தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளும் ஆர்வம், நம்மில் பலருக்கு எழுவது இயல்பு. தமிழரின் பாரம்பரியம், கலைகள், மொழி போன்றவற்றை வளர்ப்பதுடன், தொன்மை பற்றிய அறிவும் தமிழர் என்ற தேசியத்தை கட்டமைப்பதற்கு பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது. இன்றைக்கு பலர், தேசியம் என்பதை, சமூக-பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட நாகரீகமாக புரிந்து கொள்வதில்லை. மாறாக, உலகின் பிற இனங்களில் இருந்து தனித்துவமான கூறுகளைக் கொண்ட, உன்னத இனமாக வரையறுப்பதற்கு தவறாக பயன்படுத்தப் படுகின்றது.இதனால், தமிழரின் தொன்மை குறித்த தேடல், செயற்கையாக கட்டமைக்கப் பட்ட மொழித் தேசியத்தின் இருத்தலுக்கான அத்திவாரமாக உறுதி செய்யப் படுகின்றது. “உலகிலேயே முன் தோன்றிய மூத்தகுடி” என்று இனப்பெருமை பேசுவதற்காக, பண்டைய இனங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறோம். அமெரிக்காவின் மாயன்களின் வரலாறு முதல், அவுஸ்திரேலிய அபோரிஜின்கள் வரை சகோதர உறவு முறை கொண்டாடுகின்றோம். அதே நேரம், ஆங்கிலம், கிரேக்கம், இத்தாலி மொழிகளுக்குள் எத்தனை தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன என்று ஆய்வு செய்கிறோம். அதாவது, நாகரீகத்தால் உயர்ந்த ஐரோப்பியர்களின் மூதாதையரும் தமிழர்கள் என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டுமாம். இந்த ஆய்வாளர்கள் எல்லோரும், ஒரு முக்கியமான அடிப்படை உண்மையை மறந்து விட்டு, அல்லது மறைத்துக் கொண்டு பேசுகின்றனர்.
உலகிலேயே முதலாவது மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றினான். உலகில் உள்ள மனித இனங்கள் எல்லாம், ஆப்பிரிக்காவில் இருந்து பிரிந்து சென்றவை தான். தம்மை தனித்துவமாக இனங்களாக கருதிக் கொண்டிருந்த ஐரோப்பியரும், சீனர்களும் ஆபிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சிகளும், மரபணு ஆராய்ச்சிகளும் அந்த முடிவுக்கே வருகின்றன. மனித இனத்தின் மூலத்தை ஆராயும் விஞ்ஞானம், ஆப்பிரிக்காவை சுற்றிக் கொண்டிருக்கையில், தமிழர்கள் கடலில் அமிழ்ந்த குமரி கண்டத்தினுள் தமது மூலத்தை தேடிக் கொண்டிருப்பது வியப்பை அளிக்கின்றது.
ஐரோப்பியரின் பூர்வீகம் (இன்று ரஷ்யாவுக்கு சொந்தமான) கொகேசியன் மலைகளில் இருந்து தொடங்கியதாக, காலம் காலமாக கற்பிக்கப் பட்டு வந்துள்ளது. அதனால் இன்றைக்கும் வெள்ளை இனம் என்பதை கொக்கேசியன் என்று குறிப்பிடுகின்றனர். சீனர்கள், தமது பூர்வீகத்தை வட சீனாவில் இருந்து ஆரம்பிக்கின்றனர். அதே போன்று, தமிழர்களும் தமது பூர்வீகத்தை குமரி கண்டத்தில் இருந்து தொடங்குகின்றனர். மேற்குறிப்பிட்ட கோட்பாடுகளின் ஒரே நோக்கம், தமது இனத்தின் தனித்துவத்தை வலியுறுத்துவது. துரதிர்ஷ்டவசமாக, அது அரசியலில் தீவிர வலதுசாரிப் போக்குடைய இனவாதிகளுக்கு உதவி வருகின்றது.
உலகில் எது முதலில் தோன்றியது? இனமா, அல்லது மொழியா? உதாரணத்திற்கு ஆங்கிலேயர்களை எடுப்போம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பாவில் இருந்து குடியேறிய ஜெர்மன் இன மக்களும், பிரித்தானியாவில் வாழ்ந்த கெல்டிக் இன மக்களும் கலந்த இனம் தான் ஆங்கிலேய இனம். அவர்கள் இன்று ஜெர்மன் மொழியும் பேசவில்லை, ஐரிஷ் போன்ற கெல்டிக் மொழியும் பேசவில்லை. ஜெர்மன், பிரெஞ்சு, நார்வீஜியன் மொழிகள் கலந்து ஆங்கிலம் என்ற புது மொழி உருவாகியது. தமிழர்களும் அதே போன்றதொரு அடையாளச் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டுள்ளனர்.
இன்று தமிழ் பேசும் மக்கள், பல இனக்கலப்புகளால் உருவானவர்கள். தமிழை ஒத்த திராவிட மொழிகளைப் பேசும் மக்கள், சம்ஸ்கிருத கலப்பினால் புதிய மொழிகளை உருவாக்கிக் கொண்டுள்ளன. தமிழ் மொழி மூவாயிரம் ஆண்டு பழமையான மொழி என்பதை மறுக்க முடியாது. இதனால், மொழியியல் வல்லுனர்கள், திராவிட மொழிகளின் வேர்களை அறிவதற்காக தமிழ் மொழியை ஆழ்ந்து கற்கின்றனர். நாம் பேசும் நவீன தமிழ், பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டது. பழந் தமிழில் இருந்து வேறுபட்டுள்ளது. ஆனாலும், பிற திராவிட மொழிகளைப் போலல்லாது, சம்ஸ்கிருத கலப்பை கூடுமான அளவு தவிர்த்து வந்துள்ளது. தமிழர்களை ஒரு தனி இனமாக வரையறை செய்வதற்கு, அது மட்டும் போதாது. இடப்பெயர்வுகளுக்காளாகும் மக்கள், தாம் தங்கி விடும் இடத்தில் பேசப்படும் மொழியை, சொந்தமாக்கிக் கொள்வது வழக்கம். ஆகவே, தமிழர்கள் என்பதை, ஒரு மொழி பேசும் மக்கள் கூட்டமாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழர் என்ற இனம் எங்கே இருக்கிறது? அது பெரும்பாலும் சாதி என்ற பெயரில் மறைந்திருக்கிறது. அகமண உறவுகளின் மூலம், இரத்த சம்பந்தம் பாதுகாக்கப் படுவதால், அந்த சாதி அல்லது இனம் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று, நிறமூர்த்தங்களை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க முடிகின்றது. அவ்வாறு தான், அண்மையில் தமிழக மலைப்பகுதியில் வாழும் பழங்குடி இனத்தின் மரபணு, இந்திய உபகண்டத்திலேயே பழமையானது என்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதைக் கேள்விப்பட்ட உடனேயே, பழங்குடி இனங்களை ஒதுக்கி வைத்திருக்கும், நகர்ப்புறத்தை சேர்ந்த “நாகரீகமடைந்த” தமிழர்கள், தமது தமிழினவாத பிழைப்பு அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டனர்.
தமிழகத்தில் இருளர்கள் போன்ற பழங்குடி இனங்கள், இன்றைக்கு முற்றாக அழிந்து போகும் நிலையில் உள்ளன. அவர்களும் தமிழ் பேசினாலும், ஆப்பிரிக்க கருப்பர்கள் போன்ற தோற்றத்தினால், “இருளர்கள்” என்று அழைக்கப் பட்டனர். எமது மூதாதையரின் வம்சத்தை பத்தாயிரம் வருடங்களாக பாதுகாத்து வரும் பழங்குடி இனங்களின் நல்வாழ்வுக்காக, இதுவரை ஒரு சிறு துரும்பைக் கூட நாம் எடுத்துப் போடவில்லை. ஆனால், நாம் முன்னெடுக்கும் இனவாத அரசியலுக்கு அவர்களை அழகு பொம்மைகளாக பயன்படுத்திக் கொள்கிறோம்.
அண்மைய கண்டுபிடிப்புகளுக்கு வலுச் சேர்ப்பதற்காக, பரணில் போட்டு வைத்திருந்த குமரிகண்டம் கோட்பாட்டையும் தூசு தட்டி எடுக்கிறோம். “ஒரு காலத்தில், ஆப்பிரிக்காவும், இந்தியாவும், அவுஸ்திரேலியாவும் நிலத்தால் இணைக்கப் பட்டிருந்தன. அதுவே குமரி கண்டம். அங்கே வாழ்ந்த தமிழன், இந்தியா ஊடாக உலகம் முழுவதும் சென்றான். அதுவே உலகில் முன் தோன்றிய மூத்த குடியின் வரலாறு,” என்று முடிக்கின்றனர்.
குமரி கண்டம் பற்றிய கதையாடல்கள், தமிழர்கள் மத்தியில் பிரபலமான அளவுக்கு பிற இனங்களினால் பேசப் படுவதில்லை. அந்நிய அகழ்வாராய்ச்சியாளர்கள், வரலாற்று அறிஞர்களும் அதனை பல்வேறு தொலைந்த நாகரீகங்களில் ஒன்றாகவே கருதுகின்றனர். காவிரிப்பூம் பட்டினம் போன்று, கடல்கோளினால் அழிக்கப் பட்ட பண்டைய நாகரீகங்கள் சில கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆனால், இவை எல்லாம் குமரி கண்டம் என்ற பிரமாண்டமான கண்டத்தின் இருப்பை உறுதி செய்யப் போதுமானவை அல்ல. குமரி கண்டம் பற்றிய கருதுகோள், ஆதாரம் குறைவான ஊகமாகவே இன்றும் நீடிக்கின்றது.
தமிழரின் முன்னோர்கள், “கடல்கோளால் அழிக்கப் பட்ட, கற்பனையான குமரி கண்டத்தில் இருந்து வந்தனர்” என்று, எதற்காக ஒன்றை கஷ்டப் பட்டு நிறுவ வேண்டும்? இன்று பல அறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, “ஆப்பிரிக்காவில் இருந்து மனித இனம் தோன்றிய வரலாற்றில்” இருந்து தொடங்கலாமே? அதற்கான மொழியியல் ஆய்வுகளையும் செய்யலாமே? ஏற்கனவே, பேராசிரியர் அறவாணன் போன்ற சில அறிஞர்கள், “தமிழர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறினர்” என்ற கோட்பாட்டை வலியுறுத்தி வந்துள்ளனர்.
இருந்தாலும், இன்றைய தமிழ் இனவாதிகள், “ஆபிரிக்காவில் இருந்து வந்து குடியேறிய வரலாற்றை” மறைக்கும் காரணம் என்ன? தமிழ் இனவாத கோட்பாடு, ஐரோப்பிய மையவாத சிந்தனையின் பக்க விளைவு ஆகும். “மறுக்கவியலாது, ஐரோப்பியர்களே உலகிற் சிறந்த உன்னதமான நாகரீகத்தை கொண்ட மக்கட் கூட்டம். அவர்களுக்கு அடுத்த நிலையில் தமிழர்கள் இருக்கின்றனர். ஆப்பிரிக்கர்கள், நாகரிக வளர்ச்சியில் பின்தங்கியுள்ள காட்டுமிராண்டிகள். ” என்ற இனவாத சிந்தனை அவ்வாறான முன் முடிவுகளை எடுக்க வைக்கின்றது.
தமிழர்கள் ஆபிரிக்காவில் இருந்து வந்து குடியேறிய இனத்தை சேர்ந்தவர்கள் என்றால், ஆபிரிக்காவில் இன்றைக்கும் வாழும் சில இனங்களுடன் மொழி, கலாச்சார, மத ஒற்றுமைகள் காணப் படுமல்லவா? அவற்றை ஆராய்வதும், தொடர்புகளை விளக்குவதுமே இந்த தொடரின் நோக்கம். ஏற்கனவே பேராசிரியர் அறவாணன் போன்றோர் எழுதிய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு, நான் மேலும் சில தகவல்களை சேர்த்துள்ளேன். மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த பின்னர், சில ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களின் நட்பு கிடைத்த பின்னர் தான், எனக்கும் அந்த உண்மை தெரிய வந்தது. எமது மொழி, கலாச்சாரங்களைப் பற்றிய தகவல்களை பறிமாறிக் கொண்டோம். தமிழர்களினதும், ஆப்பிரிக்கர்களினதும் பண்பாட்டுக் கூறுகள் பல, அதிசயப் படத் தக்க ஒற்றுமைகளை கொண்டுள்ளன. இதனை நாம் ஐரோப்பியரிடம் எதிர்பார்க்க முடியாது.
தமிழர்களைப் போன்ற தோற்றம் கொண்ட ஆப்பிரிக்கர்கள் இருக்கின்றனர். அவர்கள் வாயைத் திறந்து பேசினால் ஒழிய, அவர்களுக்கு இடையிலான வித்தியாசத்தை கண்டு பிடிப்பது கடினம். குறிப்பாக, சோமாலியர்கள், எத்தியோப்பியர்கள், எரித்திரியர்கள் போன்ற இனங்களில், தமிழர்களின் முகச் சாயலைக் கொண்ட பலரைக் காணலாம். சோமாலியர்கள், மற்றும் அரேபியாவை சேர்ந்த யேமனியர்கள், இன்றைக்கும் தமிழர்கள் போன்று சாரம் (லுங்கி, கைலி) உடுத்துகின்றனர். உணவை சமைக்கும் முறைகளும் ஒரே மாதிரியாக உள்ளன. ஆகவே, தமிழர்களின் சகோதர இனங்களின் தாயகமான கிழக்கு ஆப்பிரிக்காவிலேயே எமது தேடலைத் தொடங்க வேண்டும்.
சோமாலியாவில் மட்டுமல்லாது, ஜிபூத்தி, எத்தியோப்பியாவின் கிழக்கு மாகாணம், கென்யாவின் வட-கிழக்கு மாகாணங்கள், போன்ற இடங்களிலும் சோமாலிய மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். முழு ஆப்பிரிக்க கண்டத்திலும், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரத்தை பின்பற்றும் ஒரேயொரு தேசிய இனம் சோமாலிய இனம் மட்டுமே. இன்றைக்கும், சோமாலியர்கள் தம்மை ஆப்பிரிக்கர்கள் என்று அழைத்துக் கொள்ள விரும்புவதில்லை. தம்மை பிற ஆப்பிரிக்க இனங்களில் இருந்து வித்தியாசப் படுத்திப் பார்க்கின்றனர்.
சோமாலிய, மற்றும் எத்தியோப்பிய/எரித்தியரின் அம்ஹாரி மொழிகள் அரபு போன்ற செமிட்டிக் மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. யூத, அல்லது இஸ்லாமிய மதங்களின் பரம்பல் காரணமாக, ஹீபுரு, அரபு மொழிகளில் இருந்தே சோமாலிய, அம்ஹாரி மொழிகள் தோன்றின என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அரேபியரும், ஹீபுரூக்களும் ஆப்பிரிக்காவில் இருந்து சென்றிருக்கவும் வாய்ப்புண்டு. நாம் உலக வரலாற்றை எதிர்த் திசையில் திருப்பிப் போட்டால், எத்தனையோ கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
வட-கிழக்கு ஆப்பிரிக்காவில், கூஷி சாம்ராஜ்யம் ஆப்ரிக்கர்களின் பண்டைய நாகரீகத்திற்கு சான்றாக திகழ்கின்றது. (Kingdom of Kush http://en.wikipedia.org/wiki/Kingdom_of_Kush) இன்றைய தென் எகிப்து, வட சூடான் பகுதிகளை உள்ளடக்கியது. பண்டைய எகிப்தில் இருப்பதைப் போல், பிரமிட்கள் ஏராளமாக கட்டப்பட்டன. ஒரே மாதிரியான தெய்வங்கள் கூட வழிபடப் பட்டு வந்தன. ஆகவே பண்டைய எகிப்திய மொழிக்கும், கூஷி மொழிக்கும் இடையில் ஒற்றுமை இருக்க வேண்டும். இன்று வழக்கத்தில் உள்ள சோமாலிய மொழி, மற்றும் ஒரோமோ (எத்தியோப்பியாவில் ஒரு சிறுபான்மை இனம்) மொழி என்பன, கூஷி மொழியின் கிளை மொழிகளாகும். ஆகவே எகிப்திய, கூஷி, சோமாலிய மொழிகளுக்கும், தமிழ் மொழிக்கும் இடையில் ஒற்றுமைகள் இருக்க வேண்டும். மொழியியல் அறிஞர்கள் இது குறித்து ஏற்கனவே ஆராய்ந்துள்ளனர்.
மொழியியல் ஆய்வைப் பொறுத்த வரையில், தனியே தமிழ் மொழியை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள முடியாது. தமிழ், தெலுங்கு, சிங்களம் இவற்றிற்கு பொதுவான மொழி ஒன்று ஆதி காலத்தில் இருந்திருக்க வேண்டும். தமிழில் பயன்படுத்தப் படாத பல சொற்கள், பிற திராவிட மொழிகளில் பாவனையில் இருக்கலாம். ஆகவே, அவற்றையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். உதாரணத்திற்கு, சிங்கள மொழியில் “மால்” என்றால் மீன் என்று அர்த்தம்.
தமிழில், தெய்வங்களின் பெயர்களைக் குறிப்பிடப் பயன்படுத்துகின்றோம். உதாரணத்திற்கு: “மால்” முருகன், திரு “மால்”. தமிழிலும் மால் என்பதை மீன் என்ற அர்த்தத்தில் தான் பயன்படுத்துகின்றோம். விஷ்ணுவின் (திருமால்) முதலாவது அவதாரம் மச்சாவதாரம் ஆகும். தமிழகத்தின் முதலாவது தமிழ் ராஜ்யத்தை உருவாக்கிய பாண்டியர்களின் சின்னம் மீன். ஆப்பிரிக்கா முதல் ஆசியா வரை ஸ்தாபிக்கப் பட்ட, ஆதி கால திராவிட அரசுகள் மீன் இலச்சினையை பயன்படுத்தி உள்ளன. கிறிஸ்தவம் தோன்றிய இடங்களில் வாழ்ந்த மக்களால் வழிபடப்பட்ட மீன் சின்னம், பிற்காலத்தில் சிலுவைக் குறியாக மாறியிருக்கலாம்.
“முருகன் ஒரு தமிழ்க் கடவுள்” என்று, முருகனை தமிழர்களுக்கு மட்டும் சொந்தம் கொண்டாடும் போக்கு காணப் படுகின்றது. தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், போன்ற பிற திராவிட இன மக்களும் முருகனை வழிபடுகின்றனர். ஆகவே, “முருகன் ஒரு திராவிடக் கடவுள்” என்று அழைக்கலாமா? ஆப்பிரிக்காவில், கென்யாவில் வாழும், கிகுயூ (
Kikuyu) இன மக்கள் முருகனை தெய்வமாக முழுமுதற் கடவுளாக வழிபடுகின்றனர்! “முருங்கு (
Murungu) கடவுள்” என்று, பெயர் கூட ஒரே மாதிரி உள்ளது!
தமிழர்களின் முருகன், மலைகளில் எழுந்தருளி இருக்கும் குறிஞ்சிக் கடவுள் என்று அழைக்கப் படுகின்றார். ஆப்பிரிக்கர்களின் முருங்கு கடவுளும், மலைகளில் வாசம் செய்கின்றார்! ஆப்பிரிக்க கண்டத்தில், இரண்டாவது உயரமான “கென்யா மலை” (Mount Kenya) கிகுயூ மக்களுக்கு புனிதமானது. (Mount Kenya http://en.wikipedia.org/wiki/Mount_kenya) அந்த மக்கள் “கிரி எங்கை” (Kĩrĩ Nyaga, எங்கை கடவுளின் மலை) என்று அழைக்கின்றனர். தமிழிலும், கிரி என்ற சொல்லுக்கு மலை என்று அர்த்தம்!
உலகின் முதல் மனிதன், கென்யா மலையில் இருந்து இறங்கி வந்ததாக, கிகுயூ மக்கள் நம்புகின்றனர். கிட்டத்தட்ட இதே போன்ற கதை, கதிர்காமத்தை அண்டி வாழும் வேடுவ பழங்குடி இன மக்கள் மத்தியிலும் நிலவுகின்றது. இந்தியாவில் இந்துக்கள் மத்தியில் கிழக்கு வாசல் வைத்து வீடு கட்டும் வழக்கம் உள்ளது. கிகுயூ இன மக்கள், வட கிழக்கில் அமைந்துள்ள கென்யா மலையை நோக்கியவாறு, கிழக்கு வாசல் வைத்து வீடு கட்டுவது வழக்கம். யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் தோன்றுவதற்கு முன்னமே, ஓரிறைக் கொள்கை, ஒரே இறைதூதர் கோட்பாடுகள் கிகுயூ மக்களின் மத நம்பிக்கைகளாக இருந்துள்ளன. ஆதாம்- ஏவாள் கதையை ஒத்த முதல் மனிதனின் கதையும் (Mumbi http://en.wikipedia.org/wiki/Mumbi) அவர்களின் பூர்வீகத்தை பற்றி அறியத் தருகின்றது. (Kikuyu People – Myths of Origin http://emmanuelkariuki.hubpages.com/hub/Kikuyu-Other-myths-of-Origin)
பண்டைய சூடானியர்கள், எகிப்தியர்கள், மற்றும் திராவிட இனத்தவர்கள், இறந்தவர்களை புதைக்கும் வழக்கத்தை கொண்டிருந்தனர். தமிழகத்தின் சில பகுதிகளில் கண்டுபிடிக்கப் பட்ட முதுமக்கள் தாழிகள் அதற்கு சாட்சியம் பகர்கின்றன. அதே போல, செத்த வீட்டில் ஒப்பாரி வைக்கும் பழக்கமும், அங்கிருந்து இந்தியா வரை தொடர்ந்து வந்துள்ளது. சுமேரியா (இன்று: ஈராக்) மக்களின் ஒப்பாரி வைக்கும் வழக்கம் பற்றி விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ளது. ஆகவே, அங்கேயும் திராவிட மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. திராவிட மக்கள் என்பது, ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா நோக்கி புலம்பெயர்ந்த மக்களைக் குறிக்கும் பொதுப் பெயராகும்.
ஆப்பிரிக்காவில் கறுப்பர்களின் பண்டைய ராஜ்யமான கூஷி என்ற பெயர், திராவிட மக்கள் இடம்பெயர்ந்து சென்ற நாடுகளில் எல்லாம் காணப்படுகின்றன. வட இந்தியாவில் காசி நகரத்தை திராவிடர்களே கட்டியிருக்க வேண்டும். காஷ்மீர் என்ற பெயர் கூட, அங்கு கூஷி திராவிடரின் நாடு இருந்தமைக்கான சான்றாகும். சுக்ரீவன் ஆண்ட கிஷ்கிந்தை நகரம் பற்றி இராமாயணத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தான் முதல் வட இந்தியா வரை வியாபித்திருந்த குஷானா சாம்ராஜ்யம், திராவிட நாகரீகத்தை கட்டி வளர்த்தது. மேற்கிற்கும், கிழக்கிற்கும் இடையிலான வணிகத் தொடர்புகளால் செழிப்புற்றது. குஷானா சாம்ராஜ்யத்தின் புகழ்பெற்ற சக்கரவர்த்தி கனிஷ்கா காலத்தில், புத்த மதம் இந்தியாவில் இருந்து சீனா வரை பரவி இருந்தது. குஷானா சாம்ராஜ்யத்தின் பௌத்த மதப் பின்னணி காரணமாக, இந்து மதவாதிகள் மட்டுமல்லாது, தமிழினவாதிகளும் அதன் திராவிடப் பழம் பெருமையை புறக்கணித்து வந்துள்ளனர்.
அடுத்து வரும் பகுதிகளில், எமது மூதாதையரான கறுப்பின ஆப்பிரிக்கத் தமிழரின் வரலாற்றை விரிவாகப் பார்ப்போம்.
- “தமிழ்” என்ற சொல் எங்கே, எப்படித் தோன்றியது?
- தமிழர்கள் பற்றி விவிலிய நூலில், திருக் குர் ஆனில் எழுதப் பட்டுள்ளதா?
- தமிழ் மொழிக்கும், சோமாலிய மொழிக்கும் பொதுவான சொற்கள் என்ன?
- பண்டைய கூஷி, எகிப்திய நாகரீகங்களுக்கும், தமிழருக்கும் இடையிலான ஒற்றுமைகள் என்ன?
- ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்த கறுப்பினத் தமிழர்கள், எந்தெந்த இடங்களில் தமது நாகரீகங்களை நிலை நாட்டினார்கள்?
(தொடரும்)