(விருட்சமுனி)
தேசிய இன பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் பின்னடைவு அடைகின்றபோது, சிறுபான்மை இனங்கள் அவர்களுடைய அபிலாஷைகள் பாதிக்கப்படுவதாக உணர்கின்றபோது, வேலை வாய்ப்பை பெறுவதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றபோது நாட்டில் அரசியல் ஸ்திர தன்மை பாதிப்படைகின்றது என்றும் இச்சூழ்நிலை கரு கொள்கின்றபோது கால ஓட்டத்தில் அரசியல் மாற்றத்துக்கான வாய்ப்புகள் உருவாகின்றன என்றும் அரசியல் அவதானிகள் எடுத்து சொல்கின்றார்கள். இவை போன்ற விடயங்களே மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தன. அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் ஆயுளையும் இவை போன்ற விடயங்களே தீர்மானிக்க கூடியவையாக உள்ளன. ஆனால் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் அதன் கண்களுக்கு முன்னால் நடமாடுகின்ற உதாரணமாக மஹிந்த ராஜபக்ஸவை கண்டு வருகின்றபோதிலும் இவை போன்ற விடயங்களை கவனத்தில் எடுத்து செயற்படுவதாக தெரியவில்லை.
10 இலட்சம் பட்டதாரிகளுக்கு அரசாங்க, தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று நல்லாட்சி அரசாங்கம் ஒரு வாக்குறுதியை வழங்கி இருந்தது. ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரு வருடங்களை பூர்த்தி செய்து விட்டபோதிலும் ஒரு இலட்சம் பட்டதாரிகளுக்குகூட வேலை வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால் பட்டதாரிகளை கொண்டு பூர்த்தி செய்யப்பட வேண்டியவையாக 62600 வெற்றிடங்கள் அரசாங்க துறைகளில் தற்போது உள்ளன. இவ்வெற்றிடங்கள் நாட்டில் உள்ள பட்டதாரிகளின் எண்ணிக்கையை விட நிச்சயம் குறைவானவை ஆகும். பட்டதாரிகளுக்கு வேலை கொடுத்து இவ்வெற்றிடங்களை பூர்த்தி செய்கின்ற பட்சத்தில் சம்பளம் கொடுக்க திறைசேரியில் நிதி இராது என்று கூறி தப்பிக்கவும் முடியாது. ஏனென்றால் ஆசிய பசுபிக் வலயத்தின் சிறந்த நிதி அமைச்சர் என்று விருது பெற்ற ரவி கருணநாயக்க. இலங்கையின் எந்த அரசாங்கங்களிடமும் இருந்திராத நிதி இந்த அரசாங்கத்திடம் உள்ளது என்று நிதி அமைச்சராக இருந்தபோது பகிரங்கமாக தெரிவித்து இருந்தார்.
வர்த்தமானிகள் போன்றவற்றின் மூலம் பட்டதாரிகளுக்கான அரசாங்க வேலைகளுக்கு விண்ணப்பங்கள் அவ்வப்போது கோரப்படுகின்றன. ஆனால் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிற்பாடு உரிய வெற்றிடங்கள் அரைகுறையாகவே நிரப்பப்படுகின்றன. மேலும் போட்டி பரீட்சைகள், நேர்முக தேர்வுகள் ஆகியவற்றில் இடம்பெறுகின்ற குழறுபடிகள், அரசியல் செல்வாக்குகள், இலஞ்ச ஊழல்கள் போன்றவை காரணமாக தெரிவுகளில் நேர்மையோ, வெளிப்படை தன்மையோ இருப்பதில்லை என்பது மிக பாரதூரமான விமர்சனம் ஆகும். பரீட்சை வினா தாள்களில் உள்ள மொழி பிரயோக பிரச்சினைகள் மற்றும் மொழி பெயர்ப்பு பிழைகள், வினாத் தாள்களின் முன்கூட்டிய வெளிப்படுத்துகைகள் ஆகியன சம்பந்தமாகவும், தெரிவுகளில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாகவும் உயர்நிலை நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இதே போல அரசியல்வாதிகளின் ஆசியுடன் பணம் வசூலித்த இடை முகவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதே நேரம் அரசியல்வாதிகளின் பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்தவர்களும் பிடிக்கப்பட்டு உள்ளனர். இந்நியமனங்கள் அரசியல் ஆக்கப்பட்டு உள்ளன என்பதிலும் பெருமளவு உண்மை உள்ளது. மேலும் இவ்வாறான நியமனங்களில் இன ரீதியான பாகுபாடுகள் மற்றும் புறக்கணிப்புகள் இடம்பெறுகின்றன என்று சிறுபான்மை சமூகங்கள் உணர்ந்து வைத்திருக்கின்றன. மொத்தத்தில் வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்க வேலைகளுக்கான விண்ணப்பம் கோரல்களை அரசாங்கத்தின் கண் துடைப்பு நடவடிக்கைகளாகவே பார்க்கின்றனர்.
வேலையற்ற பட்டதாரிகளில் கணிசமான தொகையினர் தனியார் துறைகளில் தகுதிக்கும், தகைமைக்கும் ஏற்ப வேலை கிடைக்கின்ற பட்சத்தில் ஏற்று கொள்வதற்கு தயாராகவே உள்ளனர். ஆனால் பட்டதாரிகள் என்கிற காரணத்தாலேயே இவர்களுக்கு தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகள் நிராகரிக்கப்படுகின்ற சம்பவங்களும் அதிகம் நடந்தேறுகின்றன. பட்டதாரிகளுக்கு ஒரு வேளை அரசாங்கம் வேலை வழங்குமாக இருந்தால் இவர்கள் தனியார் துறை வேலையை இடையில் விட்டு விட்டு செல்வார்கள் என்று தனியார் துறை நிறுவனங்களால் அச்சம் வெளிப்படுத்தப்படுகின்றது, இதனால் இவர்களை ஒரேயடியாக நிராகரித்து விடுகின்றன, அல்லது இவர்களால் நிறைவேற்றி கொடுப்பதற்கு கடுமையான நிபந்தனைகளை முன்வைக்கின்றன. மேலும் தொழில் துறை சார்ந்த அனுபவம் இங்கு ஒரு பிரச்சினையாக இருப்பதோடு பல சந்தர்ப்பங்களில் பெரிய மனிதர்களின் சிபாரிசு தேவைப்படவே செய்கின்றது. இதே நேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை பொறுத்த வரை பாரிய தனியார் துறை முயற்சிகளை காண முடியாது உள்ளது. எனவே வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு இம்மாகாணங்களில் தனியார் துறைகளில் சரியான வேலை கிடைப்பது என்பது பெரும்பாலும் குதிரை கொம்புதான்.
வேலையற்ற பட்டதாரிகளின் அமைப்புகள் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் போன்றோருக்கு வேலை வாய்ப்பு கோரிக்கையை எழுத்துமூலம் பல சந்தர்ப்பங்களிலும் அனுப்பி வைத்து உள்ளன. ஆனால் பெரும்பாலும் கடிதங்களுக்கு பதில்கள் கிடைக்கவில்லை. அத்துடன் இவர்களை போன்றவர்களால் பொது தளங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றி கொடுக்கப்படாமல் காற்றில் பறக்க விடப்பட்டு உள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டு வந்திருந்தார். வேலையற்ற பட்டதாரிகள் போராட்டங்களை மேற்கொண்டு வாடி வதங்க தேவையில்லை, இவர்களின் பிரச்சினைக்கான தீர்வு மே மாதத்தின் கடைசி வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்படும் என்று பகிரங்கமாக அறிவித்து இருந்தார். ஆனால் இலவு காத்த கிளியாக வேலையற்ற பட்டதாரிகள் இந்நாளை எதிர்பார்த்து காத்திருந்ததுதான் மிச்சம். தீர்வோ, தீர்மானமோ வெளியிடப்படவில்லை.
இதே நேரம் பெருந்தோட்ட பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களை கற்பிக்க பட்டதாரி ஆசிரியர்களை இந்தியாவில் இருந்து கொண்டு வர அரசாங்கம் உத்தேசித்து உள்ளது தொடர்பான செய்திகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கை விஜயத்தோடு சேர்ந்தால் போல வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழ்நாட்டில் இருந்து ஆசிரியர்களை கொண்டு வர இந்திய தூதரகம் ஊடாக நடவடிக்கைகளை எடுக்கின்றார் என்று இராஜாங்க கல்வி அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார். இத்திட்டத்தை ஆசிரியர் தொழிற்சங்கங்கள் வன்மையாக கண்டித்து உள்ளன. அத்துடன் பாராளுமன்றத்தில் இவ்விடயம் தொடர்பாக கடுமையான வாத, பிரதிவாதங்கள் இடம்பெற்று உள்ளன. நாட்டில் வேலையற்ற பட்டதாரிகள் உரிய வேலை வாய்ப்புகளை கோரி போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில் இவர்களை கொண்டு வெற்றிடங்களை நிரப்பாமல் வெளிநாட்டில் இருந்து பட்டதாரி ஆசிரியர்களை வரவழைக்கின்ற முயற்சி விபரீதமானது ஆகும்.
2004 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த சந்திரிகா அரசாங்கம் 40000 பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை வழங்கியது. அதே போல 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் 53000 பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை வழங்கியது. ஆனால் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்களை அடுத்தே இந்நியமனங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் போராட்டங்களை அடக்க அந்த அரசாங்கங்கள் இரும்பு கரங்களை பயன்படுத்தி இருந்தன என்பதை மறுப்பதற்கு இல்லை. வேலையற்ற பட்டதாரிகள் நல்லாட்சி அரசாங்கத்திலும் போராட்டங்களை பல வழிகளிலும் முன்னெடுத்தபோது இந்த அரசாங்கம் சில கைதுகளை மேற்கொண்டது என்பதற்கு அப்பால் இப்போராட்டங்களுக்கு பெரிய அளவில் இடையூறுகளை ஏற்படுத்தவில்லை. ஆனால் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கப்படுவதாகவும் இல்லை. நாடளாவிய வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் 100 நாட்களை கடந்த செவ்வாய்க்கிழமை கண்டது. நாடளாவிய வேலையற்ற பட்டதாரிகள் அவர்களின் பிரச்சினை தீர்த்து கொடுக்கப்படுகின்ற வரை இனி வருகின்ற எந்தவொரு தேர்தலிலும் வாக்களிக்க போவதில்லை என்கிற திடசங்கற்ப தீர்மானத்தை இத்தருணத்தில் எடுத்து உள்ளார்கள்.
அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் சங்க தலைவராக எம். திலிபன் உள்ளார். இவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ துறையில் பயின்று 2014 ஆம் ஆண்டு வெளியில் வந்தவர். சங்க தலைவராக 2015 ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகின்றார்.
இவர் எமக்கு தெரிவித்த கருத்துக்களில் முக்கியமானவை வருமாறு:-
“ கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் 2015 ஆம் ஆண்டு மே மாதத்தில் 06 ஆம் திகதியும், 13 ஆம் திகதியும் கிழக்கு மாகாண சபையை சுற்றி வளைத்து அமைதியான முறையில் அதன் செயற்பாடுகளை முடக்கினோம். இந்நிலையில் முதலமைச்சர் நஸீர் அஹமட் எமது கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றி தருவார் என்று வாக்குறுதி வழங்கினார். ஆயினும் ஆளுனர் மீது முதலமைச்சரும், முதலமைச்சர் மீது ஆளுனரும் மாறி மாறி பழியை போட்டு கொள்வதால் எமது பிரச்சினை தீர்த்து கொடுக்கப்படுவதாக இல்லை.
பாராளுமன்றத்தில் எதிர் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது. ஆயினும் இது பொதுநல அக்கறையுடன் செயற்படுவதாக தெரியவில்லை இது எதிர் கட்சியாக நடக்காமல் அரசாங்கத்தை தாங்கி பிடிக்கின்ற சக்தியாகவே நடக்கின்றது. கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் 15 நாட்கள் சுழற்சி முறையில் கிழக்கு மாகாண சபை முன்பாக அமர்ந்து உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டோம். எதிர் கட்சி தலைவர் சம்பந்தர் எம்மை நேரில் வந்து பார்த்து, எமது பிரச்சினையை செவிமடுத்து, உரிய தீர்வு நடவடிக்கையை அறிவிக்க வேண்டும் என்று கோரினோம். ஆயினும் அவர் எம்மை வந்து பார்க்கவே இல்லை. மாறாக தொலைத் தொடர்பு மேற்கொண்டு எம்மை கலைந்து செல்லும்படி கோரினார். எமது பிரச்சினையை தீர்த்து தருவார் என்று உறுதிமொழி வழங்கினார். ஆயினும் இவர் எமக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இது வரை குரல் எழுப்பவே இல்லை.
நல்லாட்சி அரசாங்கத்தை சிறுபான்மை மக்களே உருவாக்கி இருந்தனர். ஆயினும் அரசியல் தீர்வு, அரசியல் அமைப்பு திருத்தம், நில விடுப்புகள் போன்றவை தொடர்பாக சிறுபான்மை மக்களுக்கு வழங்கி இருந்த வாக்குறுதிகளையே இந்த அரசாங்கம் நிறைவேற்றி கொடுப்பதாக இல்லை. பிறகு எப்படி வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை இந்த அரசாங்கம் தீர்த்து கொடுக்கும் என்பதில் இனியும் நம்பிக்கை வைத்திருக்க முடியும்? பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சுங்க தீர்வை அற்ற கார்கள், ஆடம்பர வீடுகள் ஆகியவை அடங்கலான வர பிரசாதங்கள், சிறப்பு சலுகைகள் போன்றவற்றை வழங்குவதிலேயே இந்த அரசாங்கம் குறியாக உள்ளது. மக்களின் வரி பணத்தில் இவர்கள் இவ்விதம் சொகுசு வாழ்க்கை நடத்துகின்றனர். ஆனால் மக்கள் அன்றாட, அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதற்கான பணம்கூட இல்லாமல் அவதிப்படுகின்றனர். இந்த அரசாங்கத்தின் ஆதரவுடன் கூடிய இனவாத, மதவாத நடவடிக்கைகளை பார்க்கின்றபோது இதை நாசகார அரசாங்கம் என்றுதான் உண்மையில் சொல்ல வேண்டி உள்ளது. நல்லாட்சி மீது சிறுபான்மை மக்களுக்கு இப்போது சிறிதளவும் நம்பிக்கை இல்லை என்பதே உண்மையான நிலை ஆகும். ஆட்சி மாற்றத்தில் நம்பிக்கை வைத்தது குறித்து இப்போது கழிவிரக்கப்படுகின்றனர்.
நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்து உள்ள பெருந்தேசிய கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சி கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையை வைத்து இம்மாகாண சபையின் ஆட்சியை அடுத்த தேர்தல் மூலம் பிடிக்க திட்டமிட்டு மூலோபாயங்களை நகர்த்துகின்றது என்று நம்பகமாக அறிகின்றோம். எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டு மாகாண சபையை கைப்பற்ற வேண்டும், அப்போது கிழக்கு மாகாணத்தின் வேலையேற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை உடனடியாக தீர்த்து தர முடியும் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைமையுடன் ஐ. தே. க பேரம் பேசி உள்ளது என்று இத்தகவல்கள் கூறுகின்றன.
இதே நேரம் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் ஒப்பிடுகின்றபோது தமிழ் அரசியல்வாதிகளுக்கு சமூக அக்கறை இல்லை என்றே கூறலாம். வயலை உழுகின்ற மாடு வயலில் காணப்படுகின்ற நெல்லில் கொஞ்சத்தை தின்பது போல சில பல சம்பவங்கள் நடந்தாலும்கூட வேலையற்ற முஸ்லிம் பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்த்து கொடுக்க வேண்டும் என்பதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஓரளவு பற்றுறுதியுடன் செயற்படுகின்றார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம். பிகள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் போன்றோர் பதவிகளை அலங்கரித்து, அப்பதவிகள் மூலமாக தனிப்பட்ட பலன்களை அனுபவிக்கின்றார்களே மக்களின் பிரச்சினைகள் தீர்த்து கொடுக்க சற்றேனும் முயற்சிக்கின்றார்கள் இல்லை.
வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினை ஆட்சியாளர்களால், அரசியல்வாதிகளால் தீர்த்து கொடுக்கப்படும் என்கிற நம்பிக்கை இப்போது வெறுமனே நப்பாசையாக மாத்திரம் மிஞ்சி உள்ளது. எனவே நாம் தொடர்ந்து கோமாளிகளாகவும், ஏமாளிகளாகவும் நடத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. ஆகவே வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினை தீர்க்கப்படுகின்ற வரை எதிர்கால தேர்தல்களை புறக்கணிப்பது என்கிற திடசங்கற்ப தீர்மானத்தை நாடளாவிய வேலையற்ற பட்டதாரிகள் எடுத்து உள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற கிழக்கு மாகாண சபை தேர்தலை கிழக்கு மாகாணத்தின் வேலையற்ற பட்டதாரிகள் ஒருமனதாக பகிஷ்கரிப்போம் என்பதில் மாற்றம் இல்லை. ”