மொட்டை மீண்டும் மலர வைத்து ராஜபக்ஷ குடும்பத்தை மீண்டும் ஆட்சி பீடமேற்ற தற்போது மீண்டும் நாடு திரும்பியுள்ளார் 7 மூளைக்காரரான பசில் ராஜபக்ஷ.
தேர்தல் மேகங்கள் கருக்கட்டியுள்ள நிலையில், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பியுள்ளதால், தங்களின் ஆட்சியை மீள உருவாக்க முடியும், அதிகாரங்களை மீளப்பெற முடியும் என்று பொதுஜன பெரமுனவில் குறிப்பிட்டளவான அரசியல்வாதிகள் குதூகலித்து பசில் ராஜபக்ஷவின் மீள் வருகையைக் கொண்டாடுகின்றனர்.
7 மூளைக்காரரென மொட்டுத் தரப்பினரால் கொண்டாடப்படும் பசில் ராஜபக்ஷவினால் மீண்டும் ராஜபக்ஷ சகோதரர்களை ஆட்சி அரியணையில் ஏற்ற முடியுமா? கருகிய மொட்டை மீண்டும் மலர வைக்க முடியுமா என்பதே இன்று பலரினதும் கேள்வியாகவும் சந்தேகமாகவும் உள்ளது. இதற்கான விடையை அறிய வேண்டுமானால் சில வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டும்.
இலங்கையில் கடந்த 2005ஆம் ஆண்டு ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சி மலர்ந்தது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார். பின்னர் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் தடவையாகவும் வெற்றி பெற்று ஜனாதிபதியானார்.
மூன்றாவது தடவையாக 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தனது அரசில் அமைச்சராக இருந்தவரான எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வி கண்டதால் 2015ஆம் ஆண்டு ஜனவரி 9இல் ராஜபக்ஷ குடும்பத்தின் முதல் கட்ட ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது.
இதனால் அடிபட்ட பாம்பாகச் சீறிக்கொண்டிருந்த ராஜபக்ஷ சகோதரர்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, அரியணையில் ஏற இனவாத ஆயுதத்தை கையில் எடுத்தனர். இதன் பெறுபேறாக மீண்டும் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தனது சகோதரரான பசில் ராஜபக்ஷவை நிறுவனராகக் கொண்ட பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு ஜனாதிபதியானார்.
இதன் மூலம் மீண்டும் ராஜபக்ஷ சகோதரர்கள் அரியணை ஏறினர்.
2019ஆம் ஆண்டு இறுதியிலிருந்து, தம்பி கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதி, அவரின் அண்ணனான மஹிந்த ராஜபக்ஷ பிரதமர், அடுத்த அண்ணனான சமல் ராஜபக்ஷ அமைச்சர், பிரதமர் அண்ணனின் மகனான நாமல் ராஜபக்ஷ அமைச்சர், அமைச்சர் அண்ணனின் மகனான சஷீந்திர ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சர், சகோதரியின் மகனான நிபுண ரணவக்க பாராளுமன்ற உறுப்பினர் என்று ராஜபக்ஷ குடும்பமே நாட்டை ஆளத் தொடங்கியது.
2005, 2010. 2019 ஜனாதிபதித் தேர்தல்களில் மஹிந்த ராஜபக்ஷவும் கோட்டபாய ராஜபக்ஷவும் ஜனாதிபதிகளாக வெற்றிபெற பல தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபட்டவர் ராஜபக்ஷ சகோதரர்களில் ஒருவரான பசில் ராஜபக்ஷ. இதனால்தான் அவரை அரச தரப்பினர் ‘7 மூளைக்காரர்’ என அழைத்துக் கொண்டாடினர்.
ராஜபக்ஷ குடும்பத்தை ஆட்சி அரியணையில் ஏற்றிய பசில் ராஜபக்ஷவினால் அந்த குடும்ப அரசில் கோலோச்ச முடியாத நிலை சட்ட சிக்கல்களினால் ஏற்பட்டிருந்தது.
2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை மகிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் பொருளாதார அபிவிருத்திக்கான அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஷ பதவியேற்ற ஆரம்பத்தில் அரசில் இருக்கவில்லை. இவ்வாறான நிலையில்தான், கோட்டபாய ராஜபக்ஷவின் தவறான கொள்கை, அரசியல் அறிவின்மை காரணமாக ஆட்சியும் நாடும் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்தது.
இதற்காகவே காத்திருந்த 7 மூளைக்கா ரரான பசில் ராஜபக்ஷ தனது விசுவாச அமைச்சர்கள், எம்.பிக்களை தன்னை தேசியப் பட்டியல் ஊடாக எம்.பியாக்குமாறு அழுத்தங்களை கொடுங்கள் என உசுப்பி விட்டார்.
இதனையடுத்து, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார, நிதி நெருக்கடிகளைத் தீர்க்க வேண்டுமானால் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றம் வந்து மீண்டும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்க வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன.
பசில் ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக்க கோரி, ஆளும் கட்சியின் 113 எம்.பிக்கள் கடிதம் ஒன்றில் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்தனர்.
அதேவேளை, தேசியப் பட்டியலில் பெயரில்லாத, மாவட்டப் பட்டியலில் பெயரில்லாத ஒருவர் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றுக்கு பிரவேசம் செய்வதானது அரசியலமைப்புக்கு முரண் இதனைவிடவும், இறுதியாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது, பசில் ராஜபக்ஷ இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்தமையால் அவ்வாறு நியமிக்கப்படுவதானது அரசியலமைப்புக்கு முரணானதென்ற எதிர்ப்பு எதிர்க்கட்சிகள் சட்ட நிபுணர்களிடம் இருந்து எழுந்தன.
பசில் ராஜபக்ஷ அமைச்சரானால் தான் நாட்டையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க முடியும் என்ற திட்டமிட்ட பிரசாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டதால் மக்களும் நம்பத் தொடங்கினர்.
இதனைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்ப்புக்களையெல்லாம் மீறி நாட்டை, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஜயந்த கோட்டேகொட எம்.பி. பதவி விலக அதனூடாக 7 மூளைக்காரரான பசில் ராஜபக்ஷ எம்.பியாக்கப்பட்டு, நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
ஆனால், இவரது நிதி அமைச்சுப் பதவிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தவறான நிர்வாகத்தின் காரணமாகவே நாடு கடனில் மூழ்கியது. ஊழல், மோசடிகள் தலைவிரித்தாடின. வரலாறு காணாத பெரும் பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொண்டு வரிசை யுகம் ஏற்பட்டு மக்கள் வாழ்வதற்காகப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதுமட்டுமல்ல, அரசின் பங்காளிக் கட்சிகளுடனும் பசில் ராஜபக்ஷ நல்லுறவு வைத்திருக்கவில்லை. பங்காளிக் கட்சிகளை இல்லாதொழித்து, ஒரே கட்சியாகப் பெரமுனவை வளர்த்தெடுத்து அதன்மூலம், பங்காளிக் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னை நிலைப்படுத்துவதே அவரின் திட்டமாக இருந்தது.
இதனால் பங்காளிக் கட்சிகளுக்கு எதிராக பசில் ராஜபக்ஷ எடுத்த சில நடவடிக்கைகள் காரணமாக கோட்டபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பங்காளிக் கட்சிகள் அரசிலிருந்து வெளியேறின. இதனால் கோட்டபாய ராஜபக்ஷ அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
அத்துடன், வரிசை யுகத்தினால் மக்களும் பொறுமையிழந்து கிளர்ச்சியில் ஈடுபட்டதனால் ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டபாய ராஜபக்ஷவும் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷவும் விரட்டியடிக்கப்பட்டனர்.
அதுமட்டுமல்ல, நிதி அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்து பின்னர் எம்.பி. பதவியிலிருந்து பசில் ராஜபக்ஷவும் விலகவும் நேரிட்டதுடன், நாட்டிலிருந்து பின்கதவு வழியாக அமெரிக்காவுக்கும் தப்பிச் சென்றார். அத்துடன், இந்த 7 மூளைக்காரரான பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்களைத்தான் உயர் நீதிமன்றமும் ‘‘பொருளாதார படுகொலையாளிகள்’’
என அண்மையில் அறிவித்துள்ளது.
இவ்வாறு நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அழிவை ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவராக இருந்து விட்டு, மக்கள் கிளர்ச்சியை அடுத்து, பின் கதவால் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்று தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தயவால் முன் கதவால் நாடு திரும்பியுள்ள பசில் ராஜபக்ஷ தான் நாட்டையும் பொருளாதாரத்தையும் காக்கப்போகும் காவலனாக மொட்டுக்கட்சியினர் ஊதிப் பெருப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.
பசில் ராஜபக்ஷவும் நாடு திரும்பியது முதல் தேர்தல்கள் தொடர்பில் தீவிர செலுத்தி வருவதுடன், ஊடகங்களை வரவழைத்துப் பரபரப்பு பேட்டிகளையும் வழங்கி, மொட்டு மீண்டும் மலர்கின்றது.
என்றவொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றார். ஆனால், மக்கள் கடந்த காலத்தை மறக்கும் மறதி நோய்க்கு உட்படாதவரை மொட்டு மீண்டும் மலராது. இது ராஜபக்ஷ சகோதரர்களுக்கும் நன்கு தெரியும் என்பதனால், கடந்த காலத்தை மக்களை மறக்க வைப்பதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதும் 2019ஆம் ஆண்டு
ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் கற்றுக்கொண்ட பாடம்.