(பிள்ளை பிடிக்கு உதவிய பிரித்தானிய தந்திரம்)
போர் முனைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட இழப்புகளால் பெருமளவில் ஏற்பட்ட ஆள் அணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய புலிகள் அத்தனை வழிகளையும் கையாளத் தொடங்கி இருந்தனர். பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரத்தை போலவே அவர்களும் இங்கு பிரித்தாளும் தந்திரத்தை பிரயோகித்தனர்.
ஒழிந்திருப்போரை காட்டிக் கொடுத்தால் அவர்களை பிடிப்பதில்லை எனவும் , தாமாகவே பிள்ளைகளை கொண்டு வந்து ஒப்படைப்போருக்கு சலுகையாக அவர்களின் பிள்ளைகளை போர்படையணிகளுக்கு பதில் , கணணி பிரிவில் பணிபுரிய வைக்கப்படுவார்கள்.என்றெல்லாம் புலிகள் இப்போது கூறத்தொடங்கியிருந்தனர். இந்த கணணி பிரிவினருக்கு போர் பயிற்சி வழங்கப்படுவதில்லை என்று கூறப்பட்டது.
பிரித்தானியரின் பிரித்தாளும் சூழ்ச்சி இப்போது புலிகளுக்கும் கை கொடுத்தது. ஊரார் பிள்ளையை பலிட்டால் தன் பிள்ளை தானே பாதுகாக்கப்படும் என்று நம்பி தனது அயலவனுக்கே துரோகம் செய்ய சிலர் துணிந்துவிட்டு இருந்தார்கள்.
பெற்றோர் தாங்களாகவே பிள்ளைகளை கொண்டு வந்து ஒப்படைக்கின்றனர் என்கின்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த , தங்கள் ஆதரவாளர்கள் மூலம் திட்டமிட்ட நாடகங்களை அவர்கள் அரங்கேற்றினர்.
தங்களது பிள்ளைகளை இயக்கத்திடம் ஒப்படைப்பதாதாக தினம் ஒருவர் வீதம் உள்ளூர் பத்திரிகையான ஈழநாத்தத்தில் புகைப்படத்துடன் புதிது புதிதாக பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். சிலர் பிள்ளைகளை ஒப்படைத்ததுடன் தலைவரின் கரங்களை பலப்படுத்த தாங்களே போராளியாகிவிட்டதாக அறிக்கைகள் வி்ட்டனர். வரிப்புலி சீருடையுடன் புகைப்படத்துக்கும் போஸ் கொடுத்தனர்.
இந்த ஏமாற்று செயலை நம்பி, சிலர் தங்களது பிள்ளைகளை தாங்களே கொண்டு போய் இந்த கட்டாய ஆட் பிடியாளர்களிடம் நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமல் ஒப்படைத்துவிட்டு சந்தோசமாக வீட்டுக்கு சென்றனர். அத்துடன் நில்லாமல் பிள்ளைகளை ஒப்படைக்காத பெற்றோரை புலிகளுக்கு காட்டி கொடுக்கவும் முன்வந்தனர். தமது மற்றைய பிள்ளைகளை அந்த ஆள்பிடி அணிக்கு உதவிசெய்ய அனுப்பியும் வைத்தனர். சில இளைஞர்கள் புலிகளின் உண்மையான திட்டம் அறியாது தங்களை காப்பாற்றிக் கொள்ள இந்த ஆள்பிடிப்பாளர்களுடன் சேர்ந்து கொண்டு கட்டாய ஆட்கடத்தலில் அட்டகாசமாக திரிந்தனர்.
இறுதியில் புலிகள் செய்யப்போகும் விபரீதத்தை அறியாது அடுத்தவனின் பிள்ளையை பலியிட்டால் , தன்பிள்ளை தானே பாதுகாக்கப்படும் என்று நம்பி சந்தோசமடைந்து இருந்தவர்களுக்கு புலிகளின் அடுத்தடுத்த செயற்பாடுகள் பேரிடியாக தலையில் இறங்கியது.
( தொடரும் )
(Rajh SElvapathi)