முதன் முதலில் தமிழகத்தில் நடந்த வெடி குண்டு மற்றும் துப்பாக்கித் தாக்குதல் என்பதே பத்மநாபா பற்றிய ஈர்ப்பிற்கான காரணம். இதனை தேடி தேடி போக இன்னும் சுவாரசியமான விஷயங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. அப்படி தேடியதன் ஒரு பலன் இந்த புத்தகம். புத்தகத்தினை எழுதியிருப்பவர் ஜெ.ராம்கி. புத்தகத்தின் பெயர் பத்மநாபா படுகொலை. சுவாசம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வரலாற்று திரைப்படமாகவும், நிஜ நிகழ்வாகவும், இன்னும் புதுவிதமான முயற்சிகள் செய்வதற்குமான உண்மைச் சம்பவங்கள் நிறையவே இருக்கின்றன. ஹாலிவுட் திரையுலகில் இதுப்போன்ற நிறைய சம்பவங்கள் வெவ்வேறு பாணிகளில் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் அச்சம்பவம் ஏன் நடந்தது என்பதில் துவங்கி, நடக்காமல் இருந்திருந்தால் என்னவாகியிருக்கும், இது ஏன் நடந்தது என்பதற்கான வெவ்வேறு விதமான வரலாற்று தருணங்களை, மாயாஜால விஷயங்களை இணைப்பது என அதை வைத்து வித விதமாக சம்பவங்கள் செய்திருக்கிறார்கள்.
தமிழிலும் அப்படி செய்வதற்கான நிறைய சம்பவங்கள் இருக்கின்றன என்பதை இப்போதுதான் தேடி தேடி கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறேன். இதில் இருக்கும் ஒரே ஒரு சிக்கல் எதைப் பற்றி படம் எடுத்தாலும், எங்களை தப்பா காமிக்கிறாங்க, இல்லை காமிக்க முயற்சி செய்யுறாங்க, படத்தை தடை செய்யனும்னு கிளம்புகிற கும்பல்தான். இதனாலாயே உண்மைச் சம்பவங்களை படமாக்க முயலும்போது நிறைய யோசிக்க வேண்டியிருப்பதோடு இந்தக் கும்பல்கள் போலி அறச்சீற்றங்களால் கலைஞர்களின் கற்பனை சிறகுகளும் வெட்டப்படுகிறது. இந்நிலை மாறும்போது இங்கும் பல சுவாரசியமான வரலாற்று சம்பவங்களைப் பார்க்கலாம்.
இந்த புத்தகமும் பத்மநாபா படுகொலையைப் பற்றி சில புதிய பார்வைக் கோணங்களை விரித்து செல்கிறது. தோழர் பத்மநாபாவின் தனிப்பட்ட வாழ்வின் அரசியல் புரிதல்களை, அவரது வன்முறைக்கு எதிரான உரையாடல்களை பற்றி கொஞ்சம் புரிந்துக் கொள்ள முடிகிறது. பத்மநாபா பற்றிய ஒரு துவக்க நிலை புரிதலுக்கு இந்த புத்தகம் மிகவும் அவசியமானது. பத்மநாபாவின் படுகொலையும், ராஜீவு காந்தியின் படுகொலையும் இணையும் இடம், இதில் தமிழக அரசியலின் நிலைப்பாடு, போலித்தனங்கள், சூழ்ச்சிகள், அரசியல் கணக்குகள் என பல தருணங்களை உணர முடிகிறது.
இப்புத்தகத்தை ஏன் படிக்க வேண்டும் என்பதற்கான என்னுடைய இரண்டுக் காரணங்களை மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஒன்று வட இந்தியர்களின் தமிழர்கள் மீதான தீராத வெறுப்பு அல்லது கோபத்திற்கான காரணத்தை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. ஏனெனில் இஸ்லாமியர்கள் மீது அவர்களுக்கு இருக்கும் தீராத வெறுப்பிற்கு எப்படி மதம் மட்டும் காரணமில்லையோ, (வரலாற்றில் இஸ்லாமிய அரசுகள் வட இந்தியாவில் செய்த நிறைய குற்றங்கள் இருக்கின்றன. அவைப்பற்றி பொதுவெளி உரையாடல் நிகழ்வதே இல்லை.)
அதேபோல் எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலம் தொட்டு, ராஜீவ்காந்தி படுகொலை வரை தமிழ்நாட்டினை வி.புக்கள் தங்களின் மிக மிக சுதந்திரமான பாதுகாப்பிடமாகவே கருதியுள்ளனர். உணவு, மருந்துகள், ஆயுதங்கள் பாதுகாத்தல், அரசுகளின் வாய்மொழி வார்த்தைக்கு உட்பட்டு காவல்துறையினால் எவ்வித தலையீடும் இல்லை. ஒரு போராளி இயக்கத்திற்கு இதற்கு மேல் என்ன வேண்டும்.
இந்தியாவின் பிரதமர் தமிழ் நாட்டின் சட்ட ஒழுங்கினை பஞ்சாப், காஷ்மீரோடு ஒப்பிடும் அளவிற்கே சூழல் இருந்துள்ளது. பத்மநாபா படுகொலை நடக்கும் வரை தமிழ்நாட்டில் போராளி இயக்கத்தின் எந்த பயிற்சிக்கூடங்களோ, அமைப்பின் செயல்பாடுகளோ இல்லை என்றே இர்ண்டு திராவிடக் கட்சிகளும் சமாளித்து வந்துள்ளனர். ஆனால் பத்மநாபா படுகொலை அனைத்தையும் வெளிச்சமாக்கிவிட்டது.
இரண்டாவதுக் காரணம், பத்மநாபாவின் கருத்தியல் மாற்றங்கள், அவரது எதிர்க்கால பார்வை, குறிப்பாக ஆயுதப்போராட்டம் தற்காப்பிற்கு மட்டுமே, ஆனால் தமிழ் மக்களை ஒன்றினைத்து ஆட்சி செய்வதற்கு ஒரு ஆழ்ந்த அரசியல்ப் பார்வையும், செயல் திட்டங்களும் வேண்டுமென்பதில் தெளிவாக இருந்திருக்கிறார். வாழ்க்கை முழுவதும் பலவிதமான ஆபத்துக்களிலேயே உழன்றாலும், அகிம்சைப் பாதையை தேர்ந்தெடுத்தப் பிறகு அதனை செயல்படுத்த அவர் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார் என்பது பத்மநாபாவின் மீது எனக்கு பெரும் ஈர்ப்பினைக் கொடுத்துள்ளது.
வரலாற்றைப் புரிந்துக் கொள்ள அனைத்து கோணங்களையும் தேடி ஓட வேண்டும். இன்னும் இதை நிறையத் தேடுவேன். வாசிப்பேன். வரலாற்றைப் புரிந்துக் கொள்ள நீங்களும் ஒரு பார்வையோடு தேங்கிவிடாமல் அனைத்து கோணங்களிலும் பார்வையை நகர்த்துங்கள், உலகின் அரசியல் இன்னும் சுவாரசியம் ஆகும்.
இதில் என்னை ஈரத்த பல விஷயங்களில் ஒன்று வி.புக்கள் மிக ஜாலியாக தமிழகத்தில் உலா வந்தது. அதைப் பற்றிய சம்பவங்கள் எல்லாம் ஏய்.. எப்புடிறா என்னும் அதியதக்க வகையில்தான் இருந்தன. இப்படி மஜாவாக ஒரு போராளிக்குழுவை மாநிலம் முழுக்க இருக்க விட திராவிடக் கட்சிகள் ஆவணம் செய்திருக்கின்றன என்பதே இங்கு ஒரு தீவிர உரையாடலுக்கான விஷயம். பேசுவார் யாருமில்லையே..
இறுதியாக பத்மநாபா கூறிய வார்த்தைகளையே சொல்லி முடிக்க விரும்புகிறேன். மண்ணுக்காக மக்கள் இல்லை, மக்களுக்காகவே மண்… எது நமக்கு முக்கியம் என்பதை முடிவு செய்வோம்.