பிறப்பும் இறப்பும் எம் கையில் இல்லை என்றாலும் வாழ்தல் நாம் வகுத்துக்கொள்ளும் வழிமுறையில் செல்கிறது. சுயநலம், உறவுகள் நலம், பொதுநலம் என்ற தெரிவும் எமதே. அடிப்படையில் நாம் சுயநலம் கொண்டவராக ஆரம்பித்து உறவுகளின் கலப்பில் அவர் சார்ந்த நலம் பேணும் நிலைக்கு ஆட்பட்டு பின்பு சமூகப் பாதிப்பில் தான் பொதுநலம் பற்றிய சிந்தனையில் ஈடுபடுகிறோம். அதில் ஓரளவு எமது பங்களிப்பை செய்தாலும் சுயநலமும் உறவுகள் நலமும் முன்னிலைப்ப டுதல் யதார்த்தம்.
ஆனால் அந்த யதார்த்தம் தவிர்த்து பொதுநலம் பேணி வாழ்ந்த மனிதர்கள் எம் மத்தியில் வாழ்ந்து மறைந்ததும் வரலாறு. அன்று கல்விக்காக மேற்குலகம் சென்ற காந்தி தென்னாபிரிக்காவில் அதிகூடிய வருமானம் பெறுகின்ற வக்கீலாக வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அங்கும் இந்திய மக்களின் நிலமை மேம்பட போராட்டங்கள் செய்தார். அதே வேளை இந்த நிலமையின் மூலவேர் அடிமைப்பட்ட இந்தியாவில் இருக்கிறது என்பதால் தான் அவர் இந்தியா திரும்பி இந்திய விடுதலைக்கு போராடினார்.
அடிமைப்பட்டு இருக்கும் தன் நாடு இனம் மக்கள் பற்றிய சிந்தனை கொண்டவர் எல்லாம் பொதுநலன் பேண தம் சுயநலம் உறவுகள் நலம் பற்றிய சிந்தனையை சிந்தையில் கொள்ளாமாட்டார். காந்தி, நெல்சன் மண்டேலா, சேகுவேரா, கோசிமின், மாவோ, சுபாஸ் சந்திரபோஸ், என பல்வேறு பொது நலவாதிகளைப் பற்றியெல்லாம் பலவாறு கேட்டும் வாசித்தும் அறிந்த எனக்கு இரத்தமும் சதையுமாய் என்னோடு நண்பனாய் தோழனாய் தலைவனாய் வாழ்ந்த நாபா பற்றிய நினைவு மீண்டும் வருகிறது.
நவம்பர் 19…. பல பதிவுகளில் அது மனிதம் பிறந்த தினம் என எழுதியது நிஜம் என்பதை இன்று அனுபவபூர்வமாக உணர்கிறேன். புலம் பெயர் தேசத்து வசதிகள், வேலை வாய்ப்புகள், வைத்திய வசதிகள், தொடர்பு சாதனங்கள், களியாட்டங்கள், பொழுதுபோக்குகள், சுற்றுலாக்கள் என விரும்பியதை செய்ய வசதியான ஏற்பாடுகள், வங்கிகளின் உதவிகள், கடன்அட்டை, அரச மானியங்கள், இப்படி நீண்டு செல்லும் புலம்பெயர் தேச வசதிகளை அனுபவிக்கும் போதெல்லாம் நாபாவின் நினைவு வருகிறது.
எழுபதுகளில் போராட்டம் பேரெழுச்சி கொள்ளாத காலத்தில். தாயக மக்கள் பெரும் துயர் துன்பங்கள் அடையாத காலத்தில் அரசின் அடக்குமுறை, சிங்கள திணிப்பு, தரப்படுத்தல், திட்டமிட்ட இனக்கலவரம் என ஒப்பீட்டளவில் எண்பத்து மூன்றுக்கு பின்னர் போன்ற தான நிலை ஏற்ப்படு முன்பே மக்கள் நலன் பற்றிய அக்கறையில் நாபாவின் பொது நல வாழ்வு தொடங்குகிறது. வீட்டுக்கு ஒரே ஆண்மகன். கூடவே மூன்று பெண் சகோதரிகள் என்றால் செல்லமான வாழ்க்கை பற்றி சொல்லத் தேவை இல்லை.
தாய் பாசம் தந்தையின் மறைவின் பின் மேலும் கூடுகையில் சுயநலமும் உறவுகள் நலமும் தான் மேலோங்கும். மாறாகா நாபா பொதுநல சிந்தனையில் தன்னை புடம்போட முயல்கிறார். அதனால் ஏற்ப்பட போகும் விளைவுகளை உணர்ந்த உறவுகள் அவரை மேல் படிப்பு என்ற சாட்டில் பொதுநல ஈடுபாட்டில் இருந்து அன்னியப்படுத்த இங்கிலாத்துக்கு அனுப்புகிறார்கள். அன்றைய நடுத்தர பெற்றோர் செயல் அவ்வாறுதான் இருந்தது. தங்கள் நலம் உறவுகள் நலம் மட்டும் முன்னிலைப்பட்ட காலம்.
ஆனால் நாபா அந்த வட்டத்துக்குள் அகப்படவில்லை. சுற்றி சுற்றி வரும் செக்கு மாட்டு வாழ்வு அவர் தெரிவல்ல. வரித்துக்கொண்ட சிந்தனைத் தெளிவை அவர் சிதைக்கவில்லை. சீர்படுத்திக்கொண்டார். லண்டன் அதற்கான களத்தை அவருக்கு வகுத்து கொடுத்தது. பிள்ளைக்கு பால் வாங்க பணம் இல்லை என்ற போதும் கார்ல் மாக்ஸ் பணம் என்னும் மூலதனம் என்ற தன் பொதுவுடைமை சிந்தனையை சீராக்கும் பணியை தொடர்ந்த லண்டன் நகரம் நாபவையும் ஈழ கனவு சுமந்தவரை சந்திக்க வைத்தது.
அது மாணவ பருவம் என்பதால் ஈழ புரட்சிகர மாணவர் அமைப்பு என்ற ஈரோஸ் உருவாக காரணம் ஆனது. தமது ஆக்கிரமிக்கப்பட்ட மண்ணின் மீட்சிக்காக போராடும் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தொடர்பை அவர்கள் பெற்றதும் ஆயுதபயிற்சிக்கு என அவர்களின் அரபு நாட்டு பாசறைகள் தம் கதவை திறந்தன. அதில் பயிற்சி முடித்த பலரில் நாபாவும் ஒருவர். பலவிதமான வேலைத்திட்டங்களை செயல்ப்படுத்த இந்திய மண் தான் ஏற்றது என்பதால் தாய்நாடு திரும்பாத நாபா இந்தியா சென்றார்.
தாய் நாட்டில் தாய் வீட்டில் கிடைத்த எந்த சொகுசும் தமிழ் நாட்டில் அவருக்கோ அல்லது அன்று அவருடன் இணைந்து செயல்ப்பட்டவருக்கோ கிடைக்கவில்லை. காங்கேசன்துறை வாழ்வும் யாழ் நகர் வாழ்வும் லண்டன் வாழ்வும் தந்த வசதிகள் எதுவும் இல்லாத ஊரோடி வாழ்வுதான் அவரின் அரசியல் பயணம். தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று ஈழ ஆதரவாளர்களை சந்திப்பதும் அங்குள்ள அடக்கு முறைக்கு எதிரான அமைப்பு தோழர்களுடன் கலந்துரையாடுவதும் ஆரம்ப கால பணியானது.
அப்போது தான் விதியின் விளையாட்டு சூறாவளி ரூபத்தில் எமது தாயகத்தின் கிழக்கு மண்ணை சூறையாடியது. அது தாயகம் வரும் வாய்ப்பை நாபாவுக்கு தந்தது. அப்படி அவர் வந்தபோது தான் நான் அவரை முதன் முதல் மட்டக்களப்பு அரசடி வித்தியாலய புனர்வாழ்வு முகாமில் கண்டேன். அன்று எமக்குள் உருவான நட்பு தோழமையாக மாறி பின் அவரது தலைமையை ஏற்கும் மனநிலை என்னுள் ஏற்ப்பட்டது. இது பற்றி நான் பலமுறை பதிவிட்டு உள்ளதால் அதை தொடரவில்லை.
இங்கு நான் பதிய விரும்புவது ஒரு மனிதம் பற்றிய மனோ நிலை. வசதிகளை தேடி ஓடும் மனிதர்கள் மத்தியில் சுயநலம் தவிர்த்து தனது உறவுகள் நலம் பேணாமல் எவ்வாறு பொதுநலம் மட்டுமே வரித்துக்கொண்டு அவரால் இவ்வாறு வாழ முடிந்தது? அராஜகம் அவர் உயிர் பறிக்கும் வேளைவரை அவரது செயல் சிந்தனை எவ்வாறு இருந்தது என்பதை அறிந்தவர் அனைவரும் எனது இந்த பதிவை விழி நீர் கசியத்தான் படிப்பர். காரணம் நாபா என்றுமே தன்னலம் பற்றிய சிந்தனை அற்றவர் என்பதே.
நிதி வசதிக்கு குறைவில்லாத பெற்றோர். அன்பு காட்டும் சகோதரிகள், அரவணைக்கும் உறவுகள், கலந்து மகிழும் நண்பர்கள் என இருந்தும் ஏன் அவர் மாணவர் பேரவையில் அங்கமாக வேண்டும். தலைவர்களே தடம்மாறும் நிலை கண்டபின்பும் ஏன் ஈழ விடுதலை இயக்கத்தில் இணையவேண்டும். லண்டன் வாழ்வின் வசதிகள் கிடைத்தபின்னும் இன்று எம்மில் பலரும் வாழ்வது போலவே வாழாது ஏன் ஈரோஸ் அமைப்பில் இணைந்து பாலஸ்த்தீனத்தில் பயிற்சி பெற்று இந்தியா செல்ல வேண்டும்.
ராமகிருஸ்ண பரகம்சரை கண்ட விவேகானந்தர் போல நாபாவை கண்ட போது நான் உருகவில்லை. பலவித சந்தேகம், நானோ பல்கலைக்கழக படிப்பு முடிய வெளிநாடு சென்று வளமாக வாழ நினைக்கும் போது ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்து புனர்வாழ்வு வேலையில் ஈடுபடுதல் என்வரையில் மிகுந்த ஆச்சரியம் தந்த செயல். ஆனால் பழகி பார்த்தபின் எனக்கு அவர் பற்றிய புரிதல் ஏற்ப்பட்டது.
முதலில் விளைந்தது நட்பு. மிக நீண்ட பயணங்களை கிழக்கு மலையகம் தென்னிலங்கை என நாம் மேற்கொண்ட போதெல்லாம் நிதி பிரச்சனை நட்புக்கு சோதனை தரும். பசியில் வயிறு காந்தும். கையில் பணம் இருக்காது. தெரிந்த நபர் வீட்டில் உணவு கிடைக்கும் என கூட்டி செல்வார். நண்பர் மனைவி சாப்பிட வாங்கள் என்றால் சாப்பிட்டே வந்தோம் என கூறி என் வயித்தெரிச்சலைக் கூட்டுவார்.
வரும் வழியெல்லாம் புறுபுறுப்பேன். பொறுமையாக இருப்பிடம் வந்தபின் வெட்கமாய் இருந்தது என ஒரு வெகுளி சிரிப்புடன் தன்னிலை விளக்கம் தருவார். தோழமையின் முதல் நாற்று அன்றுதான் ஊன்றப்பட்டது. அதன் பின் தோழனுக்காக நான் பல வேலைகள் செய்தபோதும் ஒருமுறை அவன் முன்மொழிந்த கோரிக்கை தான் இவன்தான் என் தலைவன் என்ற எண்ணத்தை விதைத்தது.
அந்த நாள் தென்னிலங்கை தோழமை இயக்கத்துடன் இணைந்து நாம் அப்போதைய தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத்முதலியை அவரின் கள்ள காதலியின் கொழும்பு கல்கிசை வீட்டுக்கு வரும்போது கடத்தும் தயான் ஜயதிலக அணியினருடன் வகுத்த திட்டம். என்ன கோரிக்கை என்றபோது நாபா கூறியது பொருளாதார தடை விதிக்கப்பட்ட வடக்கிற்கு உடனடியாக நிவாரணம் அனுப்பு என்பதே.
போராளிகள் பசியில் செத்தால் போராட்டம் முடிவுக்கு வரும் என கணக்கு போட்ட அரசு பொருளாதார தடை விதித்த நேரம் மக்கள் பற்றிய கரிசனை மட்டுமே கொண்ட நாபா உடனடியாக மக்களை பட்டினி போடும் நிலையை நீக்க வேண்டு என கூறியது மட்டுமே அவரை என் தலைவராக ஏற்க வைத்தது. சுயநலம் இல்லாத ஒரு மனிதனை காண்பது அரிதான காலத்தில் நான் நாபவை கண்டேன்.
இத்தனை கோடி பணம் வேண்டும் அல்லது சிறை வாடும் எம் தோழர்கள் விடுதலை வேண்டும் என்ற கோரிக்கை எவராலும் வைக்கப்படலாம். அந்த பணத்தால் ஆயுதம் வாங்கி போராட்டம் தொடரலாம். சிறை பிடிக்கப்பட்ட தோழர்கள் வீடு திரும்பலாம் ஆனால் பொருளாதார தடையால் வாடும் சாதாரண மக்கள் நிலை மாறுமா? போராட்டம் மண்ணுக்காகவா? அல்லது மக்களுக்காகவா? என்பதே கேள்வி.
நாபாவின் பதில் மக்களுக்காக. அதனால் தான் அத்தனை போராளிகள் கண்ட ஈழக்கனவு இந்தியாவால் கலைக்கபட்டு மாகாண சபை உருவில் எம்மீது திணிக்கப்பட்ட போதும் தீர்க்க தரிசனமாக அதை முதல் படியாக ஏற்ப்போம் பின்பு எம் இலட்சியம் நோக்கி பயணிப்போம் என்றவர் நாபா. வடமராட்சி வீழ்ந்த பின்பு யதார்த்த நிலை உணர்ந்து யாழ் வரை இராணுவம் வருவதை அவர் விரும்பவில்லை.
மக்கள் இல்லாத மண்ணை அவர் நேசிக்கவில்லை. அதனால் வடமாராட்சியுடன் இடப்பெயர்வை தடுத்து மக்களின் இன்னலை நிறுத்த அவர் விரும்பினார். இல்லையென்றால் பின்பு நடந்தேறிய முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் முன்பே நடந்தேறி இருக்கும். இன்று ஒப்புக்காவது இருக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை நிர்வாகம் மாவட்ட சபை போல செயலற்று போயிருக்கும்.
ஒரு தலைவனின் செயல் தான் சார்ந்த இன நலன் கருதியதாக இருக்க வேண்டும். தன்னை சார்ந்தவர் நலன் கருதியதாக இருக்க கூடாது. இங்கு நாபா தன் இனம் மட்டும் அல்ல தான் நேசித்த மண்ணில் வாழ்ந்த அனைத்து இனத்தவர் நலன் பற்றியும் சிந்தித்து போல் எவரும் சிந்திக்கவில்லை. அதனால் தான் வடக்கு கிழக்கு மாகாண சபை சகல இனத்தவரும் கொண்ட மந்திரி சபையை அமைத்தது.
வாழ்வில் பல மேடு பள்ளங்களை கண்டுவந்தவன் என்ற அடிப்படையில் நான் எனக்கு கிடைத்த எந்த வசதி வாய்ப்புகளையும் தவிர்க்க விரும்பியதில்லை. பள்ளிப்பருவம் கல்லூரி வாழ்வு பல்கலைக்கழக படிப்பு காதல் திருமணம் என எதிலுமே மிச்சம் மீதி வைக்காது அத்தனையும் அனுபவித்தேன். எனக்கு என தரப்பட்ட எதையும் நான் முழுமையாக அனுபவிப்பதை தவிர்த்ததில்லை. அடுத்தவருக்கானதை எடுப்பது தவறு என்பது மட்டுமே என் நிலை. ஆனால் எனக்கானதை நான் இழக்க தயாரில்லை.
ஆனால் நாபா வாழ்ந்த வாழ்வை இன்று நான் நினைவு மீட்டி பார்க்கும் போது எப்படி ஒருவரால் இப்படி வாழ முடிந்தது என்று வியக்கிறேன். மற்றவர் பற்றி நான் ஒப்பீடு செய்யவில்லை. என்னை முன்னிலைப்படுத்தியே நான் இதை பதிவிடுகிறேன். அன்று நாபாவின் தோப்பில் நானும் ஒரு மரமாக இருந்திருக்கிறேன். ஆனால் நாபா போல நான் வாழவில்லை. அவர் வழி தொடர்ந்தேன். ஆனால் முட்களை மிதிக்கவில்லை. காரணம் என்னை பற்றிய அக்கறை எனும் என் சுயநலம். உறவுகள் நலம்.
அரசனாக வாழவேண்டிய சித்தார்த்தன் அரச மர நிழலில் புத்தர் ஆனார். வக்கீல் வருமானம் தவிர்த்து இந்திய விடுதலைக்கு போராடி ஹரம்சந் காந்தி மகாத்மா ஆனார். வெஞ்சிறையில் வாடி நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்க தந்தையானார். லிபியா விடுதலைக்கு போராடி ஓமர் முக்தார் பாலைவன சிங்கமானார். கியூபா விடுதலைக்கு பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்த சேகுவேரா கொரில்லா போர் பிதாமகன் ஆனார். மக்களை நேசித்து தோழமை போற்றிய நாபா எனது தலைவர் ஆனார்.
‘’என் நெஞ்சத்தில் தோழர் நாபா நினைவுகள் நீறு பூத்த நெருப்பாக என்றும் கனன்றுகொண்டிருக்கும்’’.
– ராம் –