தலைநகரில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதாக் கட்சி ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளி, 2013இல் ஆட்சியை பிடித்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். 2009இல் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின், ஆட்சியில் நடைபெற்ற ஊழலால் உருவான தலைவர்தான் அரவிந்த் கெஜ்ரிவால்.
ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அரவிந்த் கெஜ்ரிவால், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி கிரன் பேடி ஆகியோரின் ‘மூவரணி’ இந்தியாவைக் கலக்கியது.
ஊழலை ஒழிக்க ‘லோக்பால்’ அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று டெல்லியை கலங்கடிக்கும் போராட்டங்களை நடத்தியதையடுத்து, அந்தப் போராட்டத்தின் முடிவில் பிறந்ததுதான் ஆம் ஆத்மி கட்சி. இதன் தலைவர்தான் அரவிந்த் கெஜ்ரிவால்.
2013 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் களம் கண்டு, 28 தொகுதிகளில் வெற்றி பெற்று, 29.64 சதவீத வாக்குகளைப் பெற்றார். இரு தேசியக் கட்சிகளுக்கும் மாற்றாக வர முடியும் என்பதை, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நம்பிக்கையூட்டிய தேர்தல் அது.
ஆம் ஆத்மி வளர்ச்சியில், முதல் தேர்தலில், அதாவது 2013இல் டெல்லியில் காணாமல் போன கட்சி பகுஜன் சமாஜ் கட்சி. இதே தேர்தலில், முதல் தேசிய கட்சியாக பா.ஜ.க 34.12 சதவீத வாக்குகளைப் பெற்று, 31 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, 24.67 சதவீத வாக்குகளைப் பெற்றது. அடுத்து, ஆட்சியைப் பிடிக்கும் யோகம், ஆம் ஆத்மி கட்சிக்கு இருக்கிறது என்ற நிலையில், டெல்லி அரசியலை நன்கு படித்து விட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்.
அம்மாநில வாக்காளர்கள், நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதிரியாகவும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதிரியாகவும் வாக்களிக்கிறார்கள் என்ற நுணுக்கத்தை புரிந்து கொண்டார். அது மட்டுமின்றி, வட மாநிலங்களில் ‘காங்கிரஸ்- பா.ஜ.கவுக்கு’ மாற்றாக, ஒரு புதிய கட்சி பிறந்த வரலாறு போல், டெல்லியிலும் ஆம் ஆத்மிக்கு புதிய வரலாறு கிடைக்கும் என்பதில் தீர்க்கதரிசியாக மாறினார்.
அதன் எதிரொலிதான் அவர் முன்னெடுத்துச் சென்ற டெல்லி அரசியலும் 2015 சட்டமன்றத் தேர்தலில் அவர் கட்சிக்கு 70 தொகுதிகளில் 67 இடங்களைக் கைப்பற்றிய மகத்தான வெற்றியும் என்றால் மிகையாகாது. இந்தச் சுற்றில் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியை டெல்லியில் காணாமல் செய்தது.
ஒரு புதிய கட்சியின் பிறப்பில் காங்கிரஸ் கட்சி, டெல்லியில் காணாமல் போனது புதிய வரலாறு. ஏற்கெனவே பெற்றிருந்த 24 சதவீத வாக்குகள், ஒன்பது சதவீதமாகக் குறைந்தது.
ஆனால், 2014இல் மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, தனது வாக்கு வங்கியை 32 சதவீதத்தில் நிலை நிறுத்திக் கொண்டது. காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றின் வாக்குகளை மொத்தமாகத் துடைத்து, 54 சதவீத வாக்குகளைப் பெற்று, ஆட்சியைப் பிடித்தது ஆம் ஆத்மி கட்சி. அதிகாரியொருவர் இந்தியாவின் தலைநகருக்கு முதலமைச்சரானார்.
முதலமைச்சரானாரே தவிர, மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தலைநகர் டெல்லியில், மிளிர முடியுமா என்ற கேள்வியும், கொடுத்த வாக்குறுதிகளை அவரால் நிறைவேற்ற முடியுமா என்ற சந்தேகமும் எழுந்தது.
அதை நிரூபிக்கும் வகையில், டெல்லி துணை நிலை ஆளுநருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையில் மோதல் தலைநகரிலேயே கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. துணை நிலை ஆளுநர் அலுவலகத்திலேயே ஒரு முதலமைச்சர் உண்ணாவிரதம் இருந்த அவலம் டெல்லியில்தான் அரங்கேறியது.
பின்னர், உச்சநீதிமன்றம் என்று ‘உனக்கு அதிகாரமா; எனக்கு அதிகாரமா’ என்று இருவருக்கும் ‘வழக்குப் போர்’ நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சிக்குள் எவ்வளவோ குளறுபடிகள், கோஷ்டிகள் எனத் தொடங்கி, அரவிந்த் கெஜ்ரிவாலின் மூளையாகச் செயல்பட்ட யோகேந்திர யாதவ் வெளியேறினார். ஆனாலும் அரவிந்த் கெஜ்ரிவால் அசைந்து கொடுக்கவில்லை.
பிரதமர் மோடிக்கு எதிராகவும் பா.ஜ.கவுக்கு எதிராகவும் தனியோர் ஆளாக மோதினார். ஆனாலும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் அவருக்கு கை கொடுக்கவில்லை. ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றிய பா.ஜ.க 56.86 சதவீத வாக்குகளைப் பெற்றது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வாக்குகளும் 32 சதவீதம் குறைந்தது.
காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி, 2015 சட்டமன்றத் தேர்தலில் இருந்து 22 சதவீதத்துக்கு உயர்ந்தது. இது அரவிந்த் கெஜ்ரிவாலை அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தோற்கடித்து விட முடியும் என்ற நம்பிக்கை ஒளியை பா.ஜ.கவுக்குக் கொடுத்தது.
அதனால் டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால்தான் தன் எதிரி என்ற ரீதியில் பா.ஜ.க தனது பிரசாரத்தை முன் கூட்டியே தொடங்கியது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் ஓர் உண்மையை உலகுக்குக் காட்டியது.
அதாவது, பா.ஜ.கவுக்கு வாக்களித்தவர்களில் பெரும்பகுதியினர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 2013 சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தவர்கள் என்பதும் மோடியா- அரவிந்த் கெஜ்ரிவாலா என்ற கேள்வி பிறக்கும் போது, டெல்லி வாக்காளர்கள் மோடி பக்கமே நின்றார்கள் என்பதும் நிரூபணமாகியது.
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை வைத்துப் பவனி வரும் பா.ஜ.கவுக்கு, அரவிந்த் கெஜ்ரிவாலைச் சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிப்பது அவ்வளவு எளிதல்ல. ‘முதலமைச்சருக்கு அரவிந்த் கெஜ்ரிவால்தான் சரியான தேர்வு’ என்ற முடிவில்தான் பெரும்பாலான டெல்லி வாக்காளர்கள் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு கடந்த ஒரு வருடத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்.
‘வளர்ச்சி’ என்ற முழக்கம், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கை கொடுக்கிறது. பாடசாலை, ரேசன் கடை, பெண்கள் பாதுகாப்பு இப்படி எல்லாவற்றிலும் அரவிந்த் கெஜ்ரிவால் ‘வியத்தகு’ சாதனைகளைப் படைத்திருக்கிறார்.
காங்கிரஸும் பா.ஜ.கவும் மாறி மாறி முதலமைச்சர் பதவியை வகித்தாலும் டெல்லிக்கு ஒரு முறை ஆட்சிக்கு வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் போல் செயற்பட முடியவில்லை என்ற எண்ணம், டெல்லி வாக்காளர்களுக்கு வந்துள்ளது உண்மை.
ஆகவேதான், ‘வளர்ச்சி’ முழக்கத்தை மாற்றியமைக்க ‘தேசியம்’ என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மோடியும் முன் எடுக்கிறார்கள்.
பா.ஜ.க தலைவர்களின் வெறுப்புப் பேச்சுகள் எல்லாம் இதை மய்யமாக வைத்தே நடைபெறுகின்றன. ‘சகீன் பாக்’ போராட்டக்காரர்களை சுட்டிக்காட்டி, “அவர்கள் உங்கள் வீட்டுக்குள் நுழைந்து, உங்கள் தங்கைகளைக் கற்பழிப்பார்கள்” என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
தேர்தல் ஆணையகம் இவரை 72 மணி நேரத்துக்கு ‘நட்சத்திர பிரசாரகர்’ என்ற அந்தஸ்தில் இருந்து நீக்கியது. “அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நக்ஸலைட்” என்று பா.ஜ.க பிரசாரம் செய்கிறது.
ஆனால், அனைத்துமே குடியுரிமை சட்ட திருத்த போராட்டம், ஜாமியா, நேரு பல்கலைக்கழக போராட்டங்கள், நாட்டின் பாதுகாப்புக்க எதிரானவை என்று பிரசாரம் செய்து, தேசியம், பாதுகாப்பு என்று வாக்குகளை வாரிக்குவிப்பது பா.ஜ.கவின் இலட்சிய கீதம்.
இந்த பிரசாரங்கள் இதுவரை தாக்கத்தை ஏற்படுத்திவிடவில்லை. ஆனால், டெல்லியில் பாலியல் வன்புனர்வுக்கு உள்ளாக்கிக் கொல்லப்பட்ட ‘நிர்பயா’ வழக்கில், நால்வரின் தூக்குத் தண்டனை தேர்தல் பிரசாரமாக மாறியுள்ளது.
தனக்கு வந்த ஒரே தினத்தில் கருணை மனுவை நிராகரித்த வரலாறு தற்போது குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே, பெப்ரவரி இரண்டாம் திகதி திட்டமிட்டபடி தூக்குத் தண்டனை டெல்லி திகார் சிறைச்சாலையில் நிறைவேற்றப்பட்டால், அது டெல்லி சட்டமன்றத் தேர்தலின் முடிவில் பிரதிபலிக்கும்.
பெப்ரவரி எட்டாம் திகதி டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு என்கிற சூழலில், தூக்கிலிடப்பட்ட ஆறு தினங்களுக்குள் நடைபெறும் தேர்தலில் பெண் வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் பா.ஜ.க பக்கமாக அணி திரண்டால்,- அரவிந்த் கெஜ்ரிவாலுக்குத் தலைவலிதான்.
அப்படியேதும் நடக்கவில்லையென்றால்- அரவிந்த் கெஜ்ரிவாலின் ‘வளர்ச்சிப் பணிகள்’ அடுத்த சுற்றிலும் வெற்றியை அளிக்கலாம். ஏனென்றால், நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு வாக்களித்தவர்கள் (குஜராத் மாநிலம் தவிர) இதுவரை வட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலில் அவர் காட்டும் முதலமைச்சர் வேட்பாளருக்கோ, பா.ஜ.கவின் ஆட்சி அமையவோ வாக்களிக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.