உலகளாவிய ஊடகப் பரப்பை, அண்மைக்காலத்தில் அவதானித்து வந்தவர்களுக்கு, “கடும்போக்கு வலதுசாரி அரசியலின் எழுச்சி” என்பது, அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சொற்றொடராக இருக்குமென்பது தெரிந்திருக்கும். ஐக்கிய அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தொடக்கம், ஐக்கிய இராச்சியத்தில் பிரெக்சிற் (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுதல்), பிரான்ஸிலும் ஜேர்மனியிலும் இன்னோரன்ன ஐரோப்பிய நாடுகளிலும் கடும்போக்கு வலதுசாரிகளின் எழுச்சி, இந்தியாவின் நரேந்திர மோடியின் கட்சிக்கு அதிகரித்துவரும் செல்வாக்கு என, கடும்போக்கு வலதுசாரி அரசியலின் செல்வாக்கு அதிகரிப்புக்கான உதாரணங்கள், தாராளமாக இருக்கின்றன.
கடும்போக்கு வலதுசாரித்துவத்தின் எழுச்சியென்பது, உலகளவில் அதிகளவு கலந்துரையாடல்களை எழுப்புகின்ற ஒன்றாகக் காணப்படுகிறது. அக்கலந்துரையாடல்கள் அவசியமானவை என்பதில், எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
ஆனால், கடும்போக்கு வலதுசாரித்துவம் அளவுக்கு இல்லாவிடினும், இடதுசாரி அரசியலைக் கடைப்பிடிப்பவர்களாகக் கூறிக்கொள்பவர்கள் மத்தியிலும், இவ்வாறான மோசமான அரசியல் கலாசாரம் உருவாகி வருவதையும் நாங்கள் அவதானிக்க வேண்டிய தேவையிருக்கிறது. இவ்வாறானவர்களில், இலங்கையைப் பொறுத்தவரை, மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பிரிவினரும் முக்கியமானவர்கள்.
என்னது, மஹிந்த ராஜபக்ஷ, ஓர் இடதுசாரியா என்ற கேள்வி எழக்கூடும். அது, தனிப்பட்ட வாதமாக இருக்க வேண்டும். இப்பத்தியின் பிற்பகுதியில், மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பார்வை குறித்துப் பார்க்கலாம்.
இடதுசாரிகளில் கடும்போக்கானவர்கள் மீதான விமர்சனங்கள், இதுவரை முன்வைக்கப்படாமலில்லை. கார்ல் மார்க்ஸ் தொடக்கம் மா சே துங், விளாடிமிர் லெனின், ஜோசப் ஸ்டாலின், ஃபிடல் காஸ்ட்ரோ என்று, இடதுசாரி அரசியலை முன்வைத்த பலர் மீது, பல விதமான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. சில குற்றச்சாட்டுகள், இனவழிப்பு, மாபெரும் படுகொலைகள் என, மோசமான குற்றச்சாட்டுகளாக இருக்கின்றன.
ஐக்கிய அமெரிக்காவிலும் கூட, நவ நாஸிகளினதும் கடும்போக்கு வலதுசாரிகளினதும் மீது விமர்சனம் முன்வைக்கப்படும் போது, கடும்போக்கு வலதுசாரிகளையும் தீவிர இடதுசாரிகளையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது சரியல்ல எனவும், கடும்போக்கு வலதுசாரிகள் கொலைகளைச் செய்ய, தீவிர இடதுசாரிகளோடு, இலவச மருத்துவம், கல்வி போன்றவற்றைக் கோருகிறார்கள் எனவும் பதிலளிக்கப்படுவதுண்டு.
ஒரு வகையில் பார்க்கும் போது, மேற்குறிப்பிட்ட பதிலென்பது உண்மையானது தான். ஐக்கிய அமெரிக்காவில் “தீவிர இடதுசாரி” என்று வர்ணிக்கப்படுபவர்களில், பேர்ணி சான்டர்ஸ் முக்கியமானவர். அவரைப் பொறுத்தவரை, வன்முறையை ஊக்குவிப்பவராக அவர் இல்லை. மாறாக, மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டுமெனவும், செல்வந்தர்கள் மீதான வரி அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் கோருபவராகவே அவர் இருக்கிறார்.
ஐக்கிய அமெரிக்காவின் அண்மைக்கால கடும்போக்கு வலதுசாரிகளின் தெரிவாகக் கருதப்படுகின்ற டொனால்ட் ட்ரம்ப்போ, தனக்கெதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை அடிக்குமாறு கோரியிருக்கிறார், ஊடகவியலாளர்கள் மீதான அழுத்தத்தை அதிகரித்திருக்கிறார், அணுவாயுதப் போரொன்று ஏற்படும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறார். எனவே, பேர்ணி சான்டர்ஸையும் டொனால்ட் ட்ரம்ப்பையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பதென்பது, உண்மையிலேயே தவறானது தான்.
ஆகவே, கடும்போக்கு வலதுசாரிகளும் தீவிர இடதுசாரிகளும் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள் என்று பார்க்காமல், தனித்தனியாக அவர்களது பாதிப்புகளை ஆராய்வது பொருத்தமானது. இல்லாவிடின், இவ்வாறான நச்சு அரசியல் கலாசாரத்தின் பின்விளைவுகளைப் பற்றி ஆராய்வது பொருத்தமாகாது.
இந்த நச்சு அரசியல் கலாசாரம் தொடர்பான அண்மைய பார்வை அதிகரிப்பதற்கு முக்கியமாக, பதுளையில் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் பிரசாரக் கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துகள் முக்கியமானவை. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்குவைத்து, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கன்னி பிரசாரக் கூட்டமாக அமைந்த இக்கூட்டத்தில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, “சமபாலுறவை வைத்துக் கொள்ள விரும்பினால், மறைவாக, மூடிய கதவுக்குள் வைத்துச் செய்யுங்கள். ஆனால் அதைச் சட்டபூர்மாக்க முயற்சி செய்யாதீர்கள்” என்று தெரிவித்திருந்தார்.
சமபாலுறவு வெறுப்பு என்பது, பிரசாரத் தந்திரங்களுள் ஒன்றாகக் காணப்படுகிறது. பழைமைவாதக் கொள்கைகளைப் பின்பற்றும் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, சமபாலுறவு வெறுப்பென்பது, வாக்குகளைப் பெற்றுக் கொள்ளத்தக்க ஒன்றாக, சாமானிய மக்களின் காவலனாகத் தங்களைக் காட்டிக் கொள்வதற்காகப் பயன்படுகிறது.
காலங்காலமாக, சமபாலுறவாளர்கள் ஏதோ தங்களின் பிள்ளைகளை இலக்குவைத்து வருகிறார்கள், தங்கள் சமபாலுறவுத் தன்மையை ஏனையவர்களிடம் பரப்புவதற்காக மாயம் செய்கிறார்கள் என்றும், காலங்காலமாக அம்மக்களுக்குச் சொல்லப்பட்டு வந்த நிலையில், அவர்களின் அச்சமென்பது, அவர்களைப் பொறுத்தவரையில் நியாயமானது தான். அப்படியான சூழ்நிலையைத் தான், நச்சு அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
மஹிந்த ராஜபக்ஷவின் உரையில், இது தான் மோசமான கருத்தென்று நீங்கள் கருதிக்கொண்டால் அது தவறானது. மாறாக, இதையும் விட மோசமான கருத்தை அவர் கூறியிருந்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட அமைப்பாளரான நிமல் வெல்கம, பல பெண்களுடன் தொடர்புகளைக் கொண்டவர் என்ற குற்றச்சாட்டுக் காணப்படும் நிலையில், அது தொடர்பாக உரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. மஹிந்தவுக்கு முன்னர் உரையாற்றிய நிமல் வெல்கமவே, அதை ஆரம்பித்து வைத்திருந்தார்.
பதுளை மாவட்ட, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தரான டிலான் பெரேரா, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் மணமுடித்தார் என்பதைச் சுட்டிக்காட்டிய நிமல் வெல்கம, தன்னைப் பொறுத்தவரை, ஏனைய பெண்களுடனான தனது தொடர்புகளுக்கு, தனது மனைவியின் சம்மதம் இருந்தது என்று தெரிவித்திருந்தார்.
நிமல் வெல்கமவின் பின்னர் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, வெல்கமவின் பல பெண்களுடனான உறவுகளை அங்கிகரிப்பது அல்லது புகழ்வது போல உரையாற்றியிருந்தார்.
பெண்களின் சம்மதத்துடனான உறவுகளை வெல்கம வைத்திருந்தார் என்றால், அது தனிப்பட்ட விடயமாகவே இருக்க வேண்டும். ஆனால், சமபாலுறவைச் சட்டபூர்வமாக்க முயலக்கூடாது என்று சொல்கின்ற அதே உரையில், பல பெண்களுடன் ஒரே நேரத்தில் உறவுகளை வைத்திருப்பதைப் புகழ்கின்ற மாதிரி உரையாற்றுவது என்பது, விநோதமானது. அதேபோல், பெண்ணொருவர், ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் தொடர்புகளை வைத்திருந்தாலும், இவர்கள் இவ்வாறு புகழ்வார்களா என்ற கேள்வியும் எழுப்பப்பட வேண்டியிருக்கிறது. அக்கேள்விக்கான பதில், அனைவருக்கும் தெரிந்தது தான்.
இவ்வாறான அரசியல் கலாசாரமொன்றை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்காகவே உருவாக்க முயல்பவர்கள், நாடாளுமன்றத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தலொன்று வருமாயின், இன்னமும் தனிப்பட்ட ரீதியிலான வெறுப்பு அரசியலை மேற்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இத்தனைக்கும், மஹிந்த ராஜபக்ஷ என்பவர், கடும்போக்கு வலதுசாரி கிடையாது. அவருடைய (முன்னைய) கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இடதுசாரித்துவக் கட்சியாகவோ அல்லது இடதுசாரித்துவம் சார்பான கட்சியாகவோ தான் இருக்கிறது. சீனா போன்ற, நவீன இடதுசாரித்துவத்தைப் பின்பற்றுபவர்களைப் போல, மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் முதலீட்டாளர்கள், கூட்டாண்மை நிறுவனங்களின் நலன்கள் பற்றிக் கவனஞ்செலுத்துகின்ற ஒன்றாக மாறிப் போனது.
அவரை, இப்போதும் வலதுசாரி என்று அழைக்க முடியாது. ஆனால், கடும்போக்கு வலதுசாரிகள் புரிகின்ற அத்தனை வெறுப்பு, நச்சு அரசியலை, அவரும் அவரது பிரிவினரும் மேற்கொள்கிறார்கள் என்பது தான் உண்மையானது.
மஹிந்த ராஜபக்ஷக்கு, “இடதுசாரி” என்ற நேரடியான அடையாளம் கிடையாது என்றால், வாசுதேவ நாணயக்கார போன்றோர், தீவிர இடதுசாரி அரசியலை முன்னெடுத்தவர்களாக இருந்தார்கள். இப்போது, நச்சு அரசியலின் பக்கமாக, தமது தனிப்பட்ட அரசியல் நலனின் காரணமாக ஒதுங்கியிருக்கிறார்கள்.
அரசியல் பார்வையில், மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கக் கூட்டணி தொடர்பாக, என்னவாறான விமர்சனங்களும் காணப்பட முடியும்; அவர்கள் மீது, ஊழல் குற்றச்சாட்டுகள் காணப்பட முடியும்; அவர்களது பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான விமர்சனங்கள் இருக்க முடியும். ஆனால், இன்னமும் நச்சு அரசியலை ஊக்குவிக்காதவர்கள் என்ற அடிப்படையில், இக்கூட்டணி முக்கியம் பெறுகிறது.
இப்போதிருக்கின்ற அச்சமெல்லாம், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், தனித்துப் போட்டியிடவுள்ள நிலையில், அவர்களும் நச்சு அரசியலுக்குள் தள்ளப்பட்டு விடுவார்களோ என்பது தான்.
இதற்கு முன்னர், 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டார்கள் என்ற போதிலும், அப்போது தான் கூட்டணி ஆரம்பித்து, “தேனிலவுக் காலத்தில்” கூட்டணி இருந்தது. இப்போது, ஆங்காங்கே வெடிப்புகள் காணப்படும் நிலையில், இம்முறை தேர்தல்கள், சிறிது அவதானிக்கப்பட வேண்டியனவாக மாறியிருக்கின்றன.