பயிரை மேய்ந்த வேலிகள்…(17)

(மரண தூதர்களால் குறிவைக்கப்பட்ட மாணவர்கள்)

தங்களின் கட்டுப்பாட்டு பகுதியான கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா வடக்கு, மன்னார் மாந்தை ஆகிய பகுதிகளில் புலிகள் தங்கள் கல்விக் கொள்கையை தீவிரமாக்கியிருந்தனர்.

பொதுவாகவே புலிகள் தொடக்கத்திலிருந்தே மாணவர்களை, அதுவும் குறிப்பாக பதின்ம பருவவயதில் இருந்தவர்கள் மீது தமது பிடியை வைத்திருக்க விரும்பினர். ஒரு பதின்ம வயதில் தங்கள் தலைவர் உருவாகியது போன்று இன்னும் ஒரு பிரபாகரன் உருவாகிவிடக் கூடாது என்பதில் அவர்கள் மிக கவனமாக இருந்தனர். புலிகளின் புலனாய்வு பிரிவினர் எப்பொதுமே இந்த மாணவர்களை மிக நெருக்கமான கண்காணிப்பில் வைத்திருந்தனர். அதிலும் அவர்களின் கட்டாய ஆட்சேர்ப்புகள் தொடங்கிய போது, மாணவர்கள் முழுமையாகவே புலிகளின் நேரடி கட்டுப்பாட்டுக்குள்ளும் கண்கானிப்புக்குள்ளும் கொண்டு வரப்பட்டிருந்தனர்.

சமாதான பேச்சுக்கள் நடை பெற்ற காலப்பகுதியில் கூட மாணவர்கள் மீதான கட்டுப்பாடுகளை புலிகள் கைவிடவில்லை. அந்த காலப் பகுதியில் அவர்கள் தமது கட்டுப்பாட்டு பகுதியையும் தாண்டி அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் மாணவர்கள் மீது தமது செல்வாக்கை செலுத்த முயனறனர். சமாதான காலத்தில் அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் அரசியல் வேலைகள் என்கின்ற பெயரில் புலிகள் நுழைந்த போதும் அவர்களால் அங்கும் மாணவர்களே முதலில் குறிவைக்கப்பட்டனர்.

அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்ற பெண் புலிகளை இடைப் பட்டியுடன் செல்ல இராணுவத்தினர் அனுமதிக்க மறுத்தனர். அப்போது வவுனியா மாவட்டத்துக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த எழிலன் இதனை கண்டிக்கும் முகமாக மாணவர்களை வைத்து இராணுவத்தினருக்கு எதிரான பேரணி ஒன்றையும் நடாத்தினார். அத்துடன் 2003 பெப்ரவரி 03ல் புலிகள் ஆதரவு அமைபினால் வவுனியாவில் இடம்பெற்ற இலங்கை சுதந்திர தினத்துக்கு எதிரான நிகழ்வில் மாணவர்களை கலந்து கொள்ளவும் செய்தார்.

உடனடியாகவே படைத்தரப்பு இதற்கு எதிர்வினையாற்றியிருந்தது. இவ்வாறு புலிகளின் ஊர்வலங்களில், நிகழ்வுகளில் பங்கெடுப்தற்கு மாணவர்களை அனுமதிக்கும் அதிபர்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என இராணுவத்தினரும் பொலிசாரும் எச்சரித்தனர்.

இவ்வாறான செயற்பாடுகள் சமாதான செயற்பாடுகளுக்கு ஊறு விளைவிக்கும் என்பதால், இதில் பங்கேற்கும் மாணவர்களும் கைது செய்யப்படுவார்கள் எனக் கூறப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்தில் வன்னி இராணுவத் தளபதி சுசில் சந்திரபால, கல்வி அதிகாரிகள், அதிபர்கள் பங்கு பற்றிய கூட்டத்தில் இதனை அவர்களுக்கு அறிவித்திருந்தார். அரசியல் செயற்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்துவது சமாதான சூழலிற்கு இடையூறு விளைவிக்கும் செயற்பாடு என வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் சனத் ராஜபக்சவும் கல்வி அதிகாரிகளுக்கு அந்த கூட்டத்தில் அறிவுறுத்தியிருந்தார். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பாக எழிலனிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர் வழமைபோல அதனை மறுப்பதால் பாடசாலைகளில் புலிகளின் தலையீடுகளை கண்காணிக்க பாடசாலைகளுக்கு அருகிலேயே பொலிசார் நிறுத்தப்படுவர் எனவும் கூறினார். இத்தகவலை வவுனியா வடக்கு கல்வி அதிகாரி ஒஸ்வேல்ட் அப்போது தமக்கு கீழ் இயங்கும் பாடசாலை நிவாகத்தினருக்கு அனுப்பியிருந்தார்.

தமது கட்டுப்பாட்டு பகுதியில் 2006 ஜூனில் புலிகள் தங்கள் ஆட்சேர்ப்பை பகிரங்கமாக தொடங்கியபோது, அவர்களால் முதலில் மாணவர்களே குறிவைக்கப்படனர்.

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளான கிளிநொச்சி, முல்லைத்தீவு,வவுனியா வடக்கு, மன்னார் மாந்தை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மக்களைப் போன்றே மாணவர்களையும் வகைப்படுத்தலாம்.

1.போராளி குடும்பத்தினர்இவர்களின் சகோதரனோ அல்லது சகோதரியோ புலிகள் அமைப்பில் இருப்பார்கள்.

2.மாவீரர் குடும்பத்தினர்இவர்களின் சகோதரனோ அல்லது சகோதரியோ புலிகள் இயக்கத்தில் இருந்து மரணித்தவர்கள்.

3.புலிகளின் பிள்ளைகள்அனேகமாக இவர்கள் சிறுவர்களாக இருந்தனர். பதின்ம வயதை எட்டியோர் மிக குறைவாகவே இருந்தனர்.

4.புலிகளின் உறுப்பினர்கள்சிறுவர் போராளிகளாக சேர்ந்து பின்பு பல்வேறு தேவைகளுக்காக பாடசாலையில் கல்வி கற்றவர்கள், புலிகளின் அனாதை இல்லங்களில் பாராமரிக்கப்படுவோர். அனேகமாக இந்த வகையினர் சாதாரணதரம் அல்லது உயர்தரம் கற்றவுடன் மீண்டும் புலிகளின் திட்டபடி செயற்பட வேண்டும். சிலர் மீண்டும் முழு நேர போராளியாகி விடுவர். சிலர் தமது கல்வியை தொடர்வர். சிலர் புலிகளின் பல்வேறு கட்டமைப்புகளில் பணிக்கமர்த்தப்படுவர். சிலர் தேவைப்பட்டால் மீண்டும் வர வேண்டும் என்ற நிபந்தனையில் தமது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

5.புலிகளின் புலனாய்வு முகவர்களாக செயற்பட்ட மாணவர்கள்

6.தமது இயக்க வேலைகளுக்காக அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு அல்லது பல்கலை கழகங்களுக்கு அனுப்ப படுவதற்காக புலிகளால் பாடசாலைக்கு அனுப்பபட்டவர்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

7. இவை எவற்றிலும் சம்மந்தப்படாத சாதாரண மாணவர்கள்இவர்கள்தான் மிக பெரும்பான்மையினராக இருந்தாலும் ஏனைய பிரிவினரின் ஆதிகத்தில் அடக்கி வைக்கப்பட்டிருந்தனர்.

புலிகளின் கட்டாய ஆட்கடத்தல் தொடங்கிய போது இந்த ஏழாவது வகையினரான எதிலுமே சம்பந்தப்படாத மாணவர்களே , முதலில் குறிவைக்கப்பாடனர். பத்தாம் வகுப்பு, சாதாரணதரம், உயர்தரத்தை கற்றுக் கொண்டிருந்த , 15க்கும் 18க்கும் இடைப்பட்ட வயதுடைய மாணவர்கள் இந்த வன்கொடுமைக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டனர். சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவர்கள் மிகவும் ஆபத்தான சூழ்நிலையை எதிர் கொண்டனர். உயர்தர பரீட்சைக்கு தோற்ற விரும்பினால் தங்களால் வழங்கப்படும் பயிற்சியை பெற்றுக் கொண்டமைக்கான சான்றிதல்களை வைத்திருக்க வேண்டும் என்ற ஒரு நிலையை உருவாக்க புலிகள் முயன்றனர்.

தொடரும்..

(RajH Selvapathi)