நெல்சன் மண்டேலா 1918-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ம்தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்கள் தலைவர் ஆவர். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர்தான் மண்டேலா. இவரின் முழுப்பெயர் ‘ரோபிசலா மண்டேலா’. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள்.
இவரின் சிறுவயதில் குத்துச் சண்டை வீரராகவே அறியப் பெற்றார். ‘குத்துச்சண்டை ஒரு சமத்துவமான விளையாட்டு. குத்துசண்டை நடக்கும் மேடையில், மனிதர்களின் தரம், வயது, நிறம் மற்றும் அவர்களின் பணம் இவைகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை’, என்று அவர் தனது சுய சரிதையான ‘சுதந்திரத்தை நோக்கிய நீண்ட நடைபயணம்’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.அந்தக் குடும்பத்திலிருந்து முதன் முதலில் பள்ளி சென்ற மண்டேலா, இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார்.
போர் புரியும் கலைகளையும் பயின்றார். இவரின் பெயரின் முன்னால் உள்ள ‘நெல்சன்’ இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு வகை காலனி ஆதிக்கத்தின் வெளிப்பாடாகவே அன்றைய காலத்தில் நிலவி வந்தது. பாடசாலைக்கு செல்லும் மாணவர்களுக்கு அங்குள்ள வெள்ளையின ஆசிரியர்களால் வழங்கும் பெயரை தனக்குள் திணித்துக் கொள்ளும் பிரித்தானிய காலனி ஆதிக்க ஒடுக்கு முறையின் வடிவமாக இது பார்க்கப்படுகின்றது.
கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1941-ஆம் ஆண்டு ஜோகானஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார்.
தென் ஆபிரிகாவில் ஆட்சியில் இருந்த நிறவெறி அரசுக் கெதிராக கறுப்பின மக்களின் விடிவிற்காக ஆபிரிக்க தேசிய காங்கிரிஸ்(ANC) என் பேரியகத்தை அமைத்து சிறைக்குள் இருந்தபடியே போராடி அந்த மக்களுக்கான விடுதலையை பெற்றுக் கொடுத்தவர். இவருடன் கரம் கோர்த்து போராடிய இவரின் மனைவி வின்னி மன்டேலாவின் பங்களிப்பும் மகத்தானது.
நிறவெறிக்கு எதிராக அணித்திரட்டலில் ஈடுபட்டிருந்த அவர் தென் ஆபிரிகாவின் விடுதலைக்காக சம காலத்தில் போராடிக் கொண்டிருந்து கம்யூனிஸ்ட்டுகளுடன் தொடர்பில் இருந்தார் என்ற அமெரிக்க உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ(C.I.A) அளித்த தகவலை அடுத்தே தென்ஆபிரிக்க போத்தா அரசு அவரைக் கைது செய்தது.
வெகுஜன அமைப்பாக தம்மை முன்னிறுத்தியிருந்தாலும் அதன் இராணுவச் செயற்பாட்டுப் பிரிவான எம்.கே(MK) என்று சுருங்க அழைக்கப்படும் ‘ தேசத்தின் ஈட்டி’ என்று குறியீட்டு ரீதியில் அறியப்படும் இராணுவ பிரிவுடன் இணைந்து நாட்டின் ஆட்சியை கைப்பற்ற முயன்றார் என்ற வகையில் ஆகஸ்ட் 5, 1962 இல், ஹோவிக் அருகே சக போராளி சிசில் வில்லியம்ஸ் உடன் மண்டேலாவை போலீசார் கைது செய்தனர்.
நீதி மன்றத்தில் எம்.கே இற்கும் மன்டேலாவிற்குமான தொடர்புகளை நிரூபிப்பதற்கு போதுமான ஆதார ஆவணங்களை அரசால் சமர்பிக்க முடியாத அளவிற்கு அவர்களின் தொடர்புகள் மிக இரகசியமாக விளரம்பரம் அற்று இருந்து இங்கு கவனிக்கத்தக்கது.
பிடல் காஸ்ரோ நீதி மன்றத்தின் முன் விசாணைக்காக நிறுத்திய போது ஆற்றிய “வரலாறு என்னைத் விடுதலை செய்யும்” என்ற இன்றுவரை புகழ் பெற்ற குறியீட்டுப் பேச்சாக விளங்கும் பேச்சை ஒத்த பேச்சு ஒன்றை மண்டேலா நீதிமன்றத்தின் முன் நிறுத்திய போது ஆற்றினார். அது இன்று வரை பலராலும் அறியப்பட்ட “நான் தயாராக இருக்கிறேன்” என்ற மூன்று மணி நேரப் பேச்சாக இருக்கின்றது.
உத்தியோகபூர்வ தணிக்கை இருந்தபோதிலும் பத்திரிகைகளில் பரவலாக இவரின் பேச்சைப் பிரசுரித்தனர். இது உலக அளவில் பெரிதும் பரவலாக்கப்பட்ட பேச்சாக அன்று அமைந்திருந்தது. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக அமைதி கவுன்சிலில் போன்றவை குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கைளை உலக அரங்கில் முன் வைத்தனர்.
அதே நேரத்தில் லண்டன் பல்கலைக்கழகம் மண்டேலாவை தென் ஆபிரிக்காவின் தலைவராக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.இவரின் எதிரியின் நீதி மன்றங்களையும் எமது போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும், ஆதரவு திரட்டும் பிரச்சார மேடைகளாக பாவித்த அனுபவங்கள் பல விடுதலை அமைப்புக்களுக்கும் உத்வேகமாக அமைந்தன.
ஒரு போராட்டத்தில் வெகுசன பிரிவுகளுக்கும், அதன் இராணுவப் பிரிவுகளுக்கும் இடையிலான தொடர்பு கொள்கை சார்ந்தது, உணர்வு சார்ந்து, கோட்பாடு சார்ந்தது மாறாக விளம்பரப்படுத்தி தம்மை தாமே காட்டிக் கொடுக்கும் அளவிற்கான பரமரகசியமாக இருக்கக் கூடாது என்பது ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் நெல்சன் மன்டேலா இன் போராட்ட வரலாறு எமக்கு விட்டுச் சென்றிருக்கும் பாடங்களாகும்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் நான்கு பேர் எம்.கே உடனான தொடர்பை மறுத்த போதிலும், மண்டேலாவும் மற்ற ஐந்து குற்றவாளிகளும் தொடர்பை ஒப்புக்கொண்டனர். ஆனால் அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கொரில்லா போரைத் தொடங்கவிருந்ததை ஒப்புக்கொள்ள மறுத்தனர். அரச நீதிபதி டி வெட் நான்கு குற்றச்சாட்டுகளிலும் மண்டேலாவையும் அவரது இரண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களையும் குற்றவாளியாகக் கண்டார்.
மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரசு தரப்பு வலியுறுத்தினாலும், அதற்கு மறுத்து நீதிபதி அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தார். கம்யூனிஸ்ட்டுகளுடன் தொடர்பு என்பதே முதலாளித்து பிரித்தானியா, அமெரிக்காவிற்கு பிரச்சனையாக பெரிதும் பட்டது. அவர்களுடன் இணைந்து தென் ஆபிரிக்கா வெள்ளையினப் பேரினவாத அரசை கவிழ்க்க திட்டமிட்டார் என்ற அடிப்படையிலே கைது செய்யப்பட்டு இதனை நிரூபிக்கும் விதமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டே சிறையில் அடைக்கப்பட்டார்.சர்வதேசம் எங்கும் எழுத்த ஆதரவும் தென் ஆபிரிக்க நிற வெறி அரசுக்கு கிடைத்து எதிர்பதையும் தாக்குப் பிடிக்க முடியாத தென் ஆபிரிக்கா வெள்ளையின நிறவெறி அரசு போத்தவின் கரங்களில் இருந்து டி கிளார்க் இன் கரங்களுக்கு மாறியதும் மன்டேலாவை விடுதலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
போத்தாவிற்கு பிறகு அப்போதைய தென்னாப்பிரிக்கா புதிய அரசுத் தலைவரான பிரெட்ரிக் வில்லியம் டி கிளார்க் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா 11.2.1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
1990-ல் மண்டேலா சிறையிலிருந்து விடுதலை பெற்றார். விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71. இந்நிகழ்வு உலகம் முழுவதும் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.தென்னாப்பிரிக்கா அரசு அறிவித்தபடியே 11.2.1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.
மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்கா நாட்டுத் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.பின்னர் மண்டேலாவை காவலர் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச் சென்றனர்.
சிறைச்சாலையின் வாசலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொலைக்காட்சி மற்றும் புகைப்பட நிபுணர்கள் அவரை படம் எடுத்தனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்னாப்பிரிக்கா முழுவதும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார்.
அங்கு அவர்….. இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது. நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்.
1994 மே 10-ந்தேதி தேர்தல் மூலம் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். அதிபர் ஆனபின், 1998-ம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கப் பள்ளிகளில் தென் ஆபிரிக்காவில் உள்ள ஏனைய சிறுபான்மை இனங்களுக்கான சம உரிமையை நிறுவும் வேலைகளில் ஈடுபட்டார் அதன் முதல் கட்டமாக தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்ததன்பின் 1999-ல் பதவியை விட்டு விலகினார். இவர் 2-வது முறை அதிபர் பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டார்.
உலகின் மிகவும் விரும்பப்பட்ட தலைவராக மட்டுமல்லாமல், அவர் ஒரு நாகரீக உடைகள் அணிவதிலும் நாட்டமுடையவராக அறியப்பட்டார். அவர் அணிந்து கொண்ட பளிச்சென்று தெரியும் நிறத்திலான சட்டைகள் பிரசித்தம்.மற்ற தலைவர்களிடம் இல்லாத இரு குணங்கள் அவரிடம் இருந்தன.
பணிவு மற்றும் தன்னைத் தானே பார்த்து தன்னிடம் இருக்கும் குறைகளைப் பற்றி கிண்டலடித்துக்கொள்வது. வின்னியுடன் விவாகரத்துக்குப் பின்னர், மண்டேலா, தனது 80வது பிறந்த நாளில், மொசாம்பிக் நாட்டின் முன்னாள் தலைவர் சமோரா மஷேலின் விதவையான, க்ராசா மஷேலை மணந்தார். இருவரும் சேர்ந்து வறுமையில் பாதிக்கப்பட்ட ஆப்ரிக்கக் குழந்தைகளுக்கு நிதியம் ஒன்றை நிறுவி உதவினர்.
அரசுத் தலைவராக செயற்பட்ட காலத்தில் உலகம் போற்றும் தலைவராக சகலராலும் மதிக்கப்பட்டார். பல நாடுகளும் அவரை அழைத்து கௌரவித்துமட்டும் அல்லாது தமது நாடுகளில் கல்லூரி, பாடசாலை, மருத்துவமனை, பூங்கா, வீதி என எங்கும் இவரின் பெயரை சூட்டினர். உலகில் அவரின் பெயரை உபயோகிக்காத வீதியைக் கொண்ட நாட்டைக் கண்டு பிடிக்க முடியாது.
உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 2013 ஜூன் மாதம் 8-ம் தேதி மண்டேலா பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 5 டிசம்பர் 2013 அன்று தனது 95-வது வயதில் சிகிச்சை பலனின்றி காலமானார்.நெல்சன் மண்டேலாவின் போராட்டத்தின் வெற்றிக்கு அவரின் சர்வதேச சக்திகளுடனான நட்பு, புரிந்துணர்வு தான் சார்ந்த மக்கள், நாடு பற்றிய உண்மை நிலையை எடுத்தியம்பி தமது போராட்டத்திற்கான தார்மீக ஆதரவை பெற்றுக் கொள்வதில் அவர் காட்டிய இராஜதந்திரம் என்பன முக்கியகாரணிகளாக அமைந்தன.
இதற்காக தான் சார்ந்த மக்களிடேயேயான சகல போராட்ட சக்திகளையும் ஒருங்கிணைத்து ஒரு பன்முகத் தன்மை கொண்ட தலமையை அமைத்தது மட்டும் இல்லாது அவர்கள் எதிர்த்து போராடிய வெள்ளையினப் பேரினவாதம் ஒழிய வெள்ளையின் மக்கள் அல்ல என்பதை தனது நாட்டிற்குள்ளும், சர்வ தேசத்திற்கும் நிறுவி நின்ற நிறவெறியற்ற, இனவெறியற்ற செயற்பாடு முக்கியகாரணங்களாக அமைகின்றன.இதனை அவர் சிறையில் இருந்தபடியே ஆயுதக் கலாச்சாரத்தில் ஈடுபடாமலே சாதித்துக் காட்டிய மகத்தான தலைவன் மண்டேலா.
இறுதியாக ஒரு சம்பத்தை இவ்விடத் கூறி எனது பதிவை முடிக்கின்றேன்….நெல்சன் மண்டேலா, தன் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார் :
“நான் தென் ஆப்பிரிக்காவின் அதிபரான பின் ஒரு நாள், எனது பாதுகாவலர்கள் சிலருடன் உணவு அருந்துவதற்காக ஒரு உணவு விடுதிக்குச் சென்றிருந்தோம்.
எங்களுக்குத் தேவையான உணவுகளைக்கொண்டு வர வெயிட்டரிடம் கூறினோம்.எங்களுக்கான உணவு வந்த போது, நான்ஒரு மனிதன் மற்றொரு டேபிளில் தன் உணவுக்காகக் காத்திருப்பதைப் பார்த்தேன்.
நான் என் அருகில் இருந்தவரிடம்அந்த மனிதனையும் நம்முடன் சேர்ந்து உணவருந்த வருமாறு அழைக்கக் கூறினேன்.
அந்த மனிதரும் தனது உணவுடன் வந்து என் அருகில் அமர்ந்தார்.நான் அவரையும் உணவருந்தக் கூறினேன்.
அவரும் மிகவும் நடுங்கியவாறே தனது உணவை அருந்தி முடித்து அங்கிருந்து சென்றார்.
எனது காவலர்களில் ஒருவர் “அந்த மனிதர் ஒரு நோயாளியாக இருப்பார் போலிருக்கிறது மிகவும் நடுங்கியவாறே இருந்தார்” என்றார்.”அப்படி எல்லாம் இல்லை” என்றேன் நான்.”
நான் அடைக்கப்பட்டிருந்த சிறையில் ஒரு காவலாளி ஆக அந்த மனிதர் இருந்தார்.நான் சிறையில் பல முறை சித்திரவதை செய்யப் பட்டிருக்கிறேன்.
அப்போது நான் “எனக்கு சிறிது தண்ணீர் வேண்டும்” என பல முறை கத்தியிருக்கிறேன்.
அப்போதெல்லாம் இந்த மனிதன் வந்து என் தலை மீது சிறுநீர் கழித்துள்ளார்.அதனால் தான் அவர் என்னைப் பார்த்தவுடன் பயந்து நடுங்கினார்.
குறைந்த பட்சம் அவர் என்மீது செய்த செயலைப் போல நான் அவரிடம் செய்வேன் அல்லது சிறையில் அடைத்து சித்திரவதை செய்வேன் என எதிர் பார்த்தார்.
ஏனென்றால் நான் தற்போது தென் ஆப்பிரிக்காவின் அதிபராக உள்ளேன்.ஆனால் இது என் குணமோ அல்லது என் கொள்கையோ இல்லை.
* சகிப்புத்தன்மை உள்ள மனப்பான்மைதான் நல்ல தேசத்தை உருவாக்குகிறது.
* பதிலடி கொடுக்கும் மனநிலை தேசத்தையே அழிக்கிறது.