நவதாராளவாதமும் சர்வாதிகார ஜனரஞ்சகவாதமும்

(Ahilan Kadirgamar)

இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஏற்பட்ட பூளோக பொருளாதார நெருக்கடி, உலகைத் தொடர்ந்தும் சின்னாபின்னப்படுத்துகிறது. பூகோள பொருளாதார வளர்ச்சி, சர்வதேச வர்த்தகம் ஆகியவற்றின் பாரிய வீழ்ச்சியும், இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்குச் சான்று பகர்கின்றன. மறுபுறத்தில், இந்த நெருக்கடியின் விளைவுகள், ஜனரஞ்சக சர்வாதிகாரத்தின் தோற்றத்தையும் உறுதிப்படுத்தலையும் நெறிப்படுத்துகின்றன.

1980களில் தொடங்கிய நவதாராளவாத பூகோளமயமாதலானது, சுதந்திர வர்த்தகம், சுதந்திரமான மூலதனம் வாங்கல், அரச தலையீட்டை அகற்றுதல், தனியார்மயப்படுத்தல் என்பவற்றின் மீதான ஊக்கமளிப்பில் மையம் கொண்டிருந்தது. மீயுயர் பூகோளமயமாதல் காலமெனக் கருதப்பட்ட 1990களிலான பூகோள பொருளாதார வர்த்தக வளர்ச்சி இரட்டிப்பாகி, சில சமயம் மும்மடங்காகியது.

2008 நெருக்கடியின் பின்னர், பூகோள வர்த்தக வளர்ச்சி, பூகோள பொருளாதார வளர்ச்சியை விடக் குறைவாக உள்ளது. உலக ஏற்றுமதிப் பொருட்களின் தொகையாகவன்றி, பெறுமதியாகப் பார்ப்பின், அதில் அண்மைக்காலத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

பூகோள வர்த்தகத்தில் இவ்வாறு வீழ்ச்சி காணப்படினும், உலகெங்கும் உள்ள அதிகாரமிக்க வலதுசாரி ஆட்சிகளும் அரசியல் சக்திகளும், சர்வதேச வர்த்தகத்துக்கு எதிப்ப்பை வெளிப்படையாகக் காட்டுவதுடன், பாதுகாப்புக் கொள்கைக்காக பெருங்குரல் எழுப்புகின்றன. வேலைவாய்ப்புகள் குறைதல் மற்றும் தமது நாட்டில் குறைந்துவரும் உற்பத்திகளுக்கான சர்வதேச சந்தை குறைதல் என்பவற்றுக்காக, குடிவரவாளர்கள் உட்பட சிறுபான்மையினர் மீது, அவர்கள் குற்றம் காண்கின்றனர்.

2008 நெருக்கடி, நவதாராளவாதத்தின் முடிவையும் சர்வாதிகார ஜனரஞ்சகவாதத்தின் புதிய சகாப்தத்தின் வருகையையும் காட்டுகிறதா, அல்லது சர்வாதிகார ஜனரஞ்சகவாதத்தின் அரசியலைத் தழுவும் நவதாராளவாத பூளோக முதலாளித்துவத்தின் தொழிற்படுகையில்ஒரு மாற்றமா?

ஐக்கிய அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவில் விளாடிமிர் புட்டின், இந்தியாவின் நரேந்திர மோடி, துருக்கியில் றிசெப் தய்யீப் ஏர்டோவான் ஆகியோரும், சர்வாதிகார ஜனரஞ்சகவாதத்தின் வெளிப்படுத்தல்கள் ஆவர். தாராளவாத ஜனநாயக நியமங்கள் மீதான அவர்களின் அலட்சியப் போக்கு, அவர்களின் சர்வாதிகாரத்தைக் காட்டிக் கொடுக்கின்றது.

அவர்களது வெளிநாட்டு வெறுப்பு மற்றும் தமது இனத்தவரைப் பாதுகாப்பதாகக் கூறும் இனவாதப் பேச்சுகள், ஜனரஞ்சகவாதத்தின் குணங்குறிகளாக உள்ளன. ஐரோப்பாவின் மற்றும் உலகின் வேறு பகுதிகளில் உள்ள தீவிர வலதுசாரிக் கட்சிகளின் தேர்தல் வெற்றிகளுடன், இவ்வாறான சர்வாதிகார ஜனரஞ்சகவாதம், அதிகரித்து வருகிறது.

இருப்பினும், சர்வாதிகார ஜனரஞ்சகவாத எண்ணக்கரு, சில தசாப்தங்களாக இருந்து வந்துள்ளது. பிரபலமான மார்க்ஸிஸ கலாசார விமர்சகரான ஸ்டுவேர்ட் ஹோல், 1970களின் பின்பகுதியில், மார்கரெட் தட்சரின் எழுச்சியுடன், பிரித்தானிய அரசியலில் உண்டான மாற்றத்தைப் பகுப்பாய்வு செய்ய, சர்வாதிகார ஜனரஞ்சகவாதம் எனும் எண்ணக்கருவைப் பயன்படுத்தினார்.

அந்த நேரத்தில் காணப்பட்ட பூளோக பொருளாதார வீழ்ச்சி மற்றும் வலது நோக்கிய தீர்க்கமான அரசியல் போக்கு என்பவற்றுக்குத் துலங்கலாக, ஹோலின் விமர்சன ரீதியாக எழுத்துகள் இருந்தன.

தட்சரின் தத்துவார்த்த பேச்சுகளுக்கும் அமைப்பு ரீதியான பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதாகக் கூறப்பட்ட அவரது நிகழ்ச்சித் திட்டங்களுக்கும் இடையே காணப்பட்ட முரண்பாடுகளை, ஹோல் இனங்கண்டார். தட்சரிஸம், பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கப் போவதுமில்லை, அது பொருளாதார உறுதித் தன்மையை அடையப் போவதுமில்லை என, ஹோல் எதிர்வுகூறினார்.

வலது நோக்கிய ஆபத்தா தத்துவார்த்தத் திருப்பத்தை அவர் இனங்கண்டார். மேலும், வலதுசாரி ஆட்சிகளின் தலைவிதியை, பொருளாதாரக் காரணிகள் மட்டும் தனித்துத் தீர்மானிக்கப் போவதில்லை எனவும் கண்டார்.

சமூக நலன்சேவை அரசாங்கத்தின் கலைப்பு, தொழிற்சங்கங்கள் மீதான தாக்குதல்கள், இனவாதச் சட்டம் – ஒழுங்குக் கொள்கைகள் என்பவற்றால் சீரழிந்துள்ள வெள்ளைத் தொழிலாளர்கள், கறுப்புத் தொழிலாளர்கள், பெண்ணியவாதிகள் ஆகியோரிடையே, நிலைத்து நிற்கக்கூடிய வரலாற்று ரீதியான கூட்டு ஒன்றைக் கட்டியெழுப்புமாறு, அவர் இடதுசாரி சக்திகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

கவனிக்க வேண்டியது யாதெனில், நவதாராளவாத சகாப்தத்தின் நாம் இப்போது எடுத்துக் கொள்ளும் 1970களின் பிற்பகுதியிலேயே, ஹோல், சர்வாதிகார ஜனரஞ்சகவாதம் எனும் எண்ணக்கருவைப் பயன்படுத்தினார்.

1970களின் இறுதியிலிருந்து 1980களின் தொடக்கம் வரை, நவதாராளவாதச் செயற்றிட்டங்களை ஆரம்பத்தில் நகர்த்தியவர்கள், ஐக்கிய இராச்சியத்தின் தட்சர், அமெரிக்காவின் றேகன், சிலியின் பினாசே, ஏன் இலங்கையின் ஜே.ஆர். ஜெயவர்தன ஆவர். இவர்கள், பொருளாதாரணத்தை மீளமைக்கக் கைக்கொள்ளும் முறைகள், சர்வாதிகாரத்தன்மையினவாக இருந்தன.

1970களின் பாரிய பொருளாதார வீழ்ச்சியின் பின்னர், முதலாளி வர்க்கத்தின் இலாபத்தை அதிகரித்தல், சந்தைகளை விரிவாக்கல் என்பனவற்றை முன்னெடுத்த இந்த ஆட்சிகள், தொழிற்சங்கங்களையும் சமூக நலன் சேவைகளைகளைக் குலைக்கும் நவதாராளவாதக் கொள்கைகளை எதிர்த்த மக்கள் இயக்கங்களையும் நசுக்க, அடக்குமுறையான அரச அதிகாரத்தைப் பிரயோகித்தன.

இரட்டைச் சவால்

இப்போதுள்ள உலகத்தில் போலவே, இலங்கையில் நாம், நவதாராளவாதக் கொள்கைகளை வேகப்படுத்துவதற்கும் சர்வாதிகார ஜனரஞ்சகத்துக்கும் இடையில் அகப்பட்டுள்ளோம். எந்த விலைகொடுத்தும் நவதாராளவாதக் கொள்கைகளை அமுல்படுத்த, தீவிர வலதுசாரி ஐ.தே.க முயலும் வேளையில், ராஜபக்‌ஷ ஆட்சி, பெருமிதவாத சக்திகள் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரின் ஆதரவை ஜனரஞ்சக வழிகளில் அணிதிரட்டி, அதன்மூலம் மீண்டும் பதவிக்கு வர முயல்கிறது.

சிறிசேன – விக்கிரமசிங்க அரசாங்கம், ராஜபக்‌ஷவின் நவதாராளவாதச் செயற்றிட்டங்களை விரிவுபடுத்திவருகிறது. சைட்டத்தைப் பாதுகாப்பதன் மூலம் வெளியாகியுள்ள சுகாதாரத் துறையை மற்றும் கல்வித்துறையைத் தனியார்மயப்படுத்தல், துறைமுக நகர மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் போரிய பாரிய உட்கட்டுமான செயற்றிட்டங்கள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவு கோரப்பட்ட நிதிமயப்படுத்தல், அதற்கான சர்வதேச நிதி மையத்தை அமைத்தல் என்பவை, இந்த விரிவாக்கத்தின் பகுதிகளே. ராஜபக்‌ஷ ஆட்சி, சர்வாதிகார, இராணுவ அதிகாரத்தைப் பயன்படுத்தி, தொழிற்சங்கங்களையும் மக்கள் இயக்கங்களையும் பயமுறுத்தியும் தாக்கியும் வந்தது. இப்போதுள்ள அரசாங்கத்தின் தத்துவார்த்த மற்றும் உடல்சார்ந்த தாக்குதல்கள், அதன் சந்தை விரிவாக்கம் நோக்கிய நிபந்தனையற்ற கடப்பாட்டில் சார்ந்துள்ளது.

இந்தப் பின்னணியில், ராஜபக்‌ஷ ஆட்சியின் எச்சங்கள், உலகின் வேறு பகுதிகளில் காணப்படும் ஜனரஞ்சக அலைகளைப் பயன்படுத்த எண்ணுகின்றன. வீழ்ச்சிகண்டுவரும் இலங்கையின் மீட்பர் என, ராஜபக்‌ஷவைக் காட்டி, வளர்ந்துவரும் பொருளாதார அதிருப்தியைத் தமது தேவைக்கேற்ப நெறிப்படுத்திப் பயன்படுத்தவும், அவர்கள் விளைகின்றனர்.

நவதாராளவாதமோ அல்லது சர்வாதிகார ஜனரஞ்சகவாதமோ, முதலாளித்துவ நெருக்கடிக்குத் தீர்வாகாது. உண்மையில் இவர்கள் செய்வது, சமூகத்தின் சமத்துவமின்மையையே கூர்மைப்படுத்தும ஒரு பொருளாதாரத்தை, வெவ்வேறு வழிகள், பொறிமுறைகள் ஊடக வலுப்படுத்துவதே. நவதாராளவாதம், சமூக உறவுகளை, தனியான தன்மையானதாக மாற்ற முயல்கிறது.

மேலும் அது, ஓரங்கப்பட்ட சமூகத்தின் கூட்டு எதிர்ப்பை ஒடுக்க, அரச அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. சர்வாதிகார ஜனரஞ்சகவாதம், சிறுபான்மையினரைக் காரணமாகக் காட்டியும் வன்முறையைத் தூண்டக்கூடிய வெளிநாட்டவருக்கு எதிரான வெறுப்பூட்டல் மூலமும், வர்க்க ஒடுக்குமுறையிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயல்கின்றது.

சுதந்திர வர்த்தகம், பூகோள மயமாதல், தனியான பொறுப்பு என நவதாராளவாதத்துக்குப் பதிலாக, சர்வாதிகார ஜனரஞ்சகச் சிந்தனை பாதுகாக்கப்படும் பொருளாதாரம், பொருளாதார தேசியம் என்பதைப் பிரதியீடு செய்கிறது. மேலும் அது, சிறுபான்மையினர், குடிவரவாளர்கள் ஆகியோர் மீது பழிபோடுகிறது. ஆனால், இருதரப்பினரும் தற்கால முதலாளித்துவத்தின் நிதித் திரட்சிக்குக் காரணமாகவுள்ள பூகோள நிதி முதலீட்டுப் பாய்ச்சலைக் கண்டிப்பதில்லை.

ட்ரம்ப்பின் முரட்டுத் துணிச்சல்

முதலாளித்துவ நெருக்கடிக்குத் தீர்வுகாண, பொருளாதார முறையில் அடிப்படை மாற்றம் ஏற்பட வேண்டும். ஆயினும், உலகின் முதல் வல்லரசு எனக் கூறக்கூடிய அமெரிக்காவால் கூட, 2008 நெருக்கடியின் பாரிய அதிர்ச்சியை அனுபவித்தும், அதன் கொள்கைகளை மாற்ற முடியவில்லை.

முதலாளித்துவ முறையின் அச்சாணியில் உள்ள பொருளாதார உறுதிப்பாடின்மை, அரசியல் உறுதிப்பாடின்மை, அரசியல் உறுதிப்பாடின்மைக்குப் பங்களிப்புச் செய்கிறது. 2008 நெருக்கடி, நவதாராளவாத முறையில் கையாளப்பட்டமை, ட்ரம்ப்புக்கு தனது இனவாத, வெளிநாட்டு வெறுப்பு, ஜனரஞ்சகத் திட்டத்துக்கு வழிவகுத்தது.

இந்தப் பின்னணியில், இனிமேல் அமெரிக்கப் பொருளாதாரத்தில் வரக்கூடிய நெருக்கடிகள் அடங்கலாக நிதி நெருக்கடிக்குத் தீர்வுகாண, எதிர்பார்த்தது போலவே ட்ரம்ப் எதுவும் செய்யவில்லை.

ட்ரம்ப் தனது வாக்குறுதியில் உறுதியாக உள்ள நிலையில், ட்ரான்ஸ் பசுபிக், ட்ரான்ட்ஸ் அத்திலாந்திக் வர்த்தக உடன்படிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல மறுத்துள்ளார். நிதி மூலதனத்தின் சர்வதேசப் பாய்ச்சலையும் நிதி மயப்படுத்தலையும் கேள்விக்கு உட்படுத்த மறுக்கிறார்.

உண்மையில், 2008 நெருக்கடி மற்றும் அமெரிக்காவின் சமத்துவமின்மை மேலும் அதிகரித்தமைக்குப் பொறுப்பான “வோல்ட் ஸ்ட்ரீட்டை” விசாரிப்பதற்குப் பதிலாக, அவரது நிர்வாகம், நிதியாளர்களால் நிரம்பி வழிகிறது.

வெள்ளைப் பெருமிதவாதிகளுக்கன ட்ரம்ப்பின் ஆதரவு போலவே, அவரது பொருளாதார தேசியமும், அவரது ஜனரஞ்சக அதிகாரத்தை உறுதி செய்வதற்கான வலதுசாரி சமூக அடித்தளத்தை அணி திரட்டல் நோக்கில் இயக்கப்படுகிறது. ட்ரம்ப்பின் முரட்டுத் துணிச்சல், அமெரிக்காவின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்மானிக்க மாட்டாது.

அது, அமெரிக்காவின் செல்வாக்கு, அதிகாரத்தைக் கெடுப்பதாக உள்ளதெனவும் கூறலாம்.
ஆனால் ட்ரம்ப், தனது நடவடிக்கைகளின் மூலம், அமெரிக்கச் சமூகத்தைப் பிளவுபடச் செய்கின்றார். மேலும் வன்முறை மற்றும் யுத்தங்கள் அடங்கலாக, இது பாரிய சர்வதெச துன்பத்துக்கும் காரணமாகலாம்.

சமத்துவம்

இந்த அடிப்படையில், தொழிற்சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், சமூக இயக்கங்கள் போன்ற முற்போக்குச் சக்திகள் முன்னால் உள்ள சவால், நவதாராளவாதம் மற்றும் சர்வாதிகார ஜனரஞ்சகவாதத்தை எதிர்ப்பதாகும். ஆனால், எதிர்ப்பு மட்டும் போதாது.

பரந்துபட்ட முற்போக்குக் கூட்டணிகளைக் கட்டியெழுப்பும் ஒரு மாற்றுத் திட்டமும் தத்துவார்த்த ரீதியான போராட்டத்துக்கான அடிப்படைகளைக் கட்டியெழுப்புதலும், அவசர தேவைகளாக உள்ளன.

இதுபோன்ற மாற்று வழிக்கான முக்கிய களம், சமத்துவத்துக்கான கோரிக்கை ஆகும். வர்க்கம், பால்நிலை, இனம், சமயம், சாதி, வேறு சமத்துவமின்மைகளை எதிர்க்கும் சமத்துவங்களுக்கான தத்துவார்த்தப் போராட்டமே அது.

சத்துவத்தைக் கேட்பது என்பது, சட்டத்தின் முன்னே சமத்துவம் பற்றி வாய்வீச்சைக் காட்டுவதில்லை. நவதாராளவாத பொருளாதாரச் செயன்முறையான தனியார்மயமாக்கல், ஏழைகளாக்குதல், சிறுபான்மையினர், “வெளியாட்கள்” ஆகியோருக்கு எதிரான ஜனரஞ்சகத் தாக்குதல்களுக்கு எதிரான அணி திரட்டல் என்பவை அவசியமாகும்.

இலவச சுகாதாரம், இலவசக் கல்வி, உணவு மானியம், பொதுசன வீடமைப்பு என்பவை மக்களுக்கு உறுதிசெய்யப்பட்டு, பொருளாதார ஜனநாயகம் இல்லாத போது, சமத்துவம் என்பது அர்த்தமற்றதாகும். மேலும் இது, கௌரவமான வாழ்வுக்கு கௌரவமான வேலை எனவும் பொருள்படும். வருமானம் மற்றும் செலவு சார்பான சமத்துவமின்மையைக் குறைக்கும் வகையிலான மீள்பகிர்வும், இதற்கு அவசியம். இது, முற்போக்கான வரி அறவீடு, செல்வ வரி, சமூக நலன்புரிச் சேவைகள் கிடைத்தல் என்பவை மூலம் சாத்தியமாகும்.
மூலதனத்தின் நன்மை கருதி, வர்த்தக நட்பான சூழலை உரூக்குவதைத் தவிர, வேறு வகிபாகங்களைக் கொண்டிராத, தனியார் மயப்படுத்திய பொறுப்புக்கான உந்துதலே, நவதாராளவாதம் ஆகும்.

இதை தட்சர், மிகப் பிரபல்யமான தனது மேற்கோளான, “சமூகம் என்று ஒன்று இல்லை” மூலம் வெளிப்படுத்தியுள்ளார். சர்வாதிகார ஜனரஞ்சகவாதத்தில், மூலதனத்தின் நிகழ்ச்சிநிரல் இருக்கும். ஆனால் அங்கு ஒரு சமூகம் மட்டுமே இருக்கும். அது ஒரே மாதிரியானதாக, ஓர் இனம் மட்டும் கொண்ட அல்லது இனவாதச் சமூகமாக இருக்கும்.

சமூகம் தனது பன்மைவடிவில் சகல மக்களினதும் சமூக, பொருளாதார வாழ்வை இலக்காகக் கொண்ட கட்டுப்பாட்டுடன் இருப்பது, பாதுகாக்கப்பட வேண்டும், வளப்படுத்தப்பட வேண்டும். அந்தச் சமூகமே, சமத்துவம் பற்றிய உண்மையான எண்ணக்கருவால் நன்மையடையும்.