(சாகரன்)
உயிரினங்களின் உயிர் வாழ்விற்கு மிகவும் அத்தியாவசியமானது நீர். ஐதரசன் ஒட்சிசன் இரசாயனக் கூறுகள் இணைந்து உருவான நிறமற்ற திரவம்தான் நீர். மனித குல வரலாற்றில் மனிதனின் தேடல் கண்டம் விட்டு கண்டம் தாவி தற்போது கிரகம் விட்டு கிரகம் தாவி இதற்கு அப்பால் சூரிய குடும்பம் விட்டு சூரிய குடும்பம் தாவி விஞ்ஞானம் வளர்சியும் தேடல்களும் வளர்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்படும் புதிய கிரகங்களில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா…? என்பதே விஞ்ஞானிகளின் முதல் தேடலாக அமைகின்றது. காரணம் ஜீவராசிகள் உயிர் வாழ்வதற்கு அல்லது வாழ்திருப்பதற்கான அடிப்படை இந்த நீர் என்பதேயாகும்.இப்படியெல்லாம் மனிதன் நீரை தேடி ஒரு புறம் அலைய… கடந்த சில வாரங்களாக இந்தியாவின் புகழ் பெற்ற மாநிலமான கேரளாவில் பெய்த அடை மழை நீரே வேண்டாம் என்று அந்த மக்களையும் அந்த மக்களின் அவலங்களைப் பார்த்த மக்களையும் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது என்றால் மிகையாகாது. ஏன் இந்த பிறழ்வுப் பார்வை? இது ஏன் ஏற்பட்டது? இந்த வெள்ளம் பெருக்கெடுத்து அடித்துச் செல்லப்பட்ட நிகழ்வுகளை பலரும் இயற்கையின் சீற்றம் என்று வாளாவி இருக்க மிகச்சிலர் மிகச் சிலரே ‘…..நல்லா வேணும்…..’ என்று பிறரின் துன்பத்தில் மகிழ்ந்தது ஏற்புடையதா…? இதுவே எனது இனி வரும் சில நாட்கள் எனது தொடர் எழுத்துக்களாக அமையப் போகின்றது. உறவுகளே! நண்பர்களே!! சகாக்களே!!! தங்களின் கருத்துப் பரிமாற்றங்களை எதிர்பார்கின்றேன். நாளை தொடர்கின்றேன்…