சீனாவைச் சேர்ந்த கம்பனிகள் பல, மிக இலாவகமாக இலங்கையின் ஆட்சியாளர்களை வலைக்குள் சிக்கவைத்து, தங்களுக்கு சாதகமான, இலங்கைக்கு உடனடியாக எவ்விதமான பெறுபேறுகளையும் இலாபங்களையும் ஈட்டிக்கொள்ள முடியாத திட்டங்களையும் திணித்துவிட்டது.
திடங்களால் தங்களுக்கு எவ்வாறான இலாபம் கிடைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கு அந்தத் திட்டங்கள் உறுதுணையாக இருக்குமா? என்பது போன்று மாற்று சிந்தனைகளின் ஊடாக சிந்திக்காமல், கிடைத்ததை எல்லாம் வாங்கி அள்ளிப்போட்டுக்கு கொண்டு விழிப்பிதுங்கி நிற்கிறது.
கொழும்பில் உள்ள சைனா பஜாருக்குச் சென்றால், மிக இலாபமான முறையில் சிறுவர்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை கொள்வனவுச் செய்யலாம். அவையெல்லாம் இரண்டொரு நாட்களுக்கு உடைந்து சுக்குநூறாகிவிடும். அந்தளவுக்கு தரம் குறைந்தவையாகவே இருக்கும்.
நுரைச்சோலை உள்ளிட்ட ஏனைய சீனத்திட்டங்களை உதாரணத்துக்குக் எடுத்துக்கொள்ளலாம். நுரைச்சோலையை பொறுத்தவரையில், வீட்டிலிருக்கும் வயோதிப்பர் அடிக்கொருதடவை இருமிக்கொண்டிருப்பதைப் போல, அவ்வப்போது இயங்க மறுத்துவிடுகின்றது.
இதனால், நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் இருந்து கூறியதைப் போன்று மின்சாரத்தை உற்பத்திச் செய்துக்கொள்வதில் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தில் 900 மெகாவற்ஸ் மின்சாரத்தை நுரைச்சோலையிலிருந்து உற்பத்தி செய்து வெயாங்கொட மின்விநியோக நிலையத்தின் ஊடாக விநியோகிக்க முடியுமாக இருக்குமென கூறப்பட்டாலும் அவை எவையுமே நடைமுறைக்குச் சாத்தியமற்றதாய் போய்விட்டன.
இந்த திட்டம் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டன. சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. சீனாவின் எக்ஸின் வங்கியின் 455 மில்லியன் அமெரிக்க இலகு கடனைக் கொண்டு நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் ஆரம்பமாகின.
இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகளின் முக்கிய பங்காளியாக சீனாவின் தேசிய இயந்திர ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கூட்டுத்தாபனம் அமைந்துள்ளது. இதன் கட்டுமானப் பணிகளில் இலங்கைப் பொறியியலாளர்கள் மற்றும் பணியாளர்களுடன், சீனாவைச் சேர்ந்த பணியாளர்களும் இணைந்துக்கொள்ளப்பட்டிருந்தனர்.
ஆக, இலகு கடனைக் கொடுத்திருந்தாலும் முழு கட்டுப்பாட்டையும் சீனா தன்னகத்தே கொண்டிருந்தது. இவ்வாறு இன்னும் பல திட்டங்களைக் உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். இவற்றையெல்லாம் கடந்த அரசாங்கங்கள் முன்னெடுத்திருந்தன.
ஆனால், நெருக்கடியான இந்தக் காலக்கடத்தில், இலங்கைக்கு உதவுவதில் சீனாவிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என்றே கூறவேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான நிலைமைகளில் விரும்பி முன்வந்து சீனா, மிகப்பெரிய தொகையை உதவி செய்திருக்கவேண்டும்.
எனினும், “ஒரு சீனா கொள்கை”யையே கடுமையாக சீனா கடைப்பிடித்துவருவதாக அறியமுடிகின்றது. இந்த கொள்கை குறித்து பரிசீலனை செய்து வருவதாக இலங்கைக்கான பிரதித் சீனத் தூதுவர் எச்.இ.ஹூ வெய்யை, நேற்று (21) சந்தித்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அத்துடன் அரிசியையும் நன்கொடையாக இலங்கைக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
சீனாவில் மலக்கழிவுகள் அடங்கிய கப்பலை இலங்கைக்குள் இறக்கவிடாமல் தடுத்ததன் ஊடாக, நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலுக்கான கட்டணத்தை சீன நிறுவனம் பெற்றுக்கொண்டது. இதனூடாக இலங்கைக்கு பாரிய நட்டமொன்று ஏற்பட்டதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
ஆனால், இலக்கையில் முன்னெடுக்கவேண்டிய திட்டங்களைத் தீட்டி, பேரம்பேசி, தரகு பணத்தை கேட்டுக்கொண்டிருக்கும் நேரச்சூழல் இதுவல்ல என்பதை சீன நிறுவனங்களும் சீனாவும் புரிந்துகொள்ளவேண்டும். மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை மேற்கொள்வதற்கு முன்வரவேண்டும்.
இக்கட்டான நிலையில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவி செய்தது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களை வழங்குவதுடன், நிதி உதவியும் செய்து வருகிறது. ஏனைய நாடுகளும் அமைப்புகளும் அவ்வாறே உதவிகளைச் செய்துவருகின்றன என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
இருப்பினும் இலங்கையின் நிலை என்பது படுபாதாளத்தில் உள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடியில் இருந்து எளிதில் இலங்கையில் மீள முடியவில்லை. குறிப்பாக வெளிநாடுகளுக்கான கடன், வட்டி திருப்பி செலுத்துவதை இலங்கை நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில்தான் இலங்கைக்கு உதவி செய்ய வேண்டுமென முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சீன பிரதமர் லீ கெகியாங்குடன் தொலைபேசியில் அப்போது பேசியிருந்தார். சீனா உத்தரவாதம் அளித்ததைப் போல, உதவிகள் கிடைக்கவில்லை.
எனினும், அன்றைய செய்திகளின் பிரகாரம், இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடாத கொள்கையின் அடிப்படையிலும், இலங்கையின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும் இந்த உதவி செய்யப்படும் என்றும், இலங்கை-சீனா சார்ந்த சமூக பொருளாதார வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமாக செயல்பட சீனா என்போதும் தயாராகவே இருக்குமென சீனப் பிரதமர் தெரிவித்திருந்தார்.
விமான நிலையம், துறைமுகங்கள் கட்டும் திட்டங்களுக்காக சீனாவிலிருந்து இலங்கை கடன் வாங்கி இருந்தது. கடன், முதலீடு என 8 மில்லின் அமெரிக்க டொலருக்கும் மேல் இலங்கைக்கு சீனா வழங்கியுள்ளது.
அந்த கடனில், 1.5 பில்லியன் டொலருக்கும் 2 பில்லியன் டொலருக்கும் இடைப்பட்ட தொகையொன்றை இலங்கை கடந்தவருடமே சீனாவுக்கு திருப்பி செலுத்தவேண்டிருந்தது. எனினும், பொருளாதார நெருக்கடியினால் செலுத்த முடியவில்லை. கடன் செலுத்துவதற்கான சலுகையை சீனாவிடம் கேட்டிருந்தது. அதற்கு சீனா செவிசாய்க்கவில்லை. இதனையடுத்து. வெளிநாட்டு கடன், வட்டி தொகை செலுத்துவதை இலங்கை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
சீனாவிடமிருந்து இலங்கை பெற்றிருந்த கடனால், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற விமர்சனம் எழுந்திருந்தன. அதேவேளையில், வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தவே கடன் வாங்கப்பட்டுள்ளதென இலங்கையும்.
பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துதல் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாக சீனாவும் தெரிவித்திருந்தது. .
சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் தொகைக்கு வட்டி வீதம் அதிகமாகும். குறுகிய காலத்தில் இந்த கடனை செலுத்த வேண்டும். வருமானம், அன்னிய செலாவணியில் இல்லாத நிலையில், கடன்களை கட்டமுடியாத நிலையொன்று இலங்கைக்கு ஏற்படும்.
குறுகிய காலத்தில் கடன் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில், நாட்டிலுள்ள சொத்துகளை சீனாவுக்கு எழுதி கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் சாத்திய கூறுகளே அதிகமாக காணப்படுகின்றன.
எமது நாட்டை பொறுத்தவரையில் பல இடங்கள் சீனாவின் கொலனியாக மாற்றப்பட்டுவிட்டன. தமிழ்,சிங்கள மொழிகள் இல்லாமல், சீன மொழிகளில் பெயர் பலகைகளும் விளம்பர பலகைகளும் வைக்கப்பட்டிருந்தமையை யாரும் மறந்துவிடக்கூடாது.
சர்வதேச செலாவணி நிதியம் அல்லது உலக வங்கி போன்ற நிறுவனங்களிடமிருந்து கடனை பெற்றுக்கொள்ளும் போது பிரச்னைகள் இருக்காது சீனாவைப் பொறுத்தவரையில், மானியங்களை வழங்காது. கடன்களையே வழங்கும்; சீனா, தமது வர்த்தக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே, இவ்வாறான கடன்களை வழங்குகின்றது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் கடன் தொகையானது, இலங்கையை சீனாவின் ஆளுகைக்குள் வைக்கும் நிலைமையை ஏற்படுத்தும். அவ்வாறெல்லாம் சீனாவிடம் சிக்கிக்கொண்ட இலங்கை அரசாங்கத்துக்கு மனிதாபினமான அடிப்படையில் உதவுவதற்கு சீனா பின்னடிப்பதையே காணக்கூடியதாய் இருக்கிறது.
“ஒரு சீனா கொள்கை”யே பல நாடுகளிலும் அமுல்படுத்தப்பட்டுவருகின்றன. அதில் சிக்கிக்கொண்ட நாடுகள் அல்லது அந்த நாடுகளின் நிறுவனங்கள் பொருளாதார ரீதியில் விழிப்பிதுங்கி திமுறிக்கொண்டிருக்கின்றன என்பதை நினைவில் கொள்வேண்டும்.
சீனாவின் கடன்பொறிக்குள் இலங்கையும் சிக்கித்தவிக்கிறது. அதிலிருந்து மீண்டெழுவதற்கோ இன்றேல், நெருக்கடியில் உதவுவதற்கோ சீனா முன்வரவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இது எதிர்காலங்களுக்கு ஒரு படிப்பினையாக அமையும்.
(Tamil Mirror)