(ஆர்.மகேஸ்வரி)
நூற்றைம்பது ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட இலங்கையின் தேயிலைத் தொழிற்றுறையானது, சர்வதேசத்தில் தனக்கென முத்திரையைப் பதித்துள்ளது. தேயிலையினால் தயாரிக்கப்படும் தேநீர் என்பது இலங்கையர்களின் தேசிய பானம் என்று கூறுமளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றித்துவிட்ட ஒன்றாகும். தேநீரின் சுவையைச் சுவைக்காத இலங்கையர்கள் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இல்லை என்றே சொல்லுமளவுக்கு தேநீர் ஓர் உற்சாக பானம் என்று கூறுவதில் தவறில்லை.
வீட்டுக்கு வரும் புதிய விருந்தினரைக் கூடத் தேநீரைக் கொடுத்து உபசரிக்கும் பண்பானது இலங்கையர்களின் தேநீர் மீதான மகத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு பண்பாகும்.
சிறந்த சுவையும் தரமும் வாய்ந்த இலங்கைத் தேயிலையானது இலங்கைக்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் ஒரு முக்கிய, முதன்மையான ஏற்றுமதிப் பொருளாகும்.
இவ்வாறான தரமும், சுவையும் இருப்பதாலேயே இலங்கையின் தேயிலைக்கு வெளிநாடுகளில் அமோக வரவேற்புக் கிடைத்துள்ளது என இன்றைய நாளில் இலங்கையர்களான எம்மால் பெருமை கொள்ள முடியாது உள்ளது.
இதற்கான காரணம், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலையை தடைசெய்வதான ரஷ்யாவின் அறிவிப்பு கடந்த 15ஆம் திகதி இலங்கையர்களுக்கு, அதிலும் பல சொல்லெண்ணா துயரங்களை 150 வருட காலமாக அனுபவித்து வரும் பெருந்தோட்ட மக்களின் காதுகளுக்குள் இடியாய் விழுந்தது என்பதை விட, இவர்களது வயிறுவிற்றுப் பிழைப்புக்கு விழுந்த பாரிய அடி எனச் சொல்லலாம்.
ஏன் இவ்வாறான ஓர் அடி இலங்கையின் பச்சைத் தங்கத்துக்கு விழுந்தது என்பதை ஆராயும் முன், இலங்கைத் தேயிலையின் 150 கால வரலாற்றைச் சிறிது அலசிவிட்டு வருவது சிறப்பு.
கமிலியா சைனேசிஸ் Camillia Sinensis Camillia Sinensis என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட தேயிலை, 1867ஆம் ஆண்டு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவுக்குத் தேயிலை அறிமுகமாகி மிக நீண்டகாலத்துக்குப் பின்னரே இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கையின் ஆரம்பக் கால பெருந்தோட்ட வர்த்தகப் பயிராக கோப்பியே அறிமுகப்படுத்தப்பட்டாலும், சில காலங்களில் இலை வெளிறல் நோய் காரணமாக, கோப்பி உற்பத்தி வீழ்ச்சியடைந்து முற்றாக அழிவடைந்தது. இந்தக்காலக்கட்டத்தில் கோப்பிக்கு மாற்றீடாக தேயிலை அறிமுகப்படுத்தப்பட்டது.
குறித்த காலப்பகுதியில் இந்தியாவில் தேயிலை உற்பத்தி தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருந்த ஸ்கொட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் டெயிலர் இலங்கைக்கு வருகைத் தந்தார்.
தேயிலையின் வரலாற்றைப் பற்றி பேசும் நாம் ஜேம்ஸ் டெயிலரைப் பற்றி பேசாமல் செல்வது நாகரிகமில்லை. அந்தவகையில் 1867ஆம் ஆண்டு இலங்கை மண்ணில் கால் பதித்த ஜேம்ஸ் டெயிலர் கண்டி-ஹேவாஹெட்ட பிரதேசத்தில் லூல் கந்துர என்னும் தோட்டத்தில் 19 ஏக்கர் நிலப்பரப்பில் பரீட்சார்த்த பயிராகத் தேயிலையை பயிரிட்டார்.
இதையடுத்து ஜேம்ஸ் டெயிலரால் பயிரடப்பட்ட தேயிலையானது லண்டனில் இடம்பெற்ற தேயிலைச் சந்தையில் சிறந்த விலைக்குச் சென்றமையே இலங்கை முழுவதும் தேயிலை பயிரிடுவதற்கான அத்திவாரமாக அமைந்தது.
தேயிலைச் செடி சிறப்பாக வளர்வதற்கேற்ற மலைப் பிரதேசம், காலநிலை ஆகியன நம் நாட்டுக்குக் கிடைத்த வரப்பிரசாதங்கள். அதற்கு மேலாக எம்நாட்டின் கடின உழைப்பாளிகள், துறைசார் நிபுணர்கள் ஆகியோரின் கூட்டுழைப்பில் தரம் வாய்ந்த பெறுமதி சேர்க்கப்பட்ட தேயிலையை எம்மால் உற்பத்தி செய்து உலகின் பெருமளவான நாடுகளில் சந்தைப்படுத்த முடிகிறது.
புவியல் அடிப்படையில் இலங்கை தேயிலையை மலைநாட்டுத் தேயிலை, மத்திய நாட்டுத் தேயிலை மற்றும் கீழ் நாட்டுத் தேயிலை என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. அதற்கமைய நாடு பூராவும் பரவிய தேயிலை உற்பத்தியானது இன்று இலங்கையின் 187,309 ஹெக்டேயரில் பயிரிடப்பட்டுள்ளது. இந்நாட்டு தேயிலை உற்பத்திக்கு 71 வீதமான பங்களிப்பை சிறு தேயிலைத் தோட்ட உற்பத்தியாளர்களே பெற்றுத் தருகின்றனர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
இதற்கமைய நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, காலி, மாத்தறை, மொனராகலை, பதுளை, கேகாலை, குருநாகல் (சிறிய அளவில்), ஹம்பாந்தோட்டை (சிறயளவில்), மாத்தளை ஆகிய பிரதேசங்களிலும் தேயிலை பயிரிடப்படுகின்றது.
தேநீரின் பயன்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வியர்வை, இரத்தத்தை உரமாக்கி உற்பத்தி செய்யப்படும் தேயிலையானது அவர்களின் வயிற்றுப் பசியை மட்டும் போக்கவில்லை. மாறாக பல குணாம்சங்களையும் கொண்டுள்ளதால் என்னவோ வெளிநாடுகளில் தேயிலைக்கு அதிகம் கிராக்கி நிலவுகின்றது. அதிலும் இலங்கைத் தேயிலைக்கு அதிகம் கிராக்கி காணப்படுகின்றது.
நாம் அறிந்தவரை, இது ஓர் உற்சாக பானம் மட்டுமே; காலையில் எழுந்தவுடன் தேநீரைப் பருகினால் தான் பலரது அடுத்த கட்ட நடவடிக்கைகள் சுமூகமாக நடக்கும். அதேபோல் அலுவலகத்திலோ, தொழில்நிலையங்களிலோ வேலைப்பளு அதிகரிக்கும் சந்தர்ப்பங்களிலும் கொஞ்சம் நித்திரை கலக்கம் ஏற்படும் சந்தர்ப்பங்களிலும் தேநீரை அருந்துவதன் மூலம் உறக்க நிலைக்கு செல்பவர்களும் விழித்துக்கொள்வார்கள்.
அலுவலகங்களில் இந்நிலை என்றால் பெருந்தோட்டங்களில் தேநீருக்கு எவ்வளவு முக்கியதுவம் வழங்கப்படும் என்பதை சொல்லிலடக்க முடியாது. உண்மையில் சொல்லப்போனால் தேநீர் உற்சாகப் பானமென்பது 100 வீதம் பெருந் தோட்ட மக்களுக்கே பொருந்தும். மாத்திரமன்றி மலையகத்தில் நிலவும் கடுங்குளிருக்கான மருந்தாகவும் இந்தத் தேநீர் அமைகின்றது.
தேயிலையில் இயற்கையாகவே காணப்படும் கலவையினால் இது மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைப்பதாகவும், இது பல் மற்றும் சிதைவுகளில் பாக்டீரியாவை அழிக்கக்கூடிய பல் சிதைவைக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளது என்பதையெல்லாம் எமது உடன்பிறப்புகள் அறியாமலே தேநீரை அருந்துவதுடன், மற்றவர்கள் அருந்துவதற்கும் தமது உடலை வருத்தி தாமும் வாழ்ந்து ஏனையோரையும் வாழ வைக்கின்றனர்.
இலங்கைத் தேயிலைக்கு புதிய நெருக்கடி
இலங்கையானது உலக சந்தையில் பிரதான தேயிலை ஏற்றுமதியாளராக விளங்குகிறது. ஒரு காலக்கட்டத்தில் உலக சந்தையின் 21 வீதம் இலங்கைக்குச் சொந்தமாக இருந்தது.
ஆனால், இன்று இந்தியா, கென்யா, பர்மா, ஆஜெந்தீனா, பிறேசில் போன்ற நாடுகளின் தேயிலை உலக சந்தையை ஆக்கிரமித்துள்ளதால் இலங்கை தேயிலை ஏற்றுமதி சற்று தளர்வடைந்து சென்றாலும், தரமிக்க இலங்கையின் தேயிலைக்கு தளர்வு ஏற்படவில்லை.
உலக சந்தையில் தேயிலை ஏற்றுமதியில் கென்யா, இந்தியா ஆகிய நாடுகள் ஆக்கிரமித்துள்ள நிலையிலும், இலங்கைத் தேயிலை தரம் மற்றும் சுவை நிறைந்ததாக காணப்படுகின்றமையால் உலக சந்தையில் அதிக வரவேற்பு காணப்படுவதுடன் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைத் தேயிலைக்கான கேள்வி உலக சந்தையில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக காணப்படுகின்றது. அத்துடன், இலங்கைத் தேயிலை சர்வதேச தரத்தில் நான்காம் இடத்தில் இருக்கின்றமை இலங்கையர்களான எம்மவர்களுக்கு பெருமைத் தரும் விடயமாகும்.
இலங்கைத் தேயிலைத்துறைக்கு மட்டும் 150 வருடங்கள் என்று சொல்வதை விட மலையகம் எனும் தேசத்தை உருவாக்கிய வரலாற்றுப் பெருமைக்குரிய கௌரவமான மக்களாகும் கூட்டமான பெருந்தோட்ட தொழிலாளர்களும் இலங்கை மண்ணில் கால் பதித்து 150 வருடங்கள் ஆகின்றது.
அவர்கள் தேசத்தை உருவாக்க இயற்கையோடு போராடினார்கள், இரத்தம் சிந்தினார்கள். வனவிலங்குகளோடு போராடி பசி, பட்டினியை அனுவித்தனர். பலர் உயிர்களை பலிகொடுத்து உற்பத்தி செய்து உலக நாடுகளில் பிரபலம்பெற்ற தேயிலையானது பஞ்சத்தால் நாடிழந்து உழைக்க வந்த கூலிகளின் இரத்தால் ஆனது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இலங்கையின் தேயிலையை இறக்குமதி செய்யும் நாடுகளுள் முதலிடங்களையும் பிடிப்பது ரஷ்யாவும், ஈரானுமாகும். ரஷ்யா வருடத்துக்கு 34 மில்லியன் கிலோகிராம் தேயிலையையும், ஈரான் 33 மில்லியன் கி.கிராம், ஈராக் 32 மில்லியன் கி.கிராம், துருக்கி 27 மில்லியன் கிலோ கிராம், டுபாய் 18 மில்லியன் கிலோ கிராம், லிபியா, சிரியா போன்ற நாடுகள் 12 மில்லியன் கிலோ கிராம் தேயிலையையும் இறக்குமதி செய்கின்றன.
இவ்வாறான தேயிலையை போட்டிப் போட்டுக் கொண்டு ஏற்றுமதி செய்யும் இலங்கைக்கு ரஷ்யாவின் தடையுத்தரவு பாரிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தடையுத்தரவினால் 3 இலட்சம் மக்கள் பாதிப்பை எதிர்நோக்குவர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேயிலைப் பொதியில் ‘கெரப்’ என்ற வண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்து இலங்கைத் தேயிலை இறக்குமதிக்கு ரஷ்யா அதிரடி தடையை விதித்ததுடன், இது 18ஆம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்படும் எனவும் அறிவித்தது.
இச்செய்தியானது இலங்கை அரசுக்கும், தேயிலை உற்பத்தியாளர்களுக்கும், இதனையே ஜீவனோபாயமாக கொண்டுள்ள பெருந்தோட்ட மக்களுக்கும் மிகவும் வேதனையையும் அதிர்ச்சியையும், பல எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்திய செய்தியாக அமைந்தது.
ஏனெனில் இலங்கை ஏற்றுமதி செய்யும் தேயிலையை அதிகம் கொள்வனவு செய்யும் நாடுகள் வரிசையில் ரஷ்யாவே முதலிடம் வகிக்கின்றது. இதனடிப்படையில் சுமார்25 வீதம் ரஷ்யா இலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்வதுடன், இதில் ரஷ்யாவின் தேயிலைப் பூர்த்தியை 23 வீதம் இலங்கைத் தேயிலை நிவர்த்தி செய்கின்றது. எனவே இவ்வாறான நிலையில் ரஷ்யாவின் அறிவிப்பை ஏற்பது கடினமான விடயமாகும்.
கடந்த 9 மாதங்களில் 25 மில்லியன் கிலோகிராம் தேயிலையை இலங்கை ஏற்றுமதி செய்துள்ளதுடன் இதன்மூலம் 19 பில்லியன் வருமானமும் பெற்றுள்ள நிலையில், இந்தத் தேயிலைத் தடைக்கான அறிவிப்பு இலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டங் காணச் செய்துள்ளதாகவே எண்ணிக்கொள்ளலாம்.
எனினும், ரஷ்யாவின் இந்தத் தடைக் குறித்து உத்தியோகப்பூர்வ அழைப்பு கிடைக்கவில்லையென தேயிலை ஆராய்ச்சி நிறுவன தலைவர் ஜயந்த கங்கரத்மான தெரிவி்த்துள்ள நிலையில், இது தொடர்பாக கலந்துரையாடல்களை முன்னெடுக்க அமைச்சர் நவீன் திசாநாயக்க தலைமையிலான குழு ஒன்று ரஷ்யாவுக்கு பறக்கவுள்ளது.
எனவே, ரஷ்யா விதித்துள்ள இந்தத் இலங்கைத் தேயிலை மீதானத் தடையை அகற்றுவதற்கு இலங்கை விரைவாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கை நெறிப் பிரிவின் பொறுப்பாளரும், பேராசிரியருமான காமினி வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை விதித்துள்ள தடையை தற்காலிகமாக நீக்கக்கோரி ரஷ்ய ஜனாதிபதி விளாடீமீர் புட்டினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம்(17) ஹப்புத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.
மாத்திரமின்றி தேயிலையை ஏற்றுமதி செய்த தனியார் நிறுவனம் தவறிழைத்திருந்தால், அவர்களின் தேயிலை ஏற்றுமதி அனுமதிப் பத்திரத்தை முழுமையாக தடைசெய்வதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்திருந்தார்
இதேவேளை பொதுவாக பொருட்கள் களஞ்சியபடுத்தும் இடங்களில் இவ்வாறான வண்டுகள் இருப்பது இயல்பு என்ற போதிலும், குறித்த தேயிலைத் தொகையை ரஷ்யாவுக்கு கொண்டு சென்ற கப்பல் இலங்கைக்கு சொந்தமானது இல்லை என்றும், குறித்த கப்பலானது வேறு எந்த துறைமுகத்திலாவது நங்கூரமிடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த வண்டு சென்றிருக்கலாம் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தமது தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளதுடன், குறித்த விடயம் தொடர்பில் ரஷ்யாவுடன் இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ரஷ்யாவின் தடையுத்தரவை முன்னுதாரணமாகக் கொண்டு இலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்யும் ஏனைய நாடுகளும் தடையுத்தரவை பிறப்பிக்குமா என்ற அச்சம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.
இலங்கைக் கூட பிறநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் உணவுப்பொருட்கள் பல மக்கள் பாவனைக்கே பொருத்தமில்லாத காணப்பட்டும் கூட குறித்த நாடுகளுக்கு எதிராக அறிந்த வரை இலங்கை ஒருபோதும் இவ்வாறான தடையத்தரவை பிறப்பிக்காத, பிறப்பிக்கவும் முடியாத நிலையில், ஒரு வண்டைக் கண்டு இலங்கையின் பொருளாதாரத்துக்கே ஆப்பு வைக்கும் வகையிலான தடையைப் பிறப்பித்துள்ளதை இலங்கையர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.
எனவே, இதுதொடர்பில் அரசு மட்டத்தில் ரஷ்யாவுடன் முன்னெடுக்கபடும் இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்து ரஷ்யா விதித்துள்ள தேயிலை இறக்குமதிக்கான தடையினை நீக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். என்பதே இலங்கையர் அதிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரார்த்தனையாக உள்ளது.
மட்டுமின்றி, இதேபோன்ற தவறு இனிமேலும் நடக்காமல் இருக்க இலங்கைத் தேயிலைச் சபை, தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அரசாங்கம் என்பன மிகவும் அவதானமாக செயற்படுவதுடன், ஜனாதிபதியின் கூற்றுக்கமைய தேயிலை ஏற்றுமதி விடயத்தில் தவறிழைக்கும் தனியார் நிறுவனங்களின் அனுமதியை இரத்துசெய்யும் அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு மீண்டும் உலகச்சந்தையில் தனக்கென ஒரு தனியிடத்தை இலங்கைத் தேயிலை பிடிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இலங்கையர்களினதும் எதிர்பார்ப்பாகும்.