(மாங்குளம் பெண்ணுக்கும் அபயமளித்த கிருஷ்ண பரமாத்மா )
1990களின் பின் புலிகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்,
1.புலிகளின் உயர்மட்ட தலைவர்கள், அரசியல், புலனாய்வு பிரிவினர். போர் படையனிகளின் தளபதிகள், காவல்துறையினர், நிதிதுறையினர், நீதிதுறையினர், நிர்வாக சேவையினர் என ஊருக்குள் புலிகள் என்ற பெயரில் திரிந்தவர்கள்.
2.தாக்குதல் படையணிகளை சேர்ந்த ஊருக்குள் அவ்வளவாக தென்படாத போராளிகள்.
இந்த முதல் வகையினர் சமாதானகாலத்தில் புலம்பெயர் தமிழர்களுடன் மிக நெருக்கமாகி புலிகள் இயக்கத்தையும் அதன் தலைமையும் முழுமையாகவே தாயக மக்களை குறிப்பாக தமது கட்டுப்பாட்டில் இருந்த மக்களை ஒரு பொருட்டாகவே கருதவிடாமல் செய்தார்கள். தாயகத்தில் எஞ்சியிருந்த யாழ் –வசதியான உயர்குல பெண்களை திருமணம் செய்துகொள்ள விரும்பி அவர்களையும் முதன்மை படுத்ததொடங்கினர். வெளிநாடுகளில் சகோதர்கள் அதிகமாக உள்ள யாழ் பெண்களை இவர்கள் காதலித்தோ, கட்டாயப்படுத்தியோ, சலுகைகள் வழங்கியோ திருமணம் செய்துகொண்டனர். சொகுசு மாளிகைகள் கட்டிக்கொண்டு சொகுசு வாகனங்களில் தங்கள் குடும்பங்கள் சகிதம் கிளிநொச்சியில் வலம் வந்தார்கள். கிளிநொச்சியில் இடம் கிடைக்காதவர்கள் புதுக்குடியிருப்பு , விசுவமடு என வீடுகளை கட்டிக்கொண்டு வாழத்தொடங்கினர்.
இந்த வகையரா புலிகளே நான்காவது ஈழப்போர்ல் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாந்தை–மன்னார், வவுனியா–வடக்கு, வடமராட்சி கிழக்கு மக்களின் அழிவுக்கும் புலிகள் இயக்கதினையும் அதன் தலைமையையும் அவல நிலைக்கும் காரணமானார்கள் என்றால்கூட மிகையாகாது.
இந்த வகையை சேர்ந்த புலிகளின் கட்டாய ஆட்பிடிப்பாளர்கள் ஆடிய சதிராட்டம், அப்பாவி மக்கள் மீது அவிழ்த்துவிட்ட அராஜகங்கள் வார்த்தைகளால் கூறமுடியாதவை இருந்தன. அரசியல்வித்தகர்கள், இராணுவ நிபுணர்கள், ஆய்வாளர்கள் மட்டுமல்லாமல் சாதாரன பொது மக்களே புலிகளின் அழிவை இப்போது எதிர்வுகூறத்தொடங்கியிருந்தார்கள்.
புலிகளின் ஆட்கடத்தலுக்கு அஞ்சி பாடசாலைக்கு செல்லாமல் ஒழிந்திருந்த இளம் பெண் ஒருவர் தனது வீட்டு கிணற்றில் குழித்துக்கொண்டிருப்பதாக தகவல் அப்பிரதேசத்தில் கட்டாய ஆட்கடத்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பிரபல ஆட்கடத்தல் மன்னனுக்கு பக்கத்து வீட்டுக்காரனால் தெரிவிக்கப்பட்டது. பெண்களுக்கே உரிய மாதாந்த உபாதைக்கு முகம்கொடுத்த அந்த பிள்ளை தொடர்ந்து ஒழிந்திருக்க முடியாமல் தனது வீட்டு கிணற்றுக்கு சென்று குளிப்பதற்கு முயன்ற வேளை புலிகளின் ஆட் கடத்தல் குழு பறந்து வந்திறங்கியது.
பதறிப்போன தாய் மகளை காப்பாற்ற ஓடிச்சென்றபோது கடுமையாக தாக்கப்பட்டார். ”வீட்டினுள்ளேயே ஒழித்து வைத்துவிட்டு எங்களுக்கே கதைவிடுகின்றாயா” என ஆத்திரத்துடன் பாய்ந்து சென்ற புலிகள் அந்த பிள்ளையை பிடித்துக்கொண்டு வந்து வாகனத்தில் ஏற்ற முயன்றனர். பிள்ளையின் எதிர்ப்பை தொடர்ந்து அவர்கள் அந்த பிள்ளையின் சட்டையை பிடித்து இழுத்துவந்தனர். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் அந்த பெண்பிள்ளையின் மேல் ஆடை கிழிந்துவிட்டது. வேறு ஒரு சட்டையை கூட மாற்ற அனுமதிக்காத ஆட்கடத்தல் குழுவினர் அந்த பிள்ளையை அப்படியே தூக்கி வாகனத்தில் ஏற்றிவிட்டனர்.
துகிலுரியப்படும் திரௌபதையை காப்பாற்றியது போல் அந்த பிள்ளையையும் காபாற்ற இன்னும் ஒரு புலியாகவே கிருஷ்ண பரமாத்மா வந்திருக்க வேண்டும். திடீரென்று அந்த அராஜக செயலில் ஈடுபட்ட ஆட்கடத்தல் குழு எதிர் பார்க்காத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
அந்த வீதிவழியே மோட்டார் சைக்கிலில் சென்றுகொண்டிருந்த கடாபியின் படைத்துறை பள்ளியை சேர்ந்த புலிஉறுப்பினரான எழில்வாணன் என்பவர் இதந்த மகா பாதக செயலை கண்டுவிட்டார். மிகவும் கோபமடந்த அந்த மனிதர் நேராக குழுவின் தலைவனான பிரபல புலியிடம் சென்று சென்று அந்த பிள்ளையை விடுமாறு கூறினார்.
ஆனால் அந்த துடுக்குத்தனமான புலி தான் தமிழ்ச்செல்வன் காலத்திலிருந்தே உயர் பதவிநிலைக்குரியவர் எனக்கூறி எழில்வாணனுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட தொடங்கினார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த எழில்வாணன் தந்து இடையில் இருந்த பிஸ்டலை உருவி அவனின் நெற்றிப்பொட்டில் வைத்துவிட்டதுடன் உடனடியாகவே அந்த பெண்பிள்ளையை விடவில்லை என்றால் இங்கேயே உன்னை சுட்டுவிடுவேன் என்று மிரட்டினார்.
இதனை சற்றும் எதிர்பாராத அந்த பிரபல பிள்ளைபிடியாளன் தன் முன்னே நிற்பது யாரோ ஒரு மேல் மட்ட புலி என்பதை உணர்ந்து சுதாகரித்துக்கொண்டதுடன் அந்த பிள்ளையை வாகனத்தில் இருந்து இறக்கி விட்டு அங்கிருந்து விரைவாகவே சென்று மறைந்திருந்தார்.
இப்போது அந்த குடும்பத்தினர் கிருஷ்ண பரமாத்மா போன்று தமக்கு அபயமளித்த புலியை நன்றியுடன் பார்ப்பதா அல்லது பிரபல பிள்ளை பிடியாளனான பாப்பாவை திட்டுவதா என்று குழப்பியிருந்த நிலையில் பின்னாட்களில் இந்த பாப்பா போர்களத்துக்கு அனுப்பபட்டபோது தனக்கு தானே காலில் வெடிவைத்துக்கொண்டு அங்கு கொல்லப்படுவதில் இருந்து தப்பித்து பத்திரமாக இராணுவத்திடம் சரணடந்ததாக மக்கள் கூறிக்கொண்டிருந்தார்கள்.
தொடரும்..
(Rajh Selvapathi)