தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் துறையின் மகளிரணித் தலைவியாக இருந்த தமிழினி என்றழைக்கப்பட்ட சிவகாமியின் பெயர் இரண்டு காரணங்களினால் இம்மாத ஆரம்பத்தில் ஊடகங்களில் அடிபட்டது.
முதலாவதாக முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள் என்றதோர் புதிய செய்தியினால் அவரைப் பற்றியும் பலர் குறிப்பிட்டுப் பேசினர். இரண்டாவதாக அவரது தன்வரலாற்று நூலின் மொழிபெயர்ப்பை விற்றுப் பெற்ற பணத்தில் மூன்று இலட்சம் ரூபாய் அவர் இறுதிக் காலத்தில் சிகிச்சை பெற்ற மஹரகம புற்றுநோய் மருத்துவமனைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டமையினால் அவரது பெயர் மீண்டும் அடிபட்டது.
நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் அபிப்பிராயம் திரட்டும் குழுவொன்றின் முன் முன்னாள் போராளியொருவர் தெரிவித்த கருத்தொன்றை அடுத்தே முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள் என்ற கருத்து வேகமாகப் பரவத் தொடங்கியது. தனித்தமிழ் நாட்டுக்கான புலிகளின் போர் தோல்வியடைந்து, தாம் படையினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்த போது படையினர் தமக்கு பலாத்காரமாக ஏதோ மருந்தொன்றை ஊசி மூலம் ஏற்றியதாக ஒட்டுசுட்டானைச் சேர்ந்த அந்த முன்னாள் போராளி கூறியிருந்தார்.
அதனை அடுத்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னிணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் உட்பட சில தமிழ் அரசியல்வாதிகள், முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் இறந்து வருவதாகவும் எனவே, அவர்கள் சர்வதேசக் கண்காணிப்புடன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
அமைச்சரவை முடிவுகளைத் தெரிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போது, ஊடகவியலாளர்கள் இதைப் பற்றி அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் வினவியபோது, அது தொடர்பாக முறையாக முறைப்பாடு செய்யப்பட்டால் முன்னாள் பேராளிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்றும், அண்மையில் உயிரிழந்த தமிழினி, தமது தன்வரலாற்று நூலில் இந்த ஊசி மருந்தேற்றலைப் பற்றி எதனையும் குறிப்பிட்டு இருக்கவில்லை என்றும் அமைச்சர் கூறியிருந்தார். மற்றொரு தமிழ்ப் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவரும் அமைச்சர் சரத் அமுனுகமவிடம் இந்த விடயத்தைப் பற்றிக் கேட்டிருந்தார். அவரும் அவசியம் ஏற்பட்டால் அவ்வாறான மருத்துவ பரிசோதனைகளை நடத்தலாம் எனக் குறிப்பிட்டு இருந்தார்.
பிரேமசந்திரனும் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் பிரதான அரசியல் பிரதிநிதியான தமிழ்த்; தேசிய கூட்டமைப்பின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் சிலரும், இந்த விடயத்தைப் பற்றிப் பெரும் அக்கறையுடன் கருத்து வெளியிட்டு வந்த போதிலும் கூட்டமைப்பின் முன்னணித் தலைவர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இதனைப் பற்றி இன்னமும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடவோ அல்லது உத்தியோக பூர்வமாக ஏதாவது நடவடிக்கை எடுக்கவோ இல்லை. தாம் இது தொடர்பாக தகவல் திரட்டி வருவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.
ஆயினும் முன்னாள் போராளிகளின் மரணங்களைப் பற்றிப் போதுமான தகவல்கள் இல்லாத நிலையில் விசாரணை நடத்தாமல் கருத்து தெரிவிக்க முடியாது என்று கூட்டமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவர் தெரிவித்ததாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது. எதிர்பார்த்த படியே இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர இந்த மருந்தேற்றல் பற்றிய செய்தியை மறுத்திருந்தார்.
தமிழ் ஊடகங்கள் இந்த விடயத்தை முக்கிய விடயமாகக் கருதிச் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்த போதிலும் ஆங்கில மற்றும் சிங்கள ஊடகங்கள் அதனை முக்கிய செய்தியாகக் கருதியதாகத் தெரியவில்லை. குறிப்பாக சிங்கள ஊடகங்கள் அதனை முற்றாக மறைத்தன என்றே கூற வேண்டும்.
இது ஒரு பாரதூரமான செய்தி என்பது சிங்கள ஊடகங்களின் ஆசிரியர்களுக்கு தெரியாமல் இல்லை. ஆனால் சிங்கள இனத்துக்கு அல்லது படையினருக்கு பாதகமான செய்திகளையும் தமிழர்களுக்கு சாதகமானதாகவோ அல்லது தமிழ் அரசியல்வாதிகள் பயன்பெறக்கூடியதாகத் தோன்றும் செய்திகளையும் வெளியிடுவதில் சிங்கள ஊடகங்கள் எப்போதும் தயங்கி வந்துள்ளன.
ஆனால், நச்சு ஊசி ஏற்றல் செய்தியில் உள்ள விசித்திரம் என்னவென்றால் தமிழ் ஊடகங்கள் மூலம் தமிழர்களும் சர்வதேச ஊடகங்கள் மூலம் முழு உலகமும் அறிந்து கொள்ளும் ஒரு விடயத்தை தமது வாசகர்களிடம் அல்லது நேயர்களிடம் மறைக்க சிங்கள ஊடகங்கள் எடுக்கும் முயற்சியேயாகும். சிங்கள ஊடகங்கள் மூலம் சிங்கள மக்களும் சர்வதேச ஊடகங்கள் மூலம் முழு உலகமும் அறிந்து கொள்ளும் சில விடயங்களை மறைக்க தமிழ் ஊடகங்கள் எடுக்கும் முயற்சியும் இதற்கு சமமாகும். போர் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் பெருமளவில் இடம்பெற்றன.
பத்திரிகை வாசகர்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நேயர்கள் தாம் விரும்பாத நிலைமைகளைப் பற்றிய செய்திகளை அறிய அவ்வளவாக விரும்புவதில்லை. சிலவேளை அச்செய்திகள் எவ்வளவுதான் உண்மையாக இருந்த போதிலும் அவற்றை வெறுப்பார்கள். எனவே தமது சந்தையை பாதிக்கும் என்பதற்காக ஊடகங்கள் அவ்வாறு தமது வாசகர்கள் விரும்பாத செய்திகளை தவிர்த்துக் கொள்கின்றன.
நச்சு ஊசி ஏற்றல் தொடர்பான செய்தி விடயத்தில் இயல்பாகவே மூன்று கேள்விகள் எழுகின்றன. முன்னாள் போராளிகள், அவர்களது வயதின் படியல்லாது அசாதாரணமாக இறந்து விடுகிறார்களா என்பது முதலாவது கேள்வியாகும். இரண்டாவதாக இவ்வாறு முன்னாள் போராளிகளுக்கு ஏதாவது ஊசி ஏற்றப்பட்டு அல்லது வேறு விதமாக அவர்களது உடலில் ஏதாவது இரசாயனப் பொருள் ஊட்டப்பட்டு இருக்கலாமா என்ற கேள்வி எழுகிறது. மூன்றாவதாக அதற்கான ஏதாவது தடயங்கள், ஆதாரங்கள் இருக்கின்றனவா என்ற கேள்வியும் எழுகிறது.
முன்னாள் போராளிகள் அவர்களது வயதின் படியல்லாது அசாதாரணமாக அகால மரணமடைந்து விடுகிறார்கள் என்றும் ஏற்கனவே 105 பேர் அவ்வாறு மரணமடைந்துள்ளதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கூறியிருந்தார். அது உண்மையாக இருந்தால் நிச்சயமாக அதற்கு காரணம் இருக்கத்தான் வேண்டும். அது நீண்ட காலப் போரின் விளைவாக, இயல்பாகவே ஏற்படும் நிலைமையாகவும் இருக்கலாம். அதேபோல் பலர் சந்தேகிப்பதைப் போல் ஏதாவது சதி நடந்தும் இருக்கலாம். இது நீண்ட காலப் போரின் விளைவாக இயல்பாகவே ஏற்படும் நிலைமையாக இருந்தால் நீண்ட காலமாகப் போர் முனையில் இருந்த படை வீரர்கள் மத்தியிலும் அது போன்றதோர் நிலைமை காணப்பட வேண்டும்.
படையினர் அவ்வாறு செய்திருப்பார்களா என்பது அடுத்த கேள்வியாகும். உலகில் பல நாடுகளில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் தனிப்பட்ட ஒரு சில கைதிகள் சம்பந்தமாக அவ்வாறு நடந்துள்ள போதிலும் பொதுவாகவோ அல்லது பாரியளவிலோ கிளர்ச்சிக்காரர்களுக்கு நஞ்சூட்ட மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றிய தகவல்கள் இல்லை.
தென்ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா வெள்ளையர்களின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி நடத்தியதற்காக அந்நாட்டின் பொல்ஸ்மூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, அவரது நோய்களுக்கான மருந்துகளில் தலியம் என்னும் இரசாயனப் பொருளைக் கலக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நிறமோ, சுவையோ, வாசனையோ இல்லாத தலியம் கலக்கப்பட்டால் அதனைக் கண்டுபிடிப்பது கடினம் என்பது மட்டுமல்லாது அதனால் பாதிக்கப்பட்டவர்கக்கு சிகிச்சையளிப்பதும் கடினம் எனக் கூறப்படுகிறது.
உலகப் புகழ் பெற்ற தென் ஆபிரிக்க சுதந்திரப் போராளியான ஸ்டீவ் பிக்கோவின் உடற்கூறுகளில் தலியம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் பொலிஸாரினால் சித்திர வதைக்குள்ளாக்கப்பட்ட போது, அவருக்கு தலியம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தென் ஆபிரிக்காவில் இது போன்ற மேலும் சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அறியமுடிகிறது.
தமது கண் பார்வையை இல்லாமல் செய்வதற்காக பொலிஸார் தம்மை நீண்ட காலமாக யாழ்ப்பாணத்திற்கு அருகே உள்ள ஹமன்ஹில் சிறைச்சாலையில் இருட்டறை ஒன்றில் தடுத்து வைத்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீர குற்றம் சுமத்தியிருந்தார்.
எல்லாவற்றுக்கும் மேலாக வெலிக்கடை சிறைச்சாலையில இடம்பெற்ற மோதலொன்றைப் பயன்படுத்தி தமக்கு வேண்டாத சில கைதிகளை மஹிந்தவின் அரசாங்கத்தின் சில முக்கியஸ்தர்கள் கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது. படையினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகளை பல்லாயிரக் கணக்கானவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கையிலேயே பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் திரும்பி வரவில்லை எனவும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் காணாமற்போனோர் தொடர்பான ஆணைக்குழு ஆகியவற்றின் முன் பலர் கூறியிருந்தனர். எனவே போர்ச் சூழலில் எதுவும் நடக்கலாம்.
ஆனால், உண்மையிலேயே முன்னாள் போராளிகளுக்கு அவ்வாறு மருந்தூட்டப்பட்டதா என்பதற்கு இதுவரை ஆதாரம் இல்லை. விடுதலை செய்யப்பட்டு மிகக்குறுகிய காலத்தில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தமிழினி, தாம் அவ்வாறானதோர் அனுபவததை சந்தித்ததாக தமது தன்வரலாற்று நூலில் குறிப்பிடவில்லை. தாம் இரகசியப் பொலிஸாரின் பொறுப்பில் இருக்கும் போது, ஒரேயொரு முறை மட்டும் சட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். வேறு ஏதாவது சிகிச்சை பெற்றதாகவோ மருந்துகளைப் பெற்றதாகவோ குறிப்பிட்டிருக்கவில்லை.
படையினரால் ஆபத்தானவர்கள் எனக் கருதக்கூடிய பலமுன்னாள் புலிப் போராளிகள் இன்னமும் இருக்கிறார்கள். புலிகளின் படையணிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது சார்ள்ஸ் அண்டனி படையணியே. அதன் தளபதியாக இருந்த நகுலன் அண்மைக் காலம்வரை யாழ்ப்பாணத்தில் சுதந்திரமாக நடமாடி வந்தார். சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் தற்கொலை அங்கியொன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டார். அவர் போன்றவர்கள் ஏன் இவ்வாறான நிலைமைகளை எதிர்நோக்கவில்லை என்ற கேள்வியையும் எழுப்பலாம்.
ஆனால், முன்னர் கூறியதைப் போல் போர்ச் சூழலில் குறிப்பிட்ட எதுவும் நடக்கவில்லை என்பதற்கும் எவரும் அவசரப்படக்கூடாது. அதேபோல் இந்த விடயம் இப்போது பாரியதோர் சந்தேகமாக தமிழ் மக்கள் மத்தியில் சென்றுவிட்டது. அது நல்லிணக்க முயற்சிகளுக்கு பாதகமானதாகும். எனவே உண்மையிலேயே முன்னாள் போராளிகள் அகால மரணமடைந்து வருகிறார்களா? என்பதை ஆராய்ந்து அது உண்மையாக இருப்பின் அதற்கான காரணங்களை மறைக்க இடமளிக்காது, உடனடியாக நம்பகமான மருத்துவ பரிசோதனைப் பொறிமுறையொன்றை உருவாக்கத் தமிழ்த் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாகாண சபை அதற்காக நடவடிக்கையை எடுத்து வருவதாக முதலமைச்சர் கூறியிருந்தார்.
இதனோடு சம்பந்தப்பட்ட மற்றொரு முக்கியமான அம்சமும் இருக்கிறது. இந்தச் செய்தி உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது முன்னாள் போராளிகளை பாதிக்கக் கூடியதாகும். குறிப்பாக முன்னாள் பெண் போராளிகளை அது வெகுவாகப் பாதிக்கும். அவர்களிலும் திருமணமாகாதவர்களையும் மறுமணத்திற்குத் தயாராவோரையும் இந்தச் செய்தி, இந்தப் பிரசாரம் வெகுவாகவும் மிக மோசமாகவும் பாதிக்கும்; குடும்பப் பிரச்சினையும் ஏற்படலாம். அதனால் இந்த விடயம் முடி மறைக்கப்பட வேண்டும் என்பதல்ல. ஆனால், அவ்வாறானதோர் அம்சமும் இதில் உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
இது போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோகங்களைப் போல் சம்பந்தப்பட்ட சமூகத்தை இரண்டுங்கெட்டான் நிலைக்கு தள்ளிவிடக் கூடியதே. அத் துஷ்பிரயோகங்களைப் பற்றி பேசினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள். பேசாமல் இருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காது.
ஏற்கனவே, புலிகளுடன் இணைந்து செயற்பட்டார்கள் என்ற ஒரே காரணத்தினால் முன்னாள் போராளிகள் பல பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்கள். படையினர் இன்னமும் அவர்களை அடிக்கடி விசாரிக்கிறார்கள்; அடிக்கடி அவர்களின் வீடு தேடிச் சென்று தொல்லை கொடுக்கின்றார்கள்; பலமாகக் கண்காணிக்கப்படுகின்றார்கள். இத்தகைய நடவடிக்கைகளினால் அவர்கள் மனதில் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதனால்தான் இந்த நச்சு ஊசி பற்றிய செய்திகள் விடயத்தில் தமிழ் தலைவர்கள் துரிதகதியில் செயற்பட வேண்டியிருக்கிறது.
(எம்.எஸ்.எம். ஐயூப்)