குறிப்பாக நந்திக்கடலில் தேங்கிக் கிடக்கும் கழிவுளை அகற்றுவதற்கும் மணல் திட்டுக்களை அப்புறப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சரினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சிற்கு நேற்று(24.01.2020) அழைக்கப்பட்ட வனவள ஜீவராசிகள் திணைக்களம் உட்பட்ட அதிகாரிகளுடனான சந்திப்பின்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் மேற்குறிப்பிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் இருக்கின்ற நந்திக்கடல் பிரதேசத்தில் பெருந் தொகையான கழிவுப் பொருட்கள் தேங்கிக் கிடப்பதாகவும் சுனாமியின்போது கரையொதுங்கிய மணல் திட்டுக்களினால் நந்திக்கடலின் ஆழம் குறைந்துள்ளமையினாலும் நன்னீர் மீன்பிடி பாதிக்கப்பட்டிருப்பதாக குறித்த தொழிலை வாழ்வாதாரமாக நம்பியிருக்கின்ற பிரதேச மக்களினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர் அவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய நிலையிலேயே நந்திக்கடல் பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான மதிப்பீடுகள் மற்றும் சட்டநடைமுறை தொடர்பான அனுமதிகளை உடனடியாக பெற்று அபிவிருத்தி நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கௌரவ அமைச்சர் அவர்களினால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்> கடந்த ஆட்சியின் போது வெளியிடப்பட்ட இயற்கை வளப் பாதுகாப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் சில> நந்திக்கடல் – சுண்டிக்குளம் – நாயாறு – விடத்தல்தீவு போன்ற பிரதேசங்களில் நன்னீர் மீன்வளர்ப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இடையூறாக இருக்கின்றன.
தற்போது இலங்கையின் மொத்த மீன் உற்பத்தியில் 18 வீதமாக இருக்கின்ற நன்னீர் மீன்பிடியை 30 வீதமாக உயர்த்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையினாலான அமைச்சினால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையிலும் நன்னீர் மீன் உற்பத்தியில் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்ற நிலையிலும் இயற்கை வளப் பாதுகாப்பு தொடர்பான குறித்த வர்த்தமானி அறிவித்தல்களினால் உருவாக்கப்பட்டுள்ள இடையூறுகளை சுமூகமாக தீர்த்து கொள்வது தொடர்பாகவும் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது