(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
நெருக்கடிக்குட்படும் ஒரு சமூகம், பொதுவாக, நெருக்கடியின் தீர்வைத் தனக்கு வெளியிலேயே தேடத் தலைப்படும். இது பல சமூகங்கட்கும் பொருந்தும். சமூகங்கள் தமது தீர்வைத் தமக்குட் தேடுவது பயனுள்ளது. தவறின், நெருக்கடிக்கான காரணங்களை ஆட்சியாளர்கள் இலகுவாகத் திரித்துக் கவனத்தைத் திசைதிருப்ப வாய்ப்பாகும். இது ஈற்றிற், சமூகம் தனக்குத் தானே கொள்ளி வைப்பது போலாகும். இப்போது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நேரடியாகவும் வெளிப்படையாகவும் எழுச்சிகாணும் ஃபாசிஸ சக்திகள், தவிர்க்கவியலாது மேற்குலகில் எழும் நவ – ஃபாசிஸத்தின் அடையாளங்களே. இதன் குறிகாட்டிகளாக மூன்று நிகழ்வுகளை வகைகுறித்துக் கூறலாம்.
முதலாவதாக, உக்ரேனில் நிகழ்ந்த ஆட்சி மாற்றமும் அதனையொட்டி வலுவடைந்த நவ-நாசிக் குழுக்களின் அதிகாரத்தையும் உக்ரேனிய நாடாளுமன்றில் அவர்களது செல்வாக்கையும் அச் சூழலில் நிகழ்ந்த கிரிமியப் பிரிவினையையும் குறிப்பிடலாம். இரண்டாவதாக அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தெரிவையொட்டிய விவாதங்கள் இரண்டு பெரும் கட்சிகளிலும் சூடேறும் நிலையில், இரண்டு கட்சிகளுள்ளும் அதி வலதுசாரிப் பாங்கான கருத்துக்கள் வெளிவருகின்றமை கவனிப்புக்குரியது.
மூன்றாவதாக, பாரிஸ் நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலையடுத்துத் தலைதூக்கியுள்ள முஸ்லிம்கட்கெதிராகக் கட்டியெழுப்பிய அருவருக்கத்தக்க வெறுப்பும் பிரான்ஸின் பிராந்தியத் தேர்தல்களில் நவ-ஃபாசிஸக் கட்சிகள் என்றுமிராதளவு அதிக வாக்குகளைப் பெற்றிருப்பதும் முக்கியமானவை.
ஒரு காலத்தில் உலக மக்கள் வெறுத்தொதுக்கிய ஃபாசிஸம் என்ற சிந்தனைப் போக்கு இன்று வளர்ச்சியடைந்த மேற்குலகச் சமூகங்களிற் கணிசமான செல்வாக்குச் செலுத்துமளவு வளர்ந்தமையின் சமூகப் பொருளாதார அரசியற் காரணங்களை நோக்கல் தகும்.
2007ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கிப், பின் ஐரோப்பாவைத் தாக்கிய உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து இன்னமும் மேற்குலகு மீளவில்லை. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வங்கிகளைப் பிணையெடுத்துள்ளனவேயன்றி மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவில்லை.
ஐரோப்பாவில் கிரேக்கம், அயர்லாந்து ஆகிய நாடுகள் நொடித்துள்ளன. ஸ்பெயின், போத்துக்கல், சைப்பிரஸ், ரோமானியா, லற்வியா ஆகியன நொடிக்கும் நிலையில் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரிய நாடுகளும் இக் கதிக்கு விலக்கல்ல என்பதற்குக், கடந்த மாத இறுதியில் பிரித்தானியா முன் நிகழாத அளவுக்குப் பொதுச் செலவுக் குறைப்புக்களை அறிவித்துள்ளமை ஒரு சான்று. இவ்வாறு முழு ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதார நெருக்கடியில் அல்லாடுகிறது.
அமெரிக்கப் பொருளாதாரம் மீளவியலா நெருக்கடிச் சூழலுள் தள்ளுண்டுள்ளது. முன்னறிந்திராதளவுக்கு எண்ணெய் விலையும், பிளற்றினம், செம்பு, அலுமினியம், இரும்பு ஆகிய மூலப்பொருட்களின் விலைகளும் கடந்த வாரம் வீழ்ந்துள்ளன. இதனால், அமெரிக்காவில் மட்டும், உடனடியாக 85,000பேர் வேலையிழப்பர் என அறிவிக்கப்பட்டது.
இவை முதலாளியப் பொருளாதாரத்தின் தவிர்க்கவியலா விளைவுகள். அண்மையில் சுவிஸ் வங்கியான Credit Suisse வெளியிட்ட அறிக்கை அவற்றின் காரணங்களைச் சரியாக இனங்காணுகிறது. உலகளாவிய செல்வச் சமனின்மை தொடர்ந்தும் மோசமாகுமென்றும், தற்போது அது ஒரு புதிய மைல்கல்லை எட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ள அவ்வறிக்கை உலகளாவிய உடைமைகளில் உயர்மட்டத்தில் உள்ள 1 சதவீதத்தினரிடமுள்ள பகுதி மற்றைய 99 சதவீதத்தினரிடமுள்ளதினும் அதிகமென ஆதாரங்களுடன் நிறுவுகிறது.
இதை வெளிப்படையாக ஏற்க ஆயத்தமற்ற நிலையில் உள்ள அரசுகள் திட்டமிட்டு, இன உணர்வையும் வெறுப்பையும் வளர்த்துப் பரப்புகின்றன. அதன் மூலம் மக்களின் வறுமைக்கும் வேலையின்மைக்கும் சமூக நலன்களை அரசு குறைத்தற்குமான உண்மைக் காரணங்கள் மறைக்கப்படுகின்றன. இன உணர்வு, இஸ்லாமிய விரோதம், நாகரிகமானோர் எதிர் நாகரிகமற்றோர் போன்ற சிந்தனைகளை முன்தள்ளுவதனூடு பிரச்சினைக்கான உண்மைக் காரணங்களை அறிய இயலாதபடி அவற்றை மடைமாற்ற இயலுகிறது.
ஒரு சமுதாயம் முன்னேறிய ‘நாகரிக’ சமுதாயம் என்பதால் அங்கே இனவாதமும் இனவெறியும் இல்லாமற் போகாது. ஐக்கிய அமெரிக்காவில் நீக்ரோக்களுக்கு எதிரான இனவெறி, தென்னாபிரிக்க வெள்ளை இனவெறி, ஜேர்மனியில் ஹிட்லரின் ஆரிய இனவெறி, ஸாரின் ரஷ்யாவில் பேரினவாதம் ஆகியன பின்தங்கிய சமுதாயங்கட்குரியவல்ல. இனவாதமும் இனவெறியும் தொற்று நோய்களாய்ப் பரவுகின்றன. ஓர் இனத்தின் இனவாதமும் இனவெறியும், பிற இனங்களிடையே இனவாதத்தையும் இனவெறியையும் தூண்டி, அதன் மூலம் தம்மை மேலும் வளர்க்கின்றன.
மனிதரது பலவீனங்களை, ஆளுபவர்கள் எப்போதும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இன்றைய சமுதாயத்தில், தனிமனிதனுக்கு இன உணர்வு ஓர் ஆதாரமாகத் தோன்றினாலும், உண்மையில் அது அவனுடைய பலவீனம். மனிதரை வேற்றுமைப்படுத்தவும் ஒடுக்கப்பட்டோரை ஒன்றுபடாது தடுக்கவும் இன உணர்வைப் பயன்படுத்துவதில் அதிகாரம், மிக்க கவனம் செலுத்தியுள்ளது.
அறியாமையும் தெளிவீனங்களும் இன உணர்வுகளை உக்கிரமாக்க உதவுவன. இனவாதப் பொய்களையும் அரை உண்மைகளையும் நம்பிப் பழகிய மனங்கட்கு உண்மை உடனடியாகப் புலனாகாது. இதுவே இன்று பல வழிகளில் -ஃபாசிஸம் மீளெழுச்சி பெற வழியமைத்துள்ளது.
இனங்களிடையே உள்ள கலாசார, மொழி வேறுபாடுகள் இனப் பகைமை வளர்க்கப் பயன்பட்ட சூழ்நிலைகள் பல. இதற்கு ஆதாரமாக ஐரோப்பாவில் நிலவிய யூத இன விரோதத்துக்கும் தென்னாபிரிக்காவின் நிறவெறிக்கும் மேலாக எதையுங் கூறத் தேவையில்லை. இன்று நெருக்கடிக்குள்ளாகும் சமூகங்களில் இவ் வேறுபாடுகள் கவனமாகத் திட்டமிட்டு விதைத்து அறுவடையாகின்றன.
ஃபாசிஸம், 19ஆம் நூற்றாண்டின் இறுதியிற் தொடங்கிய ஏகாதிபத்திய காலகட்டத்தின் நிலையான ஒரு போக்காகும். ஒரு குறிப்பிட்ட காலம் வரை, ஓரிடத்தில் மறைவாயும் இன்னோரிடத்தில் வெளிப்படையாயும், சில நேரங்களில், ஒரு சில நாடுகளில் ஆதிக்கத்திலும்;, எப்போதும், குறிப்பிட்ட ஒரு நாட்டின் சிறப்பான வரலாற்றுச் சூழல், அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றுக்கமையப், பிரத்தியேக வடிவங்களில் அது தோன்றியது.
இத்தாலியர்கள் அதற்கு ‘ஃபாசிஸம்’ என்று பெயரிடுமுன், அதன் கோட்பாட்டு முறையான வடிவம், ‘ஒருங்கிணைந்த தேசியம்’ என்ற பெயரில் 19ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் தீவிர வலதுசாரிக் கோட்பாடாக உருவெடுத்தது. ஐரோப்பாவின் பல பகுதிகளில், முதன்முறையாக, அவற்றுக்குப் பிரத்தியேகமான வகையில் உருவான இடது சோசலிசவாதிகளின் வெகுஜன அடித்தளங்களை அது எதிர்த்தது. ஜேர்மனியிலும், பிரான்ஸிலும் அது வலுவாயிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் போக்கில் அது ஐரோப்பிய எல்லைகள் கடந்து உலக அளவிலான தன்மை பெற்றது.
உக்ரேனில் அமெரிக்க உதவியுடன் நடத்திய ஆட்சி மாற்றத்தின் மூலம், இனவெறி, யூத எதிர்ப்பு, ஹிட்லர் வழிபாடு ஆகியவற்றையுடைய நாசிக் கட்சியான ஸ்வபோடாக் கட்சி ஆட்சியில் முக்கிய பங்குதாரராகியது. அதை அமெரிக்கா ஏற்றுள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான ஆதிக்கப் போட்டியில், ஃபாசிஸவாதிகளை அமெரிக்கா ஆதரிக்கிறது. அதேவேளை, ரஷ்ய சார்புடைய கிழக்கு உக்ரேன் போராளிகளை எதிர்த்துப் போரிட, செச்சனிய இஸ்லாமியத் தீவிரவாதிகளும் உக்ரேனிய நவ-நாசிகளும் கைகோர்ப்பதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.
எந்த நாசிசத்துக்கெதிராக இரண்டாம் உலகப்போரில் சோவியத் ரஷ்யாவுடன் அமெரிக்கா ஒரே தரப்பிற் போரிட்டதோ இன்று அதே அமெரிக்கா அதே நாசிசத்தை ஊட்டிவளர்த்து ரஷ்யாவுக்கு எதிராகக் கொம்பு சீவி விடுகிறது.
பாரிஸ் தாக்குதல்களையடுத்து, பிரான்ஸில் நடந்த முதற்கட்டப் பிராந்தியத் தேர்தல்களில் தன்னை வெளிப்படையாகவே வலது தீவிரவாதக் கட்சியாக அறிவித்துள்ள தேசிய முன்னணி என்கிற நவ-ஃபாசிஸக் கட்சி முன்னிலையில் இருப்பது, பிரெஞ்சு முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த நெருக்கடியைக் கோடிட்டுக் காட்டுகிறது.
தேசிய முன்னணித்; தலைவியான மரீன் லு பென், சோசலிஸ்டுக்களின் கோட்டை என அறியப்பட்ட வட பிராந்தியத்தில் வெற்றி பெற்றமை மக்களின் மனோநிலையின் ஒரு பிரதிபலிப்பு. தொழிற்சாலைகளும் சுரங்கங்களும் மூடுண்டு வேலைவாய்ப்பின்மை கடுமையாக அதிகரித்துள்ளதும் பிரான்ஸில்; வறுமை வேகமாக உயர்ந்துள்ளதுமான ஒரு பிரதேசத்தில், நாடாளுமன்ற ஐனநாயகக் கட்சிகட்கு இயலாதது நவ-ஃபாசிஸக் கருத்துக்களை முன்மொழிந்து இனஉணர்வூட்டுவோருக்கு இயலும் என மக்கள் எண்ணுவதன் விளைவாக இதைக் கொள்ளலாம்.
எல்லா வகையிலும் நெருக்கடிக்குள்ளாகும் ஒரு சமூகம் எவ்வாறு உணர்வுபூர்வமாகத் தேசிய வெறிக்குள்ளும் துவேஷத்துக்குள்ளும் தள்ளுண்ணுகிறது என்பதற்கு இது சிறந்த சான்று. இவ்வாறே ஐரோப்பாவெங்கும் நடக்கிறது. பொருளாதார நெருக்கடியும் அதனோடு இணைந்துள்ள அகதிகள் நெருக்கடியும் மனிதாபிமானத்தைத் தாண்டிய இன உணர்வையும் ஃபாசிஸ மனோநிலையையும் உருவாக்குகின்றன.
அமெரிக்காவில் அடுத்தாண்டின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக்காகப் போட்டியிடும் வேட்பாளர்கள் வலது தீவிரவாதத்தைக் கையிலெடுக்கின்றனர். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கோடீஸ்வரர் டொனால்ட் ட்ரம்ப் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை உடனடியாகத் திருப்பி அனுப்புவதாகச் சொல்கிறார். அவருடன் போட்டியிடும் செனட்டர் டெட் குரூஸ் ஐ.எஸ்ஸை அழிப்பதற்கு ‘கம்பளக்; குண்டுவீச்சு’ நடத்த வேண்டும் என முன்மொழிகிறார்.
மறுபுறம், இவ்வாறான தீவிரக் கருத்துக்கள் மக்களிடம் பெறும் வரவேற்பால் அச்சமுற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளின்டன், ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை முழுமையாகக் கடைப்பிடிக்கத் தவறின் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கிறார். அடுத்துவரும் ஆண்டுகளில் அமெரிக்காவில் ஃபாசிஸப் பாங்கான ஆட்சி அமைவதற்கும் இன்று முதலாளித்துவம் எதிர்கொள்ளும் நெருக்கடியைக் கையாளப் பொருத்தமான கருவியாக நவ-ஃபாசிஸம் இருக்கும் என்பதற்கும் முன்னறிவித்தலாக இவை அமைகின்றன.
ஐ.எஸ். போன்ற பயங்கரவாத இயக்கங்கள் தொடர்ந்து, மேற்குலகைக் குறிவைப்பது இஸ்லாமிய விரோதம் மேலும் வளரவும் நாடுகள் நவ-ஃபாசிஸப் பாதையில் செல்லவும் பலம் சேர்க்கின்றன.
இன்று மேற்குலகும் முதலாளித்துவமும் சந்திக்கும் நெருக்கடிகள் அவதி நிலையை எட்டும் போது யாரைக் காப்பது என்றொரு முடிவை அரசுகள் எடுக்க வேண்டும். மக்கள் நலனா முதலாளிய நலனா என்ற கேள்வி எழும். இந்நிலையில் அரசுகள் முதலாளியத்தைக் காக்கவும் பல்தேசியக் கம்பெனிகளின் இருப்பையும் சுரண்டலையும் உறுதிப்படுத்தவும் விரும்பும். இந் நிலையில், தெரிவினடிப்படையில், மக்களே பாரம்பரிய ஆட்சியாளர்களைப் புறந்தள்ளியோ தீவிரத்தன்மையுடைய ஆட்சியாளர்களைப் பதவியில் இருத்தியோ நவ-ஃபாசிஸம் ஆட்சிக்கட்டிலில் அமர வழிசமைப்பர். அதன்மூலம் காலப்போக்கில்
ஃபாசிஸம் நிறுவனமயமாவதோடு ஆட்சியதிகாரத்தின் இரட்டைக் குழந்தையாகிவிடும். மேற்குலகம் இப்போது மிக ஆபத்தான திசையிற் பயணிக்கிறது. இனஉணர்வும், நாகரிக மேன்மையும் முன்தள்ளப்படும் காலத்தில் மக்கள் விழிப்பாயில்லாவிடின் என்றென்றும் ‘வலது தீவிரவாதத்தின்’ பெயரால் அடக்குமுறைச் சூழலில் தெரிந்தும் தெரியாமலும் சிக்கித் தவித்தலைத் தவிர்க்கவியலாது.