(குறிதப்பியதால் உருக்குலைந்த குடும்பம்)
ஆகஸ்ட் 14, 2006ம் நாள் வள்ளிபுனம் பெண்கள் பயிற்சிமுகாம் மீதானதாகுதலை தொடர்ந்து , மாணவர்களை மாணவர்களாகவே வைத்து போர் பயிற்சி கொடுக்கும் திட்டத்தை புலிகள் கைவிட்டனர். ஆனால் பாடசாலைகளில் மாணவர்களை தங்களுடன் இணைந்து கொள்ள செய்வதற்கான சகல வழிகளையும் இப்போது அவர்கள் கையாள தொடங்கியிருந்தனர். தமது ஆதரவு மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள், அரசியல்வாதிகள், உயர்நிலை பொறுப்பாளர்கள் என அனைவரையும் பயன்படுத்தத் தொடங்கியிருந்தனர்.
இவ்வாறு பாடசாலையில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக பலர் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதையே நிறுத்தியிருந்தனர். இளம் ஆண்களும் பெண்களும் வெளியே தலைகாட்டுவதே அரிதாகியிருந்தது. அவர்கள் வெளியே வந்தால் கடத்தி செல்லப்படுவதற்கான ஆபாத்தான சூழ்நிலையே காணப்பட்டது. சில பெற்றோர்கள் வெளியே செல்வதையோ அல்லது வேலைகளுக்கு செல்வதையோ கைவிட்டு வீடுகளிலேயே பிள்ளைகளுடன் தங்கி, தங்கள் பிள்ளைகள் பிடித்து செல்லப்படுவதை தடுக்கலாம் என எண்ணினர்.
இவ்வாறான சூழலில் கிளிநொச்சியில் நடந்த ஒரு பரிதாபகரமான சம்பவம் , சாதாரண பொது மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது.
நவம்பர் 02, 2006 அன்று மதியம் 2.30 மணியளவில் கிளிநொச்சி வானில் பிரவேசித்த இலங்கை விமானப்படையின் தரைத்தாகுதல் விமானங்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகாமையில் 500 மீற்றர் தொலைவில் கோரத்தாக்குதலை மேற்கொண்டன. அதிர்ச்சியில் வைத்தியசாலை ஓடுகள் உடைந்து விழுந்தன, அங்கிருந்த நோயாளிகளும் பயத்தில் அவசரமாக வெளியேறத் தொடங்கினர்.
ஆனால் தாக்குதல் நடந்த பகுதியான ஆனந்தபுரத்தில் வசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்துபேர் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். முருகேசு மார்க்கண்டு (62), அவரது சகோதரன் முருகேசு சண்முகரத்தினம் ( 56) இவர்களின் சகோதரி ரத்தினம் சரஸ்வதி (59) ஆகியோருடன் சண்முகரத்தினம் சசி (20) சண்முகரத்தினம் கிரிஷாந் (18) ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட உயர்தரத்தில் கல்வி கற்ற சகோதரர்களான இந்த இரு இளைஞர்களும் பாடசாலையில் வைத்து புலிகளால் பிடித்து செல்லப்படுவதை தவிர்ப்பதற்காக பல மாதங்களாக வீட்டில் மறைந்து இருந்தவர்களாவர்.
ஆசிரியான இந்த இளைஞர்களின் தாயாரும் , இளைய சகோதரியும் தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் பாடசாலையில் இருந்தமையால் அவர்கள் உயிர் தப்பியிருந்தனர்.
கிளிநொச்சி நகரில் இருந்து 10Km தொலைவில் உள்ள , புலிகளின் பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்துவதாக நினைத்துக்கொண்டு 1.5 Km தூரத்தில் உள்ள ஆனந்தபுரத்தில் தாக்கியதால் அவர்களின் குடும்பமே கொல்லப்பட்டது. விமானதாக்குதலில் இருந்து தப்பிக்க வெளியே ஓடினால் புலிகளால் பிடித்து செல்லப்படும் நிலையில் செய்வதறியாது திகைத்து நின்றவர்களிடம் எமன் இஸ்ரேலிய தயாரிப்பு கிபிர் விமானம் வடிவில் வந்து விட்டான். ஒரு நொடியில் ஒரு குடுமபத்தை சேர்ந்த ஐவரும் தசைத் துண்டங்களாக பிய்த்தெறியப்பட்டனர்.
வள்ளிபுனம் அனர்த்ததை தொடர்ந்து சிலமாதங்களில் கிளிநொச்சியில் நடந்த இந்த சம்பவத்தால் மக்கள் பெரிதும் பதட்டமடைந்ததுடன் தமது பாதுக்கப்பற்ற சூழ்நிலை குறித்து மிகுந்த அச்சம் கொள்ளத் தொடங்கினர்.
இவர்கள் கல்வி கற்ற பாடசாலையில் இருந்த சில ஆசிரியர்கள் போன்றே, பல ஆசிரியர்களும் கிளிநொச்சியிலும் , முல்லைத்தீவிலும் புலிகளின் பிரதிநிதிகளாகவும், அவர்களின் தீவிர ஆதரவாளர்களாகவும் செயற்பட்டு புலிகளில் செயற்பாடுகளை பாடசாலைகளில் அரங்கேற்றிக் கொண்டிருந்தனர்.
ஆனாலும் காலப்போக்கில் தாம் பிடித்துக் கொடுத்த பிள்ளைகள் சில நாட்களிலேயே கொல்லப்படுவதை கண்டும், தமது சக இளம் ஆசிரியர்கள் பிடித்துச் செல்லப்பட்டதாலும், சில நேரங்களில் இவ்வாறு புலிகளுக்கு உதவியவர்களே புலிகளின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டதாலும், தமது செயலுக்கு மனம் வருந்தி புலிகளுக்கு உதவுவதை கைவிட முயன்று கொண்டிருந்தனர்.
புலிகளுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு பட்டுவிட்டால் அவர்களால் அதனை அவ்வளவு இலகுவாக விட்டு வெளியே வரமுடியாது என்பதற்கு இந்த ஆசிரியர்களும், புலிகளின் முகவர்களாக செயற்பட்ட மாணவர்களும், ஏனைய கல்விசார் பணியாளர்களும் விதிவிலக்காக இருக்க முடியவில்லை..
தொடரும்..
(Rajh Selvapathi)