பரா மாஸ்டர் என அழைக்கப்படும் தோழர் பரா குமாரசாமி

பரா மாஸ்டர் என அழைக்கப்படும் தோழர் பரா குமாரசாமி 1960க்குப் பின்னான இலங்கை இடதுசாரி, மற்றும் தொழிற்சங்க வரலாற்றுக் காலகட்டம் தொடக்கம் புகலிட அரசியல் -சமூக -கலை- பண்பாட்டு துறை , எழுத்து- செயற்பாட்டுத் தளம் வரை பங்களித்த அனுபவமிகு மூத்த மனிதர்களில் ஒருவர்.

தான் எழுதுவதும் மற்றவர்களுக்கு சொல்வதும் போன்று அதனை அடியொட்டி வாழ முடியாத மனிதர்களுக்கு மத்தியில் , தான் கொண்ட கருத்துக்களின் வழியே , பெருமளவில் அதனை முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்து மரணித்த சொற்ப மனிதர்களில் அவரும் ஒருவர்.அதனால் அவர் தனித்து தெரிபவர்.

சமத்துவம், ஜனநாயகம், அடிப்படை மனித உரிமை என்பன அவரை வழி நடாத்திய கோட்பாடுகளாகும். அடக்குமுறைகளுக்கெதிரான போராட்டக் குணம் , பல்வேறு வழிகளில், தளங்களில் ஒடுக்கப்படும் மக்கள் மீதான அக்கறையும் நேசமும் , இவற்றுக்காக தன்னையே ஒறுத்த அர்ப்பணமும் தியாகமும் அவரது 50 வருட கால பொது வாழ்வின் சாட்சியமாகும்.

இலங்கை அரசின் நிறுவன மயப்படுத்தப்பட்ட இனவாத, முதலாளித்துவ , மேட்டுக்குடி கருத்துகளுக்கு எதிரான போராடிய அவர், தமிழர் சமூக அரசியலில் வேர் கொண்ட பன்மைத்துவத்திற்கு எதிரான ஏகபோக அரசியலுக்கு எதிராகவும், ஜனநாயக மறுப்புக் கெதிராகவும் புகலிடச் சூழலில் போராடினார்.

1970களின் பிற்பகுதியில் முகிழ்த்த மாற்று கருத்துகளுக்கான புகலிட அரசியல்,சமூக பண்பாட்டு சூழலை தொடக்கியவர்களிலும் , அதனை தொடர்ச்சியாக அசைவியக்கம் காண உழைத்தவர்களிலும் பரா மாஸ்டர் அவர்களுக்கு ஒரு வகிபாகம் உள்ளது. இந்த இடத்தில் இவருடன் தூண்டில் பார்த்தீபன், சுசீந்திரன் -இன்பா, சி.புஸ்பராசா, கலைச்செல்வன் – லக்சுமி, உமா காந்தன் , சுட்காட் சிவராசா , என முன் கையெடுத்த இன்னும் பல செயற்பாட்டாளர்களுடன் , இவர்களுக்கு பின் நின்ற பெயர் குறிப்பிடப்படாதவர்களின் பெரும் உழைப்பும் அர்ப்பணமும் உள்ளன.

பரா மாஸ்டர் அவர்களை அவரது மறைவுக்குப் பின், 10 வருடம் கழித்து இன்று நான் பார்க்கும் போது எனக்கு இரண்டு விடயங்கள் அவர் வாழ்வை ஒட்டி சொல்லத் தோன்றுகிறது.

01. புகலிட வாழ்வு என்பது, பெரும்பாலும் பொன், பொருள் தேடும் வாழ்வாகிப் போன சூழலில், பொருளாதர அடிமைகளுக்கு மத்தியில் இவற்றிற்கு வெளியே தனது முழு நேரத்தையும் சமூக – பொது வாழ்விற்கு செலழித்த ஒரு மனிதராக அவர் இருந்ததுடன், தனது அருமைக் குடும்பத்திற்கு பொருளாதார அடிப்படையில் எதையும் தேடி வைக்காத ஒரு மனிதராக அவர் இருந்தமை. ( நானும் இப்படியான ஒரு மனிதன் என்பதால் எனக்கு இந்த விடயம் முக்கியமாகப் படுவதுடன் அவரை பிடிக்கப் பண்ணியும் விட்டது).

02. அவரது குடும்பத்தையும் உமா, சந்தூஷ், மல்லிகா அன்ரி, ஜீவமுரளி ஆகியோரையும் தன் வழியில் பொது வாழ்வில் ஈடுபடுத்தி நின்றமை, அவர்கள் இக்கணம் வரை அவரின் வழியில் செயற்படுகின்றமை. இந்த அரிய மதிப்பு ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் கிடைக்கும்,பொதுவாழ்விலும், தான் கொண்ட கருத்திலும் முன் மாதிரியானவர். இதில் பரா மாஸ்டர் வெற்றியடைந்தவர்.
——————————
கடந்த 16.12.2017, அன்று கிழக்கு லண்டனில் அமைந்துள்ள TRINITY CENTRE இல் நடந்த முழு நாள் நிகழ்வு தொடர்பாகவும் ஒரு சில வரிகளை எழுதி விட நினைக்கிறேன்.

இலங்கையில் போரினாலும், இனவாதத்தாலும் கொல்லப்பட்ட அனைத்து மக்களின் உயிர்களையும் நினைத்து மனமுருகிப் பாடும் பாடலை சிங்களத் தோழர் ஒருவர் பாடுவதும், முக்காடிட்ட ஒரு முஸ்லிம் பெண் 9- 11க்குப் பின்னரான எழுத்துக்களில் முஸ்லிம் பெண்கள் பற்றிப் பேசுவதும், சர்வதேச, தேசிய அளவில் இன்று முக்கியமான பேசு பொருளாகப் பேசப் பட வேண்டியுள்ள , *எல்லைகள்- இன, நிறவாதம்- ஐரோப்பியச் சூழல், * திறந்த பொருளாதாரக் கொள்கையில் உழைக்கும் மக்கள் பிரிவினர் எதிர் கொள்ளும் நெருக்கடி, *சாதியமும் சமூக பிரச்சினைகளும், * இலங்கையில் தமிழ்- முஸ்லிம் உறவும் நெருக்கடிகளும் என்கிற தலைப்புகளில் உரையாட ஒரு அரங்கை அமைப்பது மிகப் பெரிய சவாலுக்கு மத்தியில் சாத்தியமாவது என்றால் , அந்த நிகழ்வை வடிவமைப்பவர்களின் அரசியல் , சமூக கொள்கையுடனும், விரிந்த பார்வையுடனும் தொடர்பு பட்டது.

பரா மாஸ்டரின் 10வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்ட இந்த அரங்கு, பரா மாஸ்டர் நம்பிய கொள்கையின் அடிப்படையில் நடந்தது, பல்வர்ணம் கொண்டது. பன்மைத்துவத்தின் அடிப்படையை மதித்தது,ஏற்றது, அதனை நடை முறையில் செயற்படுத்திக் காட்டியது, மறைந்த மூத்த தோழர் பரா மாஸ்டர் அவர்களின் ஆன்மா சாந்திபெறும் வழியில் இந்த நிகழ்வை ஒழுங்கு பண்ணிய அவரது குடும்பத்தினருக்கும், இந்த நிகழ்வு நடைபெற பங்களித்த அனைவருக்கும் எனது அன்பும் மகிழ்ச்சியும்..

“காணுக நம்முன்
மனித இனத்தின்
உள்ளொளி மூட்டிய
உன்னத அக்கினிக் கோபுரம்”