(கே. சஞ்சயன்)
புதிய அரசமைப்பு தொடர்பாக சிங்கள அரசியல் தலைமைகளுக்கு மத்தியில் இருந்தும், பௌத்த மத பீடங்களில் இருந்தும், முரண்பட்ட கருத்துகள் வெளியிடப்பட்டு வந்தாலும், சாதாரண சிங்கள மக்களின் மனோநிலை என்ன என்பது இதுவரை சரியாகத் தெரியவரவில்லை. சாதாரண சிங்கள மக்கள், ஓர் அரசமைப்பு மாற்றத்தின் தேவையை உணர்ந்து கொண்டிருக்கிறார்களா, அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காணப்பட்டு, நாட்டில் அமைதியான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்களா? என்பது இன்னமும் தெளிவாகவில்லை.
ஜனாதிபதி தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும், அரசமைப்பு மாற்றத்துக்கு மக்களின் ஆணை கோரியதாகவும், அதற்கு அனைத்து மக்களின் ஆதரவும் கிடைத்தது என்றும், அரசாங்கம் கூறி வருகிறது.
அதை அடிப்படையாக வைத்தே, புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகளை, அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
ஆனாலும், சிங்கள மக்கள், புதிய அரசமைப்பு விடயத்தில் கொண்டுள்ள தெளிவற்ற நிலைப்பாட்டை, சிங்கள அரசியல் தலைமைகள், தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதாகவே தெரிகிறது.
புதிய அரசமைப்பை எதிர்க்கும், ஒன்றிணைந்த எதிரணியினரை, இங்கு முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
ஒன்றிணைந்த எதிரணியினர், சிங்கள மக்கள் மத்தியில், “புதிய அரசமைப்பு, நாட்டைப் பிளவுபடுத்தப் போகிறது; ஒற்றையாட்சி முறையை இல்லாமல் செய்யப் போகிறது; சமஷ்டியைக் கொடுக்கப் போகிறது” என்றெல்லாம் உண்மைக்கு அப்பாற்பட்டதாக, விடத்தைப் பரப்பி வருகின்றனர்.
இந்த விடயத்தில், சிங்கள மக்களில் பெரும்பான்மையானோரால் பின்பற்றப்படும் பௌத்த மதத்தின், பிரதான பீடங்களும் கூட, மக்களைத் தெளிவுபடுத்துவதற்குப் பதிலாக, குழப்பத்துக்குள் தள்ளுவதிலேயே குறியாக இருக்கின்றன.
புதிய அரசமைப்புக்கான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும், அது தேவையற்றது என்றும், அண்மையில் இரண்டு முறை, பௌத்த பீடங்களின் ‘கூட்டு சங்க சபா’ கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆனாலும், இந்தப் பத்தி எழுதப்படும் வரையில், அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள், புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் தேவையற்றன என்று எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
‘கூட்டு சங்க சபா’க்களின் கூட்டத்தில், அதாவது மகாநாயக்கர்கள் பங்கேற்காத, இரண்டாம் நிலைப் பௌத்த மதத் தலைவர்களின் கூட்டத்தில், எடுக்கப்பட்ட அந்த முடிவுக்கு, மகாநாயக்கர்களின் ஆசிர்வாதம் இல்லையென்று கூறமுடியாது.
அவர்களின் ஆசியுடன் தான், அந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக, பிரதான பௌத்த பீடங்களின் சார்பில் கூறப்பட்டது. அத்துடன், அஸ்கிரிய- மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள் இணைந்து, இதுபற்றிய நிலைப்பாட்டை, ஓரிரு நாட்களுக்குள் அறிவிப்பார்கள் என்று, அஸ்கிரிய பீடத்தால் கூறப்பட்டுப் பல வாரங்களாகி விட்டன.
ஆனாலும், அப்படியான எந்த அறிவிப்பும் மகாநாயக்கர்களிடம் இருந்து வெளியிடப்படவில்லை. அவர்களும் கூட, இந்த விடயத்தில் வெளிப்படையான நிலைப்பாட்டைக் கூறாமல், சிங்கள மக்களைக் குழப்பத்துக்குள் தள்ளியுள்ளனர்.
சிங்கள அரசியல் தலைவர்களும் பௌத்த மதபீடங்களும், இவ்வாறு குழப்பமான கருத்துகளைச் சிங்கள மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி வருகின்ற நிலை ஒருபுறமிருக்க, ஒட்டுமொத்த அரசமைப்பு உருவாக்க முயற்சிகளையுமே, கேலிக்கூத்தாக மாற்றுவதிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
அதற்கு உதாரணம், முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவைக் குறிப்பிடலாம். நீதி அமைச்சர் பதவியில் இருந்து, அண்மையில் நீக்கப்பட்டவர் இவர்.
ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், இவரது அண்மைய கருத்துகள், முரண்பாடான விடயங்களை, மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறது.
புதிய அரசமைப்பு தயாரிப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக, நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது, திடீரென அரசமைப்பு பேரவையை உருவாக்கியது சட்டரீதியானதல்ல என்றும், அது அரசமைப்புக்கு மாறானது என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதை ஊடகங்களும் அரசியல் தரப்பினரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், வரவுசெலவுத் திட்ட விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு, விஜேதாச ராஜபக்ஷ ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அதில், அரசமைப்புப் பேரவை உருவாக்கப்பட்டமை அரசமைப்புக்கு மாறானது என்றும், அதைச் செல்லுபடியற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் விஜேதாச ராஜபக்ஷ கூறியுள்ளார். அதுமாத்திரமன்றி, வழிநடத்தல் குழுவையும், அதன் அறிக்கையையும் கூடச் செல்லுபடியற்றதாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர், சபாநாயகரிடம் விடுத்துள்ளார்.
இதன் பிரதிகள், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், கட்சிகளின் தலைவர்கள் என்று பலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
விஜேதாச ராஜபக்ஷ ஒரு சட்ட நிபுணர். இரண்டு கலாநிதிப் பட்டங்களைப் பெற்றவர். திடீரென அவர் இவ்வாறு கூறியிருப்பதன் உள்நோக்கம் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.
ஏனென்றால், அவரது இந்த வாதத்தின் உள்நோக்கம், அரசமைப்பு மாற்ற முயற்சிகளைத் தடம் புரளவைக்கும், முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகமும், அவர் யாருடைய நிகழ்ச்சி நிரலில் செயற்படுகிறார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. நீதியமைச்சராக இருந்தபோது, அவரது செயற்பாடுகளில் ஐ.தே.க அமைச்சர்கள் விசனமடைந்திருந்தனர். அவரது நடவடிக்கைகளிலும் சந்தேகம் கொண்டிருந்தனர். அதனால்தான், விஜேதாச ராஜபக்ஷ, நீதியமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது.
விஜேதாச ராஜபக்ஷ மீதான, ஐ.தே.க அமைச்சர்களின் சந்தேகம் சரியானதோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு, அவரது இப்போதைய அறிவிப்பு அமைந்திருக்கிறது,
அரசமைப்புப் பேரவையை உருவாக்கி, அதன் செயற்பாடுகளில் தீவிரமாகப் பங்கெடுத்த ஒருவரே, அதைத் தவறானது என்று எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் அடையாளப்படுத்துகிறார்.
“அரசமைப்புப் பேரவையை உருவாக்கும் யோசனை, நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது, அதனை வழிமொழிந்த ஆறு பேரில் விஜேதாச ராஜபக்ஷவும் ஒருவர். அரசமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழுவில் இருந்த 21 உறுப்பினர்களில் அவரும் ஒருவர். வழிநடத்தல் குழுவின் 73 கூட்டங்களில், 50இற்கும் அதிகமான கூட்டங்களிலும் அவர் பங்கேற்றிருக்கிறார். அதுமாத்திரமன்றி, இடைக்கால அறிக்கையின் ஒரு பகுதியையும் அவரே வரைந்திருக்கிறார்” என்று வழிநடத்தல் குழுவின் உறுப்பினரான சுமந்திரன் கூறியிருக்கிறார்.
இப்படி, அரசமைப்பு பேரவை, வழிநடத்தல் குழு, இடைக்கால அறிக்கை என்பனவற்றில் தீவிர பங்களிப்புச் செய்து வந்த விஜேதாச ராஜபக்ஷ, திடீரென இவையெல்லாம் செல்லுபடியற்றது என்று கூறுவது, ஒட்டுமொத்த மக்களையும் முட்டாள்களாக்குவதைப் போலவே உள்ளது. இவற்றைச் செய்யும் போது, தவறான வழிமுறை என்று இவருக்குத் தெரியவில்லையா? பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் தான் இது தவறானது என்று தெரியவந்ததா?
பதவியில் இருக்கும்போது, தவறானது என்று தெரிந்திருந்தும், அந்தத் தவறுக்கு துணை போயிருந்தால், அல்லது அதை மறைப்பதற்கு உதவியிருந்தால், அது கூடக் குற்றம்தான்.
அதுபோலவே, பதவி இழந்த பின்னர், இதுதவறான வழிமுறை என்பதைத் தெரிந்து கொண்டிருந்தால் கூட, அதற்காக முதலில் விஜேதாச ராஜபக்ஷ தனது தவறுக்காகப் பகிரங்கமாக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும். அதுதான் தார்மீகம்; அரசியல் நாகரிகம். அதைச் செய்த பின்னர், அரசமைப்புப் பேரவை சட்டரீதியற்றது என்பதை நிறுவுவதற்கு அவர் முனைந்திருக்கலாம்.
ஆனால், விஜேதாச ராஜபக்ஷ தன் மீதுள்ள தவறைப் பற்றி எதையும் பேசவில்லை. அதற்காக வருத்தமும் தெரிவிக்கவில்லை. வெறுமனே அரசமைப்பு உருவாக்க முயற்சிகளைச் செயலிழக்கச் செய்வதற்கே முற்படுகிறார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணி, எதைச் செய்ததோ அதையே விஜேதாச ராஜபக்ஷவும் செய்கிறார்.
ஒன்றிணைந்த எதிரணி, புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளை எதிர்க்கவில்லை. அரசமைப்புப் பேரவையிலும் வழிநடத்தல் குழுவிலும் இடம்பெற்றிருந்தது. அதற்கான யோசனைகளையும் சமர்ப்பித்திருந்தது. இடைக்கால அறிக்கை தயாரிப்பிலும் பங்கெடுத்தது.
ஆனால், இடைக்கால அறிக்கை வெளியான பின்னர், அதை நிராகரித்து, அரசியல் செய்கிறது. இந்த இடத்தில் தான், இரண்டு ராஜபக்ஷக்களினதும் தோற்றம் ஒரே மாதிரியானதாகத் தென்படுகிறது.
இடைக்கால அறிக்கையோ, உருவாக்கப்படவுள்ள அரசமைப்போ, தமிழ் மக்களுக்கு அப்படியொன்றும் பெரிய உரிமைகளையோ, அதிகாரங்களையோ வழங்கி விடப்போகும் ஒன்றாக இல்லாத போதும், அதையும் கூட இல்லாமல் செய்வதில், சிங்கள மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துவதில், சிங்கள அரசியல் தலைமைகள், தீவிர அக்கறை கொண்டுள்ளன.
அரசமைப்புப் பேரவையின், சட்டபூர்வ தன்மை குறித்து, விஜேதாச ராஜபக்ஷ எழுப்பியுள்ள சந்தேகத்தைச் சாதாரணமாக ஒதுக்கி விடக் கூடியதன்று. அவர் ஒரு சட்டநிபுணர்; அரசமைப்பு மாற்ற முயற்சிகளைத் தடம்புரளச் செய்யும் சக்திகளின் நோக்கங்களை நிறைவேற்றும் ஒருவராக அவர் மாறியிருக்கிறார். நீதி அமைச்சராக இருந்தபோதும், அவரது செயற்பாடுகள், குறித்த கேள்விகள் எழுந்திருந்தன.
இத்தகைய நிலையில், அவர் அரசமைப்புப் பேரவையைச் சட்டரீதியானதல்ல என்று அறிவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தை நாடினாலும் கூட, அது ஆச்சரியமானது அல்ல.
அத்தகையதொரு நிலை ஏற்பட்டால், அது அரசமைப்பு உருவாக்க முயற்சிகளைப் பாதிக்கும். அந்த வழக்கின் தீர்ப்பு, வெளியாவதற்கிடையில் தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிந்து விடவும் கூடும்.
ஆக, அரசமைப்பு மாற்ற முயற்சிகள், அதிகாரங்களைப் பகிருவதற்கு இடமளிக்கிறதோ இல்லையோ, அத்தகைய முயற்சிகளைக் குழப்பும் சக்திகள் பலமடைந்து வருகின்றன என்றே தெரிகிறது.
சிங்கள மக்கள் மத்தியில் குழப்பமான மனோநிலையை ஏற்படுத்துவதில், இவர்கள் வெற்றி பெற்று வருவது, அரசமைப்பு மாற்றத்துக்குச் சாதகமான ஒன்றாகத் தெரியவில்லை.