யாழ். மாநகர சபையின் வரவு- செலவுத்திட்டம், இருமுறை தோற்கடிக்கப்பட்ட நிலையில், முன்னாள் மேயர் ஆர்னோல்ட், மேயர் பதவியை இழந்த நிலையில், மீண்டும் மேயர் பதவிக்காக,இலங்கை தமிழரசுக் கட்சியால் அவர் முன்னிறுத்தப்பட்டு இருந்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் 15 உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஓர் உறுப்பினர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஓர் உறுப்பினர் என, 20 மாநகர சபை உறுப்பினர்கள், முன்னாள் மேயர் ஆர்னோல்டுக்கு வாக்களித்திருந்தார்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 10 உறுப்பினர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஓர் உறுப்பினர் என, 21 மாநகர சபை உறுப்பினர்கள், மணிவண்ணனுக்கு வாக்களித்திருந்தார்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்களும் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஓர் உறுப்பினரும் வாக்கெடுப்பின் போது நடுநிலை வகித்திருக்கிறார்கள்.
இந்த மேயர் தெரிவு, தமிழ் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், இதற்குள் நிறைய அரசியல் கேள்விகளும் உட்கட்சி முரண்பாடுகளும் ஒளிந்திருக்கின்றன. அவற்றில், சில முக்கிய கேள்விகள் பற்றிய சில புரிதல்களை நோக்குவது அவசியம்.
தமிழரசுக் கட்சி, மீண்டும் ஆர்னோல்டை மேயராக நிறுத்தியது, சரியான முடிவா? டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவுடன், மணிவண்ணன் மேயரான பின்னர், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தமிழரசுக் கட்சி மீண்டும் ஆர்னோல்டை, மேயராக நிறுத்த எடுத்த முடிவைக் கண்டித்து, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்குக் கடிதமொன்றை எழுதி இருந்ததாக, ஊடகங்கள் அறிக்கையிட்டிருந்தன.
அந்தக் கடிதத்தில், ‘வரவு- செலவுத் திட்டம் தோல்வியுற்றால், இராஜினாமா செய்ய வேண்டியது ஒரு ஜனநாயக விழுமியம் மட்டுமல்ல; அது ஒரு ஜனநாயக மரபாகவும் இருந்திருக்கின்றது. இந்த மரபு பின்பற்றப்படாத காரணத்தால்தான், சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, ‘இராஜினாமா செய்தவராகக் கருத வேண்டும்’ என்று, அது, ஒரு சட்டத்தின் தேவைப்பாடாகவும் ஏற்படுத்தப்பட்டது. சட்டத்தின் செயற்பாட்டால், இராஜினாமா செய்தவர் மீண்டும் அப்பதவிக்குப் போட்டியிடுவது, சட்டத்துக்கு முரணானது மட்டும் அல்லாமல், ஜனநாயக விழுமியங்களையும் மீறுகின்ற செயலாகும்’ என்று, சுமந்திரன் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
சுமந்திரனின் செல்லப்பிள்ளையாக, அரசியலுக்கு வந்தவர் ஆர்னோல்ட் என்பது, யாவரும் அறிந்ததே. அவர்கள் இடையேயான உறவு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போது கசப்படைந்து இருந்தமை, சுமந்திரனுக்கு எதிராக, ஆர்னோல்ட் ஊடகங்களில் வௌியிட்டிருந்த கருத்துகளில் இருந்து தௌிவாகிறது.
ஆனால், அவர்கள் இடையேயான முரண்பாடு எத்தகையதாக இருப்பினும், சுமந்திரன் சுட்டிக்காட்டும் விடயம் இங்கு முக்கியமானது. உரிய பெரும்பான்மையைப் பெற முடியாது, இருமுறை வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதால், பதவியை இழந்தவரை, மீண்டும் அதேபதவிக்கு போட்டியிட நிறுத்துதல், ஜனநாயக அரசியல் மாண்புக்கு முரணான செயல்.
அப்படியானால், தமிழரசுக் கட்சியின் தலைமை, இதைச் செய்ய என்ன காரணமாக இருக்கலாம் என்ற கேள்வி எழுகிறது? அறுதிப் பெரும்பான்மை, தமிழரசுக் கட்சிக்கு இல்லாத நிலையில், என்ன நம்பிக்கையில் தமிழரசுக் கட்சி, தோல்விகண்ட ஆர்னோல்டை மீண்டும் மேயர் தெரிவுக்கு முன்னிறுத்தியது என்பதற்கு, தமிழரசுக் கட்சியின் தலைமைதான் கட்சிக்காரர்களுக்கும் மக்களுக்கும் பதிலளிக்க வேண்டும்.
ஒருவேளை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஒருபோதும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளாது என்று, கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்க் காங்கிரஸின் கொள்கைப் பிடிப்பு மீது, தமிழரசுக் கட்சியின் தலைமை அதீத நம்பிக்கை கொண்டிருந்திருக்கலாம்.
ஆனால், மணிவண்ணனை ஏலவே கட்சியிலிருந்து நீக்கியதாக, தமிழ் காங்கிரஸ் அறிவித்திருந்த நிலையில், மணிவண்ணன், காங்கிரஸின் கொள்கைப்பற்றை தொடர்வார் என்று, எந்த அடிப்படையில் தமிழரசுக் கட்சியின் தலைமை நம்பியிருக்க முடியும் என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.
மணிவண்ணன், டக்ளஸின் ஆதரவைப் பெற்றுக் கொண்டமை, மணிவண்ணனைத் தாம் ஏன் ஆதரித்தோம் என்பதற்கு வியாக்கியானம் வழங்கிய டக்ளஸ் தேவானந்தா, “நாம், கட்சி ரீதியாகச் சிந்திக்கவில்லை. மக்கள் நலன் சார்ந்து சிந்தித்தோம். மாநகர சபை நிர்வாகம் கலையும் அபாயமிருந்தது. அதனால் இரண்டு சபைகளிலும் செயற்பாட்டாளர்களை ஆதரிக்க முடிவெடுத்தோம். சிறப்பான வரவு செலவுத் திட்டமொன்றைத் தயாரித்து, மக்களுக்கு வழங்குவதே எமது நோக்கம்” என்று கூறியிருந்தார். ஆனால், இது டக்ளஸின் மிகவும் புத்திசாலித்தனமானதொரு காய்நகர்த்தல் என்பதை, நாம் கூர்ந்து அவதானிக்க வேண்டும்.
மாநகர சபையோ, உள்ளூராட்சி மன்றமோ, தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு பெறும் இடமோ, தமிழ்த் தேசியம் பேசும் இடமோ அல்ல; ஆனால், அது மக்களின் அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை நிர்வகிக்கும் இடம். ஆகவே, இங்கு பகட்டாரவாரத் தேசியத்தைப் பேசி, அரசியல் செய்வதில் அர்த்தமில்லை.
ஆனால், டக்ளஸ் தேவானந்தாவையும் அவரது ஈ.பி.டி.பியையும் தமிழினத் துரோகிகளாகப் பல வருடங்களாக வர்ணித்துவிட்டு, இன்று அவர்களுடைய ஆதரவுடன் பதவியில் அமர்வது, பாசாங்குத்தனம் இல்லையா என்ற கேள்வி தமிழ் மக்களுக்கும், யாழ். மாநகர சபை வாக்காளர்களுக்கும் எழலாம்.
மறுபுறத்தில், மணிவண்ணனின் நியாயமாக, எனக்கு டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியினர் ஆதரவு தெரிவித்தால், அதற்கு நான் என்ன செய்ய முடியும் என்பதாக அமையலாம். உண்மை! எதிர்த்தரப்பைச் சார்ந்த ஒருவர், உங்களுக்கு ஆதரவு தெரிவித்தால், அந்த ஆதரவை உங்களால் நிராகரிக்க முடியாதுதான்; அதற்கான தேவையுமில்லை.
ஆளும் தரப்பிடம் அறுதிப் பெரும்பான்மை இருக்கின்ற போது, இந்த நியாயம் ஏற்புடையது. ஆனால், இன்று மணிவண்ணன் கட்சி அற்ற நிலையில் இருக்கிறார் என்பதுதான் உண்மை. தமிழ் காங்கிரஸிலிருந்து அவர் நீக்கப்பட்டதை எதிர்த்து, அவர் நீதிமன்றை நாடியிருக்கிறார் என்பது ஒருபுறமிருப்பினும், கட்சியின் தலைமை, அவரை இணைத்துக்கொள்ளத் தயாராக இல்லை என்பது வௌ்ளிடைமலையாக இருக்கிறது.
இந்த நிலையில், அவரிடம் அறுதிப்பெரும்பான்மையும் கிடையாது. ஆகவே தான், மணிவண்ணன் மேயராகத் தொடர வேண்டுமென்றால், டக்ளஸ் தேவானந்தாவினதும், அந்த ஒரு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரதும் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
ஆகவே, யதார்த்தத்தில் மணிவண்ணன், உத்தியோகபூர்வமாக டக்ளஸூடன் கூட்டு வைத்துக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், டக்ளஸின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது என்பது வௌ்ளிடைமலை.
கொள்கையும் அரசியலும்
ஆண்டாண்டு காலமாக, அரசியல் ரீதியாகக் கடுமையாக எதிர்த்தும் விமர்சனம் செய்தும் வந்த தரப்புடன், தனக்கு அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், அவர்களுடைய ஆதரவுடன் பதவியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை, எந்தக் கொள்கைப்பற்றுள்ள மனிதனும் ஏற்றுக்கொள்ளமாட்டான்; அத்தகைய பதவியைச் சுவீகரித்துக்கொள்ளவும் மாட்டான். அப்படிச் செய்வதானது, இத்தனை காலமும் அவர் செய்த அரசியலின் உண்மைத் தன்மையையும் விசுவாசத் தன்மையையும் கேள்விக்கு உட்படுத்துவதாகவும் இத்தனை காலமும் அவரைக் கொள்கை ரீதியாக ஆதரித்து வந்த மக்களை ஏமாற்றுவதாகவும் கேவலப்படுத்துவதாகவுமே அமையும்.
சரியோ, பிழையோ, டக்ளஸ் தேவானந்தா இன்றுவரை, தன்னுடைய கொள்கை நிலைப்பாட்டில் பெரும் பிறழ்வுகளின்றிப் பயணித்துக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. தமிழ்த் தேசியவாதத்தைச் சுவீகரித்துக் கொண்டவர்கள்தான், இன்று பதவிக்காக அதைச் சமரசம் செய்யத் துணிகிறார்கள்.
குறிப்பாக, தமிழ்த் தேசியத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று பலரும் நம்பியவர்கள், இந்த நம்பிக்கைத் துரோகத்தைச் செய்வது, எதிர்காலத்தில் தமிழ்த் தேசியம் பேசும் அரசியல்வாதிகளை, தமிழ் மக்கள் நம்ப முடியாத, ஐயக்கண்ணுடன் நோக்கும் நிலை உருவாகும்.
பதவி, அபிவிருத்தி அரசியல்தான் நோக்கம் என்றால், அதை அங்கஜன், டக்ளஸ் போன்று நேரடியாக மக்கள் முன்னால் சமர்ப்பித்து, மக்களாணையைப் பெற வேண்டும். தேர்தல் காலம் முழுவதும் டக்ளஸ் துரோகி; எனக்குப் பதவி பெற ஆதரவு தரும்போது, அவர் இரகசிய நண்பன் என்பதெல்லாம் சுத்தப் பாசாங்குத்தனம்.
அதுபோலவே,கொள்கை நிலைப்பாடுகள் மாறுவது கூட ஏற்றுக்கொள்ளக் கூடியதே. இளம் வயது கொம்யூனிஸ்ட்கள், அறிவும் அனுபவமும் முதிர்ச்சி அடையும்போது, அதன்பாலான தௌிவினது காரணமாகக் கொம்யூனிசத்தைக் கைவிடுவது போல, அறிவும் அனுபவமும் கொள்கையில் பரிணாமத்தை அல்லது மாற்றத்தை உருவாக்கலாம். ஆனால், அதை வௌிப்படையாக மக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தலின் போது வாக்குக்கு ஒரு கொள்கை; தேர்தலின் பின் பதவிக்கு ஒரு கொள்கை, என்பதுதான் தவறு.