எரிபொருளுக்கு வரிசை, எரிவாயுவுக்கு வரிசை, உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு, மருந்துகளுக்கு தட்டுப்பாடு, உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் அபார விலையேற்றம் என, ஒட்டுமொத்த இலங்கையரும் தப்பிப்பிழைக்கவே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையர்கள் அனைவரும் எல்லா இடங்களிலும் இந்த நெருக்கடியின் தாக்கங்களை உணர்கிறார்கள். மளிகைக் கடைகளில், எரிபொருள் நிலையங்களில் உள்ள வரிசைகளிலும், வீட்டிலும் என எல்லா இடங்களிலும் விலையேற்றம், தட்டுப்பாடு ஆகிய இரண்டையும் மக்கள் எதிர்கொள்கிறார்கள்.
இலங்கை ரூபாயின் பெறுமதி, இப்போது கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது, இதனால் வாழ்க்கைச் செலவு மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதன் விளைவாக, அதிகமான மக்கள் அத்தியாவசிய பொருட்கள், சேவைகளை வாங்கவோ அல்லது, அணுகவோ முடியாது திக்கித்திணறி நிற்கிறார்கள்.
இரசாயன உரத்தை தடைசெய்கிறோம் என கோட்டாபய ராஜபக்ஷ, இரவோடிரவாக எடுத்த அடிமுட்டாள்தனமான முடிவின் விளைவால், தற்போது இலங்கை இன்னும் சில மாதங்களில் உணவுப்பஞ்சத்தை எதிர்நோக்கலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரூடம் சொல்லி வருகிறார்.
எப்படியாவது பதவியில், தான் தொடரவேண்டும் என்ற கோட்டாபயவின் சுயநலத்துக்கு, முழுநாடும் பலிக்கடவாகிக் கொண்டிருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்காவின் ‘ப்ளும்பேர்க்’ செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியில், “எனக்கு மக்கள், ஐந்து வருடங்களுக்கான மக்களாணை வழங்கியிருக்கிறார்கள். நான் ஒரு தோல்வி கண்ட ஜனாதிபதியாக போக முடியாது” என்று தெரிவித்திருந்தார்.
கோட்டாபய, உண்மையைப் பேசியிருக்கிறார். அவருக்கு நாடு பற்றி, மக்கள் படும் துன்பம் பற்றி எல்லாம் அக்கறை இல்லை. அவருடைய கவலை, தான் ஒரு தோல்வி கண்ட ஜனாதிபதியாக, வரலாற்றில் இடம்பெற்றுவிடக் கூடாது என்பதுதான். அவருடைய கவலை அதுமட்டும்தான்.
ஆனால், அவர் சொல்வதில் ஒரு விஷயம் இருக்கிறது. சரியோ, பிழையோ 69 இலட்சத்துக்கு மேற்பட்ட இலங்கையர்கள், கோட்டாவுக்கு வாக்களித்து, அவரை அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தார்கள். மைத்திரிபாலவின் ஆட்சியில் அதிருப்பதி அடைந்த மக்கள், ‘நாட்டைக் காப்பாற்றும் வீரன் கோட்டாவே’ என்று எண்ணி, ஜனாதிபதியாக்கினார்கள்.
தன்னை ‘ஸ்ரிக்ட் ஒஃபிஸர்’ எனக் காட்டிக்கொண்ட கோட்டா, நிபுணர்களைக் கொண்ட ஆட்சியின் மூலம், இலங்கையை தன்னிறைவு கண்ட நாடாக்கிவிடுவார் என்று பகற்கனவு கண்டுகொண்டு, சர்வதேச அளவில் யுத்தக்குற்றம், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டுள்ள கோட்டாபயவை பெரும்பான்மையினம் ஜனாதிபதியாக்கியது.
ஆனால் இதன் விளைவு, இந்தியாவும் ஏனைய உலகநாடுகளும் இலங்கைக்கு வழங்கும் கடனையும் உதவிகளையும் நிறுத்திவிட்டால், எரிபொருளின்றி, போதியளவு உணவு, மருத்துவம், மின்சாரமின்றி இலங்கை பஞ்சத்திலும் வறுமையிலும் உழலும் மிக மோசமான நாடாகிவிடும். இலங்கையை இந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டதுதான் கோட்டாபயவினதும், ராஜபக்ஷர்களினதும் சாதனை!
ஆனால், பிழை அவர்களுடையது மட்டுமல்ல. அவர்களைத் தேர்தலில் வாக்களித்து, தேர்ந்தெடுத்து, ‘நாட்டைக் காப்பாற்றும் இரட்சகர்கள்’ போல அவர்களை வர்ணித்து, அதிகாரத்துக்குக் கொண்டுவந்தவர்கள் இந்நாட்டின் பெரும்பான்மையின மக்கள். இன்றும் கூட, இலங்கை மக்களில் கணிசமானோர், தற்போது தம்மை இந்த இன்னல் நிலையிலிருந்து காப்பாற்ற, ஒரு இரட்சகரை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல; இதுதான் இந்நாட்டின் சாபக்கேடு.
ஒரு ஜனநாயக நாட்டில், மாற்றங்கள் விளைய வேண்டுமானால், அந்நாட்டின் அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து படிநிலைகளிலும் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால், இங்கு யாரும் கட்டமைப்பு மாற்றம் பற்றி யோசிப்பதில்லை. தென்னிந்திய திரைப்படங்களில் வருவதுபோல, ஒரு நாயகன் உதயமாகி, ஏழையை, பணக்காரனாக மாற்றுவதைப் போல, யாராவது துன்பத்தில் உழலும் இலங்கையை ஒரேயடியாக மாற்றிவிட மாட்டார்களா என இரட்சர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்றும், கோட்டாவை வீட்டிற்குப் போக வேண்டினாலும், அடுத்தது என்ன என்ற திட்டம், இலங்கை மக்களில் கணிசமானோர் மனதில் இல்லை. நாளை இன்னொருவன் வந்து தன்னை வீரன் என்று ஊடகங்களின் ஆதரவுடன் முன்னிறுத்தினால், அந்தப் பிரசாரத்தில் மயங்கி, மக்களில் கணிசமானோர் அந்த ‘புதிய வீரன்’, தம்மை இரட்சித்துக் காப்பான் என்று நம்பி அவனுக்கு வாக்களிப்பார்கள். அவன் ஏமாற்றியதும், இன்னொரு இரட்சகனுக்கான தேடும்படலம்; ஆக கட்டமைப்பு மாறவில்லை. இரட்சகர்களுக்கான தேடல் மட்டும் தொடர்கிறது.
உண்மையில், வளர்ச்சி, அபிவிருத்தி என்பவை மிக நீண்டகால கட்டமைப்பு மாற்றத்தின் மூலமே சாத்தியப்படும். அது, இலகுவான பயணமாக இருக்காது. கட்டமைப்பு மாற்றம், தனிமனித வாழ்வில் நிறையத் தாக்கங்களை ஏற்படுத்தும். இதற்கு மக்கள் தயாரில்லை என்பதுதான், மக்கள் கட்டமைப்பு மாற்றத்தை விரும்பாது, இரட்சகன் ஒருவனை வேண்டி நிற்பதற்கான மூல காரணம்.
மக்களில் கணிசமானோர் தமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. அதிகம் பேருக்கும் கொஞ்ச எரிபொருளாவது கிடைக்க வேண்டும் என, ஒரு பங்கீட்டு முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தி, ஒரு வாகனத்திற்கு ரூ.10,000 தான் எரிபொருள் நிரப்ப முடியும் என்று கட்டுப்பாடு விதித்தால், எரிபொருள் நிரப்புனருடன் பேசி, அவருக்கு ரூ.1,000 இலஞ்சம் வழங்கி, கட்டுப்பாட்டு அளவிற்கு மேலாகத் தமது வாகனத்தின் தாங்கியை நிரப்பிக்கொள்வோர் பலர் இருக்கிறார்கள்.
மக்கள் எரிவாயுவிற்காக நாட்கணக்காக வரிசையில் காத்திருக்கும் போது, எரிவாயுக் கடைக்காரருக்கு இலஞ்சம் கொடுத்து, கடையின் பின்கதவால் எரிவாயு பெற்றுக்கொள்வோர் இருக்கிறார்கள். இதைச் செய்பவர்கள் எல்லாம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மட்டுமல்ல. ஆகவே இங்கு பலரும் தாம் எதையும் விட்டுக்கொடுக்கத் தயராகவில்லை. தமது வாழ்க்கை முறையை கொஞ்சம் கூட மாற்றியமைக்கத் தயாராகவில்லை.
ஆகவே, அவர்களுக்கு கட்டமைப்பை மாற்றுவதைப் பற்றி அக்கறையில்லை. தாம் நிகழ்காலத்தில் பிரச்சினையில்லாமல், நோகாமல், தாம் எப்படி வாழ்ந்தோமோ அப்படியே வாழ வேண்டும். அதற்கு வழிசமைக்கிற ஒரு இரட்சகன் வரவேண்டும். அவனை ஆதரிப்போம் என்பதுதான் இங்கு பலரின் மனநிலை.
இதனால்தான் மாறி மாறி இரட்சகர்களுக்கு வாக்களித்துக்கொண்டு இருக்கிறார்கள் மக்கள். இங்கு கட்டமைப்பை மாற்றவேண்டுமென உண்மையாக விரும்புகிறவர்களுக்கு மதிப்புமில்லை; ஆதரவுமில்லை. குறைந்த வரி, ஆனால் அரசாங்கம் நிறைந்த மானியங்களையும் உதவிகளையும் வழங்கவேண்டும் என்று நினைக்கும் மக்கள் இங்கு ஏராளம்.
அந்த மக்கள் பதவிக்குக் கொண்டு வந்த நாயகனான கோட்டாபய, அந்த மக்களின் கனவை நனவாக்கியதன் விளைவைத்தான் இன்று நாம் அனைவரும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். நான் மட்டும் வாழ்ந்தால் போதும், மற்றவன் எக்கேடுகெட்டாலென்ன என்று நினைத்த இலங்கையின் பெரும்பான்மையினம், ஒரு வௌிப்படையான இனவாதிக்கு வாக்களித்தது. அவன் பதவிக்கு வந்தால், சிறுபான்மையினர் துன்பத்திற்காளாவர்களே, அரச படைகளால், பொலிஸாரால் அடக்குமுறைக்காளாவார்களே என்றெல்லாம் வாக்களித்த அந்த பெரும்பான்மை யோசிக்கவில்லை.
பதவிக்கு கொண்டு வந்த இரட்சகன் முன்பு, சிறுபான்மையினரிடம் மட்டும் காட்டிய வன்முறைவெறியை, இன்று பெரும்பான்மையினருக்கு எதிராகவும் காட்டத் தொடங்கியது கண்டு அவருக்கு வாக்களித்தவர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
தாம் வெறுக்கும் இந்த முன்னாள் இரட்சகனை விரட்டிவிட்டு, தமக்கு சொகுசான வாழ்க்கையை அளிக்கக்கூடிய இன்னோர் இரட்சகனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த இரட்சகனுக்காக தேடல் நிற்கும் வரை, கட்டமைப்பு மாற வேண்டும் என்று மக்கள் உணரும் வரை, அதற்காக விட்டுக்கொடுப்புகளுக்கு தயாராகும் வரை, இங்கு எதுவும் மாறப்போவதில்லை என்பதுதான் யதார்த்தம்.