(காரை துர்க்கா)
நாட்டில் புலிப் பயங்கரவாதிகளால் முப்பது வருட காலமாக முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒழிக்கப்பட்டுள்ளன. புலிப்பிரிவினைவாத இயக்கம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. முப்பது வருட இருண்ட யுகத்திலிருந்த வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழ் மக்கள் பெரும் உவகையுடன் வாழ்கின்றனர். தென் பகுதி அரசியல்வாதிகளின் இவ்வாறான சொல்லாடலைத் தமிழ் மக்கள், கடந்த ஏழு எட்டு வருடங்களாகக் சகிப்புத் தன்மையுடன் கடந்து வந்துள்ளனர் என்பது, கடந்த நவம்பர் 27 ஆம் திகதி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அன்றைய தினம் வடக்கு, கிழக்கில் உள்ள துயிலும் இல்லங்களில் நடைபெற்ற சம்பவங்கள் இதற்குச் சான்று பகர்கின்றன.
1948 ஆம் ஆண்டு தொடக்கம் அழகான இலங்கைத் தீவை மாறி மாறி ஆட்சிசெய்த அரசாங்கங்களால் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழர் மீதான ஒடுக்குமுறையின் காரணமாகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
இலங்கை அரசாங்கங்கள் தமிழ் மக்கள்மீது உண்மையான அன்பு காட்டத் தவறியதால் தமிழ் இளைஞர்கள் ஆயுதத்தில் அன்பு கொள்ளத் தொடங்கினர். இதற்கு சூட்டப்பட்ட திருநாமமே பயங்கரவாதம்.
பொதுவாக அனைத்து நாடுகளிலும் இனத்தின் சுதந்திரம் வேண்டிப் போராடும் போராட்ட அமைப்புக்களைத் தடை செய்யும் பொருட்டு அல்லது அடக்கும் பொருட்டு அந்தந்த நாடுகள் மேற்கொள்ளும் மறு நடவடிக்கைக்கான பெயரே பயங்கரவாதம்.
இலங்கைக்கு பிரித்தானியரிடமிருந்து அரசியல் சுதந்திரம் கிடைத்த அடுத்த ஆண்டே (1949) இலங்கையின் முதல் பிரதமர் டி. எஸ். சேனநாயக்க, கிழக்கு மாகாணத்தில் விவசாய வேளாண்மை அபிவிருத்தி என்ற போர்வையில் பாரிய சிங்களக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
அடுத்து, பண்டாரநாயக்கா தனிச் சிங்களச் சட்டத்தை 1956 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தினார். அவரது பாரியார் 1970 களில் கல்வியில் தரப்படுத்தலைக் கொண்டு வந்தார். பயங்கரவாதத்தை அடக்குவதாகக் கூறி ஜே. ஆர். ஜெயவர்த்தன ஆட்சியில் பயங்கரவாத தடைச் சட்டம், அரசியல் அமைப்பின் ஊடாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.
இந்தச் சட்டத்தினூடாகப் பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களது அமைதியான வாழ்வு சமாதியானது. தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்துடன் இனத்தின் வாழ்வுக்காக, தமிழ் சந்ததியின் இருப்புக்காக, மண், மொழியை பாதுகாப்பதற்காக விரும்பியோ விரும்பாமலோ மாற்றுத் தெரிவு இன்றி, ஒரே தெரிவாக ஆயுதத்தை அரவணைக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்பட்டது தமிழ் சமுகம்.
எமது நாட்டிலும் வளம் குறைந்த, பொருளாதார சமூக நிலையில் பின்னடைவான நிலையிலுள்ள பல நாடுகள் சிறப்பான, முழுமையான அபிவிருத்தியை எட்டிப் பிடிக்கும் பொருட்டு, அந்நாட்டின் ஒட்டு மொத்த மக்களும் இனம், மதம், மொழி கடந்து ஒருமித்து, வேற்றுமையிலும் ஒற்றுமையாகக் கைகோர்த்துப் பயணிக்கின்றனர்; வெற்றி பெறுகின்றனர்.
எமது நாடு வளம் நிறைந்த நாடு; அழகான நாடு. ஆனாலும், ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கொடிய இனவாதம், மதவாதம் போன்றவற்றால் நாடு சீரழிந்து போய்விட்டது; சீரழித்து விட்டார்கள்.
வீதியில் நாம் பயணிக்கும் வேளை தவறுதலாக ஒரு நாய் வாகனத்தில் அடிபட்டு இறந்தாலே இரக்கம், துக்கம், பரிவு வருகின்றது. ஆனாலும், பயங்கரவாதத்தின் பெயரால் பல்லாயிரக்கணக்கான ஏதுமறியா அப்பாவித் தமிழ் இளைஞர்கள் வீதிகளில் நாயிலும் கீழ்த்தரமான முறையில் கொல்லப்பட்ட வேளைகளில், ரயர்கள் போட்டு எரிக்கப்பட்ட வேளைகளில் பரிவு காட்ட வேண்டிய அனைத்துத் தரப்பினரும் அன்பு கொள்ள தவறிவிட்டார்கள். யாராக இருப்பினும் அரிதான மானிடப்பிறப்பு என்ற முறையில் தடுத்து நிறுத்தத் தவறி விட்டார்கள்.
அண்மையில், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வொன்றில் தமிழரது போராட்டத்தைப் பயங்கரவாதமாக சித்திரிக்க வேண்டாமென மாவை சேனாதிராஜாவினால் ஜனாதிபதியிடம் கோரப்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆட்சியின் கீழ் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டுத்திடல் புனரமைக்கப்பட்டமையால் அங்கு தேசிய விளையாட்டு விழாவை நடாத்த முடிந்துள்ளது என நாடாளுமன்றில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ஆனாலும், 1974 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக் காலத்தில் அதே துரையப்பா விளையாட்டுத் திடலுக்கு அருகில் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது, தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமையும் 1981 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் தெற்காசியாவிலேயே மிகச் சிறந்த நூல் நிலையமாகக் கருதப்பட்ட தமிழரது அரும் பொக்கிஷம் தீயிட்டு எரிக்கப்பட்டமை போன்ற விடயங்களையும் மறந்து விட்டார் போலும். இவை போன்ற காரணிகளே அக்காலத்தில் தமிழ் இளைஞர்களை விடுதலை நோக்கிய பாதையில் போகத் தூண்டின.
2016 ஆம் ஆண்டு கிராமிய விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் 532 விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்காக 1,432. 20 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. அந்நிதியில் கொடிய யுத்தத்தால் முற்றாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை. விளையாட்டில் கூட விளையாட்டு விடும் இவர்கள் மனநிலையில் மாற்றம் மலர வேண்டும்.
மற்றொரு ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண “புலிப்பயங்கரவாதிகள் மறைந்திருந்த இடங்களை ஆளில்லா வேவு விமானங்களை அனுப்பிக் கண்டு பிடித்தது போல, கஞ்சா பயிரிடப்பட்டிருக்கும் இடங்களை ஆளில்லா வேவு விமானங்களை அனுப்பி அழியுங்கள்” என ஆலோசனை கூறியுள்ளமை கூட, தமிழ் மக்களின் மனதை நெருட வைக்கும் ஒப்பீடாகவே தோன்றுகின்றது.
மேலும், வடக்கு மாகாணத்தில் ஒரு மதத்துக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கி, பௌத்த மதத்தைக் கடைப்பிடித்து, வழிபடுவதற்கும் அங்குள்ள விகாரைகளை புனரமைப்பதற்கும் வடக்கு மாகாண சபை முட்டுக்கட்டையாக நின்று செயற்படுகின்றது என நீதி அமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜயதாச ராஐபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் அவரவர் அவரவருடைய மதத்தை பின்பற்றுவதற்கு வடமாகாண சபையால் தடை போட முடியாது எனவும் குண்டைப் போட்டுள்ளார். நாட்டின் ஒரு முக்கியமான அமைச்சர் எப்படியாக தமிழர் பகுதி கள நிலைவரங்களைப் பிழையாக அறிந்து வைத்துள்ளார் என்பது கவலையான விடயம்.
உதாரணமாக, முல்லைத்தீவு, கொக்கிளாயில் திருஞானசம்பந்தர் என்பவருக்குச் சொந்தமான காணியை, விகாரைக்குச் சொந்தமான காணி என்று கூறி, பிக்கு தலைமையில் இரவு பகலாக விகாரை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விகாரை அமைப்பதை நிறுத்துமாறு காணி அமைச்சினால் தடை உத்தரவு பிறப்பித்தும் விகாரை கட்டுவது யாரது குற்றம்?
இப்படியாக திருமலை, சாம்பல்தீவு, மாணிக்கமடு, கிளிநொச்சி, மாங்குளம், கனகராயன்குளம் என நீண்ட பட்டியல் தொடர்கின்றது. ஒரு பௌத்தரும் இல்லாத பல இடங்களில் பல விகாரைகள் அமைக்கப்பட்டு விட்டன. ஆகவே, இது புனரமைப்பு அல்ல; புதிதாக அமைக்கப்படுகின்றது.
படையினரின் பங்குபற்றுதலுடனும் அரசாங்கத்தின் கடைக்கண் பார்வையிலும் கட்டப்படுகின்றன. ஆகவே, மதம் எம் நாட்டில் அமைதி சமாதானத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக சண்டையையும் சச்சரவினையும் ஏற்படுத்தியுள்ளது என்பதே நிதர்சனமானது. இது நாட்டின் நிலைபேறான அபிவிருத்திக்குப் பெரும் சாபக்கேடு.
எமது நாட்டில் பெரும்பான்மை சிறுபான்மை என்ற பேதங்கள் கிடையாது. “ஒரே நாடு, ஒரே இனம்” என மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி புரிந்த காலப்பகுதியில், அவரால் அடிக்கடி கூறி வரும் வேத வாக்கு. ஆனால், அவர் அண்மையில் முல்லைத்தீவு, மணலாறில் “வடக்கில் சிங்கள மக்கள், சிறுபான்மை இனமாக மாற்றப்பட்டுள்ளனர்” என உரையாற்றியுள்ளார். இவ்வாறான கருத்துக்கள் மூலம் தமிழ், சிங்கள முறுகல் நிலையை தோற்றுவிப்பதன் மூலம், அரசியல் அறுவடை எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது வடக்கு,கிழக்கில் யுத்தம் இல்லாது, தமிழ் மக்கள் சமாதான சகவாழ்வு வாழ்வதாகச் சில சமயங்களில் தெற்கில் இருப்போர் எண்ணலாம். ஆனாலும், ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டுள்ளதே தவிர, தமிழர்களது விடுதலைக்கான தேவை இன்னும் நிறைவுசெய்யப்படவில்லை.
கடந்த காலங்களில் கொடிய யுத்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட உடல், உள காயங்கள் இன்னமும் அப்படியே ஆறாமல் உள்ளன. ஏனெனில், கடந்த ஏழு வருடங்களில் தமிழ் மக்கள், ஆயுதப் போராட்டம் அழிவை தருவது என நன்கு அறிந்தும் ஏன் ஆயுதத்தை தொட்டார்கள் என்ற பெரும் வினாவுக்கான தேடல், தெற்கில் இன்னமும் ஏற்படவில்லை. அந்தத் தேடலும் அதற்கான ஆக்க பூர்வமான தீர்வுகளும் ஏற்படுத்தப்படும் வரை, இங்கு கூறப்படுகின்ற நல்லிணக்க முயற்சிகள், அரசியல் தீர்வு முயற்சிகள் எல்லாமே வெறும் கானல் நீரே அன்றி ஆக்க பூர்வமான ஆக்கங்களை ஏற்படுத்தாது.
புலிகளே சமாதானத்துக்குப் பெரும் தடையாக உள்ளனர்; தீர்வு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் என்றவாறாக கடந்த காலங்களில் அனைத்து அரசாங்களாலும் அடிக்கடி கூறப்பட்டது. தற்போது புலிகள் இல்லை; யுத்தம் இல்லை; ஆனாலும் ஆரோக்கியமான தீர்வும் இல்லை. தமிழ் மக்களுக்கு நிம்மதியும் இல்லை. நிலையான உண்மையான தீர்வு வரும் என்ற நம்பிக்கையும் வேகமாக வீழ்ந்து கொண்டு செல்கின்றது.
பயங்கரவாதம் என்ற பெயரில் நடாத்தப்பட்ட மூன்று தசாப்த கொடும் போரில் சிக்கி ஓர் இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் மடிந்து விட்டனர். ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் நாட்டை விட்டு ஓடி விட்டனர். பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டு விட்டது.
ஆனாலும், இன்னும் எத்தனை நாட்களுக்கு பயங்கரவாதம் என வாதிடுவது? மூன்று இன மக்களும் ஒற்றுமையாக நாம் இலங்கையர்கள் எனக் கூறாமல் நாம் சிங்களவர், நாம் தமிழர், நாம் முஸ்லிம்கள் என மூன்று தனித்தனியான தீவுக்குள் தீவுக் கூட்டம் ஆக்கப்பட்டுள்ளனர். ஏழு நிறங்களின் கூட்டே வானவில் எனலாம். அதே போல இனப்பிரச்சினையை சுற்றியே பல பிணக்குகள் பின்னிப்பினைந்துள்ளன.
ஆகவே, இனப்பிணக்கு நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டால் நாட்டின் பல பிரச்சினைகள் தானாகவே சூரியனைக் கண்ட பனி போல மறையும்.