மோடி அரசின் நடவடிக்கைகளைப் பற்றி விமர்சிக்கும்போதெல்லாம் நான் ஒன்றைச் சொல்லி வருவதை நண்பர்கள் கவனித்திருக்கலாம். அது:
“அரசு மக்கள் மீது தன் இருப்பை மேலும் மேலும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது.”
அரசு ஒரு மிகப்பெரிய சுமையாக நம் மீது அமர்ந்திருப்பது மட்டுமல்ல, அரசை மறந்து நீங்கள் ஒரு கணமும் இருக்க இயலாது எனும் நிலையை மோடியின் ஆளுகை உச்சபட்சமாக நிலை நிறுத்துகிறது.
இந்த இடத்தில்தான் அமெரிக்க அடிமைத்தனத்தை ஒழித்ததில் முக்கிய பங்களித்த சிந்தனைகளை முன் வைத்த ஹென்றி டேவிட் தோரோவின் அந்த வாசகம் இன்று நாம் அனைவரும் நினைவூட்டிக் கொள்ள வேண்டியதாக உள்ளது. அது:
“மிகக் குறைந்த ஆளுகையைச் செலுத்தும் அரசே மிகச் சிறந்த அரசு”
(உண்மையில் தோரோ இன்னும் ஒருபடி மேலே சென்றார். சொன்னார் : “The govt is best when it governs not at all”)
அரசைப் பற்றிச் சொல்லப்படும் மிகப் பெரிய பொய், அது ஊழலை ஒழிக்கும், நீதியை நிலைநாட்டும் கருவி..” என்பதுதான்.
அரசு நம்மிடம் கோருவது ஒன்றே ஒன்றுதான். அது
“பணிவு”
பணிவு மட்டுமே அரசு நம்மிடம் எதிர்பார்ப்பது. அரசின் எடுபிடிகளான மதங்களும் தருமசாத்திரங்களும் காலங் காலமாக இங்கு செய்துவந்த அனைத்தும் நமக்குப் “பணிவு” என்பதைப் போதித்தது ஒன்றைத்தான்.
பணிவு, அடக்கம், politeness …
ஆனால் யாருடைய பெயர்களால் இந்த தர்ம சாத்திரங்கள் இங்கே முன்வைக்கப் படுகின்றனவோ அவர்கள் அனைவரும் அன்று போதித்ததும் வாழ்ந்து காட்டியதும் பணிவின்மையைத்தான்.
ஆம் அன்றைய அதிகாரங்களுக்குப் பணியாதிருப்பதைத்தான் ஏசுவும், புத்தனும், நபிகளும், தோரோவும், காந்தியும், அம்பேத்கரும் நமக்குச் சொன்னார்கள். வாழ்ந்து காட்டினார்கள்.
நமது பிறப்பிலிருந்து நமக்குப் போதிக்கப்படும் இந்தப் பணிவு என்பது நம்மை வன்முறையாளனாக்குகிறது. ஆம் பணிவின் இன்னொரு பக்கம் வன்முறை. அரசின் அடக்குமுறைகளை நம்மை அறியாமலேயே நிறைவேற்றும் கருவிகளில் ஒன்றாக நாம் ஒவ்வொருவரும் ஆக்கப்படுகிறோம். ஆகிறோம். எந்தச் சர்வாதிகாரி அல்லது வரலாற்றுக் கொடுங்கோலன்கள் அப்படியான பணிவு மிக்க மக்களின் உதவியும் ஒத்துழைப்பும் இன்றி மக்களைக் கொன்று குவித்தான்?
பணிய மறுத்தலின் வழிமுறை வன்முறையல்ல. சொல்லப்போனால் வன்முறைதான் ஆக உச்சமான பணிவை, ஆணைக்கு அடிபணிதலைக் கோருவது.
பணிய மறுப்பது என்பதை வன்முறை எனச் சொல்வது அபத்தம்.
பணிய மறுத்தலின் வடிவம் வரலாற்றில் civil disobedience ஆகத்தான் இருந்துள்ளது.
இன்றைய தேவை “பணிய மறுத்தல்”
என்றென்றுமான தேவையும் கூட “பணிய மறுத்தல்தான்”
DISOBEDIENCE….
நமக்குள் சிறு வயதுமுதல் நம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மதகுருமார்கள்… எல்லோராலும் பதிக்கப்பட்டுள்ள இந்தப் “பணிவு” எனும் தீயொழுக்கத்தை நம்மிடமிருந்து அகற்றுவோம்..
(Marx Anthonisam)