சமீபத்தில், நான் கல்லூரி மாணவர்களிடையே மேற்கொண்ட ஆய்வு அதன் தீவிரத்தன்மையை உணர்த்தும் வண்ணம் உள்ளது. அதில் 20-லிருந்து 24 வயதுக்கு உட்பட்ட மாணவர்களில் சுமார் 58% பேர் பப்ஜி விளையாட்டைத் தங்களது ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், 52% பேர் கடந்த 6 மாத காலங்களுக்கு மேலாக அதைப் பயன்படுத்திவருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சிக்குரிய தகவல் என்னவென்றால், சுமார் 12% பேர் ஒரு நாளைக்கு 5 மணி நேரத்துக்கு மேலாக அதை விளையாடிவருவதாகவும், 18% பேர் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்தை அதில் செலவழிப்பதாகவும் கூறியுள்ளனர். 31% பேர் தாங்கள் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகிவிட்டதாக உணர்வதாகவும், 20% பேர் இந்த விளையாட்டு இல்லாமல் ஒருவார காலம்கூடத் தங்களால் இருக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.
அடிமையாகும் விபரீதம்
ஒரே நேரத்தில் பல நூறு பேர் உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்துகொண்டே இயர்போன் வழியாக ஒருவரை ஒருவர் தொடர்புகொண்டு ஆன்லைனில் விளையாடும் விளையாட்டு இது. முழுக்க முழுக்கத் துப்பாக்கி, வெடிகுண்டுகள் போன்ற ஆயுதங்களுடன், தங்களை வீரர்களாக உருவகப்படுத்திக்கொண்டு தங்கள் எதிரியை அழிக்க தனியாகவோ நண்பர்களுடனோ போராடும் வன்முறைகள் நிறைந்த விளையாட்டு. இதில் விளையாடுபவர்களெல்லாம் நிஜவுலகில் பயன்படுத்தப்படும் துப்பாக்கி, வெடிகுண்டுகளின் நுண்ணிய தகவல்களைக்கூடத் தெரிந்துவைத்திருப்பது அவசியம்.
பெரும்பாலான நேரத்தை ஸ்மார்ட்போனிலேயே கழிக்கும் நம் சிறுவர்கள் இந்த விளையாட்டுக்கு அடிமையாவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால், இதன் தீவிர பாதிப்புகளைக் கண்கூடாகத் தினமும் பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டதற்கு ஒரு காரணம், மாணவர்கள் தங்கள் படிப்பை முற்றிலும் விட்டுவிட்டு, மாலை முதல் அதிகாலை வரை இதில் மூழ்கிக்கிடப்பதுதான். சிலர் பேட்டரி முழுவதும் தீர்ந்துபோகும் வரை மட்டுமல்லாமல் பவர்பேங்க் அல்லது சார்ஜரில் போட்டுக்கொண்டே விளையாடும் அளவுக்கு அடிமையாகியிருக்கிறார்கள்.
நள்ளிரவில் அவ்வப்போது ‘கொல்லு, சுட்டுத்தள்ளு’ என்று கெட்ட வார்த்தைகளை உச்சரித்துக்கொண்டு கத்த ஆரம்பித்துவிட்டதாகப் பல பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். நூறு பேர் விளையாடுவதாக வைத்துக்கொண்டால், மற்ற எதிரிகளை (ஆன்லைன் நண்பர்கள்தான்) கொன்றுவிட்டு கடைசி வரை உயிரோடு தங்களைப் பாதுகாத்துக்கொள்பவர்கள்தான் வெற்றிபெற்றவர்களாகக் கருதப்படுகின்றனர். இதில் தோல்வி அடைந்துவிட்டால் விரக்தியின் உச்சத்துக்குச் சென்று, செல்போனை அல்லது வீட்டிலுள்ள பொருட்களை உடைப்பது, ஆக்ரோஷமாக நடந்துகொள்வது, தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்வது முதல் தற்கொலை முயற்சி வரை செல்கின்றனர். கிடைக்கும் இடைவேளை நேரங்களில் எல்லாம் அனிச்சையாகவே செல்போனை நோக்கிக் கை தானாக நகரும் அளவுக்குப் பலர் சென்றுவிட்டனர்.
மனநலம் பாதிப்பு
கடந்த மாதத்தில் மனப்பிறழ்வு நோய் அறிகுறிகளுடன் இரண்டு பேரும், தற்கொலை எண்ணங்கள், ஆக்ரோஷமான நடவடிக்கைகள் போன்ற அறிகுறிகளுடன் சிலரும் மாத்திரைகள் தேவைப்படும் அளவுக்குத் தள்ளப்பட்ட நிலையில் வந்தனர். பல மணி நேரம் விளையாடுவதால் தூக்கம் பாதித்து, யாரோ காதில் பேசுவதுபோல் மாயக் குரல்கள் கேட்கும் ஆபத்தும் இதில் உண்டு. எனது ஆய்வில் பப்ஜியைப் பயன்படுத்தும் பலர் இரவில் தூக்கமின்மை (61%), பகலில் தூக்கக் கிறக்கம் (34%), தலைவலி, எரிச்சல் (36%), கண் கோளாறுகள் (39%), வகுப்பைப் புறக்கணித்தல் (27%), போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுவதாகவும், 7% பேர் தற்கொலை எண்ணங்களுடனும், 14% பேர் பிறரைத் தாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் ஸ்மார்ட்போன் மோகத்தை வரைமுறைப்படுத்தத் திணறிவருவது அப்பட்டமாகத் தெரிகிறது. ஒருகாலத்தில் சரியாகப் படிக்காத மாணவர்களைக் கடைசி பெஞ்சில் அமரவைத்து ‘மாப்பிள்ளை பெஞ்ச்’ என்று அழைத்தது ஒரு தண்டனையாக இருந்தது. இப்போதோ அப்படி உட்கார வைத்தால், வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போதே கீழே செல்போனை வைத்துக்கொண்டு விளையாடுகிறார்கள். அதற்கு ‘பப்ஜி பெஞ்ச்’ என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். விடுதிகளில் ‘பப்ஜி அறை’, கல்லூரி விழாக்களில் ‘பப்ஜி போட்டிகள்’, ‘பப்ஜி பார்க்’ என இதன் தாக்கம் நீண்டுகொண்டே செல்கிறது.
வரைமுறைச் சட்டங்கள் வேண்டும்
நான் சுட்டிக்காட்டிய பப்ஜியின் தாக்கங்களெல்லாம் கடலில் இருக்கும் பனிப்பாறையின் சிறு நுனிதான். அது எவ்வளவு ஆழம் சென்று நங்கூரமிட்டிருக்கிறது என்பது நமக்குச் சீக்கிரமே வெளிப்படக்கூடும். அந்த அபாயகரமான நாளை எதிர்நோக்கி நாம் மிக வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறோம். மேலைநாடுகளில் பள்ளிகளில் நடைபெறும் காரணமில்லாத கொலைவெறித் தாக்குதல்கள் நம் நாட்டிலும் நடைபெற்றுவிடாமல் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தொழில்நுட்பரீதியான சமூகச் சீரழிவுகளை நமது அரசு அவ்வளவு தீவிரமாகப் பொருட்படுத்துவதில்லை. இந்தச் சீரழிவுகளெல்லாம் குடும்ப அளவில் கட்டுப்படுத்துவதற்கான எல்லைகளைக் கடந்து கைமீறிப் போய்விட்டதாகவே தோன்றுகிறது. சீனா, தென்கொரியா நாடுகளைப் போன்று ஸ்மார்ட்போன் விளையாட்டுகளுக்கும் இணையதளப் பயன்பாட்டுக்குமான வரைமுறைச் சட்டங்களைப் பற்றி யோசிக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.
- ஆ.காட்சன், மனநல மருத்துவர்.