பட்ஜெட்டில் முதன்முதலாய் துண்டுவிழுந்தது

இதனால் வருமான மறுபகிர்வு மற்றும் சமத்துவ சமூகத்தைக் கட்டியெழுப்புவது பற்றி அரசாங்கம் தொடர்ந்து பேசியது. ஆனால் இது மக்கள் மீதான உண்மையான அக்கறையால் அல்ல, அடுத்துவரவுள்ள தேர்தலில் வெற்றிபெறுவதற்கான உத்தியாகவே அரசாங்கம் இதைப் பார்த்தது. ஆனால், அரசாங்கம் முன்னெடுத்த சமூக நலத்திட்டங்களுக்கான நிதியை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது பற்றி அதிகம் சிந்திக்கவில்லை.

தேசிய முன்னுரிமைகளைப் பகுத்தறிந்து ஏற்றுமதி பொருளாதாரத்தின் உள்ளார்ந்த பலவீனங்களைப் புரிந்து கொள்ளத் தவறியது. 1947-53 காலகட்டத்தில், மொத்த பரிமாற்றிக் கொடுப்பனவுகள் சராசரியாக 5.7% ஆகவும், உணவு மானியங்கள் மட்டும் மொத்த தேசிய உற்பத்தியில் சுமார் 2.7% ஆகவும் இருந்தன. உணவு மானியங்களுக்கான செலவு ரூ.675 மில்லியனாக இருந்தது – 1952-3ஆம் ஆண்டில் மொத்த பட்ஜெட் பற்றாக்குறை ரூ.709 மில்லியனாக இருந்தது. அரசாங்கம் தனது இருப்பைச் செலவழிப்பதன் மூலமும் வங்கிக் கடன் வாங்குவதன் மூலம் மட்டுமே இந்த பற்றாக்குறையைக் கையாள முடிந்தது.


நிதியமைச்சர், தனது 1951-2 பட்ஜெட்டில், பட்ஜெட் கொள்கையின் புதிய நோக்கத்தை அறிவித்தார்: “பட்ஜெட் என்பது அரசாங்க வருவாய் மற்றும் செலவினங்களை சமநிலைப்படுத்துவதாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற முந்தைய கருத்தை நாம் ஏற்கவில்லை. இப்போது பட்ஜெட் கொள்கையின் நோக்கம் தேசிய பொருளாதார நடவடிக்கைகளின் முழு வடிவத்தையும் கட்டுப்படுத்துவதாகும்”. ஆனால், ஐ.தே.க. அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டங்களில் உண்மையில் நடந்தது என்னவென்றால், பட்ஜெட்டுகள் சமநிலைப்படுத்தப்படவில்லை அல்லது தேசிய பொருளாதார நடவடிக்கைகளின் வடிவத்தில் எந்த கட்டுப்பாடும் பயன்படுத்தப்படவில்லை.

இந்தக் கொள்கைத் தோல்வியின் பேரழிவு விளைவுகள் 1953இல் கொரியப் 
போர் ஏற்பட்டவுடன் விரைவில் தெளிவாகத் தெரிந்தன.
இதனையடுத்து, நிதியமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். ‘நமது ஏற்றுமதிச் சரிவு, நமது ஏற்றுமதி விலைகளில் கடுமையான வீழ்ச்சி மற்றும் இறக்குமதி விலைகளின் உயர்வு என்பன இப்போது தவிர்க்கவியலாதது. இந்த அனைத்து காரணிகளின் கலவையும் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்குப் பங்களிக்கக்கூடும்.

பட்ஜெட்டால் உருவாக்கப்பட்ட ஒட்டுமொத்த பற்றாக்குறையை நீக்குவதற்கான தீர்வு எம்மிடம் உள்ளது என்பது எனக்குத் தெரியும். ஆனால், உணவுக்கான மானியத்தையும் நீக்காமல் இந்த நடவடிக்கையை எடுக்க முடியாது.”
இந்த வார்த்தைகளில், அவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு (அவரது 1947-48 பட்ஜெட்டில்) ‘முற்போக்கான சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள்’ என்று விவரித்த நலன்புரி நடவடிக்கைகளில் கடுமையான வெட்டுக்கு நாட்டைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார். ஆகஸ்ட் 1953இல், அரிசி மானியம் இரத்து செய்யப்பட்டது மற்றும் அரிசியின் விலை 25 சதத்திலிருந்து 70 சதமாக உயர்ந்தது.

பள்ளிக் குழந்தைகளுக்கான இலவச மதிய உணவும் இரத்து செய்யப்பட்டது. சீனியின் விலை அதிகரிக்கப்பட்டது, பொது உதவித்தொகை குறைக்கப்பட்டது, புகையிரத கட்டணங்கள் மற்றும் அஞ்சல் கட்டணங்கள் இரட்டிப்பாயின. பால் வழங்கும் மையங்கள் ஏற்கெனவே மூடப்பட்டிருந்தன. 1952 ஜனவரியில் ரூ.1,208 மில்லியனாக இருந்த நாட்டின் வெளிநாட்டுச் சொத்துக்கள் அடுத்த ஜூலை மாதத்திற்குள் ரூ.685 மில்லியனாகக் குறைந்து விட்டன.

பணக்காரர்கள் மற்றும் சலுகை பெற்ற வகுப்பினரைத் தொடாமல் விட்டுவிட்டு, ஏழை சமூகத்திற்குச் செல்லும் மறுபகிர்வு செலவினங்களைக் குறைப்பதன் மூலம் அரசாங்கம் பொருளாதாரத்தை புதுப்பிக்க முயன்றது.ஒருபுறம் இந்தப் பற்றாக்குறையாலும் மறுபுறம் தொழிலாளர் நலன்கள் மோசமாக்கப் பாதிக்கப்பட்டமையாலும் எழுந்த கோபம், ஆகஸ்ட் 12, 1953 அன்று சுதந்திர இலங்கையில் முதல் வெகுஜனப் போராட்டமான ஹர்த்தாலாக வெடித்தது. நாடு வன்முறைக் கலவரங்களால் சூழப்பட்டது.

அவசரகால நிலை மற்றும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது, நிலைமையை கட்டுப்படுத்த அடக்குமுறை மற்றும் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. காவல்துறை மற்றும் இராணுவத் துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர், மேலும் 1952இல் தனது தந்தைக்குப் பிறகு பிரதமராகப் பதவியேற்ற டட்லி சேனநாயக்க இராஜினாமா செய்தார். அவருக்குப் பிறகு அவரது மாமா ஜோன் கொத்தலாவல பதவியேற்றார். அவர் தனது புதிய அமைச்சரவையில் ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்குப் பதிலாக எம்.டி.எச்.ஜெயவர்தன நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். கொத்தலாவலவின் ஐ.தே.க. அரசாங்கம் 1954 நவம்பரில் 
அரிசி மானியத்தை உயர்த்தியது மற்றும் மே 1955இல் அதன் விலையை 
55 சதமாகக் குறைத்தது.

அரிசிப் பிரச்சினையைத் தீர்த்து வைத்தாலும், அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், அதைத் தள்ளிப் போட்டாலும், அக்காலப்பகுதியில் மொழிப் பிரச்சினை கொழுந்துவிட்டெரியத் தொடங்கியிருந்தது. இது அவரது மற்றும் ஐ.தே.கவின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், நாட்டை இனவெறி மற்றும் கலவரக் காலகட்டத்தில் தள்ளியது. இது நவீன இலங்கையின் அரசியலுடலில் தீர்க்கவியலாத ஒரு புண்ணாக மாறியது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, ஆங்கிலம் நிர்வாகத்தின் ‘அதிகாரப்பூர்வ மொழியாக’ இருந்தது, ஆனால், 10 வீதத்திற்கும் குறைவான மக்களால் மட்டுமே அந்த மொழியைப் பேச முடிந்தது. எனவே, ஆங்கிலத்திலிருந்து மாறுவது நிகழ்ச்சி நிரலில் இருந்தது, மேலும் ஆங்கிலம், மக்களின் இரண்டு தாய்மொழிகளான சிங்களம் மற்றும் தமிழால் பிரதியீடு செய்யப்படும் என்று கருதப்பட்டது.

மேலும், அதிகார மாற்றத்திற்கு ஒரு முன்நிபந்தனையாக இருந்த தேசிய ஒற்றுமையின் படத்தை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு வழங்குவதற்காக, சிங்களத் தலைமை தமிழ் சிறுபான்மையினருக்கு சுதந்திரத்தின் பலன்கள் கூட்டாண்மை மற்றும் சமத்துவத்தில் அனுபவிக்கப்படும் என்று உறுதியளித்தது. இது நல்லெண்ணத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1954இல் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது, இந்த உறுதிமொழியின்படி செயல்படுவதாக பிரதமர் கொத்தலாவெல உறுதியளித்து, “நாட்டின் அலுவல் மொழிகளாக சிங்களம் மற்றும் தமிழுக்கு சம அந்தஸ்து வழங்க அரசியலமைப்பில் ஏற்பாடு செய்யப்படும்” என்று அறிவித்தார்.
இந்த தீங்கற்ற அறிக்கை பெரும் சர்ச்சையைத் தூண்டியது. ‘சம அந்தஸ்து’ என்ற சொற்றொடர், சில சிங்களவர்களால் தமிழில் படித்து வேலை செய்ய வேண்டும் என்றும், அதன் மூலம் சிங்கள இனம் என்ற அடையாளத்தை இழக்க வேண்டும் என்றும் தவறாக சித்திரிக்கப்பட்டது.

பின்னர் சிங்களப் பகுதிகளில் சிங்களம் மட்டுமே அதிகாரப்பூர்வ மொழியாக இருக்க வேண்டும் என்ற போராட்டம் தீவிரமடைந்தது. பிரச்சினை விரைவாகப் பரவியது. தீயில் எண்ணெய் ஊற்ற, அரசியல் கட்சிகள் விரைவில் நிலைப்பாடுகளை எடுத்தன. லங்கா சமசமாஜக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் சிங்களம் மற்றும் தமிழ் இரண்டையும் அதிகாரப்பூர்வ மொழிகளாக அறிவித்தன, மேலும், டாக்டர் என்.எம்.பெரேரா இந்த மாற்றத்தை செயல்படுத்த லங்கா சமசமாஜக் கட்சியின் பாராளுமன்ற ஆதரவை உறுதியளித்தனர்.

பண்டாரநாயக்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமிழை ‘நியாயமான முறையில்’ பயன்படுத்தி ‘சிங்களம் மட்டும்’ என்று அறிவித்தது. 1950இல் லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து பிரிந்து  விப்லவகாரி (புரட்சிகர) லங்கா சமசமாஜக் கட்சியை உருவாக்கிய பிலிப் குணவர்தன, தனது கட்சி ‘சிங்களம் மட்டும்’ என்பதை ஆதரிக்கிறது என்றும், தமிழை ஒரு பிராந்திய மொழியாகக் கொண்டிருப்பதாகவும் கூறினார். வன்முறை ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன, மொழிப் பிரச்சினை உணர்ச்சிவசப்பட்டது. சில ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் ‘சிங்களம் மட்டும்’ என்ற கொள்கையை ஆதரிப்பவர்களாக மாறினர், இறுதியில் கொத்தலாவலவே ஐக்கிய தேசியக் கட்சியின் மொழிக் கொள்கை 

‘சிங்களம் மட்டும்’ என்று மாறி விட்டதாக அறிவித்தார், இப்போது அவர் தமிழைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. தனது எதிரிகளின் எதிர்ப்பை ஏற்றுக்கொண்டதாக உணர்ந்த அவர், மொழிப் பிரச்சினையை வாக்காளர்களிடம் எடுத்துச் 
செல்ல முடிவு செய்து, பெப்ரவரி 18, 1956 முதல் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க அறிவுறுத்தினார்.விஸ்வரூபம் எடுத்த மொழிப் பிரச்சினை நாட்டின் பொருளாதார நலன் குறித்த அக்கறைகளைப் பின் தள்ளியது. இனவாதத்தால் இலங்கையர்கள் தினந்தினம் ஊட்டப்பட்டனர்.

சீரழியும் நாட்டின் பொருளாதாரம் குறித்து யாரும் அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை. தொடர்ச்சியாக பட்ஜெட்டில் துண்டுவிழுந்தது. இலங்கை தொடர்ந்து கடன் வாங்கியது. ஆனால், அது கவனிப்பாரற்ற விடயமாகவும் மொழிப் பிரச்சனை அடுத்தவேளை சோறு பற்றியது| என்று மாறியது. இவ்வாறுதான் இனப் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினையை மேவத் தொடங்கியது.  


Leave a Reply