி கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையிலும், இலண்டன் பல்கலைக்கழகத்திலும் சிறப்புப் பட்டம் பெற்றார். இராசமாணிக்கம் அரசு சேவையில் இணைந்து கூட்டுறவு அலுவலர், உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரி, உதவி அரச அதிபர், காணி ஆணையாளார் எனப் பல பதவிகளை பதுளை, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் வகித்துள்ளார்.
இராசமாணிக்கம் களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த மருத்துவர் வைரமுத்து ஜேம்ஸ் செல்லையா, மார்கிரட் தங்கம்மா ஆகியோரின் மகள் லீலா செபரத்தினம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு 2 பெண்களும் 4 ஆண்களும் பிள்ளைகள். இவ்களில் ஒரு மகனான மருத்துவர் ராஜபுத்திரன் இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்து அக்கட்சியின் பட்டிருப்புத் தொகுதி கட்சி ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டார். அவரின் மகனே சாணக்கின்.
சாணக்கியனின் பாட்டனார் இராசமாணிக்கம் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு சோ. உ. எதிர்மனசிங்கம் என்பவரிடம் சுமார் 800 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். ஆனாலும், 1952 தேர்தலில் போட்டியிட்டு 460 வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்மனசிங்கத்தை வென்று நாடாளுமன்றம் சென்றார்.
SJV செல்வநாயகம் அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த போது அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பண்டா-செல்வா ஒப்பந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டார். 1956 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு எதிர்மனசங்கத்திடம் 500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். ஆனாலும் 1960 மார்ச் மாதத்தில் இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1960 யூலை, 1965 நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றார். 1970 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சோ. தம்பிராஜாவிடம் 600 வாக்குகளால் தோற்றார்
(Nadarajah Kuruparan)