நாபா எனும் மனிதம் பிறந்த தினம் நவம்பர் 19!

ஒருவன் தனக்காக மட்டும் வாழ்ந்தால் சுயநலம். தன் உறவுகளுக்காக வாழ்ந்தால் பாசம். தன் இனத்துக்காக என வாழ்ந்தால் தியாகம். என்வரையில் நான் கடந்துவந்த பாதையில் சந்தித்த மனிதர்களில் பலர், நான் உட்பட சுயநலம் மற்றும் பாசத்துக்குத்தான் முன்னுரிமை கொடுத்தோம். ஆனால் தன் சுயநலம் விட்டு, பாசத்தை துறந்து, இனத்துக்காக வாழ்ந்து, உயிர் கொடை ஈய்ந்தவர் நாபா. அந்த மனிதநேயன் பிறந்த தினம் நவம்பர் 19.

நாபாவுடன் 1978 முதல் எனக்கு அறிமுகம் ஏற்பட்டபோதும், 1988ல் வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் தினத் தெரிவு பற்றிய கலந்துரையாடலில், அப்போதய தேர்தல் ஆணையாளர் அமரர் சந்திரானந்த டி சில்வாவிடம், வரதராஜ பெருமாள் நவம்பர் 19ஐ முன்மொழிந்த போதுதான், அது நாபாவின் பிறந்த தினம் என்பதை அறிந்துகொண்டேன். கூடவே இந்திய பிரதமர் அன்னை இந்திரா காந்தி பிறந்ததும் நவம்பர் 19 என வரதன் கூறினார்.

பத்து வருடங்கள் நன்பனாய் தோழனாய் தலைவனாய் இருந்தவர், பிறந்த தினம் கூட தெரியாத அளவிற்கு, பொது விடயங்கள் தவிர சுய இன்பங்கள் பற்றிய சிந்தனையற்ற ஒரு மனிதனாகவே நாபா இருந்தார். மட்டக்களப்பில் வீசிய சூறாவழி புனர்வாழ்வு வேலைத்திட்டத்திற்கு, லண்டனில் இருந்து வந்து நாபாவுடன் இணைந்த மனோ, கனெக்ஸ் போன்றவர்கள் சில மாதங்களில் லண்டன் திரும்பிய போதும், நாபா தொடர்ந்தும் செயல்பட்டு பின் பொலிஸ் தேடுதலால் மீண்டும் இந்தியா சென்றார்.

காங்கேசன்துறையில் வசதியான குடும்பத்தில் மூன்று சகோதரிகளுடன் பிறந்தவர், தன் இளவயதில் தந்தையை இழந்த போதும், அந்த குறைதெரியாமல் அவரின் தாய் சகோதரிகளால் பாசமாக வளர்க்கப்பட்டார். கல்லூரி காலங்களில் மாணவர் போராட்ட நடவடிக்கை காரணமாக ஏற்பட்ட பொலிசாரின் தொடர் நெருக்கடிகளால், அவரின் உறவுகள் அவரை இங்கிலாந்துக்கு மேற்படிப்புக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சென்றும் நாபா எம் இன விடுதலை பற்றிய ஈர்ப்பால், பாலஸ்தீன விடுதலை போராளிகளிடம் இராணுவ பயிற்சி பெற்றபின் இந்தியா சென்றார்.

அமரர் யோகசங்கரி என்னிடம் கூறிய விடயம் ஞாபகத்தில் வருகிறது. தாய், சகோதரிகள் தான் லண்டனில்தான் இருக்கிறேன் என்பதை நம்புவதற்காக, இந்தியாவில் இருந்து நாபா எழுதி அனுப்பும் கடிதத்தை, லண்டனில் இருந்து இலங்கைக்கு அனுப்புவதாக சங்கரி கூறினார். ஈழ விடுதலை பற்றிய சிந்தனை கொண்டவர் சந்திக்கும் இடமாகமட்டுமல்ல, பல நேரங்களில் இரவுநேர தங்கும் இடமாகவும் தன்வீடு பயன்பட்டதையும், அவர்களை அன்போடு கவனித்த தன் மனைவி மனோ சார் பற்றியும் சங்கரி கூறியவை இன்றும் என் நினைவில்.

இன்று எம்மில் பலர் பல காரணங்களால் புலம்பெயர்ந்து வாழ்கிறோம். எத்தனை பேர் மீண்டும் நிரந்தரமாக தாயகம் திரும்புவோம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது. இந்த சூழ்நிலையை உருவாக்கியதும் நாம் தான் என்பதை, இதயசுத்தியுடன் அலசுபவர்களும் மிக அரிதாகவே உள்ளனர். இன விடுதலை போராட்டம் எம் இனத்துள்ளே ஏற்ப்படுத்திய பிளவு தான் இதன் மூலவேர். அதனால் தான் பலர் அகதி ஆகினர்.

அன்று கல்வி கற்க என லண்டன் அனுப்பப்பட்டவர் தன் சுயநலம் விட்டு, தன்மீது பாசம் கொண்ட உறவினரை சந்திப்பதை தவிர்த்து, தன் இனம் பற்றிய சிந்தனையில் செயல்ப்பட்டது போல, நாம் அனைவரும் செயல்பட்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிராது. சொந்த மக்களின் சுதந்திரம் வேண்டிப் பலரும் போராட முற்பட்ட வேளையில், நாபாவின் முன் முயற்சி அனைவரையும் ஒன்றுபடுத்தல். எமக்குள் பிரிவினை தொடர்ந்தால் அது எதிரிக்கு சாதகமாகும் என எச்சரித்தார்.

அவரின் பல விட்டுக்கொடுப்புளுடனான விடா முயற்சியால் உருவானதே, ஈ என் எல் எப் (ஈழ தேசிய விடுதலலை முன்னணி) என்ற பிரபாகரன், சிறிசபாரத்தினம், பாலகுமார், பத்மநாபா கூட்டு. திம்புவில் இந்திய வெளியுறவு செயலாளர் ரொமேஷ் பண்டாரி கொடுத்த அழுத்தத்தை புறம் தள்ளும், தார்மீக துணிவை கொடுத்தது அந்த கூட்டு. பின் நாளில் இந்திய தூதுவர் டிக்சிட் சூத்திரத்துக்கு தலையாட்டவைத்தது, எமக்குள் ஏற்பட்ட பிளவு.

ஆரம்பத்தில் இருந்தே உள்முரண்பாடுகள் பேசித்தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தவர் நாபா. தான் சார்ந்த அமைப்பில் மட்டுமல்ல, ஏனைய அமைப்புகளிலும் கருத்து முரண்பாடுகள் கருவிகள் கொண்டு தீர்க்கப்படுவதை துணிவுடன் எதிர்த்தவர் நாபா. பத்மநாதன் முதல் சுந்தரம் வரை தண்டிக்கப்பட்ட விதத்தை விமர்சித்ததால், ஆபத்தை சந்தித்தவர் நாபா. இருந்தும் அவர் கருத்துக்களை கருத்துகள் கொண்டுமட்டுமே எதிகொள்ள வேண்டும் என்ற தன் நிலைப்பாட்டை கைவிடவில்லை.

அவரது தொடர் முயற்சியினால் அதுவரை பல துருவங்களாக செயல்பட்டவரை, ஒரு அணியில் இணைப்பதில் அவர் வெற்றியும் கண்டார். மற்ற அமைப்புகளில் மட்டுமல்ல தன் அமைப்புள்ளும் ஏற்பட்ட முரண்பாடுகளை அவர் பேசி தீர்க்க முற்பட்ட வேளையில், சூளைமேடு சம்பவம் அவரை வேறு முடிவு எடுக்கவேண்டிய நிலைமையை உருவாக்கியது. அப்போது கூட கருவிகள் கொண்டு தம் முரண்பாட்டை தீர்க்க முற்பட்டவர்கள் போல நாபா செயல்ப்படவில்லை. பிரபாகரன், உமாமகேஸ்வரன், ஒபரோய் தேவன், கருணா பிரிவுகள் கருவி கொண்டே நிறைவேறியது.

பல உன்னதமான தோழர்கள் மாற்று அமைப்புகளால் படுகொலை செய்யப்பட்ட போதும், நாபா நிலை தடுமாறவில்லை. கூட்டுக்குள் இருந்து கொண்டே பிரபாகரன் ஏனைய அமைப்பினரை தீர்த்துக்கட்ட முற்பட்ட வேளையில், சிறிசபாரத்தினத்தை காப்பாற்ற அவர் எடுத்த முயற்சி தோல்வி அடைந்தபோது, அவர் அடைந்த வேதனையை நேரில் பார்த்தவன் நான். அன்று ஒரு அமைப்பு அழிந்தால் தாங்கள் தனிக்காட்டு ராஜா ஆகலாம் என்ற மனநிலையில் இருந்தவர் மத்தியில், நாபா வேறுபட்டவராக இருந்தார்.

மூத்த ஆரசியல் தலைவர்கள் போல ஏட்டிக்கு போட்டியாக செயல்ப்பட அவர் விரும்பவில்லை. அனைவரின் இலக்கும் ஒன்றுதான் என்ற தெளிவான சிந்தனை அவரிடம் இருந்ததால், ஏற்பட்ட உள்முரண்பாடு மட்டுமல்ல, ஏனைய அமைப்புகளுடனும் ஏற்படும் முரண்பாடுகளை எமக்குள் பேசித் தீர்க்கவே அவர் முயன்றார். அதற்காக அவர் பல கசப்பான அனுபவங்களை சந்தித்த போதும் நோ புறப்ளம் என்று கூறியே தன் பணி தொடர்ந்தார். எமக்குள்ளான பிரிவினை எதிரிக்கு பலத்தையும் எமக்கு பலவீனத்தையும் தரும் என்பதால் அவர் பொறுமை காத்தார்.

எம் இனத்துள் முரண்பாடு தொடர்வதே எமது வரலாறாகிப் போய்விட்டது. பிளவுகளால் தான் பெரும்பாலான தோல்விகளை நாம் அடைந்தோமே அன்றி, எதிரியின் பலத்தால் அல்ல என்பது நிதர்சனம். நான்கு அமைப்புகளின் கூட்டு, நெஞ்சை நிமிர்த்தி திம்புவில் நின்றது போல நீடித்து நிலைக்க, எமக்குள் ஏற்பட்ட பிளவுகள் இடம் தரவில்லை. வடக்கு கிழக்கின் பெரும் பகுதிகளை விடுதலை புலி போராளிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலை எதிரிக்கு சவாலாக இருந்தபோது, அவர்களுக்குள் ஏற்பட்ட பிளவு தான் ஆயுதங்களை மௌனிக்க செய்தது.

வரலாறுகளை ஆவலுடன் படிக்கும் நாம் ஏனோ, நாம் விட்ட வரலாற்று தவறுகளை திருத்த விளைவதில்லை. ஆனால் நாபா முயன்றார். ஒரு தடவை அல்ல பல தடவைகள் தன் உயிரை பணயம் வைத்து அவர் முயன்ற ஒற்றமை, இறுதியில் அவரையே உயிர் கொடை ஈயும் நிலைக்கு உட்படுத்தியது. பேரினவாதிகளிடம் அரசியல் பேரம் பேசி எமது உரிமைகளை பெறலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்த தலைமைகள் மத்தியில் நாபா மாறுபட்டு நின்றார்.

இனங்களிடையே உள்ள முரண்பாட்டை அரசியல் ஆக்காமல், அவர்களுடனான உறவுகள் மூலம் தீர்க்கவே அவர் விரும்பினார். இனங்களிடையே நம்பிக்கை எனும் உறவுக்காக கடுமையாக உழைத்தார். தென்னிலங்கையில் இயங்கிய சிங்கள முற்போக்கு சக்திகளுடன் மட்டுமல்ல, வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம் தலைமைகளுடனும், அவர் தன் உறவை வளர்த்தார். தமிழ் மக்களின் போராட்ட நியாத்தன்மை மற்றும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை, ஏற்றுக்கொண்டதால் தான் வடக்கு கிழக்கு மாகாண சபை அமைச்சரவை மூன்று இனத்தவரையும் உள்வாங்கியது.

நாபா என்றும் தன் இனத்தை மட்டும் நேசித்தவர் அல்லர். எந்த மதத்தையும் நிந்திதவரும் அல்லர். இலங்கை தீவில் யாரும் உயர்ந்தவரும் அல்ல எவரும் தாழ்ந்தவரும் அல்ல என்பதே அவரின் நிலைப்பாடு. இருப்பதை எல்லாம் இனங்களுள் பகிர்வோம், இல்லாமை இல்லை என்ற நிலையை எமக்குள் உருவாக்குவோம், ஏற்றத்தாழ்வு அற்ற சமூக கட்டமைப்பை உருவாக்குவோம் என்ற அவரின் கனவு நனவாகும் முன் நாபா பலி கொடுக்கப்பட்டார்.

தன்னை கொல்லும் முடிவில் பிரபாகரன் அணியினர், கலைஞர் அனுசரணையில் காத்திருப்பது தெரிந்திருந்தும், சென்னைக்கு மீண்டும் வரும் துணிபு நாபாவுக்கு மட்டுமே சாத்தியம்.  இரவு உணவை தாஸ் வீட்டு மொட்டை மாடி ஓலை குடிசையில் உண்ணும் வேளை, கீழே நாபா தோழர் வந்திருப்பதாக தாஸ் கூற, கைகூட கழுவாமல் சென்ற என் கரம்பற்றிய நாபா சொன்ன செய்தி, இன்றிரவே டெல்லி போகிறேன், இங்கிருந்தால் கலைஞர் கரைச்சல் தருவார் என்பதே. அப்போது என் மனதில் உதித்ததை இப்போது பகிர்கிறேன்.

வடக்கு கிழக்கு மாகாண சபையில் பிரேமதாசாவின் நெருக்குதல் தாங்க இயலாமல், நாம் நிறைவேற்றிய தீர்மானம் பற்றி முதல்வராக இருந்த கலைஞருக்கு தெரிவிக்க சென்னை சென்றோம். எம்மை சந்திக்க அவர் விரும்பவில்லை. பின்னர் வேண்டாவெறுப்பாக சந்திக்க முடிவெடுத்தார். நான் அவரிடம் கையளித்த எங்கள் பிரேரணை என்ன வென்று அறிய, அதனை பிரித்துகூட பார்க்காமல் வைத்தவர் கூறிய வார்த்தை, மாகாண சபையை கலைத்துவிடுங்கள் என்பதே. கூடவே அவர் மருமகன் முரசொலி மாறன் புலிகளின் பேச்சாளர் போலவே நடந்துகொண்டார்.

பின்பு நடந்த நிகழ்வுகள் பற்றி, துக்ளக் ஆசிரியரிர் சோ ராமசாமியிடம் கூறியபோது, என்ன செய்யவேண்டும் என வினாவினார். கலைஞர் எடுத்துள்ள புலி சார்பு நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு, முக்கியமாக பிரதமர் வி பி சிங்குக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றேன். முதல்வரை அம்பலப்படுத்த நீங்கள் முயலும் செயல், உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அவர் எச்சரித்தார். இறுதியில் அவர் கூறியபடியே நடந்தது. பிரபாகரனின் அச்சுறுத்தலுக்கு பயந்து மூன்று கப்பல்களில் தமிழகம் சென்ற எம்மவரை, சென்னை துறைமுகத்தில் இறங்க கலைஞர் அனுமதிக்கவில்லை.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிர்பந்தத்தால் ஏற்றதாக கூறிய பிரபாகரன், இந்தியா தங்களை மட்டும் ஏக பிரதிநிதிகள் என ஏற்காததால் தான், அமைதிப்படையுடன் மோதும் முடிவை எடுத்தார். மண்ணில் ஏனைய அமைப்புகளின் பிரசன்னம், அவருக்கு அமைதியின்மையை ஏற்படுத்தியது தான் உண்மை. ஆனால் நாபா அவ்வாறு சிந்திக்கவில்லை. மூத்த அரசியல் தலைமை போட்டியிட மறுத்தபோது அவர் டெலோ, ஈ என் டி எல் எப் போன்ற அமைப்புகளுடன் இணைந்து தான், வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட சம்மதித்தார்.

ஏக பிரதிநிதித்துவத்தில் மட்டுமல்ல தலைமை பதவியிலும், அவர் மற்றவர்களை விட மாறுபட்ட சிந்தனை கொண்டவராகவே இருந்தார். தன்னை முன்னிலைப் படுத்துவதோ, பதவிக்கு பின்னால் ஓடுவதோ, ஆசைப்படுவதோ நாபாவின் அகராதியில் இல்லாத ஒன்று. போட்டி நிலைப்பாடு இல்லாத, எல்லோரையும் அரவணைக்கும் பண்பு நிறைந்த மனிதம் தான், அவர் எல்லோராலும் ஏற்கப்படும் நிலைக்கு அவரை உயர்த்தியது. இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை முதல்வர் பதவி அவரை தேடி வந்தும் அவர் அதனை ஏற்கவில்லை.

எதிலும் தன்னை முன்னிலைப்படுத்தாது தன்னுடன் பயணித்தவரை, அவர் தம் திறமைகொண்டு உயர்நிலைக்கு கொண்டுசெல்லும் தலைமைத்துவ பண்பை, நாபா மட்டுமே கொண்டிருந்தார் என கூறுவது மிகையில்லை. எந்த அமைப்பின் தலைமையும் இவ்வாறு செயல்ப்படவில்லை. மூத்த அரசியல் தலைமைகள் முதல், போராட்ட அமைப்புகளில் ஏற்பட்ட பிளவுகள், தலைமைக்கான போட்டியாக இருந்த போதும், நாபாவிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருந்ததால் தான் அவருடன் நேரடி முரண்பாடு எவருக்கும் இருக்கவில்லை.

தன் இனவிடுதலைக்காக தான் வரித்துக்கொண்ட கொள்கையை நிறைவேற்றும் சாமானியனாக இறுதிவரை செயல்ப்பட்டதால் அவர் இழந்தவை ஏராளம். அவர் மட்டும் சுயநலம் கொண்டவராக இருந்திருந்தால், படிக்க என சென்ற இங்கிலாந்தில் மற்றவர் போல வாழ்ந்திருப்பார். அல்லது பாசத்துக்கு உட்பட்டிருந்தால், அவர் மீது அன்பு கொண்ட உறவுகளுடன் வாழ்ந்திருப்பார். ஆனால் நாபா வாழ்ந்த 39 ஆண்டுகளில் பெரும்பாலானவை, தன் இன விடுதலைக்கான போராட்ட கால நாடோடி வாழ்வே.

சுயநலம், பாசம் தவிர்த்த தியாக வாழ்வு வாழ்ந்த நாபா, தன் மக்களைத் தான் நேசித்தார். பெரும்பாலான அவர் நேரங்களை காதலும், பாசமும் பங்கிடவில்லை. மாறாக மக்கள் மீதான நேசம்தான் முன்னிலை வகித்தது. அவருடன் பழகிய நண்பர்கள், தோழர்கள், மாற்று இனத்தவர் என அனைவராலும் நேசிக்கப்பட்ட, நல்ல மனிதனாய் தான் அவர் இறுதிவரை வாழ்ந்தார். யார் மீதும் சினம்கொண்டு அவர் செயல்ப்பட்டதில்லை. தன்னை சினமடைய செய்பவர் செயல்கூட அவருக்கு நோ புறப்ளம் தான்.

நாபா மீது கொண்ட பகைமையாலோ அன்றி வெறுப்பாலோ பிரபாகரன் அவரை கொல்லும் முடிவை எடுத்திருக்க மாட்டார். ஏனென்றால் நாபா யாருடனும் பகைமை பாராட்டுவதில்லை. எவரையும் வெறுப்படைய செய்வதும் இல்லை. அப்படி என்றால் ஏன் அந்த முடிவை பிரபாகரன் எடுத்தார் என்ற கேள்விக்கு பதில், அவருக்கு இருந்த பரநோயிட் எனும் மனோவியாதி. தன்னை சுற்றி இருப்பவரால் தனக்கு ஆபத்து என எண்ணியே தன் அமைப்பு சார்ந்தவரையே கொன்றவர் பிரபாகரன். அப்படிபட்டவர் மாற்று அமைப்பின் தலைவர் நல்லவர் என்பதால் விட்டுவிடுவாரா?

பிரபாகரன் செயல் என்றுமே எம் இனத்துக்கு தீர்வை பெற்றுத்தராது என்ற முடிவில் தான், நாபா எதிர்நடவடிக்கைகளில் ஈடுபட முற்பட்டாரே தவிர, எமக்குள்ளான மோதலை அவர் இறுதிவரை விரும்பவில்லை. ஈ பி ஆர் எல் எப் மாகாண சபை உறுப்பினர் அனைவரும் பதவி விலகி, அந்த வெற்றிடத்துக்கு புலிகள் உள்வாங்கப்பட்டு, அவர்களே தலைமை ஏற்று மாகாண சபையை நடத்தட்டும் என, பெரும்தன்மையோடு இனத்தின் நன்மை கருதி அறிவித்தவர் நாபா. நல்லது கொட்டதை முன்னரே அறியும் தீர்க்கதரிசனம் நாபாவின் செயல்.

அன்று பிரபாகரன் சகோதர அமைப்புகளை அழித்து, இந்திய அமைதிப்படையுடன் மோதி, ராஜீவ் காந்தியை கொன்று இறுதியில் தனிமைப்பட்டிராவிட்டால், இன்று எம் இனம் என்ன நிலையில் இருந்திருக்கும் என எண்ணும் ஒவ்வொருவர் இதயமும் கனக்கும். நந்தவனத்து ஆண்டிகளா எம் இனம் என்ற கேள்வியும் நிச்சயம் எழும். பிரிவுகள் நிறைந்த எம் தலைமைகளுள், நன்மை தீமை பற்றி சிந்தித்து செயல்ப்பட்ட நாபா போன்ற அன்னப்பறவை காவியங்களில் மட்டுமே.

நாபா பற்றி நான் எழுதும் போதெல்லாம் அதை தனிநபர் வழிபாடு, தலைவன் துதிபாடல் என விமர்சிப்பவருக்கு உண்மையில் நாபா பற்றி பூரணமாக தெரியாது. தனது சுயநலம் விட்டு அவர் பட்ட அவலங்கள். விட்டுக்கொடுப்புளால் அவர் சந்தித்த அவமானங்கள் பற்றி நான் அவருடன் விவாதித்தபோது ஒன்று மட்டும் எனக்கு புரிந்தது, ‘இவர் நடிகர் அல்ல, தான் நேசித்த மக்கள் நலனுக்காக எதையும் இழக்கும் இதயம் கொண்டவர்’ என்பது.

உணவு, உடை, உறையுள் இவை தான் மனிதனின் அடிப்படை தேவை. இதில் எதனை நபா மக்கள் உரிமைப் போராட்ட வாழ்வை ஏற்றுக்கொண்ட பின் அனுபவித்தார் என்பதை, எவராவது எனக்கு சவாலாக முன்வைக்க முடியுமா?. இந்தியாவில் இருந்த வேளையில் இயக்கவாழ்வில் இரத்தம் விற்று ஆரம்பகாலத்தை முன்னெடுத்தவர்,  மக்களின் உரிமைகள் பற்றிய முயற்சியின் போது தானே நிலம் வீழ்த்தப்பட்டார்.

இந்தியாவை கட்டி எழுப்பிய இந்திரா! ஈழத்தை அடைய விரும்பிய நபா! இருவரின் பிறந்த தினம் நவம்பர்19. இந்திரா தன் பாதுகாவலரால் பலி எடுக்கப்பட்டார், நாபா தான் நம்பியவரால் பலி கொடுக்கப்பட்டார். இருவருமே நிராயுத பாணிகளாக இருந்த வேளை தான் உயிர் பறிக்கப்பட்டனர். இம்முறை வழமையாய் இடம்பெறும் இடத்தில் இந்திரா நினைவு கூரப்பட மாட்டார். காரணம் அவர் நினைவாலாய பகுதியில் பரவியுள்ள பறவை காச்சல். நாபா நினைவு கூரல் கூட தம்முள் பிரிந்தவரால், தனித்தனி நிகழ்வாக நடக்கும். காரணம் அவர்தம் பதவி காச்சல்.

(ராம்)