உலக சந்தையில் எரிவாயுவின் விலை உயர்ந்துள்ள நிலையிலும், மற்றும் டொலரின் பெறுமதி இலங்கை ரூபாயுடன் ஒப்பீட்டளவில் கணிசமாக அதிகரித்துள்ளதாலும் பருமட்டாக ரூ.2000 நட்டத்தில் லிட்ரோவின் எரிவாயு இருப்பும் வினியோகமும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இச்சூழ்நிலையில் லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் அழிவுக்கும்கூட இது வழிவகுக்கலாம். பொருளாதார நெருக்கடியின் வெளிப்படையாக தெரியும் தாக்கம் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரத்தின் அடிப்படைத் தேவைகளின் தட்டுப்பாடுகள் என்றாலும், இன்னும் மூன்று வாரங்களில் உற்பத்தித் தொழிலின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். அத்துடன் நீண்டகால பயிர்களின் அழிவுகள் என்பதோடு இந்தச் சிக்கல் மீள முடியாத நிலைக்கு செல்வதன்மூலம் இப்பொருளாதார நெருக்கடியின் இன்னொரு முகமும் திறக்கப்படும்.
நாம் எங்கே தவறு செய்தோம்?
1977 ஆம் ஆண்டு திறந்த பொருளாதாரம் தோற்றுவிக்கப்பட்ட பின்னர் இலங்கைப் பொருளாதாரம் தொடர்பில் முறையான உரையாடல்களும் விவாதங்களும் இடம்பெற்ற போதிலும், பின்னர் தொடர்ச்சியான அல்லது தரமான விமர்சனங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. 2004 சுனாமியின் பொருளாதார தாக்கம் மற்றும் வடக்கு கிழக்கில் ஏற்பட்ட மோதலின் முடிவில் நாட்டை ஒரே பொருளாதார வலயமாக திட்டவட்டமாக வடிவமைக்கும் இரண்டு பெரும் வாய்ப்புகளை நாம் வேண்டுமென்றே தவறவிட்டோம். 1994 தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் அடிக்கடி பேசப்பட்டது இனம், மதம், கலாச்சாரம், அரசியல் மற்றும் ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கு போன்ற விஷயங்கள்தான். பொருளாதாரம் அல்லது பொருளாதார வளர்ச்சி பற்றி எதுவும் பேசப்படவில்லை. .
1994 ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தில் இருந்து 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் வரை சுதந்திரம், ஜனநாயகம், அரசியலமைப்பு சீர்திருத்தம், திருட்டு, ஊழல் என்று வெறும் அலங்காரக் கதைகளைச் சொல்லி பொருளாதாரப் பிரச்சினை ஒத்திப் போடப்பட்டதே தவிர நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான சரியான நாடித்துடிப்பை பதவியைக் கைப்பற்றிய எவரேனும் முனைந்தார்களா என்பது சந்தேகமே.
இப்போது செய்யப்பட வேண்டியது என்ன?
தற்போதைய நெருக்கடியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் (Crisis Control ) சக்தி இலங்கைக்கு இல்லை. விரும்பியோ விரும்பாமலோ நெருக்கடியை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால் நெருக்கடி நிலையை நாம் சரியாகப் புரிந்திருக்குறோமா என்பது சந்தேகமே. பாராளுமன்றத்தில் உள்ள கட்சித் தலைவர்களிடையே சம்பிக்க ரணவக்க மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவர் மட்டுமே இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் விருப்பத்தையும் அதற்குத் தயார் என்னும் கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். மற்ற அனைவரும் களம் எப்படி உருவாகுகின்றதோ அதற்கு ஏற்றாற்போல் பந்தை எதிர்கொள்ளலாம் என்ற வகையிலேயே காலத்தைக் கடத்துபவர்களாக இருக்கிறார்கள். பல கட்சிகள் IMF இடம் செல்லும் யோசனைக்கும் தீர்மானத்திற்கும் தனியாக செல்ல தயாரற்ற தயக்க நிலையிலேயே உள்ளன.
கிரீஸ் அப்படி செய்தாலும் நம்மால் முடியுமா?
IMF இடம் சென்று மீட்சி பெற்றது பற்றி பேசும்போது கிரீஸ் என்பது பொதுவாக பேசப்படும் நாடாகும். ஏதென்ஸ் ஒலிம்பிக் விழாவிற்கு பெறப்பட்ட மிகப் பெரும் கடன் தொகையின் சுமையைக் கட்டுப்படுத்த முடியாமல் கிரேக்கப் பொருளாதாரம் திவாலானது. கிரீஸ் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியின் விளிம்பில் இருந்த நேரத்தில் [இன்றைய இலங்கையைப் போல], அன்றைய இலங்கை அரசு கிரீஸ் நாட்டிடம் Treasury bond பத்திரங்களை விலைகொடுத்து வாங்கியதால், சில மணிநேரங்களுக்குள் 20 பில்லியன் ரூபாய்களுக்கு மேல் இலங்கை அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. ராஜபக்சேவின் பொருளாதார கொள்கை ஆலோசகர் அஜித் நிவார்ட் கப்ரால் அந்த மோசமான கொடுகல் வாங்கலிற்கு வழிசமைத்தார். அந்த நடவடிக்கையானது எவருமே தண்டிக்கப்படாத மாபாதக தேசிய குற்றமாகும். உடூ சொல்லப்பட வேண்டிய இந்த உபகதை ஒரு புறமிருக்க;
திவாலாகி கிடக்கும் கிரேக்க நாட்டை கடைசியாகக் காப்பாற்ற வந்தது IMFதான். அவர்கள் பல ஒப்பந்தங்களுடனேயே வந்தார்கள். IMF என்பது ஒரு நாட்டை விழுங்க வரும் அரக்கன் அல்ல. கடனை மீள அடைப்பதற்கு பொறுப்புச் சொல்வதற்கு அவர்கள் பல கட்டாய முன்மொழிவுகளைச் செய்வார்கள். இன்று இலங்கையைப் பாதித்துள்ள அரச சேவைகளுக்கான செலவினங்களில் வெட்டு, நஷ்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்களை மூடுவது அல்லது தனியார்மயமாக்குவது, சில சமயங்களில் இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரப் பாதுகாப்புக்கும் கூட சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம். மேலும், நாட்டில் நடக்கும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனையும் கணக்காய்விற்கு உட்படுத்தப்படும். அஜித் நிவாட் கப்ரால் மற்றும் அர்ஜுன் அலோசியஸ் போன்றவர்கள் பொருளாதாரத்தை தன் விருப்பப்படி கையாள முடியாத நிரந்தர கணக்காய்வு செயல்முறை தவிர்க்க முடியாததாக இருக்கும். இதனால்தான் பல கட்சித் தலைவர்கள் IMF க்கு செல்ல தயங்குகிறார்கள், பயப்படுகிறார்கள். ஒரு வேளை இவையெல்லாம் போராட்டக் கோஷங்களாக மாறி எதிர்கால போராட்டத்தில் மக்களிடமிருந்து தமக்கெதிராக ஏவப்படும் கனகல் ஆகலாம் எனவும் அரசியல்வாதிகள் நம்பக்கூடும்.
கடனில் மூழ்கியிருந்த கிரீஸ் அதன் முழு IMF கடன்களை கடந்த ஏப்ரல் 5ம் திகதி அன்று செலுத்தி முடித்தது. அதாவது குறித்த காலத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவற்றை கட்டி முடிப்பதற்கு ஐரொப்பிய ஒன்றியத்தின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றதை அடுத்தே இது நிகழ்ந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே கடண்களை திருப்பிச் செலுத்தியதன் காரணமாக அவர்கள் 230 மில்லியன் யூரோக்களை தப்படுத்தியும் கொண்டனர்.
260 பில்லியன் யூரோக் கடனில் சிக்கித் தவித்த கிரீஸ், அரசியல்வாதிகளும் மக்களும் மீண்டு வரவேண்டும் என்ற அதே ஆசையில் அதிலிருந்து மீண்டு வந்தது.
கிரீஸும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஒரேயடியாக உறுதியான அரசியல் அடித்தளத்தை அமைக்கவில்லை. இது பல முரண்பாடுகள் மற்றும் தியாகங்களின் பயணம். இது அனைவருக்கும் பொதுவான உண்மை. அரசியல் கொள்கைக்கும் IMF தீர்மானத்திற்கும் இடையே ஒரு முரண்பாடு தவிர்க்க முடியாதது. ஆனால் அந்த முரண்பாட்டை குறைக்க முடியும். இருப்பினும், மே 2010 இல் திறக்கப்பட்ட கடன் கோப்பை மூடிய கிரேக்க நாட்டின் நிதியமைச்சர் Christos Staikouras, நாம் இந்த அத்தியாயத்தை மூடிவிட்டோம் என மகிழ்சியுடன் கூறினார்.
காலிமுகத்திடல் உரையாடல் இரண்டாவது கட்டத்திற்கு செல்ல வேண்டும்.
கிரீஸுக்குக் கிடைக்காத வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. நாம் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதற்கு முன், அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான ஒரு தளம் இப்போது உள்ளது. உண்மையில், காலிமுகத்திடல் மைதானம் அதன் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைவதற்கான நேரம் இது. அது ஒரு பொருளாதார நோக்கில் இருக்க வேண்டும். ஆதற்கான அழுத்தம் எமது அரசியல் தலைமைகளை நோக்கி காலிமுகத்திடலில் நிற்கின்ற அறிவுள்ள இளம் தலைவர்களிடமிருந்து வரவேண்டும். இரண்டு நாட்களுக்கு இப்போராட்டத்திற்கு ஆதரவளித்த தீவின் முன்னணி முதலீட்டாளர்கள் சங்கமும் அவர்களுக்கு அறிவுரை வழங்கப் பின்னணியில் நிற்கின்றமை சிறப்பம்சமாகும்.
சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல பயந்து, முன்கூட்டியே தேர்தல், இடைக்கால அரசாங்கம் மற்றும் அரசியலமைப்பு திருத்தம் கோரி காலத்தை இழுத்தடிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஒரு மேசைக்கு கொண்டுவர காலிமுகத்திடல் இளம் தலைமை முயற்சிக்க வேண்டும். அதை எப்படியாவது செய்தே ஆக வேண்டும். பொருளாதாரத்தின் தலைவிதி அவ்வாறு எழுதப்படுகின்ற அதேவேளை, அரசியல் காலாச்சார , கல்வி , யாப்புச்சீர்திருத்தம் போன்றவற்றுக்கான சிறப்புக்குழுக்களை உருவாக்கி இப்போராட்டத்தை ஒரு சாதகமான தளத்தை நோக்கி கொண்டு செல்லும் பொறுப்பு தமக்கு இருக்கின்றதென்பதை போராட்ட களத்தின் இன்று நிற்கின்ற எழுச்சி மிகு இளம் போராட்டக்காரர்கள் புரிந்து கொள்வார்களாயின், அது அவர்கள் எதிர்பார்க்கும் SYSTEM CHANGE ன் உடைய முதலாவது படிக்கல்லாக அமையும்.