நவ தாராளவாத அரசியல் பொருளாதார தோல்வி: அடுத்த நகர்வு என்ன?

2008ம் ஆண்டு அமெரிக்க வங்கிகளின் தவறான பொருளாதாரச் செயற்பாடுகளால் உலக அளவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. சந்தைப் பொருளாதாரத்தில் அரசின் தலையீடு தேவையில்லை எனவும், சந்தை நிலமைகள் அவற்றைச் சீர் செய்யும் சக்தியைக் கொண்டுள்ளன என்ற விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் 2008ம் ஆண்டு நெருக்கடிகள் சந்தைப் பொருளாதாரத்தின் பலவீனங்களை வெளிப்படுத்தின. அதனால் அரசுகளே வங்கிகளைக் காப்பாற்றும் நிலைக்குச் சென்றன. பல கோடி பணத்தை வழங்கி வங்கிகள் திவாலாகும் நிலையிலிருந்து காப்பாற்றப்பட்டன. அதாவது மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தியே வங்கிகள் காப்பாற்றப்பட்டன.

அதேபோன்ற நிலைமைகள் மீண்டும் எழுந்துள்ளன. உலகம் தழுவிய சந்தை நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன. வழங்கலை மேற்கொள்ளும் தொடர் சங்கிலிகள் அறுந்துள்ளன. இதனால் உலக சந்தைகளை நம்பி உள்ளுர் உற்பத்தியைக் கைவிட்ட இலங்கை போன்ற நாடுகள் இறக்குமதியும் இல்லாமல், உள்ளுர் உற்பத்தியையும் அதிகரிக்க முடியாமல் பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளன. அமெரிக்கா போன்ற நாடுகளில் பணக்காரர்களிடம் அதிக வரி விதிக்க வேண்டிய நிலைக்கு நிலமைகள் மாறியுள்ளன. கடந்த காலங்களில் பணக்காரர்களுக்கு வரி விலக்கு அளித்து அவர்கள் மேலும் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டுமென வாதிட்டு வந்த அரசியல்வாதிகள் தேசத்தின் பொருளாதாரத்தைப் பழைய நிலைக்கு எடுத்துச் செல்ல பணக்காரர்கள் தமது பங்கை வழங்க வேண்டுமென்று பேசத்தொடங்கினர் பல தரப்பில் இருந்தும் இவ்வகையான கருத்துக்கள் பலமாக எழுந்துள்ளன. ஏனெனில் தற்போதுள்ள பொருளாதாரச் சூழலில் முதலீட்டாளர்களும் முதலிட தயங்கி வருவதால் அரசாங்கமே முதலீட்டிற்கான வாய்ப்புகளை அதிகரித்தல் அவசியம் என்ற வலுவான கருத்து மேலோங்கி வருகிறது.

உணரப்பட்ட அரசின் பங்களிப்பு

இங்கு நாம் திறந்த பொருளாதாரம் மற்றும் அரசின் செயற்பாடுகள் தொடர்பாக கடந்த காலங்களில் இடம்பெற்றிருந்த விவாதங்கள் சிலவற்றை அவதானித்தல் அவசியமாகிறது. குறிப்பாக அமெரிக்கா தலைமையிலான மற்றும் ஐரோப்பிய சக்தி வாய்ந்த பல உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்கள் அரசின் தலையீடுகளை எதிர்த்தனர். அரசு என்பது சந்தை நடவடிக்கைகள் இடையூறில்லாமல் செயற்படுவதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டு அவை சிக்கலின்றிச் செயற்படுவதை உறதி செய்தலாகும். ஆனால் தற்போது அரசின் தலையீடு தவிர்க்க முடியாத அளவிற்கு ஏற்பட்டுள்ள நிலையில், குறிப்பாக சக்தி வாய்ந்த பல நிறுவனங்களை அரசாங்கம் காப்பாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், சந்தைப் பொருளாதாரத்தில் அரசின் பணியின் அவசியம் நன்கு புரியப்பட்டுள்ளது. எனவே சந்தைச் செயற்பாடுகள் மட்டும் தேசத்தின் பொருளாதாரத்தை செயற்படுத்த முடியாது என்பதும், அரசின் துணை அவசியம் என்பதும் தற்போது நன்கு புலனாகியுள்ளது.

இலங்கை நிலைமை

இத் தருணத்தில் இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள திறந்த பொருளாதாரச் செயற்பாடுகள் ஏற்படுத்தியுள்ள சவால்களை ஆராய்தல் அவசியமாகிறது. குறிப்பாக 80களில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட தாராளவாத பொருளாதாரச் செயற்பாடுகள் நாட்டில் காணப்பட்ட பாரம்பரிய தொழிற்துறைகளை முற்றாகவே முடக்கியது. அதேபோலவே உள்ளுர் உற்பத்திகளுக்குப் பதிலாக இறக்குமதிப் பொருட்கள் இலாபகரமானவை என்ற பெயரில் இறக்குமதிகள் அதிகரித்தன. அதனால் பல உள்ளுர் விவசாய உற்பத்திகள், கைத் தொழில்கள் கைவிடப்பட்டன. சுயாதீன சந்தைச் செயற்பாடுகளில் சகலரும் இணைந்து செயற்பட வாய்ப்புகள் உள்ளதாலும், சந்தைச் செயற்பாடுகளில் அரசின் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும் என்ற தீர்மானங்களாலும் பொருளாதார அடிப்படையில் மிகவும் நலிவடைந்த பிரிவினருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அதாவது சில மானியக் கொடுப்பனவுகளும், கட்டுப்பாட்டு விலை ஏற்பாடுகளும் நிறுத்தப்பட்டன. இத் தீர்மானங்கள் காரணமாக பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் தத்தமது வாழ்வைத் தொடர்வதற்காக குறைந்த சம்பளத்திற்காகவேனும் வேலையில் இணையும் அவசியம் ஏற்பட்டது. அரசினால் இயற்றப்பட்ட தொழிற்சங்க சட்டங்களும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பைப் பலவீனமாக்கின. மொத்தத்தில் குறைந்த கூலியில் உள்ளுர் மற்றும் சர்வதேச நிறவனங்கள் அதிக லாபம் பெறுவதற்கான நடைமுறைகளே செயற்படுத்தப்பட்டன.

இலங்கையில் சில உள்ளுர் சிறு கைத்தொழில் நிறுவனங்கள் உள்ளுர் மூலவளங்களை உபயோகித்து சிறந்த நிறுவனங்களாக வளர்ந்தன. அதேபோல சிறு வர்த்தகம் கிராமங்கள் தோறும் வளர்ந்தன. ஆனால் திறந்த பொருளாதார அறிமுகத்தின் பின்னர் ஏற்பட்ட இறக்குமதி வர்த்தகத்தினால் சிறு கைத்தொழில் உற்பத்திசாலைகள் இறக்குமதிப் பொருட்களின் தரத்துடன் போட்டி போட முடியாமையால் மூடப்பட்டன. அதேபோல வர்த்தகத்தில் பாரிய ‘சுப்பர் மார்க்கட்’ நிறுவனங்கள் உருவாகி சிறு வர்த்தகர்களின் வருமானங்களைப் பாதித்தன. இதனால் பல வேலை இழப்புகள் ஏற்பட்டன.

ஒரு காலத்தில் நாட்டின் பல பிரச்சனைகளுக்கு அரசின் தலையீடுகளே காரணம் என விவாதித்து வந்த பல பொருளியலாளர்கள் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளின் பின்னணியில் அரசுகளின் தலையீட்டின் அவசியம் பற்றிப் பேச முனைகின்றனர். 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் பின்னணியில் தற்போது உலகைப் பயமுறுத்தும் கொரொனா நோய் சந்தைப் பொருளாதாரம் தொடர்பாக அரசின் பங்கு குறித்த வாதங்களை அதிகரித்துள்ளது.

சமாந்தரமற்ற பொருளாதார நிலைமை

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக உலகில் செயற்படுத்தப்படும் தாராளவாத திறந்த பொருளாதாரச் செயற்பாடுகள் பல லட்சம் மக்களை வறுமையிலிருந்து காப்பாற்றிய போதிலும் ஏழை, பணக்காரர் என்போருக்கிடையேயான வருமான இடைவெளி மிகவும் அதிகரித்துள்ளது. நாம் கடந்த காலங்களில் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில்தான் கோடிபதிகள் பற்றி அறிந்தோம். ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் இந்தியா, சீனா மற்றும் பல நாடுகளில் கோடிபதிகள் உருவாகியுள்ளனர். வறுமை அதிகளவில் நிலவிய இந்த நாடுகளில் இவ்வாறாக கோடிபதிகள் உருவாவதற்கு திறந்த பொருளாதாரமே காரணியாக உள்ளது. அமெரிக்காவிலுள்ள 1சதவீத பணக்காரர்களின் வருமானம் உலகின் 50 சதவீத மக்களின் வருமானத்தைக் கொண்டிருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான வருமான ஏற்றத்தாழ்வு தற்போது புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள சில நிறுவனங்கள் பல துறைகளில் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன. உதாரணமாக உலகப் பிரசித்தி பெற்ற முகநூல் மற்றும் ருவிட்டர் போன்ற உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டிகள் இல்லாமையால் ஏகபோக ஆதிக்கம் காரணமாக பெரும் வருமானத்தைப் பெறுகின்றன. இந்நிலையில் இவற்றின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த அவை மேலும் உழைக்க வேண்டுமெனவும், அக் கம்பனிகளின் வருமானத்தில் கணிசமான தொகை வரியாக அறவிடப்படவேண்டுமெனவும், சமூகத்தின் கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் என்பவற்றில் அதிகளவு முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் இவற்றின் மூலமே நாட்டின் பொருளாதாரத்திலும், மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் உயர்ச்சியை அடைய முடியும் என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.

இத் தருணத்தில் நாம் மீண்டும் இலங்கையை நோக்கித் திரும்பினால் அங்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளது. இருப்பினும் தற்போது நடைமுறையிலுள்ள நவ தாராளவாத திறந்த பொருளாதாரச் செயற்பாடுகள் தொடர்பான விமர்சனங்கள் இன்னமும் ஆழமாகக் காணப்படவில்லை. 80களில் திறந்த பொருளாதாரச் செயற்பாடுகளை நிறைவேற்றும் பொருட்டு உருவாக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஆட்சிமுறை மேலும் இறுகிய வடிவமாக மாற்றப்பட்டு வருகிறது.

பொதுவாகவே நாட்டின் பொருளாதார கட்டுமானமே அதனை நிறைவேற்றுவதற்கான அரசியல் கட்டுமானத்தையும் தோற்றுவிக்கிறது. அதன் பிரகாரம் பார்க்கையில் நவதாராளவாத திறந்த பொருளாதாரச் செயற்பாடுகளை நிறைவேற்றும் நோக்கில் உருவாக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஆட்சிமுறை தற்போது அத் திறந்த பொருளாதாரம் தோற்றுவிட்ட நிலையிலும் தொடர்ந்து அவ்வாறான ஜனாதிபதி ஆட்சிமுறை மேலும் ஒரு வகை ராணுவ வகையிலான தீர்மானங்களை நோக்கிச் செல்வது பெரும் குழப்பமான நிலமைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஏற்கெனவே குறிப்பிட்டது போல உலக அளவில் நாட்டின் பொருளாதாரத்தில் அரசின் பங்கின் அவசியம் மிகவும் உணரப்பட்ட நிலையில் அதுவும் தேசிய பொருளாதார வளர்ச்சியில் மக்களின் பங்களிப்பு அவசியம் என்பது உணரப்பட்ட நிலையில் நாட்டின் அரசுக் கட்டுமானம் ஒருவகை சர்வாதிகார ராணுவ கட்டுமானமாக மாற்றமடைந்து செல்வதன் காரணம் என்ன? இவை நாட்டின் பொருளாதாரக் கட்டுமானத்தை மாற்றும் நோக்கம் கொண்டுள்ளதாயின் இவ்வாறான ராணுவ அடிப்படையிலான அரச கட்டுமானம் எதிர்பார்க்கும் பொருளாதார மாற்றத்தை உருவாக்குமா? அதற்கான அடிப்படை நியாயங்கள் என்ன? என்பது குறித்த விவாதங்கள் அவசியமாகின்றன.

சுதந்திர வர்த்தகம் என்ற பெயரில் செயற்படும் திறந்த பொருளாதார கோட்பாடுகள் தோல்வியடைந்துள்ளதால் மாற்று வழிகள் குறித்த விவாதங்கள் உலக அளவில் இடம்பெறுகின்றன. உதாரணமாக, சுதந்திரமான சந்தைச் செயற்பாடுகள் பாரிய பொருளாதார நெருக்கடிகளைத் தந்துள்ளதால் சந்தைச் செயற்பாடுகள் அரசின் தலையீட்டின் மூலம் அதாவது காத்திரமான கட்டுப்பாடுகள், தனியார் – அரசு இணைந்த முதலீடுகள், பொருளாதார செயற்பாடுகளில் அரசின் மேற்பார்வை என்பவற்றின் மூலம் காத்திரமான போட்டிப் பொருளாதார செயற்பாடுகளை உருவாக்க முடியும் என விவாதிக்கின்றனர்.

சீன முன்மாதிரி

இப் பிரச்சனையில் சீனாவின் குறுகிய கால பாரிய வளர்ச்சி பல முன்மாதிரிகளைத் தந்துள்ளது. குறிப்பாக தனியார் முதலீடுகளுக்கு அங்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ள அதேவேளையில் அவற்றிற்குப் போட்டியாக அரசின் முதலீடுகளும் உள்ளன. தனியார் முதலீடுகள் மக்களைச் சுரண்டும் நிலமைகளைக் கட்டுப்படுத்த அரசு மிகவும் கடுமையான சட்டங்களை அமுலாக்குகிறது. நாட்டின் பொருளாதார செயற்பாடுகளில் அரசு – தனியார் முதலீடுகள் ஒன்றை ஒன்று பாதுகாப்பதாகவும், அதேவேளை இதில் மக்களின் வாழ்க்கைத் தரம் அதிகரித்துச் செல்வதை இரு சாராரும் இணைந்து உறுதி செய்வதை அந்த இணைந்த செயற்பாடு உறுதி செய்கிறது.

சீனாவின் பொருளாதாரம் என்பது புதிய வகையிலானது மட்டுமல்ல, ஏற்கெனவே செயற்பாட்டிலுள்ள முதலாளித்துவ பொருளாதாரக் கட்டுமானத்தின் குறைபாடுகள் மீண்டும் தோற்றாதிருக்கும் வகையில் சில பொறிமுறைகள் செயற்படுத்தப்படுகின்றன. இதில் பிரதானமானது எதுவெனில் தனியார் முதலீடுகளுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திய வேளையில் அரச நிறுவனங்களும் அதேவர்த்தகப் போட்டியில் ஈடுபடுகின்றன. உள்நாட்டில் அதற்கேற்ற வகையில் உற்பத்திப் போட்டிகளுக்கான களங்கள் உருவாகி வருகின்றன.

இவ்வாறாக சீனாவின் பொருளாதாரம் குறித்து விவாதிக்கும் வேளையில் அங்கு நிலவும் ஆட்சிமுறை மற்றும் ஜனநாயகம் குறித்த விவாதங்கள் எழலாம். இங்கு எனது பார்வை என்பது கடந்த காலங்களில் திறந்த பொருளாதார செயற்பாடுகளில் அரசின் தலையீட்டை எதிர்த்த நிலமைகள் தற்போது மாறியுள்ள நிலையில் மாற்று வடிவங்கள் குறித்த சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதாகும். குறிப்பாக இலங்கையிலும் சீனா போன்று ஒரு கட்சி ஆட்சிமுறையை நோக்கிய விவாதங்கள் படிப்படியாக எழுந்து வருகின்றன. சீனாவின் அரசியல் வரலாற்றின் அடிப்படையில் நோக்கும்போது அதன் வரலாறு அவ்வாறான இறுக்கமான,கட்டுப்பாடான அரசியல் கட்டுமானத்தின் தேவை அதன் 2000 ஆண்டுகளுக்கு அதிகமான வரலாற்றின் வளர்ச்சிப் போக்கோடுதான் நோக்க வேண்டும். இலங்கையில் அவ்வாறான ஒரு கட்சி ஆட்முறையை நோக்கிய விவாதங்கள் என்பது வெறும் விவாதங்களாக மட்டுமே அமைய முடியும். ஏனெனில் இலங்கையின் வரலாறு அவ்வாறான அனுபவத்தைக் கொண்டிருக்கவில்லை. யாராவது அவ்வாறான ஆட்சியை மேலிருந்து கீழாக தோற்றுவிக்க அல்லது திணிக்க முடியுமெனக் கருதினால் அவை மாவோ காலத்தில் நடத்தப்பட்ட கலாச்சார புரட்சியில் இடம்பெற்ற பல லட்சம் இறப்புகளைக் கடந்து செல்ல வேண்டி ஏற்படலாம்.

உலக அளவில் பொருளாதாரம் தொடர்பான புதிய அணுகுமுறைகள் குறித்த விவாதங்கள் குறிப்பாக தேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் தனியார் துறை என்பது உற்பத்தி, விநியோகம் போன்றவற்றில் ஈடுபடும் வேளையில் அரசின் முதலீடுகள் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் பல சேவைகளில் ஈடுபடுமாயின் இரு சாராரின் செயற்பாடுகளும் மக்களின் வாழக்கைத் தரத்தினை உயர்த்த உதவும் என்ற விவாதங்கள் உள்ளன.

இன்று இலங்கையில் அவ்வாறான விவாதங்களை நோக்கி எமது கவனங்கள் செல்லுதல் அவசியமாகிறது. தற்போது நாட்டின் அரசியல் என்பது ஓர் குறிப்பிட்ட பிரிவினரின் தேவைகளை நோக்கியதாகவே மாறி வருகிறது. அதற்கு ஏற்றவாறே இனவாதம், மதவாதம், ஆட்சி முறை என்பனவும் மாறிச் செல்கின்றன. ஒரு சாரார் நாட்டின் தேசிய இனங்களிடையே முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி அதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றி தேசிய வளங்களைச் சூறையாடி அதிகார இருப்பைத் தொடர்ந்து வைத்திருக்க முயற்சிக்கின்றனர். இவ்வாறான பிளவுபடுத்திச் செல்லும் அரசியல் தேசிய அளவிலான இணக்கத்தை அல்லது பொருளாதார வளர்ச்சியைத் தோற்றுவிக்க உதவாது.

தற்போது கொரொனா நோயின் பாதிப்பு அதிகரித்து அரச கட்டுமானம் செயற்பட முடியாத நிலையை நோக்கிச் செல்வது ஒட்டு மொத்த நாட்டின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது. எனவே சகல மக்களும் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒட்டு மொத்த தேசத்தின் நலனை நோக்கித் திரும்புவது அவசியமாகிறது. வரலாற்றினைத் திரும்பிப் பார்க்கும்போது இவ்வாறாக தேசங்கள் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிய வேளையில் இன, மத, மொழி வேறுபாடுகளைக் கூர்மைப்படுத்தும் சக்திகள் இலகுவாகவே இணைகின்றன. ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கின்றன. இக் கொடுமையான நிலமைகளிலிருந்து நாட்டைக் காப்பாற்றும் சக்தி தம்மிடமே உள்ளதாக நம்பிக்கை ஊட்டுகின்றன.

அதேவேளையில் ஒட்டுமொத்த தேசத்தின் நலனுக்காக செயற்படும் ஜனநாயக சக்திகள் நாட்டின் இனவாத போக்குக் குறித்த சந்தேகங்களால் தமது செயற்பாடுகளையும் குறைத்தே மதிப்பிடுகின்றன. தற்போதுள்ள நிலையில் குறிப்பாக இலங்கை நிலமைகள் குறித்து அவதானிக்கையில் நாட்டின் பொருளாதாரமும், அரசியலும் திறந்த பொருளாதாரத்தின் தோல்விகளின் பின்னணியில் மிகவும் பாரதூரமான சிக்கல்களை நோக்கியே உள்ளன.

இதனடிப்படையில் இன்று சர்வதேச அடிப்படையில் குறிப்பாக திறந்த பொருளாதாரத்தின் தோல்வியின் பின்னணியில் புதிய பொருளாதார, அரசியல் கட்டுமானங்கள் குறித்த விவாதங்கள் தற்போது முதன்மை பெறுகின்றன.

(தொடரும்)